கறுப்பு ஜூலை 83 நினைவுகள்... வ.ந.கி -
ஒரு கலவரம் நாட்டின் தலைவிதியையே மாற்றி அமைத்தது. அடுத்த இருபத்தாறு ஆண்டுகள் நாட்டைக் கொடிய போர்ச்சூழலுக்குள் தள்ளிவிட்டது. நாட்டின் அனைத்து மக்களும் அப்போரின் வெம்மைக்குள் வாடினார்கள். கூடிய அழிவினைத் தமிழர்கள் அடைந்தனர். அந்த இனக்கலவரம் மட்டும் நடைபெறாமலிருந்தால் என்று நான் சிந்திப்பதுண்டு. ஆனால் அந்த இனக்கலவரம் உருவாகக் காரணமாக இருந்த அரசு ஜே.ஆர். ஜெயவர்த்தனேயின் அரசு. 77இல் பதவிக்கு வந்தது தொடக்கம் 1983 வரையில் தமிழ் மக்கள் மேல் கொடிய அடக்குமுறைகளைப் பிரயோகித்தது. 77இல் பதவிக்கு வந்ததுமே நாட்டில் இனக்கலவரமொன்றை அவரது அரசு உருவாக்கியது. அதற்கு முக்கிய காரணங்கள் தமிழர்கள் தமிழீழத்துக்கு வாக்களித்ததும், எதிர்க்கட்சித்தலைவராகத் தமிழர் ஒருவர் வந்ததுமே. அக்காலகட்டத்தில் 'போர் என்றால் போர். சமாதானமென்றால் சமாதானம்' என்னும் அவரது உரை தொடங்கிய கலவரத்தை மேலும் பற்றியெரிய வைத்தது. அவரது ஆட்சிக்காலத்தில் பயங்கரவாத்தடைச்சட்டம் அமுலுக்கு வந்தது. படையினரின் மனித உரிமை மீறல்கள் அதிக அளவில் இடம் பெற்றன.
யாழ் வர்த்தகர்களின் வர்த்தக நிலையங்கள் எரிக்கப்பட்டன. புகழ்பெற்ற நூலகமும் கூடவே எரிந்தது.
இவற்றுக்கெல்லாம் சிகரம் வைத்ததுபோல் கொடிய இனக்கலவரத்தை ஜூலை 83இல் தமிழர்கள் மேல் கட்டவிழ்த்து விட்டது ஜே.ஆரின் அரசு. ஜே.ஆரின் அமைச்சர்களான சிறில் மத்தியூ உட்படப் பலர் அக்கலவரம் அகோரமாகப் பற்றியெரியக் காரணாமாக விளங்கினர்.
அதன் பின் அடுத்த 26 ஆண்டுகள் நாட்டைப் பேரழிவுக்குள், யுத்தத்தினுள் மூழ்கடிக்க வைத்ததற்கு முக்கிய காரணம் ஜே.ஆர் அரசின் அணுகுமுறையே.
தமிழ் மக்களின் மேல் வன்முறையினை , மனித உரிமை மீறல்களைக் கட்டவிழ்த்து விட்ட ஜே.ஆர் அரசு சிங்கள இடதுசாரிகளை ஒடுக்குவதற்கும் அந்நிலையினைப் பயன்படுத்தத் தவறவில்லை. மக்கள் விடுதலை முன்னணியைத்தடை செய்தது. நாட்டின் 83 இனக்கலவரத்துக்கு இடதுசாரிகளே காரணமென்று பொய்யாகக் குற்றஞ்சாட்டி ஜேவிபி போன்ற கட்சிகள் தலை மறைவாக இயங்கும் நிலையை உருவாக்கியது.