நேர்காணல் பகுதி நான்கு : ஓவியர் வீரப்பன் சதானந்தனுடன் ஓர் உரையாடல்! - நேர்காணல் கண்டவர்: எழுத்தாளர் ஜோதிகுமார் -
கேள்வி: சென்றமுறை கதைக்கும் போது,இருள் கவியத் தொடங்கும் மங்கலான மாலைகளில், இயற்கை, தனது Impressionism ஓவியத்தை தீட்டி முடிக்கின்றது என கூறினீர்கள் (உணர்வு நிலை நிற்கும் ஓவியங்களை) - மங்கலான ஒளியில் மலைகளினதும் மரங்களினதும் விளிம்புகள் தெளிவுற தென்படாது, மறைய தொடங்குகையில், மனிதனின் கவிதை மனம் விழிக்க முற்படுகின்றது – இது போலவேதான் Impressionism ஓவியங்களும் உருவெடுக்க தொடங்குகின்றன என்பது போல் கருத்து தெரிவித்திருந்தீர்கள். கூடவே கலைஞன் என்பவன் தனது ஓவியத்தில், தனது கவிதையில் இயற்கையை அல்லது மனிதனை அல்லது வாழ்வை பரிமளித்து காட்ட உரிமை கொண்டவன்தான் என்றும் கூறியிருந்தீர்கள். அதாவது இத்தகைய பரிமளிப்புகள் ஆக்கப்பூர்வமானதாய் இருத்தல் வேண்டும் என்ற அடிப்படையில் இவ் உரிமை அங்கீகரிக்கத்தக்கதே என்றும் கூறியிருந்தீர்கள். இத்தகைய ஒரு பின்னணியில் நீங்கள் குறிப்பிட்ட மொனே, பிசாரோ, டேகாஸ் போன்ற ஓவியர்களை எப்படி மதிப்பிட்டு கொள்கின்றீர்கள்?
பதில்: மொனே நீண்ட காலம் வாழ்ந்த ஒரு மாபெரும் கலைஞன். 86 வயது வரை தன் ஓவிய பரீட்சார்த்தங்களை முன்னெடுத்தவன். அவனது அடிவைப்புகளில் இருந்தே உணர்வுநிலை ஓவியங்கள் (Impressionism) முதன் முதலாய் உறுதியாக தோற்றம் கொள்ள தொடங்கின என கூறலாம். இவருக்கு பத்து வருட முந்திய கலைஞனான, பிசாரோ (கிட்டத்தட்ட) இவரது சமகாலத்து ஓவியனாக இருந்த போதிலும், அவரும் உணர்வுநிலை ஓவியங்களை படைத்தளித்திருந்த போதிலும், உணர்வு நிலை ஓவியம் என்பது மொனேயுடனேயே உறுதியாய் தன் காலடியை வரலாற்றில் பொறித்தது எனலாம்.
கேள்வி: இவற்றில் மொனேயின் எந்தெந்த ஓவியங்களை அதிமுக்கியமான ஓவியங்களாக கருதுவீர்கள்?
பதில்: ரயில்கள் தொடர்பாய் அவர் வரைந்த ஓவியங்களையும் தேவாலயங்கள் தொடர்பில் அவர் வரைந்த ஓவியங்களையும் நாம் அழுத்தமாக குறிப்பிட்டாக வேண்டும்.
கேள்வி: இவற்றில் முதலில் மொனேயின் ரயில் சம்பந்தமான ஓவியங்களை பற்றி கூறுவீர்களா?
பதில்: மொனே தனது ரயில் ஓவியங்களை 1870களில் வரைந்திருந்தார். 1871 முதல் 1877 வரை “ரயில்” அவரது தலையாய ஓவிய முன்னெடுப்புகளின் கருப்பொருளாக இருந்தது. அத்தகைய ஒரு ஓவிய பயணத்தின் இறுதி கணங்களில், ரயிலின் காட்சிப்படுத்தலை, அவர் பூரணமாக்கினார் எனலாம்.