கிராமப்புற மருத்துவம் - முனைவர்.அ.ஸ்ரீதேவி , உதவிப்பேராசிரியர் மற்றும் துறைத்தலைவர், தமிழ்த்துறை, நேரு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கோயம்புத்தூர்.105 -
- பதிவுகள் இணைய இதழுக்கு ஆய்வுக் கட்டுரைகளை அனுப்புபவர்கள் ஓருங்குறி எழுத்துருவில் அனுப்ப வேண்டும். பாவித்த நூல்கள் பற்றிய விபரங்கள் (நூல் பெயர், வெளியான ஆண்டு, பதிப்பகத்தின் பெயர்) உசாத்துணைப்பட்டியலில் குறிப்பிடப்பட வேண்டும். - பதிவுகள்.காம் -
முன்னுரை
கிராமப்புற மருத்துவ முறை கிராம மக்களின் வாழ்வியலோடும், பண்பாட்டோடும், சமூக அமைப்போடும் பிரிக்க இயலாதபடி இரண்டற கலந்து விட்ட ஒன்றாகும். இம்முறை மருத்துவம் பலவகைகளாக பிரிக்கப்பட்டுள்ளன. எவ்வித பக்க விளைவுகளும் இல்லாத இந்த மருத்துவத்தால் பயன் பெற்றவர்கள் உள்ளனரே தவிர பக்க விளைவால் பாதிக்கப்பட்டவர்களை காண்பது அரிது. இதனைப் பற்றி இக்கட்டுரையில் முழுமையாகக் காண்போம்.
நாட்டுப்புற மருத்துவத்தின் பல்வேறு பெயர்கள் நாட்டுப்புற மருத்துவமானது பாட்டி வைத்தியம் வீட்டு வைத்தியம், கை வைத்தியம், நாட்டு மருத்துவம், பரம்பரை வைத்தியம், பச்சிலை வைத்தியம், மூலிகை வைத்தியம், இராஜ வைத்தியம், இரகசிய மருந்து வைத்தியம் என மக்களால் பல்வேறு பெயர்களில் வழங்கப்பட்டு வருகிறது. இப்பெயர்கள் மருத்துவப் பொருள்களின் அடிப்படையில் மாறுபடுகின்றன.
நாட்டுப்புற மருத்துவம் உருவான வரலாறு
இயற்கையோடு தொடர்பு கொண்டிருந்த மனிதன் தன்னைச் சுற்றி வளர்ந்துள்ள மரம், கிளை, இலை, வேர், செடி, கொடி, பூ, காய், கனி, விதை ஆகியவற்றையும் கூர்ந்து நோக்கினான். இதனால் அவற்றின் மருத்துவக் குணங்களும் அவனுக்குப் புலனாகத் தொடங்கின. ஆங்காங்குக் கிடைக்கக்கூடிய தாவர வகைகளின் மருத்துவக் குணங்களை அறிந்து அவற்றை மனிதர்களிடம் சோதனைக்கு உட்படுத்தி வெற்றி கண்டபோது நாட்டு வைத்தியத்தின் மீதும் வைத்தியர்கள் மீதும் மனிதர்களுக்கு நம்பகத் தன்மை உண்டானது. நோயுற்ற மனிதன் மருத்துவனை நம்புவதும், மருத்துவன் மருந்தை நம்புவதும் காலத்தின் தேவையாகியது. இந்நிலையில், நாட்டு வைத்தியர்கள் பெரிதும் மதிக்கப்பட்டனர். இம்மதிப்பைக் காத்துக்கொள்ள அவர்கள் தமக்குத் தெரிந்த மருத்துவத்தில் மேலும் விளக்கம் தேட முற்பட்டனர். இத்தேடல் முயற்சி அவர்களுக்கு இத்துறையில் அனுபவ முதிர்ச்சியைத் தந்தது. இப்பெரியோர்களின் அனுபவக் கொடையே நாட்டு மருத்துவமாகும். (முனைவர் ந. சந்திரன் ‘நாட்டு மருத்துவம்’ (2002) பக். 14-16).