புரிந்துணர்வைப் போதிக்கும் படைப்பு : சிவ ஆரூரனின் ஊமை மோகம் - கலாநிதி சு. குணேஸ்வரன் -
அறிமுகம்சிவ ஆரூரன் சிறைக்குள்ளிருந்து இலக்கியம் படைத்தவர். தனது சிறைக்காலத்தை வாசிப்பு எழுத்து என மாற்றி நம்பிக்கையை விதைத்தவர். கவிதை, சிறுகதை, நாவல், கட்டுரை என பல்துறைகளிலும் ஈடுபட்டு வருபவர். சமூக இயங்கியலை வெளிப்படுத்தும் பல நாவல்களைத் தந்தவர். சிறந்த நாவலுக்கான விருதுகளை மாகாண மட்டத்திலும் தேசிய மட்டத்திலும் பெற்றவர். ஜீவநதி வெளியீடாக 2022 இல் வெளிவந்த ‘ஊமை மோகம்’ என்ற நாவலை அடிப்படையாகக் கொண்டதாக இக்கட்டுரை அமைந்துள்ளது.
சிவ ஆரூரனின் வெளிவந்த ஏனைய நாவல்களில் இருந்து உள்ளடக்கத்தில் வேறுபட்டது ஊமை மோகம். பலரும் எழுதத் தயங்குகின்ற ஆண்பெண் உறவுநிலையில் ஏற்படுகின்ற சிக்கல்களை இந்நாவல் பேசுகிறது. தமிழ்ச்சூழலில் இவ்வகை எழுத்துக்களுக்கு நீண்ட வரலாறு உள்ளது. இந்நாவலின் உருவாக்கம் பற்றி ஆசிரியர் குறிப்பிடும்போது
“ஆண்பெண் உறவின் அதிருப்தி குறித்தும் புரிந்துணர்வு இன்மை குறித்தும் பலர் பேசியதை நான் செவிமடுத்த பிறகு அவற்றை என் மனவானில் உலவவிட்டவேளை என் மனம் உளைந்தது. என் நூலறிவின் துணை கொண்டு என் மனஉளைவிற்கு ஒரு கலைப்பெறுமதியைக் கொடுக்க முனைந்துள்ளேன். ஒழுக்க நெறியுடன் வாழநினைக்கும் யாழ் மண்ணின் கீழ்மத்தியதரக் குடும்பம் ஒன்றின் வாழ்வுக் கோலத்தையும் அதில் இழையோடிக் கிடக்கும் அபாக்கியமான ஊமை மோகத்தையும் இந்நாவல் பேசுகின்றது.” (தந்துரை, சிவ. ஆரூரன்) என்று குறிப்பிடுகின்றார்.