அண்மையில் எழுத்தாளர் இந்திரா பார்த்தசாரதிக்கு இந்திய மத்திய அரசின் சாகித்ய அகாதமி 'பெல்லோஷிப்' விருது கிடைத்துள்ளது. வாழ்த்துகள். தனது 91 ஆவது வயதிலும் எழுதிக்கொண்டிருக்கின்றார். 'அமுதசுரபி' மற்றும் 'கணையாழி' சஞ்சிகைகளில் இவரது பக்கங்கள் தொடர்கின்றன. அவருக்கு என் வாழ்த்துகள்.எனக்கு என் பால்ய காலத்து வாசிப்பின் போது அறிமுகமான எழுத்தாளர்கள் பலர். ஜெயகாந்தன், புதுமைப்பித்தன், இந்திரா பார்த்தசாரதி, நா.பார்த்தசாரதி, அகிலன், கல்கி, சாண்டில்யன், பி.வி.ஆர், அநுத்தமா, லக்சுமி, ர.சு.நல்லபெருமாள், உமா சந்திரன், ஜெகசிற்பியன், ஶ்ரீ வேணுகோபாலன்.. ... என்று பலர் அறிமுகமானது அப்பருவத்தில்தான். இந்திரா பார்த்தசாரதி முதன் முதலில் அறிமுகமானது அவரது சிறுகதையான 'அவள் என் மனைவி' என்னும் சிறுகதை மூலம். கல்கி 69இல் பெர்க்லி நிறுவனத்துடன் இணைந்து நடத்திய சிறுகதைப்போட்டியில் முதற் பரிசு பெற்ற சிறுகதை மேற்படி அவரது சிறுகதை. அதன் பின் கல்கியில் வெளியான அவரது ஆரம்ப காலத் தொடர்கதைகளான 'வேஷங்கள்' மற்றும் 'ஹெலிகாப்டர்கள் கீழே இறங்கி விட்டன' மூலம் அவ்ர் மேலும் என் கவனத்தைக் கவர்ந்தார்.
அதன் பின் அவரது நாவல்கள் பல (அரசியல் கலந்த) வெளியாகி அவரைச் சிறந்த நாவலாசிரியர்களிலொருவராக்கின. இந்திரா காந்தி நெருக்கடி நிலையினைக் கொண்டு வந்த காலத்தில் அவரும் பாதிக்கப்பட்டிருந்தார் என்றறிகின்றேன். அதிலிருந்து தப்புவதற்காகவே அவர் கிழக்கு ஐரோப்பியப் பல்கலைக்கழகமொன்றில் பணியாற்றச் சென்றதாகவும் கேள்விப்பட்டிருக்கின்றேன்.
இவ்விதம் தனது புனைகதைகள் மூலம் எனக்கு அறிமுகமான இ.பா அவர்கள் சிறந்த நாடகாசிரியர்களிலொருவராக அறிமுகமானது அவரது 'மழை' நாடகம் மூலம்தான். இயக்குநர் பாலேந்திரா, அவரது மனைவி ஆனந்தராணி ஆகியோரின் நடிப்பில் மேடையேற்றப்பட்ட 'மழை' எனக்குப்பிடித்த நாடகங்களிலொன்று. பெரும்பாலும் உரையாடல்களினாலேயே அமைந்த நாடகமது. ஆனால் சிந்திக்க வைக்கும், மனத்தில் நிற்கும் வகையான கருத்துகளை, மொழி நடையினைக் கொண்ட உரையாடல்கள் நிறைந்த நாடகம் 'மழை'.
இ.பா மீது புகலிடத் தமிழ் எழுத்தாளனென்ற வகையிலும் மதிப்புண்டு. முதன் முதலில் புகலிடத் தமிழ் எழுத்தாளர்களின் சிறுகதைகளைத் தொகுத்து வெளியிட்டவர்கள் எழுத்தாளர்களான எஸ்.பொ.வும் , இந்திரா பார்த்தசாரதியுமே. மிகுந்த வரவேற்பைப்பெற்ற தொகுப்பான 'பனியும், பனையும்' தொகுப்பு நூலே அது. மித்ர பதிப்பக வெளியீடாக வெளியான தொகுப்பு. எழுத்துலகில் பன்முகத்தன்மை மிக்க எழுத்தாளர்களிலொருவர் இ.பா என் வாசிப்பனுவத்தில் அவரது படைப்புகளும் முக்கியமானவை. என்னைப் பாதித்தவை. இத்தருணத்தில் சாகித்ய அகாதமி 'பெல்லோஷிப்' விருதைப் பெற்றிருக்கும் அவருக்கு மீண்டுமொரு தடவை என் வாழ்த்துகள்.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.