இந்து சமுத்திரக் கப்பற் பாதையின் மத்தியில் அமையும் தீவாகவும், தென்மேல் மற்றும் வடகீழ்ப் பருவக்காற்றுக் காலங்களில் கப்பல்களைப் பாதுகாப்பாக நிறுத்திவைக்கக்கூடிய திருகோணமலைத் துறைமுகம் முதலாய இயற்கைத் துறைமுகங்கள் கொண்டதாகவும் அமையும் பல அம்சங்கள் இலங்கையின் கேந்திரநிலையின் முதன்மையைப் புலப்படுத்தும். இலங்கையின் ஒன்பது மாகாணங்களில் ஒன்றாகிய வட மாகாணமானது, கிழக்கு மாகாணம் போலவே, தமிழர்களின் பூர்வீக வாழிடம். யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார், வவுனியா, முல்லைத்தீவு ஆகிய ஐந்து மாவட்டங்களைக் கொண்டது வட மாகாணம். இவற்றுள், யாழ்ப்பாணம் நீங்கிய ஏனைய ஐந்து மாவட்டங்களையும் உள்ளடக்கிய நிலப்பகுதியே, வன்னி அல்லது வன்னிப் பெருநிலப்பரப்பு. வட மாகாணத்தின் தலைநகரம் யாழ்ப்பாணம்.
யாழ்ப்பாணம் ஒரு குடாநாடு. மூன்று பக்கம் நீராற் சூழப்பட்டதும், இலங்கைத் தீவின் வடமுனையில் உள்ளதுமான நிலப்பகுதி. மூன்று பக்கமும் நீர் சூழ்ந்திருப்பதால் ‘யாழ்ப்பாணத் தீபகற்பம்’ எனப்படுகிறது. வெளிநாட்டார் பயணக் குறிப்புகளில் பெரும்பாலும் யாழ்ப்பாணத் தீபகற்பம் என்றே அது குறிப்பிடப்படுகிறது. இலங்கைத்தீவு, ‘யாழ்ப்பாணத் தீபகற்பம்’ எனும் தனது தலையை இந்து சமுத்திரத்தில் வைத்துப் படுத்திருப்பதுபோல் காட்சியளிக்கும். யாழில் வல்ல ஒரு பாணனுக்குப் பரிசாக வழங்கப்பெற்றமையால் யாழ்ப்பாணம் எனப் பெயர் சூடியது. யாழ்ப்பாணத் தீபகற்பத்தை, இலங்கையின் ஏனைய பிராந்தியங்களுடன் தொடுக்கும் நிலப்பகுதியாக விளங்குவது, ஆனையிறவு. இத்தகைய புவியியல் அமைவு காரணமாக, யாழ்ப்பாணம் தனித்த பல சிறப்பியல்புகளை வரலாற்று ரீதியாகப் பெற்றிருந்தது.
யாழ்ப்பாணத்திற்கு, இலங்கையின் ஏனைய பிரதேசங்களுடனான ஊடாட்டத்தினை விடவும், இந்தியாவுடனான அதிலும் குறிப்பாகத் தமிழ் நாட்டுடனான ஊடாட்டம் நெருக்கமானது. வரலாற்றுத் தொடர்ச்சியுடையது. ஆங்கிலேயக் காலனிய ஆட்சியில் யாழ்ப்பாணத் தீபகற்பம் இந்தியாவின் மதறாஸ் மாகாணத்தின்கீழ் அமைந்திருந்தது. புவியியல் வரைபடத்தில் இலங்கைக்குத் தலையாக அமையும் யாழ்ப்பாணம், பத்தொன்பதாம் நூற்றாண்டுத் தமிழ்ச் சூழலில் சென்னைக்கு மூளையாகத் திகழ்ந்தது. ‘நாவலர் காலத்திலும் அவரது மறைவிற்குப் பின்னரான ஏறத்தாழ மூன்று தசாப்த காலங்களிலும் சென்னை எழுத்தறிவுச் சூழலில் யாழ்ப்பாணக் குழுமமே ஆதிக்கம் செலுத்தியது’ என்பார், க.கைலாசபதி. யாழ்ப்பாணத் தீபகற்பத்தில், காங்கேசன்துறை, வல்வெட்டித்துறை, பருத்தித்துறை, ஜம்புகோளப் பட்டினம் (மாதகல் - சம்பில்துறை) போன்ற பல வரலாற்று முக்கியத்துவம் மிக்க துறைமுகங்களும் துறைமுகப் பட்டினங்களும் அமைந்துள்ளன. ஜம்புகோளப் பட்டினம் என்பது மகிந்த தேரரும் சங்கமித்தையும் வெள்ளரசு மரக் கிளையுடன் பௌத்தத்தை நாட்டிவைக்க வந்திறங்கிய துறைமுகம். இலங்கையில், பௌத்தம் முதன்முதலில் கால்பதித்த இடம் இதுதான். இதனால் இலங்கையின் முதல் பௌத்தம் தமிழ்ப் பௌத்தமாக அமைந்தது. யாழ்ப்பாணத்திலிருந்துதான் தென்னிலங்கைக்குப் பௌத்தம் நடந்து சென்றது.
கடல் சூழ் இலங்கைத் தீவில், கடலில் தவழும் கப்பல்கள் மனித வாழ்வையும் சுமந்து, தள்ளாடித் தவழ்வதும் ஒரு வரலாறுதான். ஏறத்தாழ, சென்ற அரை நூற்றாண்டு ஈழத் தமிழர் வாழ்வுக்கும் அப்படி ஒரு வரலாறு இருக்கிறது.
ஆனையிறவுத் தரைவழிப் பாதையை மூடிவிட்டால், துண்டிக்கப்படுவது போக்குவரத்து மட்டுமல்ல, யாழ்ப்பாணக் குடாநாட்டிலும் அதற்கு வெளியிலும் வாழும் வட பகுதித் தமிழரின் வாழ்வுப் பாதையுந்தான். சரக்குக் கப்பல்களும் பயணிகள் கப்பல்களும் தொண்ணூறுகளில் மக்கள் மத்தியில் மனித உறவுகளுக்குச் சமனான மதிப்பைப் பெற்றிருந்தன. இத்தகைய ஒரு காலத்தில் புகழ் சூடியதுதான், ‘லங்கா முடித’ கப்பல். இதைக் ‘காணாத கண்ணென்ன கண்ணே’ என்று, தொண்ணூறுகளில் யாழ்ப்பாணத் தமிழர்கள் ஏங்கித் தவித்தார்கள். அந்தளவுக்கு அது ஒன்றும் கடற் பேரழகி அல்ல. பாரிய சரக்குக் கப்பல்தான். இன்னும் சொன்னால், சரக்குகளோடு சரக்குகளாக மக்களையும் அடுக்கி, அரச கடற்படையின் பாதுகாப்போடு, இந்து சமுத்திரத்தில் வலம் வந்த கப்பல் அது. ஓடித்திரியும் பெருச்சாளிகளுக்கு மத்தியில், நாற்றத்தால் வாந்தியெடுத்துச் சோர்ந்த தமிழர்களையும் சுமந்த இக்கப்பல், திருகோணமலையிலிருந்து புறப்பட்டு, குடாநாட்டுக்கு வருவதும், பின்னர் குடாநாட்டிலிருந்து போவதுமான செய்திகள் எல்லாம் போர்ச் செய்திகளுக்குரிய முதன்மையோடு குடாநாட்டுப் பத்திரிகைகளில் முதற் பக்கத்தில் பிரசுரமாகின. பத்திரிகைகளில் பயணத்துக்காகப் பதிவு செய்த தங்களது பெயர்கள் வருகின்றனவா என்று, அரச ஊழியர்களும் மாணவர்களும் நோயாளிகளுமான பயணிகள் பலரும் ஓடிஓடிப் பத்திரிகை வாங்கிப்படித்த காலம் அது. கப்பலின் வருகையால் வயிறு ஓரளவாவது நிறையும் என்று நம்புகின்ற இக்காலத்தில், கூட்டுறவுச் சங்கக் கடைகளின் முன்னும் பேக்கரிகளின் அருகிலும் நீளும் மக்கள் வரிசை, கப்பல் வந்துவிட்டதை, பத்திரிகையின்றியே அறிவித்து நிற்கும். அத்தியாவசியப் பொருட்களுடன் வரும் இக்கப்பல், தபால் பொதிகளையும் அவசியமான சில மருந்துப் பொதிகளையும் சுமந்து வரும். பரிசோதனைக்காக உறைகள் கிழிக்கப்பட்ட, மாவும் பருப்பும் சீனியும் ஒட்டிய தபால்களை, ‘கடல் தண்ணி பட்டுக் கிழிந்துவிட்டன’ என்று கூறி, தபாற்காரர்கள் விநியோகிக்கும் நிலையும் இக்காலத்தில் இருந்தது. ஒருபோது, திருகோணமலைக் கடற்பரப்பில் இது தரித்து நிற்கையில் தாக்குதலுக்குள்ளானது. தமக்கும் தாக்குதலுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை என்று புலிகளின் அறிக்கைகூட வெளிவந்திருந்தது. கப்பல் ஓட்டும் செலவைவிடவும், நங்கூரமிடும் செலவு அதிகம் எனப் பேரெடுத்த இக்கப்பல், பின்னர் திருத்தச் செலவு அதிகம் என்பதால் திருத்தப்படாமலே போனது. யாழ்ப்பாணத் தமிழர்களுக்காக ஓடிக் களைத்துக் கிழமாகிப்போன இக்கப்பலை, துறைமுக அமைச்சு இரும்புக்கு விற்க முடிவெடுத்தது வேறுகதை.
- நூலாசிரியர் ரவிக்குமார் -
‘ஐரிஷ் மோனா’ கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்திற்காக ஓடிய சரக்குக் கப்பல். அதனைப் புலிகள் முல்லைத்தீவுக் கடற்பரப்பில் வைத்து மடக்கி, நாகர் கோயில் கடற்கரைக்குச் கொண்டு சென்றனர். அப்போதைய ஜனாதிபதி சந்திரிக்கா அம்மையார், ‘ஐரிஷ் மோனாவை உடனே மீட்டெடுங்கள், அல்லது தாக்கி அழியுங்கள்’ என்று படையினருக்கு உத்தரவிட்டதாக உலவிய கதையும் ஒன்று உள்ளது. இதுபோலவே சிற்றி ஒவ் ரிங்கோ, கிரீன் ஓசன், நறோமா போன்ற பயணிகள் கப்பல்களுக்கான கதைகளும் பல உள்ளன.
இலங்கைக் கப்பற் கூட்டுத்தாபனத்தின் முதலாவது கப்பல் என்று பேரெடுத்த ‘லங்கா ராணி’தான் அருளர் எழுதிய ‘லங்கா ராணி’ நாவலின் பெயராகியது. 1977, 78இல் தென்னிலங்கையில், இனக்கலவரத்தில் பாதிக்கப்பட்ட தமிழர்கள், கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்துக்கு லங்கா ராணி மூலம் அனுப்பிவைக்கப்படுகின்றனர். இந்தப் பயணத்தில் நடக்கும் உண்மை நிகழ்வுகள்தான் நாவலின் கதை. கொழும்பிலிருந்து கப்பல் புறப்படுவதுடன் ஆரம்பிக்கும் கதை, அது இலங்கைத் தீவைச் சுற்றி வந்து, இலங்கையின் இன்னொரு முனையான பருத்தித்துறையை அடைவதோடு முடிவடைகிறது. இரு நாள் கப்பல் பயணிப்பு இரண்டாயிரம் ஆண்டு கால வரலாற்றைப் பேசியவாறே நிகழ்கிறது.
தொண்ணூறுகள், அயல் நாட்டுப் போர் விமானங்கள் உணவுப் பொதிகளை வீசிச் செல்ல, மக்கள் அதை எடுத்து உண்ண அஞ்சித் தவிர்க்குமொரு காலம். அப்போர் விமானங்கள் தமது நாட்டிலிருந்து உணவுப் பொருட்கள் வரும் செய்தி சுமந்த துண்டுப் பிரசுரங்களை, பறந்தவாறே வீச, அச்செய்திப் பறவைகளின் பெருங் கூட்டம் காற்றில் மெதுமெதுவாகக் கலைந்து பரந்து, ஒன்றிரண்டு தவிர, ஏனையவை கடலில் வீழ்ந்துவிடும். மீன்கள் துண்டுப் பிரசுரங்களை வாசிக்கா என்பது போர் விமானங்களுக்குத் தெரியா. ‘ஒப்புக்குக் போர்த்திய அமைதித் திரையின் ஓரங்கள் பற்றி எரிந்தபோது’ அயல்நாட்டுக் கப்பல்கள் அச்சத்திற்கு உரியவையாகின. ‘அரிசி வந்த படகில் தமிழர் குருதி கொண்டு போன’ நிகழ்வுகளும் பல உள்ளதல்லவா!
யாழ் குடாநாட்டிலிருந்து வெளிச்செல்ல ஆனையிறவூடான பாதை மூடப்பட்டிருந்த காலத்தில், வன்னியையும் குடாநாட்டையும் இணைக்கும் கடல்வழிப் பாதையாகக் கிளாலிப் பாதை அமைந்தது. அத்தியாவசியத் தேவைகருதி தென்னிலங்கைக்கு மக்கள் வள்ளங்களில் பயணிப்பர். உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு செல்லும் பயணம். காலனிய கால யாழ்ப்பாணக் கப்பல் அசைவியக்கத்தால் உருவான எள்ளுப் பாகு, பொரிமா, பருத்தித்துறை வடை எனப் புகழ்பெற்ற தட்டை வடை ஆகிய உலர் உணவுப் பொதிகளை மட்டும் சாப்பாடாக எடுத்துக்கொண்டு செல்லும் பயணம். சிறுவர்களுக்காகக் ‘குமரப்பா இனிப்பு’, ‘மிதிவெடி’ (சமோசா) பொதிகளில் இருக்கும். மழை காலமெனில், சகதி படைபடையாய் ஒட்டிக் கூடவே பயணிக்கும். பயணிகள்மீது ஆனையிறவு, பூநகரிப் படை முகாம்களிலிருந்து படையினர் ஷெல் தாக்குதல் நடத்துவர். படகுகளில் வந்து வெட்டிச் சாய்ப்பர். வள்ளங்களோடு நீருக்குள் ஆழ்ந்துபோன நெஞ்சு கனக்கும் துயர நிகழ்வுகள் எத்தனை! குமுதினிப் படகுப் படுகொலையிலிருந்து குடாநாட்டுத் தமிழரின் கடல்வழிப் பயண வரலாறு நீண்டதோர் துயர்க்கதை.
குடாநாட்டை அண்மித்த கடற் பரப்பில் தரித்து நின்ற நேவிக் கப்பல்கள் தாக்குதல் நிகழ்த்தியபோது, தமிழர் குடிமனைகள் எரிந்து சாம்பலாயின. கரையோர வைத்தியசாலைகளும் ஆலயங்களும் தரைமட்டமாயின. உயிரச்சத்தால் அயல்நாட்டுக்குச் சென்ற மக்கள் கடலிலே, படையினர் பசிக்குப் பலியாயினர். படகுகளில் பயணித்த போராளிகள் சிறைப்பிடிக்கப்பட்டுக் கொல்லப்பட்டனர். மீன்பிடிக்கச் சென்ற நீருழவர்கள் படையினரால் துண்டுதுண்டாய் வெட்டப்பட்டனர். மீன் அள்ளி வருவார்கள் என்று காத்திருந்தவர்களுக்கு, உப்பு நீரிலும் காற்றிலும் ஊறிப் பெருத்த உடல் துண்டுகள் கரையொதுங்கிய காலைகளே அவலமாக விடிந்தன. ‘கடலம்மா கடலம்மா எங்களுக்கு நீதி சொல்ல எவரும் இல்லையா?’ என்று ‘வாய் இறுக்கி வயிறு இறுக்கி வாழும் கடல் மீனவனின் வாசல் எங்கும் வேதனையின் கோடு’ என அமைந்த காலத்தில்தான், ஈழத் தமிழர் மத்தியில் கடல் பற்றிய கரிசனை வரலாற்றில் என்றுமில்லாதவாறு எழுந்தது. ‘தமிழர் கடல்’, ‘தமிழீழக் கடல்’ என்ற தமிழர் நிலத்துக்கான நீரெல்லை குறித்த கருத்தாக்கங்கள் முதன்மைபெற்றன. கடல் மேலான உரிமையை வென்றெடுக்க, ‘கடற்புலிகள்’ என்ற படையணி உருவாகியது. கடலை அண்மித்த பகுதிகளில் கடற்புலிகள் அமைத்த முகாம்கள் சாண்டில்யனின் ‘கடல் புறா’ நாமத்தை வரித்துக்கொண்டன. குருவிப் படகுகள், டோறாக்கள், அதிவேகப் பீரங்கிப் படகுகள், நீர்மூழ்கிப் படகுகள் எனப் பலவாறு உருவாகிய ஒரு பலம் மிக்க கடற்படை, மீனவர்கள் கடற்கல்லறை ஆகிப்போகும் நிலையை நீக்கியது. கடற் சமரில் காவிய நாயகராகிய கடற் போராளிகளின் பெயர்கள் தாங்கிய கப்பல்கள் கொடி வீசிப் பறக்க வலம்வந்தன. ‘நெய்தல்’, ‘கடலிலே காவியம் படைப்போம்’ போன்ற பல பெயர்களில், பலநூறு இசைப் பாடல்கள் தாங்கிய இறுவெட்டுக்களைக் கலைபண்பாட்டுக் கழகம் வெளிக்கொணர்ந்தது. கடலின் மீதான உரிமையும், கடலின் பண்பாட்டு வரலாறும், தமிழ்த்தேசிய அரசியலும் இணைந்த அப்பாடல்களை வாய்கள் உச்சரித்துத் திரிந்தன. இவ்வாறாகக் கடந்த அரை நூற்றாண்டுக்கும் மேலான ஈழத்தமிழர் வாழ்வென்பது, கடலும்; கப்பலும் கரையாத சோகமுமாகக் கழிந்திருக்கிறது. அன்புச் சகோதரர், முனைவர் து. ரவிக்குமார் அவர்களின் இந்த நூலை வாசித்து முடித்தபோது, மனக் கடலில் ஓயாது எழுந்த நினைவலைகள் இவை. இவற்றின் நீட்சியாக, அறிவுசார் தளத்தில் அரசியல் உரையாடலை மிகுந்த கரிசனையோடும் பொறுப்புணர்வோடும் நிகழ்த்துவதாக, இந்த நூலைக் காண்கிறேன். நூலாசிரியர் சொல்லும் கப்பல் ஒன்றின் கதையைச் சுருக்கமாகச் சொல்கிறேன்.
எம்.வி.கேப்டன் அலி என்ற கப்பல் ஈழப் போர் உச்சநிலையில் இருந்த வேளையில், போர் நிலத்தில் சிக்கிய சுமார் மூன்று இலட்சம் தமிழர்களுக்கு, உலகத் தமிழர்களின் ஆதரவுடன், உணவு மற்றும் மருந்துப் பொருட்களை ஏற்றி இங்கிலாந்திலிருந்து பயணிக்கிறது. இந்த உதவிப் பயணத்தின் பெயர், ‘மெர்ஸி மிஷன்’. ஆனால் கப்பல் இலங்கையைக் காண முன்னர், தமிழர்கள் கொத்துக் கொத்தாகக் கொன்று குவிக்கப்பட்டு, போர் முடிந்துவிடுகிறது. கப்பல் இலங்கையைக் காண்கிறது. போரில் சிக்கியவர்களுக்கான நிவாரண உதவி, அகதி முகாம்களில் சிக்கியவர்களுக்கானதாக முடிவு செய்யப்படுகிறது. கப்பல் இலங்கைக்குள் செல்ல இலங்கைக் கடற்டை மறுக்கிறது. ஜனாதிபதியிடம் உரிய முறையில் கடித அறிவிப்புச் செய்திருந்தும், ஐ.நா. மனித உரிமைப் பேரவையில் இதுபற்றி உரையாடப்பெற்று இலங்கை அரசுக்கு உரிய முறையில் தகவல் அனுப்பியிருந்தும், இலங்கைக்குள் கப்பலைச் செலுத்த இலங்கைக் கடற்படை அனுமதி மறுக்கிறது. அனுமதி மறுக்கப்பட்ட கப்பல் சென்னைத் துறைமுகத்தை அடைகிறது. கப்பலின் நல நோக்கத்தைத் தமிழக அரசு புரிந்துகொள்கிறது. ஆவன செய்ய முயலுகிறது. தமிழக அரசும் பிற அரசியல் கட்சிகளும் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்கின்றன. இந்தியக் கடற்படையோ கப்பலைப் பரிசோதித்து, சந்தேகத்திற்கிடமானது என நேர்மையற்றுக் கூறுகிறது. இதனால், சென்னையை நீங்கிய கப்பல், சர்வதேசக் கடற்பரப்பில் தரிக்கிறது. இந்தவேளை, இலங்கையிலிருந்து இந்தியா செல்கிறது அரசு தரப்புக் குழு. அப்போது தமிழக முதல்வர் கப்பலைப் பற்றிப் பேசுமாறு மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்கிறார். வேறுவழியின்றி, கப்பலை அனுமதிப்பதாக இலங்கைத் தரப்பு இறங்கி வந்தது. இந்த வரலாற்று நிகழ்வுக்குரிய கப்பல், சூடி வந்த நாமந்தான், ‘வணங்கா மண்’.
முள்ளிவாய்க்காலுக்குப் பின்னரான ஈழத்தமிழரின் அரசியல் வரலாற்று ஆவணங்களைச் சுமந்த இந்த நூலின் பெயரும் அதுதான். ‘கண்ணீர் துடைக்குமா கருணைத் தூது’ என்ற முதலாவது கட்டுரையின் மையப் பொருளான வணங்கா மண் கப்பல்தான் இந்த நூலின் பெயராகியது. அக்கட்டுரையில் வணங்கா மண்ணுக்கு நேர்ந்த நெருக்கடியை விலாவாரியாக விவரிக்கிறார், ஆசிரியர். அந்த விவரிப்பு, பார்வையாள மனோநிலைப்பட்டது அல்ல. வணங்கா மண்ணுக்காகத் தமிழக அரசையும் மத்திய அரசையும் வலியுறுத்திய, ஆலோசனை சொல்லிய, ஊடக வெளியில் தார்மீகக் குரலெழுப்பிய, சட்ட மன்றத்தில் சிறப்புக் கவன ஈர்ப்புக்காக உரை நிகழ்த்தி அதனை அரசியல் அரங்கில் கவனப்படுத்திய, ‘உலகத் தமிழர்கள் அனுப்பி வைத்துள்ள இந்த நிவாரணப் பொருட்களோடு தாய்த் தமிழகத்தின் உதவியையும் சேர்த்து அனுப்புவதே நியாயமானது. எனவே, இந்த நிவாரணப் பொருட்களை இலங்கைக்கு அனுப்பும்போது, தமிழகத்தின் சார்பிலும் இதேபோன்று உணவுப் பொருட்கள், மருந்துகள், உடைகள் முதலான அத்தியாவசியப் பொருட்களை அனுப்பிவைக்கத் தமிழக முதல்வர் ஏற்பாடு செய்;யவேண்டும்’ என வேண்டிய ஒரு பங்கேற்பாளரின் பதிவு என்பதுதான் முக்கியமானது.
வணங்கா மண்ணின் வருகை மறுப்பின் போதெழுந்த சர்ச்சைகள் இன்றும் நினைவில் உள்ளன. முறையான திட்டமிடலின்றி அந்தக் கப்பல் பயணம் நிகழ்ந்தது என்றும் அதனால்தான் அனுமதி மறுக்கப்பட்டது என்றும் அப்போது குரல்கள் எழுந்தன. இவையெல்லாவற்றுக்கும் அப்பால், உரிமைப் போர் ஒன்று வீழும் நிலையிலிருந்தபோது, தமிழர்கள் பிணங்களாகக் குவிக்கப்பட்டுக்கொண்டிருந்த காலத்தில், ‘வணங்கா மண்’ எனப் பெயர் சூடி வந்தமை காலப் பொருத்தமானதுதானா என்ற கேள்விதான் இப்போதும் எழுகிறது.
கட்டுரைகள் இருபது, சட்ட மன்ற உரைகள் மூன்று, ஈழ அகதிகள் குறித்த அறிக்கைகள் மற்றும் பதிவுகள் ஒன்பது என மூன்று பகுதிகளைக் கொண்டமைந்தது, இந்த நூல். எழுத்து அரசியல் என்பது வெறுமனே மலினமானதும் பொதுவானதுமான கட்சி அரசியல் பற்றியதல்ல. அது ஓர் இனத்தின் அனைத்துப் பண்பாட்டுக்கூறுகளையும் முதன்மைப்படுத்தியது. நீண்டு விரிந்த அர்த்தப் பரப்பைக் கொண்டது. முக்கியமாக, காலந்தோறும் வரலாறு சுமந்த பண்பாட்டு ஆவணங்களின்மேலான உரையாடலாக அது அமைந்திருக்கும். ஆயுதப் போராட்ட அரசியல் வரலாற்றினை அதிகம் பேசியும் எழுதியும் விவாதித்தும்வரும் சூழலில், அதைவிடவும் முக்கியமான, ஆயுதப் போராட்டத்திற்கும் அடிப்படையான, ஆயுதப் போராட்டம் முடிவுற்ற பின்னரும் வலிமையோடு விளங்குவதும் இயங்குவதுமான, இன அழிப்புக்கு எதிராக எழுத்துவழி நிகழ்ந்த போராட்டங்களைச் சத்திய ரீதியாகப் பேசுவதும் எழுதுவதும் விவாதிப்பதும் அரிது என்றே கூறலாம். ஈழத்து அரசியல் தொடர்பான ரவிக்குமாரின் எழுத்துகள் பற்றிச் சிந்திக்கின்றபோது, ஈழத் தமிழர் மீதான, அவர்களது உரிமைகள் மீதான, அவர்களுக்கான சுதந்திர வெளி பற்றிய அரசியல் சமூகக் கடப்பாட்டு உணர்வோடு எழுதப்பட்டவை என்பதே முன்னிற்கிறது. இன்றைய தமிழ் அரசியல் அரங்கிலும் சரி, தனியான கற்கை மற்றும் ஆய்வுப் புலமாக அறியப்படுகின்ற ‘ஈழத் தமிழர் அரசியல்’ என்ற அறிவுப் புலத்திலும் சரி, ரவிக்குமாரின் அறிவு மற்றும் செயற்பாட்டுப் பங்களிப்பை நீக்கிப் பார்க்க முடியாது.
தமிழ்த் தேசிய அரசியல்வாதிகள் பலரும் தமிழகத்திலும் ஈழத்திலும் மேடைப்பேச்சு வீரர்களாக விளங்கிக்கொண்டிருக்கின்ற இற்றைக் காலத்தில், ஈழத்து அரசியலை மிக நுட்பமாக அவதானித்து எழுதிய எழுத்துக்கள் ரவிக்குமாருடையவை. அவர் ஓர் இடைவிடாத அரசியல் சமூகச் செயற்பாட்டாளர்; என்பதும், நிதானமாகக் கருத்துக் கூறும் தன்மை உடையவர் என்பதும், புறநிலை நின்று விடயங்களை நோக்கி ஆராய்பவர் என்பதும் அவரது எழுத்துகளால் ஈழத்தவர்கள் அவரைப் புரிந்துகொண்டவை. இன்னும் கூறுவதாயின், இன்றைய தமிழ் அரசியல் அரங்கில் ஈழத்தவருக்கான ஒரு அரசியல் நிபுணர், இடைவிடாத செயற்பாட்டாளர் தமிழகத்தில் உள்ளாரெனில், அவர் ரவிக்குமார்தான் என உறுதியாகச் சொல்ல முடியும்.
ஈழத்தவர் தொடர்பாக அலைகடலுக்கப்பால், அரசியல் என்ற தளத்தில் இயங்கும் அவருடைய புலமை நேர்மையே அவரது எழுத்துக்களின் பலம். ஈழத் தமிழர் மீதான பொங்கிப் பிரவாகிக்கும் அவரது பற்று, அவரது எழுத்துக்களின் ஈரம். ஈழத் தமிழர்களின் ரத்தமும் பிண நெடியும் அவல வாழ்வும் மட்டுமன்றி அவர்களது வரலாற்று இருப்பினையும் கொண்ட ரவிக்குமாரின் எழுத்துக்கள், ஆதிக்கக்காரரின் முகத்திலும், மறுக்கும் வரலாற்று முகத்திலும் அறைந்து பேச வல்லவை.
முதலில், ஒரு அரசியல் இலக்கியக்காரன் ஒரு அசல் புலமையாளனாக இருக்க வேண்டும். புலமை என்பது ஒரு சமூகச் சொத்து. கிராம்ஷி புலமையாளர்;களைச் ‘சமூகத்தின் ஒருங்கிணைப்பாளர்’ எனவும் ‘வரலாற்று அசல்’ எனவும் சுட்டினார். அரசியல் செயற்பாட்டாளர்கள் பொதுவெளியில் புலமையாளர்களாக அங்கீகரிக்கப்படுவது என்பது, அவர்கள் எவ்வளவு தூரம் சமகால உலகின் யதார்த்த நிலைமையுடன், சமூகத்தின் பொது விவகாரங்களில் தம்மைப் பிணைத்துக்கொண்டு ஈடுபாடு காட்டுகிறார்கள் என்பதைப் பொறுத்தது. அந்தவகையில் ரவிக்குமார் என்கின்ற புலமையாளர் ‘ஈழ மற்றும் தமிழகச் சமூகங்களின் அறிவார்ந்த ஒருங்கிணைப்பாளர்’ என்ற அந்தஸ்துக்குரியவர். இந்த அந்தஸ்தை அவர் தனது எழுத்துக்களின் மூலமாக, முள்ளிவாய்க்காலின் முன்னரும் அதன் பின்னரும் தொடர்ச்சியாகப் பேணிவருபவர். ‘புலமையாளர், பொதுவெளியில், நிராதவராக்கப்பட்ட, பிரதிநிதித்துவம் இழந்துபோன, மறக்கப்பட்டுவிட்ட மக்களின் குரலாக நிற்பார்’ என்று இலக்கணம் வரைகிறார், எட்வர்ட் ஸெய்த். இந்த இலக்கணத்தின் வாழும் வடிவம்தான் ரவிக்குமார். அவர், எப்போதும் ‘அதிகாரத்துக்கு எதிராக உண்மையைப் பேசும் புலமையாளர்’. அவரது இந்த நூலும் இதைத் தெளிவாகவே உணர்த்துகிறது.
ஈழத் தமிழர் தொடர்பான ரவிக்குமாரின் இந்த எழுத்துக்களைப் பேசுவதென்பதும் அலசுவதென்பதும், நமது வரலாற்றை நாம் படிப்பதுதான். ரவிக்குமாரது எழுத்துக்களை வாசிக்கும் ஒவ்வொரு தருணமும் அவரை நாம் ஒரு ஈழத் தமிழராக, ஈழத் தமிழ்ப் புலமையாளராக உணரும் தருணம்தான். ஈழம் தொடர்பான அவரது எழுத்துக்கள் ஈழத் தமிழரின் பண்பாட்டுக் காப்புணர்வை அதிகம் கொண்டவை. ஈழப் பண்பாட்டின் அனைத்துக் கூறுகளிலும் ஊடுருவி, அதன் தனித்துவ அம்சங்களின் காலத்துக்கேற்ற வகையிலான நிலைபேற்றில் அக்கறை கொள்பவை. ஈழத் தமிழர் நிலம் மற்றும் அதன் வரலாற்றுத் தொன்மையை மீட்டெடுப்பதில் அதிகம் கரிசனை காட்டுபவை. தமிழ் மொழியின் வேரிலும் அதன் விழுதுகளிலும் ஒட்டி வளர்ந்த ஈழத் தமிழ் இனச் செழுமையை, மீளவும் வரலாற்று வெளியில் நிறுவுபவை. ஒரு நடுநிலையான நீதித்துறையாளனின் வரைபுகள் போன்றவை, ஈழத்து அரசியல் தொடர்பான ரவிக்குமாரின் எழுத்துக்கள் என்றால் அது மிகையல்ல.
ஈழத்து அரசியல் வரலாற்றைப் புரட்டினால், துப்பாக்கிகள் படை வீரர்களைக் குறி வைப்பதற்கு முன்னரே, மூளைசாலிகளின் உயிர்களைக் காவுகொண்டு அவர்களின் குருதியைக் குடித்து ஏப்பமிடுவதைப் பக்கம் பக்கமாக வாசிக்க முடிகிறது. அரச இயந்திரமும் சரி, விடுதலைப் போராட்டக் குழுக்களும் சரி ஆயுதமேந்திய எதிரிகளைவிடவும், விமர்சிக்கும் தன்மை கொண்ட அரசியல் எழுத்துக்காரரையே மிகப் பெரிய எதிரியாகக் கண்டு, அச்சம் கொண்டு, அவர்களை அச்சுறுத்தியோ, துப்பாக்கி ரவைக்குப் பணியவைத்தோ, ஆட்கடத்தல் செய்து சித்திரவதை செய்தோ அவர்களது குரல்களையும் பேனாக்களையும் மௌனிக்கச் செய்யும் நாசகாரக் குணத்தைக் கொண்டிருந்தன. பத்திரிகையாளர்கள், புத்திஜீவிகள் மட்டுமல்ல அரசியல் எழுத்துக்கள் சுமந்த பத்திரிகைகளை விற்றுத் திரிந்த வீதியோரப் பத்திரிகை வியாபாரிகளும் ‘இனந்தெரியாத நபரால்’ சுட்டுக்கொல்லப்பட்டு வீதியில் வீசப்பட்டிருந்தனர்.
எழுத்து, பேச்சு ஆகியவற்றை உரிமை என்று பேசிய விடுதலைப் போராளிகளும் அரசும் ‘கருத்துக்களை ஒடுக்கும் இயந்திரம்’ என்ற நிலையில் செயற்பட்ட வேளையில் அலைகடலுக்கப்பால், தமிழ்ச் தேசியத்தை விமர்சனத்துடன் ஏற்றுக்கொண்டு எழுதிய ரவிக்குமாரின் எழுத்துக்கள் வரலாற்று முக்கியத்துவமுடையவை. ஈழத்தில் அரசியல் விமர்சனம் செய்வதற்கான சூழல் துளியளவும் இல்லாத நிலையில், ஈழத்துத் தமிழ்ச் சூழலில் அரசியல் எழுத்துக்களை எழுதியவர்கள் காவுகொள்ளப்பட்ட வேளையில், ஈழத் தமிழ்ச் சூழலைப் புரிந்துகொண்டு, கொள்கை விளக்கம் செய்யும் வகையிலும் கருத்துநிலைத் தெளிவுபெறும் வகையிலும் ரவிக்குமாரது எழுத்துக்கள் வெளிவந்தன. அந்த வகையில் ரவிக்குமார் ஈழத்தமிழரின் எண்ணமாகவும் குரலாகவும் எழுத்துக்களாகவும் இருந்துள்ளார் என்பது ஈழத்து அரசியலில் அவருக்கான வகிபங்கைக் காலந்தோறும் உறுதியாக உணர்த்தி நிற்கும்.
ஈழத்து அரசியல் குறித்த ரவிக்குமாரின் எழுத்துக்களில் ஈழத்துத் தமிழ் அரசியல் தொடர்பான கருத்துநிலைத் தெளிவுடைய எழுத்துகள், தமிழகத்தில் உள்ள ஈழத்து அகதிகளின் உரிமைகள் தொடர்பான எழுத்துகள் ஆகிய இரண்டும் அதிக முக்கியத்துவம் உடையவை என்று புது டில்கி ஜவஹர்லால் நேருப் பல்கலைக்கழகத்தில் நான் ஆற்றிய ஆய்வுரை ஒன்றில் விரிவாகக் குறிப்பிட்டிருந்தேன். வணங்கா மண் என்ற இந்த நூலிலும் அக்கருத்து மீளவும் உறுதிப்படுகிறது.
ஈழத்துத் தமிழ் அரசியல் தொடர்பான கருத்துநிலைத் தெளிவுடைய அவரது எழுத்துக்களை இந்த நூலிலும் அவதானிக்க முடிகிறது. ஈழத் தமிழினத்தின்மீது அதிகாரக் குவிப்பும் அடக்குமுறையும் மேலோங்கியபோது, தனிமனிதன், குழு, சமூகம், அரச நிறுவனம், போராளிகள் அமைப்பு ஆகியவற்றின் கருத்தியலை விமர்சித்து அவர் எழுதிய உண்மையை விளக்கம் செய்யும் எழுத்துகளை இந்த நூலில் வாசிக்க முடிகிறது. இலங்கையின் இனப்பிரச்சினையை இலங்கைக்குரியதாக மட்டும் அவர் பார்க்கவில்லை. அண்டை நாடு என்ற வகையில் அதனைத் தனது உள்நாட்டுப் பிரச்சினையாகவும் அவர் காண்கிறார். ‘இலங்கையில் போர் மூண்டால் தமிழகத்துக்கு வந்து சேர்வது செய்திகள் மட்டுமல்ல. அகதிகளும்தான். இலங்கைப் பிரச்சினை என்பது நமக்கு அண்டை நாட்டுப் பிரச்சினை மட்டுமல்ல. உள்நாட்டுப் பிரச்சினையும்கூட. இந்தியாவில் தங்கியிருக்கும் அகதிகளில் மூவரில் ஒருவர் ஈழத்தமிழர். ஓவ்வொரு நாளும் நமது கரைகளில் அவர்கள் உயிருள்ள சடலங்களாக ஒதுங்கிக்கொண்டிருக்கிறார்கள்.’ இன்னோரிடத்தில், ‘தமிழ் இனத்துக்கு ஏற்பட்டுள்ள இந்த மாபெரும் துயரம் தமிழ்நாட்டில் உள் அறிவுஜீவிகளைப் பாதித்ததாகவே தெரியவில்லை. அதற்கு அவர்கள் மட்டுமே காரணமல்ல. இங்கு ஈழப் பிரச்சினையைப் பேசியவர்கள் அதை ஓர் அரசியல் பிரச்சினையாக மட்டுமே குறுக்கிவிட்டனர். அதன் பண்பாட்டுப் பரிமாணத்தைக் கவனிக்கத் தவறிவிட்டனர். அந்தத் தவறு களையப்பட வேண்டும்.’ என்கிறார். பிறிதோரிடத்தில், ‘முள்ளிவாய்க்கால் பேரவலத்தைப் பேசும்போது அதை நமது அரசியல் சுயலாபத்துக்காகப் பயன்படுத்தாமல் இருக்க வேண்டியது மிகமிக அவசியம்’ என்கிறார். இலங்கைப் பிரச்சினையை அயலில் உள்ள சிறு தீவொன்றின் பிரச்சினையாக எண்ணிய அரசியல்வாதிகள் சிலர் இருந்த காலத்தில், ‘அவர்களுடைய பிரச்சினை’ என்பதிலிருந்து ‘எங்களுடைய பிரச்சினை’ என அவர் அதனைப் புரிந்துகொண்டது, பிராந்திய அரசியல் வலைப்பின்னலின் இயங்கியலையும் அதன் எதிர்கால நிலையையும் நன்குணர்ந்ததைப் புலப்படுத்துகிறது. இலங்கைத் தமிழர் பிரச்சினை தொடர்பான அவரது அனைத்து எழுத்துக்களிலும், அவர் ஈழத்தமிழரை மூன்றாவது மனிதராகக் காணவில்லை. ‘தமர்’ என்ற நிலைநீங்கி, ‘நமர்’ என விரிந்த தளத்தில், தன்மைப் பன்மையைக் கையாள்பவராகவே அவர் விளங்குகிறார்.
இலங்கையின் உள்ளக அரசியல் முரண்பாடுகள், பொருளாதாரத் தடை, இனச் சுத்திகரிப்பு, போரவலம், இடப்பெயர்வு, முகாம் வதைகள், விடுதலை அமைப்புகளின் முன்னெடுப்புகள் மற்றும் அவற்றின் அரசியல் நகர்வுப் போதாமைகள், இலங்கையில் இந்தியப் படைகளின் நிலவரம், இலங்கைப் பிரச்சினை குறித்த இந்திய அரசின் நிலைப்பாடுகள், முள்ளிவாய்க்காலுக்குப் பிறகான ஈழத் தமிழர் நிலை போன்ற பலவும் இந்நூலில் விரவிவருகின்றன. இலங்கையின் அரசியல், சட்டம் முதலாக விடுதலை அமைப்பின் நிலைப்பாடுகள் வரையும், இலங்கையின் இன வரலாறு முதலாகப் பண்பாடு வரையும், இந்தியாவின் உணவு, மருத்துவம் போன்ற உதவிகள் முதலாக அரசியல் ரீதியான குடியுரிமை வழங்கல் வரையும், இனநல்லிணக்கம் மற்றும் சமாதான முயற்சிகள் முதலாகச் சமாதான முறிவு மற்றும் போரின் முகங்கள் வரையும், இலங்கைப் பிரச்சினை முதலாகச் சர்வதேச அரங்கில் அரங்கில் அதன் நிலவரம் வரையும் அவரது எழுத்துகள் பயணம் செய்கின்றன.
‘முள்ளிவாய்க்கால் நமக்கு உணர்த்தும் பாடம் என்ன?’ என்ற அவரது கட்டுரை, போர் அரசியலின் முடிவுக்குப் பின்னரான காலத்தில், முடிந்துபோனவற்றைக் கவனமாக மதிப்பிடுகிறது. இனி ஆற்றவேண்டிய பணிகளையும்; ஆற்றுப்படுத்த வேண்டிய நெறிமுறைகளையும், மேடைப்பேச்சு அரசியல்வாதிகள் போல ‘மீண்டும் தொடங்கும் போரின் மிடுக்கு’ எனக் கூச்சலிடாது, மிகக் கவனமாகப் பேசுகிறது. இன்னமும், போரின் தோல்வியைச் சர்வதேசச் சமூகத்தின் முதுகிலும் அண்டை நாடுகளின் தலையிலும் ஏற்றி, மிக எளிமையான காரணங்களை இப்போதும் அரசியல் வெளியில் வீசுவோருக்கு மாறாக, அவர் கூறும் கருத்துகள், விடுதலை அமைப்பை விமர்சனம் இல்லாமல் ஏற்றுக்கொள்வோருக்குக் கசப்பாக இருக்கலாம். ஆனால், அவர் கூறுவதுதான் யதார்த்தமானது. ‘அரசியல் முழுமையடையாத ஆயுதப் போராட்டம் வெற்றியடையாது என்ற சாதாரண உண்மையை, ஈழம் நமக்கு மீண்டும் உணர்த்துகிறது. விடுதலைப் புலிகள் ஆயுத வளங்களைச் சேர்ப்பதற்குக் காட்டிய அக்கறையை, அறிவாளிகளைச் சேர்ப்பதில் காட்டவில்லை. அது மட்டுமன்றி, அவர்கள் உருவாக்கிய போர்ச் சூழல் எல்லோரையும் சந்தேகிக்கின்ற நிலைக்குக் கொண்டுபோனது. சிந்திப்பது என்பதே அங்கே துரோகத்தின் ஒரு வடிவமாகக் கருதப்பட்டது. சிந்தனையாளர்கள் கொல்லப்பட்டனர் அல்லது மௌனமாக்கப்பட்டனர்’ என்று அவர் கூறுவதில் ஒரு அரசியல் அறம் இருக்கிறது. அவர் கூறும் புலிகளின் இத்தகைய நிலைப்பாடு தமிழ்த் தேசியவாதத்தை மிகவும் பலவீனமானதாகவும் முரண் நிறைந்ததாகவும் ஆக்கியது. சிங்களத் தேசியவாதத்தை எதிர்த்த, வலிமை மிக்க தமிழ்த் தேசியப் போராட்டமானது, சிங்களத் தேசியவாதத்தைத் தனக்கு நிகராக வளர்த்துச் சென்று, தான் தோற்றுப் போனபோது, சிங்களத் தேசியவாதத்தை, மீபலமுடைய ஏக தேசியவாதமாக்கி இலங்கைத் தீவில் நிறுவியது. இந்த உண்மையைச் சமகாலம் காட்டிநிற்கிறது.
மனித உரிமைகளுக்கான பல்கலைக்கழக ஆசிரியர்கள் என்ற அமைப்பு 2008ஆம் ஆண்டின் பிற்பகுதியிலிருந்து யுத்தம் முடிந்துவிட்டதாக அறிவிக்கப்பட்ட மே18ஆம் திகதிவரை நிகழ்ந்த கொடூரங்களை, நபர்களின் நேரடியான வாக்கு மூலங்களைக் கொண்டு வெளியிட்டதை அலசுவனவாக ஈழப் படுகொலை - புதிய சாட்சியம், இனப்படுகொலைச் சாட்சியின் நேரடி வாக்கு மூலம் ஆகிய கட்டுரைகள் அமைகின்றன. அந்த ஆவணத்தின் பல நீண்ட பகுதிகளை அவர் தமிழுக்குக் கொண்டுவந்திருக்கிறார். இறுதிப் போரில் நிகழ்ந்த கொடூரங்களை விரிவான முறையில் ஆவணப்படுத்தும் முதலாவது ஆவணம் என்றும் அந்த அறிக்கையை அடையாளம் காட்டுகிறார். போரின் பின்னர் தமிழர் நிலத்தில் நிகழ்ந்த பண்பாட்டு அழிவை, யாழ்ப்பாணம் அல்ல யாப்பா பட்டுவ என்ற கட்டுரை பேசுகிறது. கறுப்பு ஜூலை - அக்கினி தோய்த்து எழுதிய சொற்கள் என்ற கட்டுரை வரலாற்றில் நிகழ்ந்த கொடுமைகள் வரலாற்று நினைவடுக்குகளில் மீண்டும் மீண்டும் உறுதியாக வேர் கொள்ள, தவறாது நினைவு கூரப்பட வேண்டும் என்று வலியுறுத்துகிறது. குண்டு வெடிப்பு நாள் என்ற கட்டுரை, ஈஸ்டர் பண்டிகை அன்று தேவாலயங்களில் நிகழ்ந்த குண்டு வெடிப்புகள் பற்றியும் அவற்றின் விளைவுகள் பற்றியும் பேசுவதோடு, இதை வைத்து முஸ்லிம்களை அடக்கும் சனாதன மத அரசியல் குறித்து அச்சமும் கொள்கிறது. ஈழத்தில் சிவசேனா என்ற கட்டுரை, ஈழத்தில் தமிழர்கள் புதிதாக எதிர்கொள்ளும் மதவாத ஆபத்துப் பற்றிப் பேசுகிறது. உண்மையில் சிவசேனாவின் ஆதிக்கம் ஈழத்தில் ஊன்றி நிலைபெற்றால், தமிழர் மத ரீதியாகப் பிரிவினைக்கு உள்ளாகி, பலமிழந்தவர்களாகி, பௌத்த தேசிய வாதம் போல, சைவத் தேசிய வாதம் என்ற படுகுழிப் பாதையில் பயணிக்கலாம் என்பது புலப்பட அச்சிறு கட்டுரை பேசுகிறது.
இந்த நூலில் உள்ள, தமிழகத்தில் தஞ்சமடைந்த ஈழத்து அகதிகளின் உரிமைகள் தொடர்பான ரவிக்குமாரின் எழுத்துகள் மிகுந்த முக்கியத்துவமுடையவை. தமிழகத்தில் வாய்ச் சொல் வீர அரசியல்வாதிகள் சிலர், மேடைகளில் ஈழத் தமிழர்களைத் தொப்புள் கொடி உறவென இடிமுழக்கமிடுவது உண்டு. ஆனால், தங்களது நாட்டின் கடலோரக் கரை வாசல்களில் ஈழத் தமிழர்கள் ‘உயிருள்ள பிணங்களாக’ ஒதுங்கும்போதோ, முகாம்களில் அடிப்படை வசதிகளற்றுத் துன்புறும்போதோ அவர்கள் திரும்பிக்கூடப் பார்ப்பதில்லை. அந்த உறவை வசதியாக மறந்துவிடுகிறார்கள். தொப்புள்கொடி உறவைப் பேச்சுக்காக ஈழத் தமிழர்களை நோக்கி அவர்கள் கூறினாலும், புலம்பெயர் தமிழர் வாசல்களில்தான் அவர்கள் யாசிக்கிறார்கள். தமது வாசலில் ஈழ அகதிகள் இருக்க, கண்டம் விட்டுக் கண்டம் தாண்டித் தொப்புள் கொடி உறவைத் தமது லாபத்துக்காகப் பயன்படுத்துவோர் மத்தியில் ரவிக்குமார் வேறானவர். அவரது எழுத்துகள், செயற்பாடுகள் பெரும்பாலும் ஈழ அகதிகளின்பால் பரிவைக் காட்டுபவை.
கலைஞர் முதல்வராக இருந்தபோது, 2006இல், ரவிக்குமார் தயாரித்துக் கையளித்த ‘தமிழ்நாட்டில் உள்ள ஈழத்தமிழ் அகதி முகாம்களின் நிலை குறித்த அறிக்கை’ வரலாற்றுச் சிறப்புடையது. 1995இல் உலகத் தமிழ் மாநாடு நடத்தப்பட்டபோது, ஈழத் தமிழ் அகதிகள் நலன் குறித்த கவனத்தை ஈர்க்க, நிறப்பிரிகை சார்பில் புலம்பெயர் தமிழர் நல மாநாட்டை ரவிக்குமார் ஒருங்கிணைத்தார். அதன் தொடர்ச்சியாகவே, 2006இல் அவர் சட்டமன்ற உறுப்பினராகியதும், ஈழத்து அகதிகள் பிரச்சினை தொடர்பான அவரின் பணி முன்னெடுப்பைப் பார்க்கவேண்டும். ரவிக்குமார் தயாரித்த அந்த அறிக்கைதான் தமிழ்நாட்டில் முகாம்களில் உள்ள ஈழ மக்களுக்கு நிரந்தர வீடுகள் கிடைக்கவும், பிள்ளைகள் உயர் கல்வி பெறவும், அவர்களது பணக்கொடை உயர்த்தப்படவும் காரணமாக அமைந்தது. ரவிக்குமாரின் அறிக்கையை அங்கீகரித்த கலைஞர், அகதிகள் நலனுக்காக நூறு கோடி ரூபாயை ஒதுக்கியமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.
இன்றும் சரியான புள்ளிவிபரங்கள் இல்லாமல் இருக்கும் ஈழத்து அரசியல்வாதிகளிலிருந்து வேறுபட்டு, மிகத் துல்லியமான புள்ளிவிபரங்களோடும் முகாம்களில் கள ஆய்வில் பெறப்பட்ட தகவல்களோடும் இதனைத் தயாரித்திருக்கிறார், ரவிக்குமார். இந்தியாவில் அகதிகள், தமிழ் நாட்டில் ஈழத்தமிழ் அகதிகள் ஆகியவற்றை வரலாற்று ரீதியாக எடுத்துரைத்து, தமிழ் நாட்டில் அகதிகளின் நிலையைக் கூறி, அகதி முகாம்களின் அவல நிலையை விரிவாக விளக்கிச் செல்கிறார். குடியிருப்புக்கள், கழிப்பிடங்கள், குடிநீர், மருத்துவம், மின்சாரம், கல்வி, வேலைவாய்ப்பு, அனாதரவான முதியோர், உடல் ஊனமுற்றோர், பணக்கொடை, ரேஷன் பொருட்கள், மகளிர் சுய உதவிக் குழுக்கள், பிறப்பு இறப்பு மற்றும் திருமணப் பதிவுகள், குடியுரிமை முதலாய பல தேவைகளையும் நிறைவேற்ற வேண்டும் எனக் கடப்பாட்டு உணர்வோடு அவர் அறிக்கையிடுகிறார். அத்துடன் 33 பரிந்துரைகளையும் அந்த அறிக்கையில் தருகிறார். அதில் 32ஆவது பரிந்துரையில் ‘இந்தியாவில் பிறந்த அகதிக் குழந்தைகள், இந்தியர்களைத் திருமணம் புரிந்துகொண்ட அகதிகள், இந்தியாவில் தொடர்ந்தும் 10 ஆண்டுகளுக்கு மேல் வசிக்கும் அகதிகள் ஆகியோரிடம், அவர்களது குடியுரிமை தொடர்பாக விருப்பத் தேர்வினைக் கேட்கும் விதமாக, இந்தியக் குடியுரிமைச் சட்டத்தில் திருத்தம் கொண்டுவர வேண்டும்’ எனக் கேட்பது அவரது அரசியல் அறநெறியைக் காட்டிநிற்கிறது. இந்த அறிக்கையில் கலப்பு மணம் பற்றி ரவிக்குமார் கூறுகையில், ‘வௌ;வேறு சாதிகளைச் சேர்ந்தவர்கள் திருமணம் செய்து கொள்வதைத்தான் நாம் கலப்பு மணம் என்று கூறுவோம். ஒரு அகதியும் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒருவரும் திருமணம் செய்து கொள்வதையும் நாம் கலப்பு மணம் என்றே குறிப்பிடலாம்’ எனக் கூறுவது இருநிலச் சமூக இணக்கப்பாட்டை அவர் வெளிப்படுத்துவதற்குத் தக்க உதாரணம் எனலாம்.
‘இலங்கைத் தமிழ் மீனவர்களால் சிறைப்பிடிக்கப்பட்டிருக்கும் தமிழக மீனவர்கள் - சிந்திக்க வேண்டிய சில வினாக்கள்’ என்ற கட்டுரை, ஆதரவுக் குரல் எழுப்பாத, ஈழத்துத் தமிழ் அரசியல் தரப்புகளின் கூட்டுப் பொறுப்பின்மையைச் சாடுவதாகவும் அமைகிறது. ‘தமிழக மீனவர்கள் இலங்கைப் படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டபோதெல்லாம் ஈழத்து இயக்கங்கள் குரல் எழுப்பவில்லை’ என்ற இந்தக் குற்றச்சாட்டு ஏற்றுக்கொள்ளப்பட வேண்டிய ஒன்றுதான். தமிழகத்தைத் தமக்கான பலமானதொரு ஆதரவுக் களமாகக் கருதிய புலிகள் இயக்கம்கூட அந்தத் தவறை விட்டிருக்கிறார்கள் என்ற கசப்பான உண்மையை ஏற்கும் மனப்பக்குவம் வரவேண்டும். ‘ஈழத்தில் போராளிக் குழுக்களை இந்திய அரசு உருவாக்கியபோது, அவர்களுக்குப் பயிற்சியளிப்பது, தளபாடங்களை அனுப்புவது ஆகியவற்றுக்கான பின் தளமாக தமிழ்நாடு பயன்படுத்தப்பட்டது. அந்தப் பின்தளம் என்ற மனோபாவத்திலிருந்து இன்னும் ஈழத்தமிழர்கள் விடுபட்டது போலத் தெரியவில்லை. தமிழ்நாடு என்பது தமக்கான ஆதரவைப் பெறுவதற்கான நிலப்பகுதி என்று மட்டுமே கருதும் இந்த மனோபாவம் சரியானதுதானா? தமிழ்நாட்டுத் தமிழர்கள் இலங்கை அரசால் பாதிப்புக்கு ஆளாகும்போது மௌனம் காப்பது சரிதானா?’ என்று ரவிக்குமார் கேள்வி எழுப்புவது நியாயமானது.
ஈழத் தமிழ் மீனவர்களுக்கும் தமிழக மீனவர்களுக்கும் இடையே முரண்பாடுகளைத் தீவிரப்படுத்தி அதை ஈழ – தமிழகத் தமிழர்களின் பிரிவினைக்கான மோதலாக உருவாக்கும் அரூப அரசியலின் உள்நோக்கத்தையாவது ஈழத்து இயக்கங்கள் புரிந்திருக்கவில்லை என்பது உண்மைதான். ஆனால், தமிழகமெங்கும் ஜல்லிக் கட்டுப் போராட்டம் பேரலையாக எழுந்து, அது மெரீனாவில் வரலாறு காணாத பெரும் மாணவர் புரட்சியாக மையம்கொண்டபோது, அதற்கு ஆதரவாக, யாழ்ப்பாணத்து நல்லூர்க் கந்தசுவாமி ஆலய முன்றலில் கலை இலக்கியச் செயற்பாட்டு இளைஞர், யுவதிகள் திரண்டு குரல் கொடுத்தனர். முள்ளிவாய்க்காலுக்குப் பின்னர், தமிழகத்தின் மீதான இத்தகைய சகோதரத்துவக் குரல் எழுகிறது எனில், அது எமக்கு எதனை உணர்த்துகிறது?
ரவிக்குமாரின் இந்த நூலில் உள்ள அரசியல் எழுத்துகளின் இன்னொரு சிறப்பம்சம், அவை கராரான அரசியல் எழுத்தாக அமையாமல், கவித்துவமாக அமைவதே. அதனால், இயல்பான ஒரு வாசிப்புக் கவர்ச்சியையும் வாசக மனதைச் சலிக்கச் செய்யாப் பண்பையும் அவை பெற்றுள்ளன. ‘தீயின் நாக்குகள் மேலேறிக் காற்றை நசுக்குகின்றன. கரும் புகை சூழ்கிறது. அந்தக் காட்சி, அந்தச் சாம்;பலோடு பறந்து செல்லும் ஆயிரம் ஆயிரம் உயிர்களின் அவல ஓலத்தை நமக்குச் சொல்வதாக இருந்தது. எல்லாம் முடிந்துவிட்டது’ போன்ற கவித்துவக் கோடுகள் பெற்ற அரசியல் எழுத்துக்களாக அமைவது, அவரது எழுத்துக்களுக்கு, இலக்கிய அந்தஸ்தை வழங்கிவிடுகிறது.
இந்த நூல், முள்ளிவாய்க்காலுக்குப் பின்னரான ஈழத் தமிழரின் கலாசார நிறுவனங்களின் ஒரு பகுதியாகவும், போராட்ட மேடையின் பதிவாகவும் அமைகிறது. உடலை வருத்திப் பணிய வைக்கும் துப்பாக்கி ரவைக்கு மாறாக, மனப் பரப்பில், ஆன்மீகத் தளத்தில் அசைக்க முடியாத - ஆதிக்கசக்தி வெல்ல முடியாத நிலையை உருவாக்குகிறது. மாபெரும் நியாய அரசியலைச் சார்ந்திருக்கிறது. முள்ளிவாய்க்காலுக்குப் பின்னரான பெரும்படியான கருத்தியற் சமரின் பகுதியாக அமைந்திருக்கிறது. நம் சகபயணியின் தார்மீகக் குரலாய் ஒலிக்கிறது. இன்னும், அழிப்பு நிலையிலிருந்து கட்டுமான நிலைக்கு வழிவகுக்கிறது. ‘ஈழப்போராட்டத்தை, அதன் சாதக பாதகங்களை, வெற்றிப் பயணம் தோல்வியில் முடிந்ததை - ஈழப் போராட்டத்தை முறையாக ஆராயக்கூடியவர்கள் நம்மத்தியில்’ இல்லை என்று தமிழ்ச் சூழலின் புலமை வறுமை பற்றிக் கவலைப்படும் அவரே அந்த வறுமையை நீக்கி வருகிறார்.
ரவிக்குமார் அவர்கள் எழுதிவெளியிட்ட முதல் அரசியல் சிறுநூலே, ஈழம் குறித்ததுதான். ‘இலங்கையில் ஒரு தேசிய இனம்’ என்ற அந்த நூல் 1985இல் வெளியானது. அதன் பின்னர் ஈழப் பிரச்சினையில் இந்தியாவின் பங்கு குறித்து அ.மார்க்ஸ் அவர்கள் எழுதி, ரவிக்குமார் புரட்சிப் பண்பாட்டு இயக்கத்தின் சார்பில் வெளியிட்ட, ‘ தென்னாசியாவில் இந்தியா’ என்ற சிறுநூலை, அவர்கள் செயற்பட்டுவந்த மார்க்சிய லெனினியக் கட்சி தடைசெய்தது. அதனால் அவர்கள் அந்த இயக்கத்திலிருந்து வெளியேறினார்கள். அத்துடன் அந்த இயக்கமும் பலவீனப்பட்டு, இன்று இல்லாமலே போனது வேறுகதை. ரவிக்குமார் அவ்வாறு வெளியேறாது போயிருந்தால் ஈழத்து அரசியல் எழுத்துக்கள் இழக்கப்பெற்றிருக்கும். அவரது வெளியேற்றம் ஈழத்து அரசியல் வயலில் பெருவிளைச்சலாக அமைந்திருக்கிறது. அதற்கு இந்த நூலும் ஒரு சாட்சி.
ரவிக்குமார் அவர்கள், யாழ் நூலக எரிப்புக் குறித்துத் தனது நூலொன்றில், ‘நூல்களை எரிக்கும் நாட்டில், எப்போதும் இரவுதான். நிலவுகூட இல்லாத இரவு’ என்று தார்மீகக் கோபத்தோடும் கனத்த துக்கத்தோடும் எழுதுகிறார். அவரது கூற்றில் எனக்கும் உறுதியான நம்பிக்கை உண்டு. மழையில் தீப்பெட்டி நனைந்திருந்தாலும் இருக்கட்டும் என்று இருளில் மூழ்க இயலுமா? இறுதிக் குச்சி இருக்கும் வரையிலும் சுடரேற்றத்தானே வேண்டும். அதை அவர் தொடர்ச்சியாக ஏற்றிக்கொண்டிருப்பார். மூத்த சகோதரருக்கு எனது வாழ்த்தும் நன்றியும்.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.