ஊமைகளின் உலகம்..! - குரு அரவிந்தன் -
அந்தப் பச்சிளம் உதடுகள் மார்பில் பட்டபோது தாய்மையின் பூரிப்பில் அவள் மெய்மறந்து போனாள். குழந்தையை மார்போடு இறுக அணைத்துக் கொண்டு கண்களை மெதுவாக மூடிக்கொண்டாலும் தாய்மையின் அந்த இதமான உணர்வின் வெளிப்பாட்டை அதிக நேரம் அவளால் அனுபவிக்க முடியவில்லை. பூப்போன்ற சின்னஞ் சிறிய அந்த உதடுகளின் தேடலில் அங்கே சுரப்பதற்கு எதுவுமில்லை என்று தெரிந்த போது குழந்தையின் ‘வீல்’ என்ற அந்த அலறல் சத்தம்தான் அவளது செவிகளில் முட்டி மோதி நின்றது.
வெறுமையின் தாக்கம் ஏற்படுத்திய குழந்தையின் ஆக்ரோசத்தவிப்பை அவளால் அப்போதுதான் முழுமையாக உணரமுடிந்தது. அதுவே அவளது உணர்வுகளின் பிரவாகமாய் ஒருகணம் அவளை உடைந்து போகவும் வைத்தது. அடுத்த கணமே அந்த உணர்வின் தாக்கம் ஏற்படுத்திய இயலாமையின் வெளிப்பாடாய் அந்தத் தாய் மனசு ஓவென்று விம்மி வெடித்தது. பொட்டென்று மார்பில் விழுந்து வழிந்த கண்ணீர் துளிகள் முகம் புதைத்து அழுத குழந்தையின் உதட்டில் படிந்த போது வாய்விட்டு வெளியே சொல்லத் தெரியாத அந்தப் பிஞ்சின் அலறல் கூட ஒரு கணம் தேங்கி நின்றது.
‘அம்மா ஊட்டிய அமுதம் உப்புக் கரித்தது ஏன்?’ என்று அந்தக் குழந்தைக்குப் புரிந்திருக்க நியாயமில்லை. குழந்தையைச் சமாதானம் செய்ய வாய் திறந்து ‘ஆராரோ’ சொல்லித் தாலாட்டுப் பாடக்கூட முடியாத சூழ்நிலைக் கைதியாய் அவள் மாறியிருந்தாள். வாய்திறந்தால் வெளியே உதிர்வது தமிழாக இருந்ததால்தான் அவள் இந்த மண்ணில் இப்படியான அவலநிலைக்குத் தள்ளப்பட்டாள் என்பது அவளுக்குத் தெரியும். ஆனாலும் அது பற்றிச் சிந்திக்க இதுவல்ல நேரம் என்பதால் அது பற்றிய கவலைகளை தற்காலிகமாக அவள் ஒரு புறம் தள்ளி வைத்திருந்தாள்.
பசி கண்ணை இருட்டிக் காதை அடைத்தது. இப்படியான பசிக்கொடுமையை அவள் ஒரு போதும் அனுபவித்ததில்லை. கொடுமையிலும் கொடுமை பசிக்கொடுமை அதுவும் குழந்தைகள் பரிதவிப்பதைப் பார்த்தபோது தூக்கம் கெட்ட இரவாய் எப்போது விடியும் என்ற எதிர்பார்ப்புடையதாய் அந்த இரவு அவளுக்கு அமைந்திருந்தது. கடைசிக் குழந்தை வயிற்றில் இருக்கும் போதே அவளது கணவன் தொலைந்து போயிருந்தான். உயிரோடு இருக்கிறானா இல்லையா என்பதுகூடத் தெரிந்து கொள்ள முடியாத நிலையில் நாடு இருந்தது. அதனால் குழந்தைகளின் பசியைப் போக்க யாரிடமாவது கையேந்த வேண்டிய நிலைக்கு அவள் தள்ளப்பட்டிருந்தாள். அகதியாய் சொந்த மண்ணிலே புலம் பெயர்ந்து இங்கே வந்தபோது, படித்திருந்தும் வயிற்றுப் பிழைப்புக்காக அரிசி ஆலை ஒன்றில் கூலி வேலைதான் அவள் செய்தாள்.