வ.ந.கிரிதரனின் 'கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்' சிறுகதைத்தொகுப்பு பற்றிய குறிப்புகள்! - கே.எஸ்.சுதாகர் -
ஜீவநதி பதிப்பகம் வெளியீடாக வெளியான வ.ந.கிரிதரனின் 'கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்' சிறுகதைத் தொகுப்பு பற்றி , எழுத்தாளர் கே.எஸ்.சுதாகர் எழுதிய குறிப்புகளிவை. - பதிவுகள்.காம்-
இத்தொகுப்பில் உள்ள பல கதைகளை (ஒரு மா(நா)ட்டுப் பிரச்சினை, மான்ஹோல், பொந்துப்பறவைகள், கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள், சாவித்திரி ஒரு ஸ்ரீலங்கன் அகதியின் குழந்தை!, சுமணதாஸ் பாஸ்….) ஏற்கனவே வாசித்துவிட்டேன். இருப்பினும் தொகுப்பாக ஒருங்கு சேர்ந்து பார்ப்பதில் மிக்க மகிழ்ச்சி.
`மனைவி’ , `கணவன்’, `யன்னல்’ போன்ற கதைகளின் ஆரம்பப்பகுதிகளின் அழகிய வர்ணனைகளை மிகவும் இரசித்தேன். மனைவி சிறுகதை ஒரு தீர்க்கமான முடிவை எட்டாத போதிலும், கணவன் சிறுகதை மன நிறைவைத் தருகின்றது. மனைவி மீது சந்தேகம் கொள்ளும் கணவன், திடீரென்று மனம் மாறுவது வியப்பைத் தருகின்றது. ஆனாலும் நல்லதொரு முடிவைச் சொல்லியிருக்கின்றீர்கள்.
`மனித மூலம்’ சற்றே பொறுமையைச் சோதிக்க வைக்கின்றது. இந்தக் கதை மூலம் என்னத்தைச் சொல்ல வருகின்றீர்கள் என்பதை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை. `மான்ஹோல்’ அற்புதமான கதை. மூன்று அகதிகளின் சங்கமம் என்று சொல்லலாம். மான்ஹோலில் மீது குடியிருக்கும் சாமியார் அனாதைப்பிண்மாக இறக்கும் தறுவாயில், `ஒன்றாரியோ பாராளுமன்றத்தில் இருந்து அவர்கள் சட்டங்கள் இயற்றிக் கொண்டிருக்கின்றார்கள்’ என அவர் சொன்ன வார்த்தைகள் நினைவுக்கு வந்தது. `சுண்டெலி’ சற்றே நகைச்சுவைப் பாங்கானதாகவும், வலிந்து முடிவைத் திணிக்காமல், கதையின் போக்கிலேயே முடிவை விட்டுவிடுவதும் சிறப்பு. `பொந்துப் பறவை’ சிறுகதை இத்தொகுப்பில் எனக்கு மிகவும் பிடித்தது. தோற்றத்தை வைத்து ஒரு மனிதனை எடை போட முடியாது என்பதைச் சொல்கின்றது. அதுவும் அந்த `எடை போடுதல்’ தவறானது என்பதை சுயநலத்தின்பால் கதையின் நாயகன் கண்டுகொள்ளும்போது வெட்கம் கொள்வதும் காட்டப்படுகின்றது.