அவுஸ்திரேலியாவிலிருந்து 1988 ஆம் ஆண்டு முதல் இயங்கிவரும் தன்னார்வத் தொண்டு நிறுவனம் இலங்கை மாணவர் கல்வி நிதியத்தின் வருடாந்த ஆண்டுப்பொதுக்கூட்டம், சமகால இடைவெளிபேணல் நடைமுறைக்கு அமைவாக அண்மையில் இணைய வழி காணொளியூடாக நடைபெற்றது.
நிதியத்தின் தலைவர் திரு. லெ. முருகபூபதி வரவேற்புரை நிகழ்த்துகையில் கடந்த வருடமும் இந்த வருடமும் மறைந்த நிதியத்தின் உறுப்பினர்கள் கலைவளன் சிசு. நாகேந்திரன், மற்றும் திருமதி சுகந்தி சஞ்சீவன் ஆகியோர் குறித்து நினைவுபடுத்திப் பேசினார்.
மறைந்த இருவரும் கல்வி நிதியத்தின் ஊடாக பல வருடங்கள் இலங்கையில் சில மாணவர்களுக்கு உதவி வந்தவர்கள். அவர்களின் ஆத்ம சாந்திக்காக ஒரு நிமிடம் மௌன அஞ்சலி அனுட்டிக்கப்பட்டது.
சமகால கொரோனோ வைரஸ் தாக்கத்தினால் இலங்கையில் கல்வி நடவடிக்கைகள் பெரிதும் பாதிக்கப்பட்டிருப்பதும் சுட்டிக்காண்பிக்கப்பட்டது. நிதியம் கடந்த ஆண்டு வடக்கு – கிழக்கு மற்றும் மலையகப்பிரதேசங்களிலும் மேற்கிலங்கையில் கம்பகா மாவட்டத்திலும் நிதியத்தின் உதவியை பெற்றுவரும் அனைத்து மாணவர்களுக்கும் உரிய முறையில் நிதிப்பங்களிப்பினை அனுப்பிவைத்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.
வடக்கு – கிழக்கு பிரதேச கண்காணிப்பாளர்கள் ஊடாக மாணவர்களின் குடும்பங்களுக்கு உலர் உணவு விநியோகத்திற்கும் ஆவனசெய்திருப்பதாகவும், அதற்கான நிதியை , கல்வி நிதியத்தின் இருப்பில் இருந்து பெறாமல், பிரத்தியேகமாக அன்பர்களிடமிருந்து நன்கொடையாக பெற்றுக்கொண்டதாகவும், அதுபற்றிய விபரங்கள் ஆண்டறிக்கையில் பதிவுசெய்யப்பட்டிருப்பதாகவும் குறிப்பிடப்பட்டது.
நிதியத்தின் சென்ற ஆண்டுப்பொதுக்கூட்டக்குறிப்புகளை செயலாளர் செல்வி விதுஷினி விக்னேஸ்வரனும், ஆண்டறிக்கையை காணொளி ஊடாக துணை நிதிச்செயலாளர் திரு. விமல் அரவிந்தனும் சமர்ப்பித்தனர்.
நிதியறிக்கையை நிதிச்செயலாளர் செல்வி திவானா கிருஷ்ணமூர்த்தி சமர்ப்பித்தார்.
கடந்த சில வருடங்களாக நிதியத்தின் தொடர்பாடல்கள் மற்றும் பணிகள் நவீன முறையில் மேற்கொள்ளப்படுவதனால், இளம் தலைமுறையினரையும் எதிர்காலத்தில் இணைத்துக்கொண்டு செயல்படுவதற்கு எளிதாகியுள்ளது.
இலங்கை மாணவர் கல்வி நிதியத்தின் நிதியறிக்கை மற்றும் புள்ளி விபரங்கள் - படிமுறை வளர்ச்சி பற்றிய பதிவுகளை நேர்த்தியாக வழங்கிவரும் நிதிய உறுப்பினர் திரு. துரைசாமி ரவீந்திரனுக்கும், எமது நிதியத்தின் கணக்கு அறிக்கைகளை பரிசீலித்துவரும் AARAN MURRAY &Co. நிறுவனத்தின் தலைவர் திரு.ஆ.வே. முருகையா அவர்களுக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டது.
நடப்பாண்டு பரிபாலன சபையில் செல்வி யசோதா யோகநாதன் இணைத்துக்கொள்ளப்பட்டார்.
CSEF – Annual Report – President Message
தலைவரின் செய்தி
அன்புள்ள இலங்கை மாணவர் கல்வி நிதியத்தின் உறுப்பினர்கள், ஆதரவாளர்கள், மற்றும் இலங்கை தொடர்பாளர் அமைப்புகளின் நிருவாகிகள், பணியாளர்கள் அனைவருக்கும் வணக்கம்.
சமகால பேரிடரினால் உலகடங்கிலும் உயிரிழந்த மக்களின் உறவுகளின் துயரத்தில் நாமும் பங்கெடுப்பதுடன், மறைந்தவர்களின் ஆத்மா சாந்தியடையவும் பிரார்த்திக்கின்றோம்.
கொவிட் 19 அனர்த்தம் ஏற்படுத்தியிருக்கும் உடல் – உளப்பாதிப்புகளிலிருந்து அனைத்து மக்களும் நிரந்தரமாக விடுவிக்கப்படவேண்டும் என்ற வேண்டுதலுடன்,
இக்காலப்பகுதியில் இலங்கையிலிருக்கும் எமது கல்வி நிதியத்தின் தொடர்பாளர் அமைப்புகளான யாழ். சிறுவர் அபிவிருத்தி நிலையம் (Centre For Child Development ) வவுனியா நலிவுற்ற சமூக அபிவிருத்திக்கான தன்னார்வத் தொண்டு நிறுவனம் ( Voluntary Organization for Vulnerable Community Development (VOVCOD) மலையக சமூக அபிவிருத்தி நிறுவனம் ( Plantation Community Development Organization ) மற்றும் கம்பகா மாவட்டத்தில் நீர்கொழும்பு விஜயரத்தினம் இந்து மத்திய கல்லூரி, அம்பாறை மாவட்டத்தில் பெரிய நீலாவணை விஷ்ணு மகாவித்தியாலயம் ஆகியன மேற்கொண்ட அர்ப்பணிப்பு மிக்க சமூகப்பணிகளையும் கல்விப்பணிகளையும் விதந்து பாராட்டுகின்றோம்.
கொவிட் 19 நெருக்கடியினால், இலங்கையில் பாடசாலைகள் சீராக இயங்கமுடியாத சூழ்நிலை தோன்றியிருந்தவேளையில், எமது கல்வி நிதியத்தின் ஆதரவுடன் இங்கு கல்வி கற்ற மாணவர்களின் குடும்பங்களின் இருப்பிடங்களுக்கு நேரடியாகச்சென்றும் பணிமனைகளுக்கு அழைத்தும் உலர் உணவுப்பொருட்களை வழங்கிய எமது தொடர்பாளர் அமைப்புகளுக்கும், அதற்கான நிதியுதவிகளை அவுஸ்திரேலியாவிலிருந்து வழங்க முன்வந்த இரக்கமுள்ள நெஞ்சங்களுக்கும் எமது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கின்றோம்.
இக்காலப்பகுதியில் எமது கல்வி நிதியத்தின் உதவியைப்பெற்று பல்கலைக்கழகம் சென்று கல்வியை நிறைவுசெய்து பட்டதாரிகளாகியிருக்கும் மற்றும் பல்கலைக்கழகங்களுக்கு பிரவேசித்துள்ள மாணவச்செல்வங்களுக்கும் எமது மனமார்ந்த வாழ்த்துக்களையும் தெரிவிக்கின்றோம்.
கல்விக்காக கிடைக்கப்பெற்ற நிதியுதவியை சிறந்த முறையில் பயன்படுத்தி, கல்வியை பல்கலைக்கழகம் வரையில் சென்று பூர்த்திசெய்து, இக்காலப்பகுதியில் அரசாங்க மற்றும் தனியார் துறை வேலை வாய்ப்புகளைப்பெற்ற மாணவச்செல்வன்கள் – செல்விகளுக்கும் எமது நல்வாழ்த்துக்களை தெரிவிக்கின்றோம்.
இந்த நற்செய்திகளை நாம் பெறுவதற்காக தொடர்ச்சியாக எமது கல்வி நிதியத்தின் பணிகளில் இணைந்திருக்கும் நிதியத்தின் மதிப்பார்ந்த உறுப்பினர்களுக்கும் (Sponsors) மற்றும் நலன் விரும்பிகளுக்கும் (Well Wishers) எமது நன்றியை தெரிவிக்கின்றோம்.
கல்வித்தேவைகளுக்காக உதவி கோரியிருக்கும் மேலும் பல மாணவர்களுக்கும் உதவும் அன்பர்கள் இல்லாமலேயே எமது நிதியம் தனது குறைந்த வளங்களுடன் உதவி வருகிறது. எனவே எமது நிதியத்திற்கு உதவமுடிந்த நல்லெண்ணம் படைத்த அன்பர்களின் ஆதரவையும் இச்சந்தர்ப்பத்தில் நாம் எதிர்பார்க்கின்றோம்.
தொடர்ந்தும் எமது இலங்கை மாணவர் கல்வி நிதியத்தின் பணிகளில் இணைந்திருக்குமாறு அனைவரையும் அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம். நன்றி.
அன்புடன்
லெ. முருகபூபதி
தலைவர் – இலங்கை மாணவர் கல்வி நிதியம் – அவுஸ்திரேலியா
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
Bank Details:
A/C Name: Ceylon Students Educational Fund (Inc)
Bank: Commonwealth Bank of Australia.
BSB No: 063 111 A/C No: 1063 4651
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.