காலத்தால் அழியாத கானம்: தேனாற்றங் கரையினிலே.. ஊர்க்குருவி -
அண்மையில் நடிகர் சரத்பாபுவின் மறைவினையடுத்து நடிகை ரமாபிரபா பற்றிய செய்திகள் இணையத்தை நிறைத்துவிடத் தொடங்கி விட்டன. காரணம் - அவர் சரத்பாபுவின் முதல் மனைவியாக வாழ்ந்தவர். அதன் பின் திரைப்பட உலகைவிட்டு ஒதுங்கி வாழ்ந்து வந்த ரமாபிரபாவை அண்மைக்காலமாக அவரது முதுமைப் பிராயத்தில் தெலுங்கு சினிமா மீண்டும் திரையுலகுக்கு அழைத்து வந்துவிட்ட தகவல்களயும் அறிய முடிகின்றது. சரத்பாபுவின் கடைசிப்படமான 'வசந்த முல்லை'யிலும் இருவரும் நடித்திருப்பது காலத்தின் கோலம்.
ரமாபிரபாவின் படங்களை அதிகம் நான் பார்த்ததில்லை. ஆனால் பார்த்த படங்களில் இரண்டு மனத்தில் பசுமையாகப் பதிந்துள்ளன. ஒன்று சாந்தி நிலையம். அதில் ஜெமினியின் பெறா மகள்களில் மூத்த பெண் கீதாவாக நடித்திருப்பார். அடுத்தது ஶ்ரீதரின் 'உத்தரவின்றி உள்ளே வா' திரைப்படத்தில் சித்த சுவாதீனமற்ற பெண் ஆண்டாள் ஆக நடித்திருப்பார். நாகேஷை எந்நேரமும் 'நாதா நாதா' என்றழைத்துத் துரத்தித் திரிவார். அப்படி அழைக்கும்போதெல்லாம் நாகேஷ் விழுந்தடித்து ஓடுவார்.