வாழ்வாங்கு வாழ்ந்துகொண்டிருக்கும் பூபதி அண்ணா! - ஶ்ரீரஞ்சனி -
இரண்டு முறை சாகித்தியப் பரிசு, பிரான்ஸ் வென்மேரி அறக்கட்டளையினரின் இலக்கியச் சாதனையாளர் விருது, தமிழ் இலக்கியத் தோட்டத்தினரின் வாழ்நாள் சாதனையாளர் விருது என வேறுபட்ட பல விருதுகளுக்குச் சொந்தக்காரராக இருக்கும் எழுத்தாளர் முருகபூபதி அவர்கள் இலக்கிய உலகில் தனக்கென ஒரு முத்திரையை ஆழமாகப் பதித்திருக்கிறார்.
1972 இல், மல்லிகையில் பிரசுரமான ‘கனவுகள் ஆயிரம்’ என்ற சிறுகதையின் ஊடாக இலக்கிய உலகில் தடம்பதித்த அவர் அடுத்த மூன்று வருடத்துக்குள் குறித்த வருடத்தின் சிறந்த சிறுகதைத் தொகுப்புக்கான சாகித்தியப் பரிசைத் தனதாக்கிக் கொண்டார் என்பதே அவரின் எழுத்தின் சிறப்பைக் கூறுவதற்குப் போதுமானது. அந்தக் கெளரவத்தை அவருக்குப் பெற்றுக்கொடுத்திருந்த ‘சுமையின் பங்காளிகள்’ என்ற அவரது முதலாவது சிறுகதைத் தொகுதி தற்போது ரொறன்ரோப் பல்கலைக்கழகத்தின் எண்ணிம நூலகத்திலும் சேர்க்கப்பட்டிருக்கிறது.
ஏழு சிறுகதைத் தொகுதிகள், பதினைந்து கட்டுரைத் தொகுதிகள், நாவல் மற்றும் சிறுவர் இலக்கியம், விமர்சனங்கள், நேர்காணல்கள் எனத் தன் பல்வேறு படைப்புக்களால் தமிழ் இலக்கிய உலகுக்கு மிகுந்த வளம் சேர்த்திருக்கும் முருகபூபதி அவர்கள் இலக்கிய உலகில் தான் மிளிர்வதுடன் மட்டும் நின்றுவிடவில்லை. சக எழுத்தாளர்களைப் பற்றிப் பரவலாக எல்லோரும் அறிந்திருக்க வேண்டுமென்ற முனைப்புடன் செயல்படும் ஒரு கருமவீரராகவும் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். அவரின் பரந்தமனப்பான்மையும், விரிவான வாசிப்பும், அபாரமான நினைவாற்றலும், மற்றவர்கள் பற்றிய கரிசனையும்தான் அதற்கு அடிப்படையெனலாம்.