அத்தியாயம் இரண்டு: அன்பின் ஆதிக்கமும், ஐன்ஸ்டைனின் சார்பியற் தத்துவமும்!
மாதவனது மனம் நிறைய அந்த அணில் பற்றிய சிந்தனைகளே பரவிக் கிடந்தன.
''நண்பனே, என்ன சிந்திக்கின்றாய்? இன்னமும் அந்த அணில் பற்றித்தானா?"
இவ்விதம் கேட்டுவிட்டுச் சிரித்தான் மார்க்.
''உண்மைதான் நண்பனே. இந்த அணில் என் மனத்தில் இருப்பு பற்றிய சிந்தனைகளை வழக்கம்போல் ஏற்படுத்தி விட்டன. இது என்னுடைய இயல்பு. எப்பொழுதும் இருப்பு பற்றிச் சிந்திப்பது. சக உயிரினங்களைப் பற்றிச் சிந்திப்பது.''
மாதவனின் பதிலைக்கேட்டுப் பலமாகச் சிரித்தான் மார்க்.
'நீ துறவியாகப் போயிருக்க வேண்டியவன். உனது இருப்பிடம் நகரமல்ல.'
''ஒரு விதத்தில் நீ சொல்வதும் சரிதான். பொதுவாகவே எனக்கு இயற்கையெழில் தவழும் கானகச்சூழலும், அமைதியும் நிறையப் பிடிக்கும். ஆனால் தொழில்நுட்ப வளர்ச்சியின் எல்லாப் பயன்களையும் உதறிவிட்டுப் போகும் அளவுக்கு மனப்பக்குவம் இன்னும் ஏற்படவில்லையே''
என்று பதிலுக்குக் கூறிவிட்டு மாதவனும் சிரித்தான். அவனே மேலும் தொடர்ந்தான்:
''நண்பனே, இந்த இருப்பின் நேர்த்தியை, அழகினை நான் விரும்புகின்றேன். ஆனால் இதன் குறைபாடுகளை நான் வெறுக்கின்றேன். இவ்வுலகம் மட்டும் அன்பின் ஆதிக்கத்தில் மட்டும் நிறைந்திருக்கும் வகையில் படைக்கப்பட்டிருந்தால் ... ஆனால் அவ்வாறு ஏன் படைக்கப்படவில்லை?"
''நண்பனே, ஐன்ஸ்டைனின் கோட்பாட்டை , சார்பியல் கோட்பாட்டை இங்கும் நீ பாவிக்கலாம்."
இவ்விதம் மார்க் கூறியதைக் கேட்டு மாதவனுக்குச் சிறிது ஆச்சரியமேற்பட்டது.
''என்ன ஐன்ஸ்டைனின் சார்பியற்கோட்பாடா? உனக்கு அதெப்படி தெரியும்? நீ பெளதிகத்தில் பட்டம் பெற்றவனா?"
இதைக்கேட்டதும் இன்னுமொரு தடவை மார்க் சிரித்தான்.
''நண்பனே, ஐன்ஸ்டைனின் சார்பியற் கோட்பாட்டைப் பற்றிய பொதுவான விளக்கத்தை அறிவதற்கு பெளதிகப் பட்டதாரியாகவிருக்கத் தேவையில்லை.''
''என் நாட்டில் பல்கலைகக்ழகப் பெளதிகப்பட்டதாரிகள் பலருக்கே இது பற்றிய போதிய விளக்கம் தெரிவதில்லை. நீ என்ன சொல்ல வருகிறாய் மார்க்?"
''எனக்கு உன் நாட்டைப்பற்றித்தெரியாது. ஆனால் இங்கு உயர் கல்லூரி மாணவர்கள் பலர் மிகச்சாதாரணமாக அறிந்த் விடயங்கள் இவை. என்னுடைய பாடசாலை நாட்களில் எனக்கு அறிவியல் புனைகதைகளென்றால் மிகவும் பிடிக்கும், சித்திரக் கதைகள், திரைப்படங்கள், வீடியோ விளையாட்டுகளும்தாம்.இதனால் சார்பியல் தத்துவம், காலங்கடந்த பயணங்கள், கருந்துளைகள், புழுத்துளைகள், அதிவெளி இவை போன்ற சொற்பதங்களின் பொதுவான விளக்கங்களையெல்லாம் நாம் அறிந்திருக்கின்றோம். புரிந்திருக்கின்றோம்,''
மார்க் கூறியது உண்மைதான். மேற்கு நாடுகளில் குழந்தைப்பருவத்திலிருந்தே நவீன வானியற்பியல் பற்றிய விடயங்களை, கோட்பாடுகளைப்பற்றிய எளிய விளக்கங்களை வீடியோ விளையாட்டுகள், அறிவியல் புனைகதைகள், சித்திரக் கதைகள், திரைப்படங்கள் மூலம் குழந்தைகள் அறிந்து கொள்ளும் சந்தர்ப்பம் அமைதிருக்கின்றது.
''நண்பனே, சார்பியற் கோட்பாட்டினை இங்கும் பாவிக்கலாம் என்று கூறினாயே. புரியவில்லையே?"
'நண்பனே, நீ அன்பின் ஆதிக்கம் பற்றிக் கூறினாய். அதைப்பற்றித்தான் கூறினேன். '
இவ்விதம் மார்க் கூறியதும் மாதவனின் குழப்பத்தை இன்னும் அதிகரித்தது. அக்குழப்பத்துடன் மீண்டும் கேட்டான்:
''நண்பனே, நீ கூறுவதை என்னால் புரிந்துகொள்ளவே முடியவில்லை. சார்பியற் தத்துவத்தை எப்படி அன்பின் ஆதிக்கத்துடன் இணைக்கலாம். சிறிது விளக்கமாக கூறு பார்க்கலாம்."
''நண்பனே, இப்பிரபஞ்சத்தில் அனைத்து இயக்கங்களுமே சார்பானவை இல்லையா, என்னைப்பொறுத்தவரையில் இயக்கங்கள் மட்டுமல்ல எல்லா விடயங்களுமே மானுட வாழ்க்கை, மானுடர் உணர்வுகள் அனைத்துமே சார்பானவைதாம். நீ கூறுகின்றாயே அன்பின் ஆதிக்கமென்று அந்த அன்பின் ஆதிக்கமுட்பட அனைத்துமே சார்பானவைதாம். உதாரணத்துக்கு ஒரு சிங்கத்தை எடுப்போம். அது மானொன்றைக் கொல்கிறது. எதற்காக? ''
''எதற்காக? உணவுக்காகத்தான்.''
'உண்மை. தன் உணவுக்காகக் கொல்கிறது. ஆனால் அதே சமயம் அது அன்பின் ஆதிக்கத்துக்குமாகவும் கொல்கின்றது.''
''உணவுக்காகக் கொல்கிறது. ஆனால் அன்பின் ஆதிக்கத்துக்காகக் கொல்கிறதா? அதுதான் புரியவில்லை. அதெப்படி இவ்விதம் நீ கூறலாம்?"
''நண்பனே, அது தன் குட்டிகள் மேல் வைத்துள்ள அன்பின் ஆதிக்கத்தாலும் ஏனைய உயிர்களைக்கொல்கிறது. இவ்விதம் உயிர்கள் எல்லாமே அவற்றின் அன்பின் ஆதிக்கத்தால் கொல்கின்றன.அன்பின் ஆதிக்கமும் இதனால் தான் சார்பானது என்றேன் நண்பனே. புலியின் அன்பின் ஆதிக்கம், மானுக்குத் துன்பத்தை விளைவிக்கலாம். பருந்தின் அன்பின் ஆதிக்கம் சிட்டுக்குருவிக்குத் துன்பமாகவிருக்கும். அதே சமயம் சிட்டுக்குருவியின் அன்பின் ஆதிக்கம் பூச்சிகளுக்குத் துன்பத்தை விளைவிக்கும்.''
''நண்பனே, எவ்வளவு இலகுவாக இருப்பின் இயல்பை எடுத்துக்காட்டி விட்டாய். ஆக, இப்பிரபஞ்சமே அன்பின் ஆதிக்கத்தால்தான் இயங்குகின்றது. ஆனால் இன்பம் , துன்பம், அன்பு, வெறுப்பு இவை சார்பானவை என்கின்றாய். உன் தர்க்கம் ஏற்றுக்கொள்ளக்கூடிய தர்க்கம்தான்.''
ஏதாவது வேலை கிடைக்குமாவென்று அன்று அவன் நகரத்தில் அலைந்துகொண்டிருந்தபோதெல்லாம் மார்க்கின் அன்பின் ஆதிக்கம் பற்றிய சிந்தனைகளே அவனது நெஞ்சில் வளையவந்துகொண்டிருந்தன.
[தொடரும்]
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.