நூல் அறிமுகம்: ‘சிதரால் திருச்சாரணத்து மலை’ சமணப்பள்ளி - முனைவர் இர.ஜோதி மீனா , உதவிப் பேராசிரியர், மொழித்துறை, இந்துஸ்தான் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கோயம்புத்தூர் – 641028. -
* ‘சிதரால் திருச்சாரணத்து மலை’ சமணப்பள்ளி – ஆசிரியர் டாக்டர் சிவ.விவேகானந்தன் , வெளியீடு காவ்யா, விலை – 300
நூலாய்வு
தேனடைகளைக் கொண்ட ஏராளமான ஆலமரங்களைக் கொண்ட ஊருக்குச் சிதரால் என்று பெயர். இப்பெயர் குறித்து கல்வெட்டுகளிலோ, கதைப் பாடல்களிலோ இல்லை என்பைதையும் ஆசிரியர் குறிப்பிடுகிறார். சிதரால் நடுவே அமைந்துள்ளது திருச்சாரணத்துமலை. மலை உச்சியில் சமணப்பள்ளி ஒன்றும் உள்ளது. திருச்சாரணத்து மலையில் வீற்றிருக்கும் படாரியான பத்மாவதி அம்மனுக்கு (இவர் இயக்கி என்ற பெயரால் அழைக்கப்படுகிறார்) ஆறாட்டுக்காக, சமணப் பெண் துறவிகளால் வெட்டப்பட்ட நீர்ச்சுனை ஒன்று உள்ளது. சமணப்பள்ளி ஏறத்தாழ ஐந்து ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ளது. சமணப்பள்ளி சமண மடாலயம் என்று அழைக்கப்பட்டது.
சமண சமயத்து இளந்துறவிகளான சாரணர்கள் சிதரால் மலையில் தங்கியிருந்து சமணப் பணி செய்துள்ளனர். திருச்சாரணத்துமலை சமணப் பள்ளியைப் போல முற்காலத்தில் பல பள்ளிகள் அமைந்துள்ள திருச்சாரணத்து மலைக் கோவிலில் பாசுவநாதரும், பத்மாவதி இயக்கியும் கோவிலில் தெய்வமாக இருந்துள்ளனர். வியப்பு என்னவென்றால் சைவம் புகுந்த போது சமண சமயத்து இயக்கியான பத்மாவதி, சைவசமயத்து பகவதி அம்மனாக மாற்றம் பெற்றனர்.
தொடக்கத்தில் குகைப் பள்ளியாக இருந்த இக் குகை 8ஆம் நுற்றாண்டிலிருந்து குகைக் கோவிலாக மாற்றம் பெற்றது. வழிபாடுகளும் சமயப் போதனைகளும் இங்கு நடைபெற்றன. குகைக் கோவிலாக மாற்றம் பெற்ற நிலையில் இந்துக்கோவிலாக மாறி பகவதி அம்மனான உருமாற்றம் பெற்றது.