நோர்வே பயணத்தொடர் : சமாதானம் மற்றும் நல்லிணக்கத்துக்காகப் பிரயாசைப்படும் நோர்வே (3) - ஶ்ரீரஞ்சனி -
- Bryggen துறைமுகம் -
காலையுணவின் பின்னர், Bergenக்குச் செல்லும் 8 :30 மணி பஸ்ஸில் ஜீவாவும் விமலாவும் எங்களை ஏற்றிவிட்டனர். அந்த பஸ்ஸின் மேல் தட்டில் இடது பக்கமாக இருந்த முன் சீற்றில் இருந்து நோர்வேயின் இயற்கை அழகை ரசித்தபடி, வெவ்வேறு சுரங்க வழிகளினூடாகவும், பஸ்ஸுடன் சேர்ந்து இரண்டு தடவைகள் கப்பலிலும் நாங்கள் பயணித்தோம்.
நோர்வேக்கு வருகிறோம் என்றதும், “எங்கடை இடம் நல்ல வடிவான இடம், வாங்கோ, எங்கடை வீட்டிலையே தங்கலாம்” என கமலினி அன்புடன் வரவேற்றிருந்தா. நான்கு மணி நேரப் பயணத்தின் முடிவில், Bergenஇல் இறங்கியபோது கமலினி சொன்னதில் எவ்விதமான மிகைப்படுத்தலுமில்லை என்பது தெளிவாக, அந்த அழகில் நாங்கள் சொக்கிப்போனோம். மலைகளின் நடுவில் அங்கங்கே வீடுகள் செருகப்பட்டிருப்பது போன்ற அந்தக் காட்சி picture post card ஒன்றைப் பார்ப்பதுபோல இருந்தது. ‘என்னமோ ஏதோ’ என்ற கோ திரைப்படப் பாடல் இங்குதான் படமாக்கப்பட்டிருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.
Bergen பஸ் நிலையத்துக்கு இளைய மகன் அஜனுடன் வந்த கமலினியுடன் அவரின் வீட்டைச் சென்றடைந்தோம். எதையெல்லாம் பார்ப்பதற்கு சங்கி விரும்புகிறா எனக் கேட்டபடி, சங்கிக்கு மிகப் பிடித்த உணவான பால் அப்பங்களைச் சுடச் சுட கமலினி பரிமாறினா. அவவுக்கு உதவியாகக் குசினியில் அஜனும் நின்றிருந்தது இன்றைய இளம் சமுதாயத்தில் நிகழும் மாற்றத்துக்கு ஒரு சாட்சியாக இருந்தது. சாப்பாட்டு மேசையில் இட்டலியும் கூடவே இருந்தது. விருந்தினர்கள் வருகிறார்கள் என்பதையறிந்த கமலினியின் சினேகிதி ஒருவரின் உபகாரம் அது என அறிந்தபோது, அந்தச் சினேகிதி அப்படிச் செய்யுமளவுக்குக் கமலினியும் அவவுக்கு உதவிகளைச் செய்திருக்கிறாரெனப் புரிந்தாலும், காலில் சில்லுப் பூட்டியதுபோல ஓடித்திரியும் நாங்கள் வாழும் ரொறன்ரோவில் இப்படியெல்லாம் நிகழுமாவென என்னை அது அதிசயிக்க வைத்தது.