1
அண்மையில், தமிழ் தேசியத்தை கட்டுவிக்கும் முயற்சிகளில் சிலதாக, இலங்கையின் வடக்கில் நிகழ்ந்த பின்வரும் நிகழ்வுகளைக் குறிப்பிடலாம்:
1. இலங்கையின் சுதந்திர தினத்தை கரிநாளாக அனுஷ்டிக்கக் கோரியமை.
2. தமிழர் தேசியத்தைக் கட்டிவளர்க்கும் பொருட்டு சிவில் சமூகத்தினரால் ஒழுங்கு செய்யப்பட்ட ஒரு யாழ் கூட்டம்.
3. சாந்தனின் மரணச்சடங்கு.
இவற்றுடன் வேறு பல நிகழ்வுகள் இடம்பெற்றிருந்தாலும், இவற்றில் சாந்தனின் மரணச்சடங்கானது, தமிழர் தேசியத்தை முன்னெடுக்கும் அதே சமயம் இந்திய எதிர்ப்பு வாதத்தை தூண்டிவிடும் நிகழ்ச்சிநிரலில் ஒன்றாகவும் அமைந்து போனது. ஆனால் இவையாவும், இறுதியில், எந்தளவில் வெற்றியை எய்தின என்பது கேள்விக்குரியாகவே உள்ளது.
காரணம், மேற்படி நிகழ்வுகளில் பங்கேற்ற மக்கள் தொகையை வைத்துப் பார்க்கும் போது, அது, ஒப்பீட்டளவில், அற்ப சொற்பமாகவே இருந்தது என்பது சில ஆய்வாளர்களின் கணிப்பானது. இதனாலோ என்னவோ அண்மைக்காலங்களில் வீறு குறைந்து விட்ட தமிழ் தேசியத்தைப்பற்றிப் பல்வேறு அறிக்கைகள் வெளிவருவதாய் அமைந்திருந்தன. “தமிழ் தேசியத்தின் அடிப்படைகள் ஆட்டங் காண்கின்றன” என புருஷோத்தமன் தங்கமயிலும் (முரசு: 17.03.2024) “நாம் இனவாதத்திற்கு எதிரான போராட்டத்தை துவங்குவதற்கு முன் எமது மக்களுக்கு எதிரான போராட்டத்தை துவங்க வேண்டியுள்ளது.” என யோதிலிங்கமும் எழுதவேண்டிய கட்டாயத்தில் இருந்தார்கள் எனலாம். விக்னேஸ்வரன் ஐயாவின் வடமாகாணசபை நாட்டியம் முதல் தமிழரசு கட்சியின் தேர்தல் , குருந்தூர் மலை அரசியல் வரை பார்த்து முடித்துவிட்ட தமிழ்மக்கள், தேசிய அரசியல் பொறுத்து ஒரு விமான பார்வையை கொண்டுள்ளார்கள் என்பதில் சந்தேகம் இல்லை.
இருப்பினும், சாந்தனின் இறுதி மரணச்சடங்கில் அல்லது ஊர்வலத்தில் கலந்து கொண்டோரின் தொகை அதிகப்பட்சமாய் சில நூறுகளை தாண்டவில்லை என்பது அதிர்ச்சி அளிக்கக்கூடிய செய்திதான். இதனாலோ என்னவோ ஊர்வலத்தில் எண்ணற்ற மக்கள் கலந்துகொண்டார்கள் என்று செயற்கையாக ஊதிப்பெருக்க வேண்டிய இக்கட்டான சூழ்நிலைக்கு எம்மவர்கள் தள்ளப்பட்டார்கள். உதாரணமாக, “சாந்தனுடன்… கூட பயணித்து கொண்டிருந்தவர்கள் பல்லாயிரம் பேர்…” என்று கபிலும் (வீரகேசரி: 10.03.2024). சாந்தனின் இறுதிச்சடங்கானது அரகல போராட்டத்தை ஒத்து மக்கள் திரளை கட்டுவித்தது,” என வேறு சிலரும் எழுத நேர்ந்தது. இப்படியான வர்ணணைகள் எம்மவர்க்கு உவப்பானதாக இருந்தாலும், இறுதி கணிப்பில் இப்பொய்யான வர்ணிப்புக்கள் எம்மவர்க்கு பாதகமாகவே முடிவுறலாம் என்ற அச்சத்தை எமது கடந்த வரலாறு எமக்கு நினைவூட்ட தவறவில்லை.
இது ஒருபுறமிருக்க தென்னிலங்கையின் நகர்வுகள் என்பது தற்போது எவ்விதத்திலும் தீவிரம் குறைந்து விட்டதாகவும் தெரியவில்லை. மயிலத்தடு மேய்ச்சல் நிலமாக இருக்கட்டும் அல்லது அண்மித்த வெடுக்குநாறி பிரச்சனையாகட்டும் - தென்னிலங்கையின் அடக்கு முறையானது வழமைப்போல் தங்கு தடையின்றி முன்னெடுக்கப்படுவதாகவே உள்ளது. இவற்றிற்கு எதிரான தமிழ் தேசியத்தின் ஆக்ரோசமான முன்னெடுப்புகள் (ஊர்வலங்கள், உண்ணா விரதங்கள் போன்றவை) தென்னிலங்கை அரசியலில், இனவாதத்தை வழமைப்போல் நெய் ஊற்றி, வளர்த்து, ஜனாதிபதி தேர்தலுக்கு இட்டுசெல்லும் என்ற நம்பிக்கையின் அடிப்படையில் முயற்சிகள் இடம்பெறவே செய்கின்றன.
வேறுவார்த்தையில் கூறினால், ரணிலை காப்பாற்றும் மேற்படி நிகழ்ச்சிநிரலில் தென்னிலங்கையின் இனவாதம் மாத்திரமல்ல, ஆனால் தமிழ் தேசிய அரசியலினதும், புலம்பெயர் அரசியலினதும் பங்கு இல்லாமல் இல்லை எனலாம். இவ் இக்கட்டான சூழ்நிலையில் மறுபுறத்திலேயே ஜே.வி.பியின் அழிவுக்கான அடித்தளமும் இடப்படுவதாக தெரிகின்றது. இப்புள்ளியிலேயே, மன்சூரின் கட்டுரையானது, இந்நிகழ்வுகளை, கேள்விக்கு உட்படுத்தும் தலையாய விடயப்பொருளாக இருக்கின்றது.
2
அண்மையில், வெளிவந்த முக்கிய கட்டுரைகளில் ஒன்று, எம்.எல்.எம்.மன்சூர் எழுதிய ‘அரகலயவுக்கு பிற்பட்ட இலங்கை அரசியல்’ என்பதாகும் (விடிவெள்ளி : 22.02.2024). இக்கட்டுரை வாதிக்கும் பிரதான முக்கிய விடயங்கள் இரண்டு :
I . ஒன்று, இலங்கையில் தற்போது தோல்வியுற்று வரும் இனவாத அரசியல்.
II. இரண்டாவது, சமூக வலைத்தளங்கள் பெற்றுள்ள வெற்றி. (பொது ஊடகங்களுக்கு எதிராக).
‘அரகல’ அரசியல் ஒழிக்கப்பட வேண்டும் என்றால், அது தகுந்த ‘இனவாதத்தால்’ மாற்றீடு செய்யப்பட வேண்டும் என்பது ஓர் அரசியல் அரிச்சுவடி வகையானது. ஆனால் இவ் அரசியலின் சாணக்கியத்தை, மன்சூரின் வாதம் நிராகரிப்பதாய் உள்ளது, என்பதிலேயே இக் கட்டுரையின் முக்கியத்துவம் எழுவதாகின்றது.
அரகலயவின் பின், திட்டமிடப்பட்ட ரீதியில், குருந்தூர் அரசியல் முதல் பொன்னம்பலம் கஜேந்திரனை குழரக் குழர துரத்தி அடித்து விரட்டிய (தினக்குரல் வார்த்தைகள்) அரசியல் வரை – யாவும் மிகக்கவனமாய் திட்டமிடப்பட்டு அரங்கேற்றப்பட்ட அரசியல் ஒன்றே ஆகும்.(அரகல அரசியலை மாற்றீடு செய்யும் பொருட்டு). இது அண்மை வெடுக்குநாறி அரசியலுக்கும பொருந்தும்; என்பதிலும் கேள்வி இல்லை. இத்தகைய, அரசியலை முன்னெடுப்பதில் சர்வதேசத்தின் ஆசிர்வாதமும் இணைந்தே இருக்கின்றது என்பதிலும் சந்தேகம் இல்லை. காரணம் இலங்கையின் ஆதிக்கச் சக்தியை, தமக்கு ஏற்றவகையில் கட்டி வளர்ப்பதில், மேற்படி அரசியலின் பூரணம் இன்றியமையாதது என்பதனை சர்வதேசம் நன்கு அறிந்தே உள்ளது.
இந்த ஒரு பின்புலத்தினிலேயே, ஜே.வி.பியின் அரசியலானது வெகுசன அங்கீகரிப்பை இன்று பெற்று தெளிவுற ஆட்சி ஏறும் நிலையில் இருப்பதாகவும் கூறப்படுகின்றது. இதற்குச் சுருதி சேர்ப்பதுப்போல், ஜே.வி.பியினரை இந்தியா அழைத்த விதமும், அவர்களுடன் இந்தியா அளவளாவிய விதமும் ஜே.வி.பியினருக்கு புதிய கம்பீரத்தை தந்து, மக்கள் மத்தியில் அவர்களை மேலும் பிரபலப்படுத்தி உள்ளது என்பதிலும் சந்தேகமில்லை.
இத்தைய சூழலிலேயே, மன்சூர் அவர்கள் பின்வருமாறு எழுதுகின்றார்:
“….. ராஜபக்ஷ..... பதவியேற்றப்பின்னர்… கொடிக்கட்டி பறந்த சிங்கள தேசியவாதத்துடன் இணைந்த பேரினவாத செயற்றிட்டம் இப்பொழுது பெரும் சரிவை சந்தித்திருக்கின்றது. நாட்டின் பெரும் போக்கு அரசியலில் சிங்கள தேசியவாதமோ, அல்லது இன வாதமோ இப்பொழுது “முதன்மையான சக்தியாக” இருந்து வரவில்லை. இனவாத கோஷங்களை மட்டுமே முன்வைத்து சிங்கள மக்களை அணித்திரட்டுவது இனிமேலும் சாத்தியமில்லை…”
இந்நிலைப்பாடானது, மேற்குறிப்பிட்ட அரகல அரசியலுக்கு பின், அதனை வேரெடுக்க அல்லது அதனை நிர்மூலமாக்க முன்வரும் ஒரு வேலைத்திட்டத்தின் அடிப்படைகளை கேள்விக்கு உட்படுத்துவதாக உள்ளது. அதாவது, தமிழருக்கு எதிராக இன்று மேற்கொள்ளப்படும் குருந்தூர் அரசியல் அல்லது, வெடுக்குநாறி அரசியல் ஆனது தென்னிலங்கையில் எதிர்பார்க்கப்படும் எதிர்வினைகளை தோற்றுவிக்காது என மன்சூர் கருதுவதாக இருக்கின்றது.
[தொடரும்]
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
3