- இலங்கையிலிருந்து வெளிவந்த 'நந்தலாலா' , 'தீர்த்தக்கரை' ஆகிய சஞ்சிகைகளின் ஆசிரியர்களில் ஒருவரும் சட்டத்தரணியுமான திரு. ஜோதிகுமாரின் கவிஞர் மஹாகவியைப்பற்றிய இக்கட்டுரையினை அவரிடமிருந்து பெற்றுப் 'பதிவுகள்' இணைய இதழுக்கு அனுப்பியவர் எழுத்தாளர் ஆதவன். இருவருக்கும் நன்றி. - பதிவுகள்.காம் -
8
மஹாகவியின் கவிதை வெளிபாட்டில் காணக்கிட்டுவதாய் கூறப்படும் புதிய முறைகளும், சொல்வார்ப்புகளும், உவமானங்களும், உருவகங்களும் முற்றாய் புதியன எனவும் அதற்குரிய காரணம் அவரது கவிதை உள்ளமானது ‘கட்டற்ற ஓர் தேடலை’ கொண்டிருந்ததே என்பார் சண்முகம் சிவலிங்கம்.ப-49
‘கட்டற்ற தேடல்’ என்ற இச்சொற்பிரயோகம் சற்றே ஆபத்தானது. அல்லது அளந்து பிரயோகிக்கப்பட வேண்டியது என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்றே.
சண்முகம் சிவலிங்கம் வரையறை செய்தாற்போலவே, மஹாகவி யாழ்பாணத்து கிராமமொன்றின் சாதாரண மத்திய தர வர்க்கத்தில் பிறந்து, பெரும்பகுதி காலமும் கொழும்பில் உத்தியோகம் பார்த்து,ஈற்றில் அரசாங்க நிர்வாக சேவையாளராகவும் தேறியுள்ளார். சுருக்கமாகக் கூறினால், ‘எமக்குத் தொழில் கவிதை’ என்பது போல் இல்லாமல், இவர்க்கு தொழில் அரச உத்தியோகம், நிர்வாக சேவை என்பன இருந்துள்ளன என்பது தெளிவு. இருந்தும், கூடவே, இதனுடன் சேர்ந்தாற் போல் கலை இலக்கிய ஆக்கங்களிலும் முழுமூச்சுடன் ஈடுபடுபட்டவர் என்றாகின்றது.
நிர்வாக பரீட்சையினை ஒருவர் தன் வாழ்வில் எழுதக் கூடாது என்பதுமில்லை, எழுதுவதால் குறைவடைய போகின்றார் என்பதும் இல்லை. இருந்தும், பிரச்சினை தருவது ‘கட்டற்ற தேடல்’ என்ற சொற் பிரயோகமே. வேறுவார்த்தையில் கூறுவதானால், இப்பின்னணியில் நோக்குமிடத்து, மஹாகவியின் ‘கட்டற்ற தேடல்’ என்பது தன்மீது தானே விதித்துக்கொண்ட அநேக எல்லைப்பாடுகளையும் கட்டுப்பாடுகளையும் உள்ளடக்கும் ஒரு வகையான கட்டற்ற தேடல்தான் என்பது தெளிவு.
கட்டுப்பாடுகளையும் எல்லைப்படுத்தல்களையும் விதித்துக் கொள்ள எவ்வளவோ காரணிகள் செல்வாக்கு செலுத்தியிருக்க கூடும் என்பது பிறிதொன்று. இதனுடன், பாரதியின் வாழ்வை ஒப்பு நோக்குபவர்கள் அல்லது அறிந்தவர்கள் இவ்விரு வாழ்வுக்குமிடையிலான வித்தியாசத்தை ஆழ உணரவே தலைப்படுவர்.
பாரதியின் வாழ்வு தொடர்பில், பிரிட்டிஷ் உளவு துறையினரின் அறிக்கைகளை அண்மையில் தொகுத்து வெளியிட்ட சீனி விஸ்வநாதன் அவர்கள் பாரதியின் வாழ்வு பொறுத்து புது ஒளியை பாய்ச்சியுள்ளார் எனலாம். உதாரணமாக, பாரதி குறித்த ஒரு ரயிலில் ஏறி இறங்குவது முதல் ரயிலில் அவன் யார் யாரை சந்தித்தான், எப்படி இறங்கினான், என்பது முதற் கொண்டு அவனது ஒவ்வொரு அசைவையும் ஒற்றர்கள் அறிக்கையிட்டு அவற்றை தமது மேலதிகாரிகளுக்கு கிரமமாய் அனுப்பி வைக்குமளவுக்கு அவனது வாழ்க்கை சிக்கலுற்றதாய் இருந்தது – அதிகார வர்க்;கத்தால், நொடிதோறும் உளவு பார்க்கப்பட்டு, கூர்மையாக அவதானிக்கப்பட்டு அறிக்கையிடப்பட்டு வருவதாய் அமைந்திருந்தது.
இது அவன் வாழ்ந்து நகர்ந்த அழுத்தமான கணங்கள்.
அத்தகைய ஒரு வாழ்வின் விளைபயனாக அவனது கவிதை வரிகள் உருண்டதாலோ என்னவோ அவ்வரிகளில் காணக்கிட்டும் தீவிரமும் உக்கிரமும் அத்தகைய ஓர் வாழ்வை எதிரொலிப்பதாய் இருக்கின்றன. அதேவேளை, இதன் வழியாக அங்கே உருவாகிடும் ஈரம் ஒரு உலக விசாலத்தை அளந்து முடிப்பதாகவும் இருக்கின்றது. (இவ் ஈரத்தை உணர்ந்ததின் தாற்பரியமோ என்னவோ, அவனது பாடல்களை பிரிட்டிஷ் அரசு, தமிழ்நாட்டில் மாத்திரமில்ல பர்மாவிலும் தடை செய்வதில் அக்கறை காட்டி நின்றது. மறுபுறத்தில், மஹாகவியின் வாழ்க்கை நிலவரமோ இவை ஒன்றையும் கோரப்போவதில்லை என்பது தெளிவு). சுருங்க கூறின் பாரதியின் வாழ்வு தோற்றுவித்திருக்ககூடிய ‘கட்டற்ற தேடல்’ எனும் பதம் சண்முகம் சிவலிங்கம் பிரஸ்தாபிக்கும் மஹாகவியின் ‘கட்டற்ற தேடல்’ என்பதிலிருந்து வேறுபட்டது. ஓர் வசதிக்காகவேனும், இவ்விரண்டையும் ஒப்பு நோக்குவது சற்றே சிரமத்தை ஏற்படுத்தும் செய்கைத்தான். இருந்தும், எங்கோ ஓர் கிராமத்தில் பிறந்து, கொழும்பில் உத்தியோகம் பார்த்து, பின் அரசாங்க நிர்வாக சேவையாளராகவும் பதவி வகித்திருக்க கூடிய ஒருவரது வாழ்க்கையின் அம்சங்கள் தவிர்க்க முடியாதபடி அவரது கவிதை வரிகளில் எதிரொலிக்கவே செய்யும் - குறிப்பிட்ட அவர், தன் பார்வை எல்லைகளை, தன் வாழ்வின் பிற ஊடாட்டங்களுக்கூடு, விஸ்தரித்து கொள்ளாது விடின்.
9
சண்முகம் சிவலிங்கம் அவர்கள் குறிப்பிடுமாப்போல், கிராமமொன்றில் சாதாரண மத்திய தர வர்க்கத்தில் பிறந்த ஒருவரின் மேல்நோக்கிய நகர்வு என்பது கடும் பிரயத்தனத்திற்குள்ளாக கூடிய ஒன்றுத்தான் என்பது தெளிவு. அதாவது, சக மாணவரோடு மாணவனாக, மாணவ பருவங்களில், பரீட்சைகள் எழுதி, அதற்கூடு தன் மேல்நோக்கிய நகர்வை எய்துவது ஒப்பீட்டளவில் எளிதாக இருக்கலாம். ஆனால் மாணவ பருவங்கள் எல்லாம் முடிந்து, பதவியேற்று, எழுதுவினைஞராய் இருந்து, பின்னரே அரச நிர்வாக சேவையை எட்டிப்பிடிப்பதென்பது சற்றே சிக்கலான விடயமாகவும் இருக்கலாம். அதாவது, மேற்படி, மேல்நோக்கிய நகர்வுக்கான உந்துவிசையை ஒருவர் தன்னுள் ஆழமாக கொண்டிராமல் மேற்படி நகர்வுகள் சாத்தியப்பட போவதில்லை. இதுவும்கூட அவர் கவிதைகளில் எதிரொலிக்காமல் விட்டதுமில்லை எனலாம்.
‘புது கம்பன்’, ‘மஹாகவி’ என்று அவர் தனக்குத்தான் சூட்டிக் கொண்ட பெயர்கள், பொதுவில் கவிஞர்களுக்கே உரித்தான திராணி என கொண்டாலும் கூட, பாரதியின் குயில் பாட்டை ஒத்து அவர் எழுத முயன்றுள்ள “கல்லழகி” எனும் கற்பனை சித்திரம் அவரது மேற்படி அவாவின் தன்மையை உறுத்தி காட்டுவதாக அமைந்து போகின்றது.
பாரதி தனது குயில்கவிதையை நான்கு நாள் நீடிக்கும் ஓர் வாழ்க்கை கனவு என்ற ரீதியில் கட்டமைத்திருந்தான். இதனை ஒத்து, மஹாகவியும் தனது “கல்லழகி” கவிதையையும் பாரதியை போன்றே, நான்கு நாட்கள் தொடரும் ஒரு சித்திரமாகவே தீட்டியுள்ளார்.
கவிதையில், பெருங்குரலெடுத்து, பாடல் தொடங்குகின்றது:
“ஓசையிலும் இன்பம் உளதன்றோ…
நம்மவர்கள்
பேசத்தெரிந்தும் பெருங்குரலை கையாளக்
கூசுகிறார்.ஏனோ? குசுகுசுப்பு நாகரீகம்.
தோட்டத்தின் நின்றும் தொலைவில் இருக்கின்ற
வீட்டுக்கு கேட்டு ஆள் விரைவதற்காய் மற்றவன்
கூக் காட்டும் குரலில் கவர்ச்சி மிக உண்டே
ஆனாலும்,
அந்த அருங்குரலின், பேரொலியை
‘தானே இடுதல்’ தனித்த பெரும் இன்பமன்றோ”
அருங்குரலின் பேரொலியை ‘தானே இட்டு’ மகிழ்வதை,‘புதுகம்பன்’,‘மஹாகவி’ போன்ற பெயர்சூடல்களும் எதிரொலிக்கவே செய்கின்றன.
தனக்குத்தான் கேட்டு ஆனந்திக்கும், இப்பேரொலியை பாரதியாரின் சிந்தை பரப்பிலே தேடிக் கொள்வது சற்றே சிரமமான காரியமாகவே இருக்கின்றது.
அவரது எண்ணப்பாடு என்னவோ, இது தொடர்பில், மஹாகவி கொண்டிருந்த எண்ணப்பாட்டிற்கு நேரெதிரிடையாகவே இருக்கின்றது:
“தன்னைத்தான் வென்றாளும் பொழுதிலே
விண்ணை அளக்கும் அறிவுத்தான்”
என்பது பாரதியின் கூற்றும் தர்மமுமாகின்றது.
ஒருவர் ‘தன்னை மறக்க’ கோருகின்றார். மற்றவரோ ‘தனது அருங்குரலையே பேரொலியாக’ ஒலிக்க செய்வதில் ஆனந்திக்க முற்படுகின்றார்.
இது போக, வாழ்வில் காதல் வகிக்கக் கூடிய பாத்திரம் யாதென்ற சர்ச்சையில், பாரதியாரின் குயில் பாடல் நகர்வதாய் தெரிகின்றது.
கார்க்கி முதல் பாரதி வரை, தத்தமது வாழ்வை, ஓர் சமூக இலக்கு நோக்கி தாரை வார்த்தப் பின், அங்கே காதலுக்கான ஸ்தானம் எதுவென கேள்வியெழுப்பி கொள்ள தவறவில்லை.
பாரதி ஒரு சந்தர்ப்பத்தில்,
“மறத்தலும்
இறத்தலும்
கடந்த நற்காதல்
தோன்றுநாள் வரையில்
துறத்தலே பெரிது”
என்பான். (காதலும் துறவும் - ப- 1115)
இது தொடர்பில் கார்க்கி-லெனின் உரையாடல், மார்க்சின் கூற்று இவை அனைத்துமே ஒப்பு நோக்கத்தக்கதே. (தாய் நாவலில் பாவெல் தன் காதலை வெளிப்படுத்தாது இருந்தது குறித்து கார்க்கி விமர்சிக்கப்பட்டதும் கவனத்தில் கொள்ளத்தக்கதே).
(கார்க்கி, காதலும் திருமணமும் இயக்கத்துக்காய் நேர்ந்துவிடப்படும் இளைஞர்களை பாதிக்கும் என்று கருதுகையில் லெனினோ, இப்பார்வைக்கு எதிராக சர்ச்சை புரிபவராகின்றார். இவை பிறிதொரு இடத்தில் தனியே வாதிக்க தக்கதுதான்.) மறுபுறத்தில், ‘என் முதல் காதல்’ என்ற சித்திரத்தை படைத்தளித்த கார்க்கி, காதலுக்கான அடிப்படைகளை இச்சமூக அமைப்பு எப்படி அரித்து தீர்த்து விடுகின்றது என்ற கருப்பொருளை நோக்கி பயணிப்பதாய் தெரிகின்றது. அதாவது, ஆணின்-பெண்ணின், சிந்தைகளை, அவர்களது காதலுக்கான மென் உணர்வுகளை, இச்சமூக அமைப்பு விகாரப்படுத்தி, உருக்குலைத்து வைக்குகையில், மனித காதலுக்கான, மென் தளத்தின் இருப்பு குறித்த நம்பிக்கைகளை அவர் கேள்விக்குட்படுத்த முற்படுகின்றார். (பாரதியின் மேற்சொன்ன ‘காதலும் துறவும்’ கூட இது தொடர்பில் சற்றே நினைவ10ட்டிக் கொள்ளத்தக்கதே. கூடவே, ‘கஞ்சியை பறித்தார் - எழுங் காதலையும் பறித்தார்’ என்பது போன்ற பாரதிதாசன் வரிகளும் இவ்வகையில் எமது கவனத்துள் கொள்ளத்தக்கதே). அதாவது, மனித உறவுகள் பு~;பிக்கும் மென் உணர்வுகளை இச்சமூகம் அல்லது இச்சமூக அமைப்பு எவ்வளவு கொடூரமாய் நைத்து நசித்து துவம்சம் செய்து விடுகின்றது என்பதே சாரம். ஆனால், மஹாகவியின் “கல்லழகி” இவற்றை ஒத்த வாழ்க்கை தேடல்களுடன் எவ்வித சம்பந்தமும் கொள்ளாது உருவ ரீதியாக கூட ஓர் ஒற்றைப் படைத் தளத்தில் இயங்குவதாகவே உளது.
பாரதியின் குயில்பாட்டானது, வாழ்க்கையின் பரந்துபட்ட முரண்களை உக்கிரத்துடனும், கலை நேர்த்தியுடனும் வெளிப்படுத்துவதில் ப10ரண வெற்றி கண்டுள்ளது. ஆனால் “கல்லழகியோ” மேற்படி விடயங்கள் தொடர்பில் தொட்டுப் பார்க்கவும் முயல்வதாக இல்லை. இவை அதற்கு அந்நியமாகவே போயுள்ளன என்பது வருத்தத்திற்குரியதுதான்.
இவற்றையெல்லாம் ஒன்று கூட்டிப் பார்க்குமிடத்து “கல்லழகி” கல்லழகியாகவே இருப்பதும் குயில் பாட்டு, குயில் பாட்டாகவே இருப்பதும் தவிர்க்க முடியாததாகின்றது.
10
சண்முகம் சிவலிங்கம் தனது கட்டுரையில் ஓரிடத்தில் பின்வருமாறு குறிப்பிடுவார்:
“தமிழரசு கட்சியின் இயக்கத்துக்காக ஓசைப்பாங்கான செய்யுள்கள் எழுதப்பட்டனவென்றாலும் அது நீடிக்கவில்லை. எப்படியெனினும் 1958ம் ஆண்டு இனக்கலவரத்துக்கு பிறகும், 1960ம் ஆண்டு சத்தியாகிரகத்துக்கு பிறகும் அத்தகைய இயக்கபாடல்கள் ‘கௌரவ குறைவாக’ கருதப்பட்டன. இந்த நிலையில் மஹாகவியின் கவிதை தவிர்க்கமுடியாதவாறு இயக்கப் போக்குகளில் இருந்து அன்றாட வாழ்க்கை நிகழ்ச்சிகளையும், அனுபவங்களையும் நோக்கித் திரும்பியது…” ப-57
அதாவது சண்முகம் சிவலிங்கத்தின் கூற்று பிரகாரம் இயக்க பாடல்கள் போன்றவற்றை எழுதுவது ‘கௌரவ குறைச்சல்’ என்பதாலேயே மஹாகவி ‘அன்றாட வாழ்க்கை நிகழ்ச்சி’ நோக்கித் திரும்பினார் என்றாகிறது. அதாவது தன் உள்ளக்கிடக்கை வெளிப்படுத்தும் மொழித் தேடி அசையாமல், வேறு புற காரணங்களின் நிமித்தம் அன்றாட வாழ்க்கை நிகழ்ச்சியை நோக்கி நகர்ந்தார் எனக் கூறவருவது சற்றே சர்ச்சைக்குரியது என்பதில் சந்தேகமில்லை. இருந்தும், இதனைக் கூறும் சண்முகம் சிவலிங்கம், மஹாகவி நகர்ந்த அடுத்த கட்டம் நோக்கி மேலும் விவரிப்பார்:
“அன்றாட நிகழ்ச்சிகளையும் அனுபவங்களையும் நோக்கி மஹாகவி கவிதை திரும்பியதே முக்கியமான ஒரு திருப்பு முனையாகும்…” Pப-58
மேலும் இதுவே “மஹாகவியை கருத்துமுதல் வாதத்துக்குள் தள்ளாமல் யதார்த்த நிகழ்ச்சி அனுபவங்களை நோக்கி தள்ளி ஈற்றில் பேச்சோசையை வெற்றிக்கொள்ள செய்துவிட்டது…” என முடிப்பார்.
‘இப்பேச்சோசை’ என்பதே மஹாகவியால் தான் ஆரம்பமுறுகிறது என்ற நம்பிக்கையானது இப்படியாய் விதைக்கப்பட்டு எம்மில் சிலரிடையும் வேரூன்றவே செய்யப்பட்டுள்ளது. இருந்தும் பேச்சோசை தொடர்பில், கைலாசபதி, முருகையன் போன்றோரும் ஏற்கனவே பின்வருமாறு அபிப்பிராயங்களை வெளிப்படுத்தியவர்களாக இருந்துள்ளனர்:
“திருநெல்வேலியின் சொள்வளம் புதுமைபித்தனாலும், ரகுநாதனாலும்… தஞ்சாவ10ரின் சொல்வளம் ஒரு ஜானகிராமனாலும் யாழ்பாணத்து சொல்வளம் ஒரு டொமினிக் ஜீவாவாலும், டேனியலாலும், மஹாகவியாலும், தான்தோன்றி கவிராயராலும் தமிழகம் முழுவதற்கும் உரிமையாக்கப்படலாம்”
பாரதியின் ‘கண்ணன் என் சேவகன்’என்ற பாடலை எடுத்து கொண்டால் கூட அன்றாட வாழ்க்கை நிகழ்ச்சி என்பதும் பேச்சோசை என்பதும் வந்து போகாமலும் இல்லை. இது போலவே குயில்பாட்டில்:
“பட்டப் பகலிலே
பாவிமகள் செய்ததைப் பார்
கண்ணாலம் கூட இன்னுங் கட்டிமுடியவில்லை
மண்ணாக்கி விட்டாள்
என் மானம் தொலைத்து விட்டாள்”
இவை, ஒருபுறம் இருக்க, மஹாகவி தன் பேச்சோசைக்காக கொடுக்கும் விலை என்ன? என்பதனையும் நாம் கணித்தாகவே வேண்டியுள்ளது.
கைலாசபதியும் முருகையனும் தம ;‘கவிதை நயம்’ எனும் நூலில் திறனாய்வு பயிற்சிக்கு உகந்த கவிதைகள் எனத் தேர்ந்து தொகுத்த கவிதைகளில் மஹாகவியின் “தேரும் திங்களையும்” உள்ளடக்கியே உள்ளனர். ப-132
இக்கவிதையை சிலாகிக்கும் பேராசிரியர் நுஃமான் அவர்கள் “ஒரு அநியாயத்தை நேரிலே பார்க்கின்ற பதிப்பை அவனுக்கு (வாசகனுக்கு) தருவதாய் அமைகின்றது” என்பார். ப-142
கவிதையின் பின்வரும் வரிகள் எமது கவனத்துக்குரியன தாம்:
“கல்லொன்று வீழ்ந்தது
கழுத்தொன்று வெட்டுண்டு
பல்லோடு உதடு பறந்து சிதறுண்டு
சில்லென்ற செந்நீர் தெறித்து
நிலம் சிவந்து
மல்லொன்று நேர்ந்து
மனுசர் கொலையுண்டார்”
இங்கே ‘சில்லென்ற செந்நீர் தெறித்து’ என்ற பத பிரயோகம் சற்றே பிரச்சினைக்குரியதுதான் என்பது வெளிப்படை. புதிதாய் தெறிக்கும் செந்நீர் (குருதி) ஒருநாளும் ‘சில்லென்று இருக்கப் போவதில்லை’ ஒரு வேளை அதுவெதுவெதுப்பாகவும் பிசுபிசுப்பாகவும் வேண்டுமானால் இருக்கலாம்.
ஆனால் முதல்வரி ‘பல்’ என்று தொடங்கினால் அடுத்த வரி ‘சில்’ என்று, பல்லுக்கும் சில்லுக்கும் ஏற்றாற் போல் இங்குப் பிறப்பெடுக்க வேண்டியுள்ளது.
இத்தகைய ஓர் வலிந்த விவரிப்பு, ‘நேரிலே’ பார்க்கின்ற பாதிப்பை வாசகனுக்கு ஏற்படுத்துமா என்பது பிறிதொரு கேள்வியாகின்றது.
இத்தகைய ஓர் பின்னணியிலேயே பேச்சு மொழியின் ஊடுருவலைப் பின்வருமாறு கைலாசபதி இனங்காண்பார்:
“வாத்தி போன்ற ஆற்றல் மிக்க கொச்சை சொற்கள் பல மக்கள் படைத்து வழங்கும் பேச்சு மொழியில் ஏராளமாக உண்டு. சிக்கார், விறுத்தம், அச்சொட்டு, அவிச்சொல், அடாத்து, கரைச்சல், அமந்தறை, அருக்குளிப்பு, வெக்கை மேட்டிமை போல்வன எல்லாம் அப்படிப்பட்ட பேச்சுவழக்கு சொற்கள். இவைப்போல பல நூற்றுக்கணக்கான சொற்கள் உண்டு” p-82
“பெருங்கவிஞன் பேச்சு மொழியில் உள்ள சொற்களையும் இடமறிந்து பயன்படுத்துகின்றான் என்பது முதலாவது உண்மை” p-83
“இளங்கோவடிகள் தமது காலத்து சொற்கள் அனைத்துள்ளும் தம் தேவைக்கு வேண்டியவற்றை பயன்படுத்தியிருப்பார். கம்பனும் தனது காலத்து சொற்கள் எல்லாவற்றிலிருந்தும் தான் பெறக்கூடிய அதிகபட்ச நன்மை முழுவதையும் கறந்து எடுத்திருப்பான்…பெருங்கவிஞர்கள் எல்லாம் இதைத்தான் செய்தார்கள்: செய்து வருகின்றார்கள்” p-84
சுருங்கக் கூறின் பேச்சோசை என்பது மொத்தத்தில் புதுவிடயம் அல்ல. ஆனால் அவற்றை தேர்ந்து பாவிக்கும் ‘விகிதாசாரம்’ கவிஞனுக்கு கவிஞன் வேறுபட்டிருக்கலாம் என்பதே விடயமாகின்றது.
மறுபுறத்தில், பேச்சோசைத்தான் அனைத்தும் என்றால் கவிதை என்பது தன் முக்கியத்துவத்தை இழந்து போகும் ஓர் விடயம் தான் என்பதில் சந்தேகமில்லை.மஹாகவியின் பின்னால் துவங்கியிருக்க கூடிய ஜெயபாலன், ஆதவன், சாருமதி அனைவருமே பேச்சோசையை தமது தலையாய அம்சமாக கொண்டதாக இல்லை. அவர்கள் தத்தம் கவிதையில் பேச்சோசையை தேவைக்கேற்ப பயன்படுத்தினர் என்பதோடு விடயம் முடிந்து விடுகின்றது.
ஆனால், பேராசிரியர் நுஃமானின் பார்வையில், “முன்னுதாரணமற்ற வகையில் யதார்த்த நெறியை கவிதையில் கையாண்டார் அவர்… நவீன கவிதையின் உள்ளடக்கத்திலும் உருவத்திலும் இவர் புகுத்திய புதுமைகள் பல” எனக் கூறும் போது விடயங்கள் சற்றே வலிந்து கூறப்படுகின்றனவோ என்ற சந்தேகம் எழாமல் இல்லை.
இப்படியாய் ‘முன்னுதாரணம் அற்றவர்’ என மஹாகவி புகழப்படும் அதேவேளை, அவருக்கு எதிரான ஒப்பீடுகள் ஈழத்து தமிழ்ப் பரப்பில் பொதுவில் எழாமலும் இல்லை. பொதுவில் இது இடதுசாரிகளினாலேயே ஆற்றப்பட்டது என்ற கூற்றும் உண்டு.
இவ்வகையில், அவரை (மஹாகவியை) ‘முற்போக்கு இலக்கியத்துக்கு எதிரானவர் வரிசையிலும் பொதுவுடைமை எதிர்ப்பு வரிசைகளில் அடக்குவோரும் உளர் என பேராசிரியர் சிவத்தம்பியின் கூற்றை’ மேற்கோள் காட்டி நுஃமான் அவர்கள் எழுதியிருந்தாலும், மஹாகவியின் கவிதைகளுக்கு எதிரான விமர்சனங்கள் முற்றும் முழுதாய் இடதுசாரி அணியில் இருந்து மாத்திரமே வெளிப்பட்டதாக இருக்கவும் இல்லை.
உதாரணமாக மஹாகவியின் படைப்புகள் சம்பந்தமான தளையசிங்கத்தின் பார்வை பின்வருமாறு இருக்கின்றது:
“கவித்துறை ஒரு புறநடை. அந்த துறையும் தமிழர்களுக்கு பழக்கமான ஒரு பழைய துறை என்ற காரணத்தால் ஐம்பதுக்கு முந்தியே தரம் வாய்ந்தவை அந்தத் துறையில் வந்துவிட்டிருந்தன. ஆனால் அப்படியிருந்தும் அந்த துறையில் கூட, புதிய வேகத்தை காட்டும் வகையில் ஒரு பாரதியை ஐம்பதுக்கு முந்திய பரம்பரையால் காட்ட முடிந்ததா,
முந்திய சோமசுந்தர புலவரையும் இன்று வரை வாழும் மஹாகவியையும் இன்றும் வடிவாய் கண்டுப்பிடிக்கவில்லை என்பது உண்மையாயிருப்பின், அவர்களை பாரதியோடு ஒப்பிட முடியுமா?
…. பழைய பரம்பரையின் வரலாற்றை படிக்கும் போது, ஏதோ முன்பு தொட்டே, நாங்களும் புது துறைகளில் அக்கறைப்பட்டிருக்கின்றோம் என்று நம்மையே நாம் திருப்திபடுத்தி கொள்ளும் ஒரு மருட்சி ஏற்பட்டிருக்கின்றதே ஒழிய, பெரும் சாதனையாகக் காட்டுதற்கு ஏதாவது கிடைத்திருக்கின்றதா? உண்மை. பாரதியோடும், புதுமைபித்தனோடும், ராஜவையரோடும் ஒப்பிடக்கூடியவர்கள், 56க்கு பின்னர் கூட நாம் இன்னும் கண்டுப்பிடிக்கவில்லைதான்…” (ஏழாண்டுகால இலக்கிய வளர்ச்சி)
ஆக, மஹாகவி அவர்கள் நுஃமான் கூறுமாப்போல் “துணிச்சலோடு மஹாகவி என்ற பெயரை சூடிக் கொண்டாலும்” (ப-15) (அல்லது புதுகம்பன் என்று அழைத்துக் கொண்டாலும்) பாரதியோடு ஒப்பு நோக்குதல் ஆகாதது என்பது தளையசிங்கத்தின் நிலைப்பாடாக அமைந்து போகின்றது – அவர் ஒரு இடதுசாரி அணியை சார்ந்தவர் இல்லை என்ற போதிலும்.
இவை அனைத்துமே, விரும்பியோ விரும்பாமலோ மஹாகவியின் வாழ்க்கை தரிசனம் யாது என்ற கேள்விக்கே எம்மை கொண்டுவந்து சேர்ப்பதாய் உள்ளது.
[தொடரும்]
உசாத்துணை நூற்பட்டியல்
1. மஹாகவியியல் - மஹாகவி குறித்த விமர்சன தொகுப்பு நூல் - பேராசிரியர் ஸ்ரீ.பிரசாந்தன் - ப10பாலசிங்கம் பதிப்பகம் - 2008
2. நவீனத்துவத்தின் முகங்கள் -அசோகமித்திரன் - தமிழினி பதிப்பகம் - 2003
3. கவிதை நயம் - கைலாசபதி-முருகையன் - குமரன் பதிப்பகம் - 2000
4. பஞ்சமர் நாவல் - கே.டானியல் - அடையாளம் வெளியீடு - 2005
5. ஏழாண்டு கால இலக்கிய வளர்ச்சி – தளையசிங்கம்
6. தெட்சணாமூர்த்தி எட்டாவது உலக அதிசயம் - 2021
7. Lenin - On Literature and Art – Leo Tolstoy as the mirror of the Russian Revelution – Progress Publishers - 1967
8. Marxim Gorky’s Collected Works Vol – 8
9. Marxim Gorky’s Collected works - Vol -9 - 1982
10. Marxim Gorky on Literature – Progress Publishers
11. The complete Letters of Vincent Van Gogh – Vol -3 - 1958
12. Wings Of Fire – A.J.P. Abdul Kalam – University Press - 1999
13. My Journey - A.J.P. Abdul Kalam - Ruba Publication - 2015
Zoom Meetings and Youtubes
i. பௌசர் - Zoom Meeting
ii. மஹாகவி நினைவு பேருரை (20.09.2021 – சென்னை பல்கலைகழக ஏற்பாட்டில்ää பேராசிரியர் ய.மணிகண்டன் தலைமையில் இடம்பெற்றது)
iii. ஹம்சன் குமாரின் தட்சிணாமூர்த்தி குறித்த ஆவணப்படம்.
iv. தட்சிணாமூர்த்தி குறித்த (Youtube)
v. தட்சிணாமூர்த்தி குறித்த ஆவணப்படம் வெளியீட்டு விழா. (Youtube)
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.