போரின் தணல்மேவி,
சாம்பல் தகிக்கும் நிலத்தில்,
வரண்டு இழுபடும் ரப்பர் ரொட்டியும்
பிழிகையில் துளியும் சிந்தாத
தேங்காய்த் துருவலும்
அண்ணாந்திருக்கும்
வெற்றுப் பாத்திரங்களும்
இருந்துமில்லாத
எனது சமையலறையில்
வேறு என்னதான் இருக்கும்...?
போரின் கொடுவாய்க் கத்தி
காலக் கிழங்கைப் பிழந்து
துண்டு துண்டாய் வீசியும்...
கருகிய மணலின் துகள் ஒவ்வொன்றிலும்
மரணம் பந்தி வைத்தும்...
நிலத்தில் நிணம் உருகி
எரி சுடலை பெருகியோடியும்
போயிருக்கும்போது....
வேர்வையாலும்
புகையப்பிய கண்ணீராலும்
மூழ்கும்
ஒரு சமையல்காரனைப் போல,
ஆக்குவதற்கு
என்னிடம் என்னதான் இருக்கிறது...!?
என்றுமே காய்ந்து கருகாத் துயரும்
எதனாலும் கிள்ளிமாளா ஏக்கமும்
அலைக்கழித்துச் சுழன்றடிக்கும் பெருவலியும்
பதறியவாறே கவிந்திருக்கும் தவிப்பும்
தோல்வி துளைபோடும் ஆற்றாமையும்
எல்லாமே கைவிட்டுப் போன தனிமையும்
இப்போதைக்கிருக்கின்ற
ஒற்றைப் பெருமூச்சும்....
ஒன்றாக அள்ளி ஊற்றி
மனசுப் பானையில்
கண்ணீர் உலையை வைக்கிறேன்....
எங்கிருந்தோ
ஒரு குறுணி நம்பிக்கை அரிசி
அதற்குள் விழுந்து எழுகிறது...
'கிழிபட்டுப்போயிருக்கும் கணங்களால்
விறகு மூட்டும்போது...
உடைந்து சுக்குநூறாகிய
என் சனங்களுக்கும்
உறங்காமல் வெளி நிறைக்கும்
என் பிதிர்களுக்கும்
அன்னம் பாலிக்க
அந்த ஒற்றை அரிசியே போதுமானது'
என்றேன்!
ஓராயிரம் அமுதசுரபிகளாய்
ஒரு காலை விடிந்தது!
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.