நூல் அறிமுகம்: வடகோவை வரதராஜனின் 'ஆளப்போகும் வேர்கள்' - வ.ந.கிரிதரன் -
நேற்று நண்பரும், சமூக,அரசியற் செயற்பாட்டாளரும், எழுத்தாளர் வடகோவை வரதராஜன் அவர்களின் சகோதரருமான யோகராஜா தியாகராஜாவிடமிருந்து (முகநூலில் யோக வளவன் தியா) வடகோவையாரின் அண்மையில் வெளிவந்த நூலான 'ஆளப்போகும் வேர்கள்' நூலின் பிரதியொன்றினைப் பெற்றுக்கொண்டேன். கிழக்கு மாகாணத்திலுள்ள ஏறாவூரிலிருந்து செயற்படும் கஸல் பதிப்பகம் அண்மைக்காலமாக மிகவும் சிறப்பான வடிவமைப்பில், தரமான நூல்களை வெளியிட்டு வருவதை அவதானித்திருக்கின்றேன். வடகோவையாரின் இந்நூலையும் மிகவும் சிறப்பாக வடிவமைத்து வெளியிட்டிருக்கின்றார்கள். மேலும் இத்துறையில் அவர்கள் பல நூல்களை வெளியிட்டு இலங்கைத் தமிழ் இலக்கியத்துக்கு வளம் சேர்க்க வாழ்த்துகள்.
வடகோவையாரை முகநூலில் அறிவதற்கு முன்னரே என் பதின்ம வயதுகளிலேயே அறிந்திருக்கின்றேன். அவரது சிறுகதைகள் ஈழநாடு வாரமலர், சிரித்திரன் என்று அக்காலகட்டத்தில் நான் விரும்பி வாசித்த ஊடகங்களில் வெளிவந்திருந்தன. சிறுகதைப்போட்டிகளில் இவரது சிறுகதைகள் முதற் பரிசுகளைப் பெற்றிருக்கின்றன. அப்போதே இவரது கதைகளில் அவ்வப்போது தென்படும் இயற்கையுடனான நேசிப்பை அவதானித்திருக்கின்றேன். ஆனால் அப்போது இவர் ஒரு விவசாயப் பட்டதாரி என்பதை அறிந்திருக்கவில்லை. முகநூலில்தான் இவரது பதிவுகளின் மூலம் இவரது கல்விப் பின்புலத்தை அறிந்துகொண்டேன்.