ஆவணக்காணொளி ; கு.அழகிரிசாமி கொலக்கால் திரிகை! & எழுத்தாளர் ஶ்ரீரங்கனின் கேள்வியொன்று பற்றி... - வ.ந.கிரிதரன் -
எழுத்தாளர் கு,அழகிரிசாமி பற்றிய சிறப்பானதோர் ஆவணக்காணொளி. அவரை எழுத்தாளராக மட்டுமே அறிந்திருந்த எனக்கு 'கு.அழகிரிசாமி கொலக்கால் திரிகை' என்னும் இக்காணொளி அவரது பன்முக ஆளுமையை அறிய வைத்தது. இதன் ஒளிப்பதிவு, படத்தொகுப்பு மற்றும் இயக்கத்தைச் சிறப்பாகச் செய்திருப்பவர் அ.சாரங்கராஜன். வாழ்த்துகள்.
ஓவியம், கர்நாடக இசை, பழந்தமிழ் இலக்கியம் குறிப்பாகக் கம்ப ராமாயணம், மொழிபெயர்ப்பாற்றல், மேனாட்டு இலக்கியப் புலமை, ருஷ்ய இலக்கியம் மீதான ஆர்வமும், புலமை என கு.அழகிரிசாமியின் பன்முக ஆளுமையை இலக்கிய ஆளுமைகள் பலரின் கூற்றுகள் வாயிலாகச் சிறப்பாக வெளிப்படுத்தும் ஆவணம்.
முதன் முதலாக மாக்சிம் கார்க்கியின் படைப்பைத் தமிழில் மொழிபெயர்த்தவர் கு.அழகிரிசாமியே என்பதை இக்காணொளி மூலம் அறிந்துகொண்டேன். மேலும் காவடிச்சிந்தை இவர் பதிப்பித்துள்ளார் என்பதையும் அது அறிஞர்கள் பலரின் மதிப்பைப் பெற்றுள்ளது என்பதையும் அறிந்தேன். கம்பராமாயணம் பற்றிய இவரது விமர்சனத்தொகுப்புகள் வெளியாகியுள்ளன என்பதையும், அவற்றின் சிறப்பு பற்றிய எழுத்தாளர் பிரபஞ்சனின் பார்வையினையும் அறிந்துகொண்டேன். 'கவிச்சக்கரவர்த்தி', 'வஞ்சமகள்' போன்ற இவரது நாடகப் பங்களிப்புகள் பற்றியும் அறிந்து கொண்டேன்.