நூல் அறிமுகம்: இளங்கோவின் ‘மெக்சிக்கோ’: இன்றைய காலத்தின் நாவல்! - எஸ்.கே.விக்னேஸ்வரன் -
- ஜீவநதி இதழின் நாவல் சிறப்பிதழில் வெளிவந்த (150ஆவது இதழ்) எழுத்தாளர் இளங்கோ எழுதிய ‘மெக்சிக்கோ’ என்ற நாவல் பற்றிய எழுத்தாளர் எஸ்.கே.விக்னேஸ்வரனின் கட்டுரை. -
இளங்கோவின் ‘மெக்சிக்கோ’ நாவல் பற்றி ஜீவநதியின் 150 வது இதழுக்கு ஒரு விமர்சனம் எழுதமுடியுமா என்று இதழாசிரியர் பரணீதரன் ஒரு குறுஞ்செய்தியை அனுப்பியிருந்தார். அந்த இதழ் ‘ஈழத்து நாவல் விமர்சனச் சிறப்பிதழாக’ வரப்போவதாக வேறு குறிப்பிட்டிருந்தார். அதிகம் யோசிக்காமல் அவருக்கு ஓம் என்று பதில் போட்டுவிட்டேன். ஆனால் நாட்செல்லச் செல்ல ஒருவகைத் தயக்கம் எழத் தொடங்கியது. நான் இதுவரை காலத்தில் எப்போதாவது ஒரு நாவல் குறித்து விமர்சனம் எழுதியிருக்கிறேனா, எழுதியவை எல்லாமே வெறும் அனுபவக் குறிப்புகளாக அல்லது அறிமுகக் குறிப்புகளாகத் தானே இருந்திருக்கின்றன. அப்படி இருக்க என்ன துணிவில் இந்த நாவலுக்கு மட்டும் எப்படி விமர்சனம் எழுத ஒப்புக் கொண்டேன்?. பேசாமல் ஒரு அனுபவ அல்லது அறிமுகக் குறிப்பை எழுதி அனுப்பிவிடலாமோ என்று குழம்பிக் கொண்டிருந்தேன்.
இந்தக் குழப்பத்திலிருந்து விடுபட நாவலை மீண்டுமொருமுறை திரும்ப வாசித்தேன். இரண்டாவது வாசிப்பின் போது நாவலுள் இன்னமும் அதிகமாக உட்செல்ல முடிந்தது உண்மைதான். ஆயினும் விமர்சனம் எழுதுவதற்கான உந்துதல் எளவில்லை. ஆனால் இப்போது இதை நான் எழுதிக் கொண்டிருக்கும் நேரத்திலிருந்து சரியாக இரண்டு நாட்களுக்கு முதல் இளங்கோ தன் முகநூல் பக்கத்தில் ஒரு பதிவை இட்டிருந்தார். சிறிது காலத்துக்கு முன் எழுதப்பட்டதென அவர் குறிப்பிட்டிருந்தாலும், இப்பதிவை நான் இப்போதுதான் முதலாவதாக வாசித்ததாக நினைக்கிறேன். அந்தப் பதிவில் அவர் எழுதியிருந்த ஒரு விடயம் என்னை சற்று நின்று திருப்பி வாசிக்க வைத்தது. அவர் எழுதியிருந்தார்: