சிறுகதை : முருகா ! - கடல்புத்திரன் -
*ஓவியம் - AI 'மயிலியப்புலக்குளம் பற்றிய நினைப்பு ' மனதில் வட்ட அலைகளை ஏற்படுத்த , ஏக்க மூச்சுக்கள் புகையாய் எழ அந்த செந்தாமரைக் கிராமம் ...சித்திரமாக விரிகிறது . அவ்விடத்து வெற்றிக்கழகம் , சட்ட கோப்புகளை வைத்துக் கொண்டு பல விசயங்களை சாதித்து வருகிறது , கோவில் வளவுக்குள் கலை நிகழ்ச்சிக்கான மேடை ஒன்றை அமைப்பதற்கான நிதி சேகரிப்புக்காக உப அரசாங்க முறையிலான சிரமதானம் நடைபெற்றது , அந்த குளத்தில் சிறிதளவு கனமண்ணை வெட்டிய போது , செவ்வேலும் வேல்முருகு , பரமானந்தம் ... அவன் என வகுப்பு தோழர்கள் பலருடன் கூடையில் மண்ணை ஒருத்தர் ,மாறி ஒருத்தரிடம் கொடுத்து குளத்து அணையில் கொட்டியது நினைவுக்கு வந்தது . அலுவலகர்கள் வந்து வெட்டியதை பார்வையிட்டு அதற்கான தேனீர்ச்செலவை கொடுப்பர் , அவ்வலுவலகத்தில் வேலை பார்க்கிற கிராமத்தைச் சேர்ந்த தவபாலண்ணரின் புத்தியில் உதித்த புத்திசாலித்தனம் . தேனீர் , வடை ...போன்றவற்றை ஊர்க்காரர்களே வீடுகளிலிருந்து கொண்டு வந்து வழங்கினர் . கிடைக்கிற பணத்துடன் வெளிநாட்டிலிருக்கிறவர்களும் அதற்கு நிதியளிக்க சம்மதித்திருந்தார்கள் . கூட்டு முயற்சி இல்லாமல் இப்படியான திட்டங்கள் வெற்றி பெற முடியாது . கிராமத்தின் தலையாய கால்பந்துக்குழுவும் அவர்களுடையது தான் .
வந்ததிலிருந்து , இவன் , அடிக்கடி இப்படியே கிராம நினைப்புகளில் கரைந்து போய் விடுகிறவன் . ஈழவரசுக்கு எங்கேயிருந்து தான் ' மதம் பிடித்தது போன்ற அந்த உன்மந்தம் பிடித்ததோ ? '..., தமிழரின் வாழ்வைச் சிதைத்து சீரழித்துக் கொண்டே செல்கிறது . 'பக்கத்திலிருக்கிறவன் வாழ்ந்தால் தானும் வாழ்வான்' என்ற செவ்விந்தியரின் சிந்தனை எல்லாம் கிடையாது .' இனப்பகை' என்பது பஞ்சம் பசியில் வீழ்ந்தாலும் போகாத வியாதி , மாறுவதற்குப் பதில் பெருகிக் கொண்டே போகிற ஒன்றாக . காந்தியின் அகிம்ஷை , புத்தரின் ஞானம் , யேசுவின் நேசம் , இந்துக்களின் ஆன்மீகம் எதிலுமே நம்பிக்கைகளை துடைத்து விடுகிற அறுந்த இவர்களின் அரசியலில் அகப்பட்டுக் கொண்டு விட்டோம் . பாலஸ்தீனர்களை அழிக்கும் இஸ்ரேல் போல் , கிரீக் இளைஞர்களைப் பெருமளவில் கொன்ற கிரீக் அரசைப் போல , ஈழத்திலும் கொன்ற ...ஒரு மாற்றப்பட வேண்டிய அரசியலாகக் கிடக்கிறது .