ஆய்வு: கம்பராமாயணத்தில் மான்கள்! - முனைவர். க.மங்கையர்க்கரசி, உதவிப்பேராசிரியர் தமிழ்த்துறை, அகர்சந்த் மான்மல் ஜெயின் கல்லூரி (சுழல்-II), மீனம்பாக்கம், சென்னை. -
முன்னுரை
பெண்களின் கண்களுக்கு மானின் கண்களை ’மருளுதல்’ என்பதற்கு உவமையாகப் புலவர்கள் குறிப்பிடுவர். கம்பராமாயணத்தில் கவரிமான், நவ்வி மான், புள்ளிமான் என மான்கள் குறித்து கூறப்பட்டுள்ளன. தன் காவியத்திற்கு சிறப்பு சேர்க்கும் விதமாகக், கம்பர் உவமையைக் குறிப்பிடும்போது, மானை பற்றி சில இடங்களில் கூறிச் சென்றுள்ளார். மான் கூட்டம் போன்ற மங்கையர்கூட்டம், புலியைக் கண்ட புள்ளிமான் போல, புலி தன்னைத் தின்ன வருவதைக் கண்ட மான் போல, வலையில் அகப்பட்ட மான் போல, என்றெல்லாம் குறிப்பிடுகிறார். முனிவர்கள் மான் தோலைப் பயன்படுத்தினர் என்பதையும், மான் ஊடல் கொண்டது குறித்தும், குறிப்பிடுகிறார். சீதை மானைக் கேட்டு அடம்பிடித்ததையும், இலட்சுமணன் தடுத்தும் இராமன் மானின் பின் சென்றதையும், மாயமான் இறுதியில் அழிந்தது குறித்தும், கூறிச் செல்கின்றார். மான் பற்றிய செய்திகள் கம்பராமாயணத்தில் அமையும் விதம் குறித்து ஆராய்வோம்.
மான் கூட்டம் போல மங்கையர் கூட்டம்
மிதிலை நகரத்தில் இராமனைக் காண பெண்கள் வந்தனர். அவர்கள் மனம் இராமனைச் சென்று சேர்ந்தது. பள்ளத்தை தண்ணீர் தேடிச் செல்வதைப்போல, இராமனை நாடிச் சென்ற பெண்களின் கருங்குவளைக் கண்களைப் ’ பூத்த வெள்ளத்துப் பெரிய கண்ணார்’ என்கிறார். குடிக்கத் தண்ணீர் இல்லாத வறண்ட காலத்தில் சிறிதளவு பருகத்தக்க நீரைக்கண்டு, அதைக் குடித்துத் தாகம் தீர்க்க ஓடிவரும் மான் கூட்டங்களைப்போல மங்கையர்க் கூட்டம் இராமனை நோக்கி ஓடி வந்தது.
“மண்ணின் நீர் உலந்து வானம் மழை அறவறந்த காலத்து
உண்ணும் நீர் கண்டு வீழும் உழைக் குலம் பலவும் ஒத்தார்” (உலாவியற்படலம் 1013)
மான் போன்ற மருண்டப் பார்வை
பெண்கள் மான் போன்ற கண்களை உடையர்கள் . பெண்களின் கண்களை வர்ணிக்கும்போது மானின் பார்வை போன்றது என்பர்.
“மான் அமர் நோக்கினாரை மைந்தரைக் காட்டி வாயால்” (களியாட்டுப்படலம் 2772)
“மாப்பிறழ் நோக்கினார் தம் மணி நெடுங் குவளை வாட் கண்” (களியாட்டுப்படலம் 2775)
இராமன் கன்னிமாடத்தில் நின்றிருந்த சீதையைக் கண்டு காதல் கொண்டு, அவளின் நினைவால் துன்பம் அடைந்தபோது, மான் விழிச் சீதையோடு சென்ற நெஞ்சமே என்று கூறுகிறான். இளமானின் பார்வையையுடையவளே என்று இராமன் சீதையின் பார்வைக் குறிப்பிடுகிறான்.