இலங்கை வடபுலத்தில் யாழ்ப்பாணம், நீராவியடியில் 1954 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 06 ஆம் திகதி சண்முகம் – பர்வதலக்ஷ்மி தம்பதியரின் மூத்த புதல்வனாகப் பிறந்த சபேசன், கடந்த 2020 ஆம் ஆண்டு மே மாதம் 29 ஆம் திகதி அவுஸ்திரேலியா மெல்பனில் மறைந்தார். யாழ். இந்துக்கல்லூரியின் முன்னாள் மாணவரான அவர், 1989 ஆம் ஆண்டு நடுப்பகுதியில் மெல்பனுக்கு புலம்பெயர்ந்து வந்தபின்னர், அவுஸ்திரேலியா ஈழத்தமிழ்ச்சங்கம், தமிழர் ஒருங்கிணைப்புக்கு குழு, தமிழர் புனர்வாழ்வுக்கழகம் முதலானவற்றில் அங்கம் வகித்தவாறு, மெல்பன் 3 C R தமிழ்க்குரல் வானொலியில் கால் நூற்றாண்டு காலம் ஊடகவியலாளராகவும் எழுத்தாளராகவும் இயங்கிய “தமிழ்த் தேசிய பற்றாளர்". 3 C R தமிழ்க்குரல் வானொலியில் தங்கு தடையின்றி, வாரம்தோறும் அரசியல் விமர்சன கட்டுரைகளை எழுதி தனது குரலிலேயே ஒலிபரப்பினார். அவ்வாறு எழுதப்பட்ட கட்டுரைகளை தொகுத்து நூலாக்கவேண்டும் என்ற எண்ணத்திலேயே காலத்தை கடத்திவிட்டு, எதிர்பாராமல் உடல்நலம் பதிப்புற்று மறைந்துவிட்டார்.
தனது நூல் வெளியிடும் எண்ணத்தை அவர் பல தடவைகள் என்னிடம் சொன்னவர். அத்துடன் 2009 மே மாதத்திற்கு முன்னர் அவர் ஆழமாக நேசித்த தமிழ்த்தேசியத்தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனிடத்திலும் அந்த விருப்பத்தை கூறியபோது, நூலைத் தொகுத்து அச்சிடும் வேலையை தாமதிக்காமல் பாரும், அந்த நூலை நானே வெளியிட்டு வைக்கின்றேன் என்றும் அவர் இவருக்கு கூறியிருந்ததாக சபேசன் பல தடவைகள் என்னிடத்திலும் தனக்கு நெருக்கமான நண்பர்களிடத்திலும் சொல்லிக்கொண்டிருந்தார். எனினும் அவரது அந்தக் கனவு அப்போது நனவாகவில்லை. அந்த நூல் வெளியீடு மட்டுமல்ல இதர கனவுகளும் நனவாகாமல் திடீரென எம்மை விட்டு அவர் பிரிந்தது தீராத சோகம்தான். அவர் மறைந்தபோது, தமிழை நேசித்த சபேசன் சுவாசிக்க மறந்துபோனது நெடுந்துயரே என்ற தலைப்பில் எனது அஞ்சலிக்குறிப்புகளை மெல்பனில் வெளியாகும் எதிரொலி பத்திரிகையிலும் இதர ஊடகங்களிலும் எழுதியிருந்தேன்.
சபேசன் வாழ்ந்த காலத்தில் அவர் சார்ந்து நின்று அர்ப்பணிப்போடு இயங்கிய அமைப்புகள், மற்றும் அவற்றோடு இணைந்திருந்தவர்கள், மற்றும் வன்னி பெரு நிலப்பரப்பில் அவர் உளமாற நேசித்த மக்கள், தமிழ்நாட்டில் அவர் நெருங்கிப்பழகிய பல தமிழ்த்தேசிய உணர்வாளர்கள், மற்றும் எழுத்தாளர்கள், கலைஞர்கள், ஊடகவியலாளர்கள் என பெருந்தொகையானோரைக்கொண்ட வாசகர்களையும் வானொலி நேயர்களையும் பெற்றிருந்தவர். எனினும் இத்தகு ஆளணிப்பலமிருந்தும் அவரால் தனது கனவை நனவாக்கமுடியாமல் போனது சக எழுத்தாளன் என்ற முறையில் எனக்கும் ஆழ்ந்த கவலையே. இவ்வாறு வசதி வாய்ப்புகள் இருந்தும் தங்கள் படைப்புகளை தொகுத்து நூல் வடிவில் வெளியிடமுடியாமல்போன தமிழ் எழுத்தாளர்கள் எமது சமூகத்தில் முன்னரும் இருந்திருக்கிறார்கள். அதேசமயம் தமது மனைவியின் தாலிக்கொடி, கைவளையல்களை அடவு வைத்தும், விற்றும் பணம் பெற்று தமது நூல்களை வெளியிட்டவர்களும் இருந்தனர். சிலர் இலக்கிய சிற்றிதழ் வெளியிடவேண்டும் என்ற ஆர்வத்தினால், அவ்வாறு குடும்பத்தினரின் வசம் இருந்த தங்க நகைகளை விற்றார்கள். மகாகவி பாரதியாரும் தொடக்கத்தில் தனது கவிதைகளை வெளியிடுவதற்கு பணம் வேண்டி, எட்டயபுரம் மன்னருக்கு சீட்டுக்கவிதைக் கடிதம் எழுதியவர்தான்.
தமிழக கவிஞர் மு. மேத்தா, தனது கண்ணீர்ப்பூக்கள் கவிதை நூலை வெளியிட்டபோது, அதன் முன்னுரையில், “ கண்ணகி காற் சிலம்பைக் கழற்றினாள், நாங்கள் சிலப்பதிகாரம் படித்தோம். எனது மனைவி கைவளையல்களை கழற்றினாள் , நீங்கள் கண்ணீர்ப்பூக்கள் படிக்கிறீர்கள் “ என்று எழுதினார். இலங்கையில் மூத்த எழுத்தாளர் முனியப்பதாசனின் கதைகள் அவர் மறைந்து பல வருடங்களின்பின்னரே வெளியானது. அவரது நெருங்கிய உறவினரான மெல்பனில் வசித்த எழுத்தாளர் ( அமரர் ) அருண் . விஜயராணியால் அத்தொகுப்பு மல்லிகைப்பந்தல் சார்பாக வெளிக்கொணரப்பட்டது. எழுத்தாளர் செங்கைஆழியான் முனியப்பதாசனின் கதைகளை தேடிக்கொடுக்காது போயிருந்தால் முனியப்பதாசன் கதைத் தொகுப்பு வெளிவந்திருக்க வாய்ப்பில்லாமல் போயிருக்கும். தற்போது அவரும் இல்லை, அருண். விஜயராணியும் இல்லை. மல்லிகை ஆசிரியர் டொமினிக்ஜீவாவும் இல்லை. ஆனால், முனியப்பதாசன் கதைகள் வாசகர்களிடம் மட்டுமல்ல நூலகம் ஆவணகத்திலும் இடம்பெற்றுள்ளது.
சுவாமி விவேகானந்தர் ஒரு தடவை இவ்வாறு சொன்னாராம். ஒரு மனிதன், தனக்குப்பின்னரும் தனது பெயர் உலகில் நிலைத்திருக்கவேண்டுமாயின் மூன்று முக்கிய விடயங்களை செய்யவேண்டும். முதலாவது: திருமணம் செய்து ஒரு பிள்ளைக்கு தந்தையாகிவிடவேண்டும். அந்தப்பாக்கியம் கிட்டாது போனால், ஒரு பிள்ளையை தத்தெடுத்தாவது வளர்த்துவிட வேண்டும். இரண்டாவது : என்னதான் கஷ்டப்பட்டாலும் ஒரு சிறிய மண்குடிசையாவது கட்டிவிடவேண்டும். மூன்றாவது: ஒரு புத்தகம் எழுதி வெளியிட்டுவிடவேண்டும். இம்மூன்றில் ஏதாவது ஒன்றை தனது வாழ்வில் ஒருவன் சாத்தியமாக்கிவிட்டால், அவனது பெயர் அவன் மறைந்த பின்னரும் உலகில் நிலைத்திருக்கும். இவ்வாறு சொன்ன சுவாமி விவேகானந்தர், திருமணமே செய்துகொள்ளாத பிரம்மச்சாரி. புரட்சித்துறவி. எனினும் அவரது சிந்தனைகள் அவருக்குப்பின்னரும் உலகில் நிலைத்து வாழ்கின்றன.
இலங்கையில் முப்பது ஆண்டு காலமாக நீடித்திருந்த போர் கடந்த 2009 ஆம் ஆண்டு மேமாதம் முடிவுக்கு வந்தபோது, நேர்ந்த உயிரிழப்புகளினாலும், அவரது ஆழ்ந்த நேசத்திற்குரிய தமிழ்த்தேசியத்தலைவர் குறித்து வெளியான செய்திகளை ஜீரணிக்கமுடியாமலும் பெரிதும் கலங்கி, மனவுளைச்சலுக்கும் ஆளாகியிருந்தவர் நண்பர் சபேசன். “ மாற்றம் வரும் என எதிர்பார்த்தேன், ஏமாற்றம்தான் மிஞ்சியது, எஞ்சியது “ என்று என்னைக்காணும் சந்தர்பங்களில் சொல்லி வந்தவர்.
அவருக்கு தேறுதல் கூறும்போது, “ தாமதிக்காமல் வெளியிட விரும்பிய கட்டுரைத்தொகுதியை தொகுப்பதில் கவனம் செலுத்துங்கள். அத்துடன் போரில் பாதிக்கப்பட்ட, உடல் ஊனமுற்றவர்களின் தேவைகளை கவனிக்கும் தன்னார்வத்தொண்டுகளில் ஈடுபட்டு கவனத்தை திசைதிருப்புங்கள். “ என்று சொல்லிவந்தேன். எனினும், இழப்பின் துயரங்களிலிருந்து மீளமுடியாமல் தவித்தார். பல தடவை என்னிடமும் இதர நண்பர்களிடமும் தனது கட்டுரைகளை தேர்வுசெய்து தொகுத்து வெளியிடும் விருப்பத்தை சந்திக்கும் வேளைகளிலும் தொலைபேசியில் உரையாடும் சந்தர்ப்பங்களிலும் சொல்லிக்கொண்டே இருந்தவர் சபேசன். இறுதியாக அவரை நண்பர் நடேசனின் சில நூல்களின் அறிமுக அரங்கில் கண்டேன். அன்று அவர் நடேசனின் நைல் நதிக்கரையோரம் பயண இலக்கிய நூல் பற்றி தனது வாசிப்பு அனுபவத்தை பேசினார். அதுவே அவரது இறுதி மேடைப்பேச்சாகவும் அமைந்தது. நிகழ்ச்சியின் முடிவில், தான் பேசுவதற்கு எழுதி எடுத்துவந்த குறிப்புகளையும் அந்த நூலையும் மறந்து மண்டபத்திலேயே விட்டும் சென்றுவிட்டார்.
அதன்பின்னர், கடந்த 2020 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் அவரது இனிய நண்பரும், அவருடன் இணைந்து பல பொதுப்பணிகளில் ஈடுபட்டவருமான எழுத்தாளர் , கலைஞர் கலைவளன் சிசு . நாகேந்திரன் மறைந்த செய்தி அறிந்து தொலைபேசியூடாக சபேசன் தேம்பித்தேம்பி அழுதார். அப்போது நான் நண்பர்களுடன் சிசு . நாகேந்திரன் அவர்களின் இறுதி நிகழ்வுகளுக்காக சிட்னி செல்வதற்கு ஆயத்தமாகிக்கொண்டிருந்தேன். தனது உடல் நலக்குறைபாட்டினால் தன்னால் எம்முடன் இணைந்துகொள்ள முடியவில்லை என்று வருந்தினார். அவருக்கு தேறுதல் கூறுகையில், மெல்பன் திரும்பியதும் சிசு . நாகேந்திரன் அய்யாவுக்காக நாம் அஞ்சலி நிகழ்வு நடத்த ஏற்பாடு செய்வோம். அதில் வந்து கலந்துகொள்ளுமாறு கேட்டிருந்தேன். நிச்சயமாக தன்னையும் பேசுவதற்கு அழைக்குமாறு தெரிவித்திருந்தார். அதற்கான நாளையும் குறித்து நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்து அழைப்பிதழ்களும் தயாரான நிலையில், கொரோனோ தொற்றின் உக்கிரத்தினால் முழு நாடும் முடக்கப்பட்டதையடுத்து இடைவெளிபேண வேண்டியேற்பட்டது. அந்த நிகழ்ச்சி ரத்துச்செய்யப்பட்டு, பின்னர் பல நாட்கள் கடந்து, இணையவழி காணொளி அரங்கின் மூலம் நடத்தப்பட்டது. எதிர்பாராதவகையில், நண்பர் சபேசனும் உடல் நலம் குன்றி, அந்த நிகழ்ச்சி நடப்பதற்கு முன்பே கடந்த ஆண்டு மே மாதம் 29 ஆம் திகதியன்று, அவரது இனிய நண்பர் சிசு . நாகேந்திரனைத் தொடர்ந்து அவர் சென்ற இடத்திற்கே போய்விட்டார். பரஸ்பரம் அவர்கள் இருவரும் மேல் உலகில் உரையாடிக்கொண்டிருப்பார்கள் என்ற குருட்டு நம்பிக்கையுடன் இந்தப்பதிவை எழுதுகின்றேன்.
இந்த ஆண்டு அதே மேமாதம் சபேசனின் மற்றும் ஒரு இலக்கிய நண்பர் தமிழகத்தில் மறைந்தார். அவர்தான் கரிசல் இலக்கிய வேந்தர் கி. ராஜநாராயணன். சபேசனைப்பொறுத்தவரையில் இந்த மேமாதம் மிகவும் முக்கியத்துவமாகியிருப்பதும் விதிப்பயன்தானோ..? இதே மேமாதம்தான் 2009 ஆம் ஆண்டு அவர் ஆழமாக நேசித்த அவரது தலைவரும் மறைந்தார். சபேசனும் பதினோரு ஆண்டுகளின் பின்னர் அதே மேமாதம் விடைபெற்றார். இந்த ஆண்டு மேமாதம் கி.ரா. அவர்களும் புறப்பட்டுவிட்டார். நண்பர் சபேசனின் வானொலி உரைகள் மற்றும் கட்டுரைகள் ஏராளம். அவற்றைத் தெரிவுசெய்து தொகுத்து வெளியிடமுன்வந்துள்ளார் திருமதி சிவமலர் சபேசன். சபேசனின் சில நண்பர்கள் இணைந்து சபேசனின் நினைவுகளை பகிர்ந்துகொள்வதற்காக நடத்திய இணையவழி காணொளி அரங்கில் கலந்துகொண்ட சிவமலர், தமது கணவர் மறைந்து ஓராண்டு நிறைவுறும் தருணத்திலாவது அவரது இறுதி ஆசையை நிறைவேற்றிவிடவேண்டும் என்றும் தெரிவித்தார். அவ்வாறே சபேசனின் கட்டுரைகளை தொகுத்து, சபேசனின் நண்பரும் தமிழக அரசியல் பிரமுகரும் திராவிடர் இயக்கத்தமிழர்பேரவையின் நிறுவனருமான பேராசிரியர் சுப. வீரபாண்டியன் அவர்களின் அணிந்துரையுடன் அந்த நூலை வரவாக்கியுள்ளார்.
காற்றில் தவழ்ந்த சிந்தனைகள் என்ற சபேசனின் நூல் தமிழ்நாட்டில், சபேசனின் நினைவு தினம் வருவதற்கு முன்பே வெளியாகியிருப்பதும் சபேசனின் ஆத்மாவுக்கு சிறந்த அஞ்சலியாகும். இந்நூலுக்கான முகப்பினை வடிவமைத்தவர் தமிழகத்தைச்சேர்ந்த ஓவியர் ஆர். சரவணா அபிராமன். அச்சுப்பதிப்பு தமிழ்நாடு சுதர்சன் புக்ஸ். மெல்பனில் இந்நூலின் வெளியீட்டு அரங்கு சபேசனின் ஓராண்டு நினைவேந்தலுடன் எதிர்வரும் ஜூன் மாதம் இடம்பெறுவதற்கான ஏற்பாடுகள் நடப்பதாக திருமதி சிவமலர் சபேசன் தெரிவித்துள்ளார்.
சபேசன் நினைவேந்தலும் காற்றில் தவழ்ந்த சிந்தனைகள் நூல் வெளியீடும் மெல்பனில் விக்ரோரியா தமிழ் சமூக நிலையத்தில் (Victoria Tamil Community Centre – Unit 40/ 44, Lonsdale Street, Dandenong, Vic – 3175) எதிர்வரும் ஜூன் மாதம் 19 ஆம் திகதி சனிக்கிழமை மாலை 3.00 மணி முதல் மாலை 6.00 மணிவரையில் நடைபெறவுள்ளது. இந்நிகழ்வில் அன்பர்கள் அனைவரும் கலந்துகொள்ளவேண்டும் என்ற எதிர்பார்ப்புடன், இந்த நினைவுக்குறிப்புகளை பதிவுசெய்கின்றேன்.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.