தொடர்நாவல்: ஒரு கல் கரைந்தபோது! (3) - ஶ்ரீராம் விக்னேஷ் (நெல்லை,, வீரவநல்லூர்) -
அத்தியாயம் மூன்று!
இடைவேளை விட்டுத் தொடங்கிய காட்சியிலே, கண்ணுக்குத் தெரிந்தது ஆஸ்பத்திரி வார்டு. பார்வையின் கோணத்தை அங்குமிங்கும் ஓடவிட்டேன். சந்தேகமே இல்லை. திருநெல்வேலி “மேட்டுத் திடல்” (ஹைகிரவுண்ட்) அரசு மருத்துவ மனையேதான்.இரண்டு நாட்கள் சுயநினைவின்றிக் கிடந்ததை எதிரே சுவரில் தொங்கிக்கொண்டிருந்த காலண்டர் உறுதிப்படுத்தியது. உடலெங்கும் காயங்கள். முக்கியமாக வலது காலைச் சுற்றி ஏகப்பட்ட பாண்டேஜ் துணி, பந்துபோல திரட்டிச் சுற்றப்பட்டிருந்தது. தலைமாட்டில் கண்ணீருடன் அம்மா. வெறுப்புக்காட்டும் முகத்தோடு அக்கா. அவளின் கைத்தடியாக அருகே அத்தான். அக்கா, அத்தான் இருவருக்கும் காயங்களும், கட்டுக்களும் இருந்தபோதிலும் என்னளவுக்கு இல்லை. கண்களை அகலத் திறந்து எல்லோரையும் பார்த்தபோது, அக்காளின் சுடுகணைகள் திருப்பள்ளியெழுச்சி ஆகின.
“பொம்பளைங்க எப்பவுமே சொய அறிவோட நடந்துக்கணும்….. வண்டிய ஓட்டுறத்துக்கு ஸ்டேரிங்கைப் புடிச்சா தெருவைப் பாப்பாளா…. எங்களையெல்லாம் கைலாசம் அனுப்பப் பாத்திட்டியேடி….”
வேதனையின் மத்தியிலும் பலமாகச் சிரித்துவிட்டேன் நான். எனக்குள்ளே பேச நினைத்தது தவறுதலாக வார்த்தையாக வந்துவிட்டது.
“சொய அறிவு….. அப்பிடீன்னா என்னது அக்கா….”