வடலி' பதிப்பக வெளியீடாக வெளியான எழுத்தாளர் தேவகாந்தனின் நாவல் 'கலிங்கு'. தற்போது 'பதிவுகள்' இணைய இதழில் தொடராக வெளியாகின்றது. இதற்காக தேவகாந்தனுக்கும், வடலி பதிப்பகத்துக்கும் நன்றி. உலகளாவியரீதியில் 'கலிங்கு' நாவலையெடுத்துச் செல்வதில் 'பதிவுகள்' மகிழ்ச்சியடைகின்றது. 'கலிங்கு' நாவலை வாங்க விரும்பினால் வடலியுடன் தொடர்பு கொள்ளுங்கள். வடலியின் இணையத்தள முகவரி: http://vadaly.com
11
கிளிநொச்சி திருநகர் உறங்குவதுபோல் தெரிந்தது. சலனங்கள் முற்றாக அறுந்திருந்தன. உறக்கமற்ற நிலையில் பல மனங்கள் தப்புவதற்கான மார்க்கங்களைப் பின்னிக்கொண்டு இருந்தன. இரவின் தனிமைக்குள் சுழித்தெழும் நம்பிக்கையீனத்தை, மனத்தின் ஒரு படையில் பதிவாகியிருந்த பாடலின் வரியொன்று பகலில் மீட்டெடுத்துத் தந்துவிடும். அது சிலருக்கு ‘நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும்’ என்ற வரியாக, சிலருக்கு ‘அழகான தமிழீழம் நாளை வந்து சேரும்’ என்றதாக இருக்க முடியும். அது ஒரு விந்தைபோல தொடர்ந்து நடந்துகொண்டிருந்தது. பகல் நம்பிக்கைகொண்ட முகங்களையே காட்டியது. ஏனெனில் தம் மனங்களை முகங்களில் காட்டாத மனிதர்கள் பகலில் உலவிக்கொண்டிருந்தார்கள். கணவன் மனைவியோடு, மனைவி கணவனோடு, பிள்ளைகள் பெற்றோரோடு, பெற்றோர் பிள்ளைகளோடு பகிர்ந்துகொள்ள விரும்பாத மனத்தின் கோலங்களாயிருந்தன அவை. அவநம்பிக்கைகளையும், பயங்களையும் உறவுகளுடன் எவ்வாறு பகிர்ந்துகொள்வது? அந்த வீட்டில் சுமையேறியிருந்தது பயமாகவும் நம்பிக்கையீனமாகவும். முன்கதவு திறந்திருந்தது. வாசலில் ஒரு பக்கம் கணவன் குணசீலனும், மறுபக்கத்தில் மனைவி ஆனந்தராணியும் அமர்ந்திருந்தனர். கால் நீட்டி அமர்ந்து மெல்லெனக் காய்ந்த நிலவொளியின் வெளியில் இருண்மையைக் கண்டுகொண்டிருந்தனர்.
அவர்களுக்குள் எண்ணங்கள் சுனைப்பெடுத்து இதயம் முழுக்க விரிந்துகொண்டிருந்தன.
பகிர்ந்தலின் சாத்தியமற்ற எண்ணங்களாய் இருந்தன அவை. உயிர் நெரித்த பயக்கெடுதி சொற்களாய்க் கிளம்பவிருந்த எண்ணங்களைத் தடுத்து தொண்டையின் வாசலில் நிற்கவைத்திருந்தது. மனிதர்கள் நீரிலும் உணவிலுமன்றி நம்பிக்கையிலேயே வாழ்தலைச் செய்துகொண்டிருந்த காலப் பகுதி அது. அதை உடைக்கும் ஒரு அபிப்பிராயம் அந்த வாழ்தலையே கேள்விக்குறி ஆக்கிவிடும். அவர்களது மௌனத்தின் காரணம் அதுவாக இருந்தது.
இருவருக்கும் இடையேயிருந்த வெளியில் இடைஞ்சல் படுத்தியபடி போய்வந்துகொண்டிருந்த பிள்ளைகள் படுத்துவிட்டிருந்தார்கள். அவர்கள் அவலங்களுக்குள்ளும், ஓடுதல்களுக்குள்ளும், குண்டு வெடிப்புகளுக்குள்ளும் பிறந்த பிள்ளைகள். அவர்கள் வெளியே வந்து வந்து போய்க்கொண்டிருந்தது எங்கேயாவது குண்டு வெடிக்கிறதா என்பதைப் பார்க்கத்தான்போலிருந்தது. அவர்களுக்கு அவை இல்லாததுதான் இயல்பு பிறழ்ந்த சூழ்நிலையை உருவாக்கியிருந்தது. விழுந்த குண்டு எல்லாவற்றையும் நொருக்கி இடித்துக்கொட்டுகிறபோது அவர்கள் திகைப்பார்கள், திடுக்கிடுவார்கள். பிறகு அவர்களுக்கு அது ஒரு விளையாட்டாகிவிடும். தாய் தந்தையரின் அவதிகூட அக்கணத்தில் அவர்களுக்குச் சிரிப்புவர வைத்ததுண்டு. ஆனால் பெரியவர்களுக்கு…? அவர்கள் சத்தங்களைக் கடந்து சேதங்களைப் பார்க்கத் தெரிந்தவர்கள். அவற்றிலிருந்து தொடரக்கூடிய உடல், மனம், மானம் ஆகிய எல்லா சேதங்களையும்கூட.