எமது இலங்கைத் தமிழ் சமூகத்தில் எழுத்தாளர்களாக நன்கு அறியப்பட்டவர்களின் பிள்ளைகள் அனைவருமே எழுத்தாளர்களாகிவிடுவதில்லை. எழுத்தாளரின் பிள்ளை எழுத்தாளராகத்தான் இருக்கவேண்டும் என்ற விதியும் இல்லை ! எழுத்தாளர்களாக வாழ்ந்தவர்களின் சந்ததிகளில் எழுத்தாளர்களாக வளர்ந்த சிலரை விரல்விட்டு எண்ணிவிடலாம். நானறிந்த மட்டில், மஹாகவி உருத்திரமூர்த்தியின் மகன் சேரன், மகள் ஓளவை , நீலாவணனின் மகன் எழில்வேந்தன், இலங்கையர்கோனின் மகள் சந்திரலேகா, காரை சுந்தரம்பிள்ளையின் மகள் மாதவி சிவலீலா, கோகிலா மகேந்திரனின் மகன் பிரவீணன், மருதூர்க்கொத்தனின் மகன் ஆரீஃப், எஸ். எம். கார்மேகத்தின் மகள் கனகா, தி. ஞானசேகரனின் மகன் பாலச்சந்திரன், த. கலாமணியின் மகன் பரணீதரன், தகவம் இராசையா மாஸ்டரின் மகள் வசந்தி தயாபரன் ஆகியோர் எனது நினைவுக்கு வருகிறார்கள். இவர்களின் வரிசையில் மற்றும் ஒருவராக நவஜோதி ஜேகரட்னம் அவர்களின் வாழ்வும் பணிகளும் பற்றி இங்கே சொல்ல வருகின்றேன். ஈழத்து முற்போக்கு இலக்கிய முகாமில் குறிப்பிடத்தகுந்த ஒருவரான ( அமரர் ) எஸ். அகஸ்தியரின் மகள்தான் நவஜோதி.
நான் இலங்கையிலிருந்த காலப்பகுதியில் அகஸ்தியரை நன்கு அறிவேன். இறுதியாக அவரை 1983 ஆம் ஆண்டில்தான் சந்தித்தேன். அதன்பிறகு, அவர் பிரான்ஸுக்கும் நான் அவுஸ்திரேலியாவுக்கும் புலம்பெயர்ந்து வந்துவிட்டோம். என்னுடன் தொடர்ச்சியாக கடிதத் தொடர்பிலிருந்த அகஸ்தியர் பற்றி நான் பல பதிவுகளும் எழுதியிருக்கின்றேன். அவருடனான எனது நேர்காணல் பதிவும் எனது சந்திப்பு நூலில் இடம்பெற்றுள்ளது. இந்த நூல் வெளியானபோது அகஸ்தியர் இல்லை. அவரை நினைவுகூர்ந்து குறிப்பிட்ட நூலை மெல்பனில் வெளியிட்டேன்.
1990 களில் அகஸ்தியரும் அவருடைய புதல்விகள் நவஜோதி, நவஜெகனி ஆகியோரும் என்னுடன் கடிதத் தொடர்பிலிருந்தனர். எனினும், நவஜோதியை 2008 ஆம் ஆண்டுதான் லண்டனில் முதல் முதலில் சந்தித்தேன். நூலகர் நடராஜா செல்வராசா ஒழுங்கு செய்திருந்த இலக்கிய நிகழ்வில்தான் அந்தச் சந்திப்பு நிகழ்ந்தது. அதன்பிறகு லண்டனுக்குச் செல்லும் சந்தர்ப்பங்களிலெல்லாம் நவஜோதியை சந்திக்கவும் நான் தவறுவதில்லை. இறுதியாக கடந்த 2023 ஆம் ஆண்டு நடுப்பகுதியில் நான் லண்டனில் இருந்தபோது, அங்கு நடந்த விம்பம் அமைப்பின் நிகழ்ச்சிக்கு என்னை அவரே அழைத்துச்சென்றார்.
ஈழத்தின் பிரபல முற்போக்கு எழுத்தாளர் எஸ். அகஸ்தியரின் மூத்த மகளான நவஜோதி , யாழ்ப்பாணம் இளவாலை மகளிர் கல்லூரியில் தனது கல்வியை மேற்கொண்டவர். ஆனைக்கோட்டையைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர், 1980 களின் முற்பகுதியில் பிரான்ஸுக்குப் புலம்பெயர்ந்தார். அங்கு பிரெஞ்சு மொழியை கற்றுத் தேறினார். பிரான்ஸில் முக்கிய கல்வி நிலையமாக கருதப்படும் அலியன்ஸ் பிரான்சேஸ் ( Allience Francaise ) கல்விநிலையத்திலும் பிரெஞ்சு மொழியைக் கற்றார். பிரான்ஸ் நாட்டில் வெவ்வேறு தொழில்களைப் பயிற்சிபெற்றுச் செய்திருந்தாலும், பின்னர் COGEDEP என்ற International Music Company இல் முழுநேரமாகப் பணிபுரியும் வாய்ப்பும் இவருக்கு கிட்டியிருக்கிறது. அங்கு விருப்போடு பணியாற்றி தன்னை வளர்த்துக்கொண்டவர். முற்றிலும் வித்தியாசமான வாழ்விடத்தில் அம்மக்களின் கலை, கலாசாரத்தை தெரிந்துகொண்டு, அம்மக்களுடன் நெருக்கமான உறவையும் பேணி வளர்த்துக்கொண்டவர்.
நவஜோதி பணியாற்றிய குறிப்பிட்ட நிறுவனத்தில் பிரெஞ்சு மக்கள் மாத்திரமின்றி பலநாடுகளைச்சேர்ந்தவர்களும் பணியாற்றியமையால், அங்கு நவஜோதி கற்றதும் பெற்றதும் அநேகம். உலக இசை குறித்து பல விடயங்களை இவரால் அறிந்து கொள்ள முடிந்திருக்கிறது. அன்புத் தந்தை அகஸ்தியரின் மறைவின் பின்னர் லண்டனில் இவரது வாழ்க்கை தொடர்கிறது. பாரிசில் தான் வாழ்ந்த காலம் பொற்காலம் என்கின்றார். எனினும் தற்போது வாழும் லண்டன் வாழ்க்கையையும் பொற்காலமாக்குவதற்காக அயராமல், கலை, இலக்கிய ஊடகப்பணிகளையும் தொடருகின்றார். ஜோகினி, மாஜிதா ஆகிய புனைபெயர்களிலும் எழுதியிருப்பவர். அந்தவகையில் அயர்ச்சியற்ற ஆளுமையாகத் திகழுகின்றார்.
கவிஞரும், சிறுகதை எழுத்தாளரும், கட்டுரையாளருமான நவஜோதி ஜோகரட்னத்தின் எனக்கு மட்டும் உதிக்கும் சூரியன் என்ற கவிதைத் தொகுப்பு 2005 ஆம் ஆண்டில் வரவாகி, லண்டனில் வெளியான முதல் தமிழ்ப் பெண் கவிஞையின் தொகுப்பாகப் பாராட்டுப் பெற்றது. அதன்பின்னர் வெளிவந்த இவரது மகரந்தச் சிதறல் லண்டன்வாழ் தமிழ் பெண்களின் நேர்காணல் தொகுப்பு, இரா.உதயணன் இலக்கிய விருதினைப் பெற்றது.
இவரது ஊடகத்துறை ஈடுபாட்டை கௌரவித்து ஹரோ கவுன்சிலினால் Harrow’s Heroes – Inspiring Volunteer award இவருக்கு வழங்கப்பட்டது. சில சிறுகதைப்போட்டிகளிலும் பரிசுகள் பெற்றிருக்கும் நவஜோதியின் நேர்காணல் தொகுப்பான மகரந்தச்சிதறல் பற்றிய எனது வாசிப்பு அனுபவத்தையும் இங்கே பதிவுசெய்கின்றேன்.
நேர்காணல் என்பதும் ஒரு தேர்ந்த கலை. அதிலும் நாம் பயிற்சிபெறவேண்டியவர்களாகவே இருக்கின்றோம். நேர்காணல்களில் ஈடுபடுபவர்களுக்கு தேடலும், வாசிப்பு அனுபவமும் முக்கியமானது. தம்முடன் உரையாடவிருப்பவர் குறித்து எதுவும் தெரியாமல் முழுமையான நேர்காணலை தயாரித்துவிட முடியாது. நவஜோதி ஜோகரட்னம் வெளியிட்டுள்ள நேர்காணல் தொகுப்பு மகரந்தச்சிதறல், வானொலி – தொலைக்காட்சி ஊடகவியலாளர்களுக்கு பாட நூலாகவும் திகழும். நிதானம், தனிப்பட்ட விருப்பு வெறுப்பற்ற பண்புகள், கூர்மையான செவிப்புலன், கிரகிக்கும் ஆற்றல் என்பன சிறந்த நேர்காணலை ஒலி - ஒளிபரப்புவதற்கு பெரும் துணைபுரியும்.
நவஜோதி, லண்டனில் நடா. மோகன் நடத்தும் சண்ரைஸ் வானொலிக்காக தான் சந்தித்த பெண்கள், தத்தமது கருத்துக்களை சுதந்திரமாக எந்தத்தடையுமின்றி தெரிவித்திருப்பதாக நூலின் முன்னுரையில் பதிவுசெய்துள்ளார். கேள்விகளை தொடுத்திருக்கும் பாங்கில் மற்றவர்களின் கருத்துச்சுதந்திரத்திற்கு இவர் தந்துள்ள மரியாதை முன்னுதாரணமானது என்பதை இந்நூலுக்குள் பிரவேசிக்கும்பொழுது தெரிந்துகொள்கின்றோம்.
மகரந்தச்சிதறல் நூலை, தமது அருமைத்தாயார் திருமதி நவமணி அகஸ்தியருக்கு நவஜோதி சமர்ப்பணம் செய்துள்ளார். தமது எழுத்துக்களை இன்றும் தேடித்தேடி பத்திரப்படுத்திவைத்திருக்கும் அக்கறையுள்ள தாயாரையும் தொடர்ச்சியாக இலக்கியத்துறையில் ஊக்கமளித்து வந்திருக்கும் தந்தையையும் பெற்ற பாக்கியசாலிதான் நவஜோதி. இந்த நூலின் முகப்பினை வடிவமைத்திருப்பவர் நவஜோதியின் புதல்வன் செல்வன் அகஸ்ரி ஜோகரட்னம் (செல்லப்பெயர் - சிம்பா) இங்கிலாந்தில் வோறிக் பல்கலைக்கழகத்தில் ஆங்கில இலக்கியம் பயின்றவர்.
இசை, நாட்டியம், நாடகம், ஓவியம், இலக்கியம், அரசியல், மருத்துவம், தொழில் முயற்சி முதலான அங்கங்களில் 33 பேருடன் தாம் நடத்திய நேர்காணல்களின் தொகுப்பினை நவஜோதி ஜோகரட்னம் நேர்த்தியாக வரவாக்கியிருக்கிறார். தமிழ்நாடு கருப்பு பிரதிகள் அச்சிட்டிருக்கும் இந்நூலில் இடம்பெற்றிருக்கும் மங்கையற்கரசி அமிர்தலிங்கம், தையல் சுந்தரம் பரந்தாமன் ஆகியோர் இதனைப்பார்க்காமலேயே விடைபெற்றுவிட்டனர். அத்துடன் இந்த அரியமுயற்சியை பார்க்கும் சந்தர்ப்பம் நவஜோதியின் தந்தையார் அகஸ்தியருக்கும் கிட்டாமல் போய்விட்டது.
" நேர்காணல் என்பது எனக்கும் பேட்டி தருபவருக்கும் இடையில் நடைபெறும் ஒற்றைவழிப்பயணமல்ல. பல்லாயிரக்கணக்கான நேயர்கள் வானொலி அலைவரிசைகளில் எங்களின் உரையாடல்களைப் பார்த்தும் கேட்டுக்கொண்டும் இருக்கிறார்கள் என்ற ஒருவித மன உணர்வு எப்போதும் என் நெஞ்சில் ஊர்ந்து கொண்டேயிருந்திருக்கின்றது." என்று தமது முன்னுரையில் நவஜோதி குறிப்பிட்டிருக்கும் வரிகள் , தேடல் மனப்பான்மையற்ற வானொலி, தொலைக்காட்சி ஊடகவியலாளர்களுக்கும் சிறந்த ஆலோசனையாகும்.
இசை என்ற அங்கத்தில், தையல்சுந்தரம் பரந்தாமன், சரஸ்வதி பாக்கியராஜா, அம்பிகா தாமேதரம், மாதினி சிறீக்கந்தராசா, சிவசக்தி சிவநேசன், பொன்னையா ஜெயஅழகி, துஷி - தனு சகோதரிகள் ஆகியோரும், நாட்டியம் என்ற அங்கத்தில் நளாயினி ராஜதுரை, விஜயாம்பிகை இந்திரகுமார், ராகினி ராஜகோபால், ஜெயந்தி யோகராஜா, பிறேமளா ரவீந்திரன் ஆகியோரும், நாடகம் என்ற அங்கத்தில், ஆனந்தராணி பாலேந்திரா, ரோகினி சிவபாலன், ஆகியோரும், ஓவியம் என்ற அங்கத்தில் அருந்ததி இரட்ணராஜ், மைதிலி தெய்வேந்திரம் பிள்ளை, ஆகியோரும், இலக்கியம் என்ற அங்கத்தில் ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம், புனிதா பேரின்பராஜா, தமிழரசி சிவபாதசுந்தரம், யமுனா தர்மேந்திரன், றீற்றா பற்றிமாகரன், மாதவி சிவசீலன், உதயகுமாரி பரமலிங்கம் ( நிலா ), ஆகியோரும்,
அரசியல் என்ற அங்கத்தில், மங்கையற்கரசி அமிர்தலிங்கம், நிர்மலா ராஜசிங்கம், ரதி அழகரட்னம், சசிகலா சுரேஷ்குமார் ஆகியோரும், மருத்துவம் என்ற அங்கத்தில் டாக்டர் மாலா ராதாகிருஷ்ணன், மீனாள் நித்தியானந்தன், ஜெயானி நிர்மலன், வசந்தி கோபிநாதன் ஆகியோரும், தொழில் முயற்சி என்ற அங்கத்தில் சுவர்ணா நவரட்னம், ரஜேஸ்வரி சிவம் ஆகியோரும் தமது குடும்ப - சமூகப் பின்னணி, வாழ்வியல் அனுபவங்கள், தாங்கள் சார்ந்திருந்த துறைகளில் எதிர்நோக்கிய சுவாரஸ்யங்கள், சவால்கள், இடர்பாடுகள் மற்றும் சாதித்தவற்றையும் நேயர்களுக்கும் வாசகர்களுக்கும் சொல்லும்போது, தமது கருத்தியலையும் ஆக்கபூர்வமான ஆலோசனைகள் முதலான இன்னபிற விடயங்களையும் பதிவுசெய்கிறார்கள்.
நவஜோதியும் நிதானமாக, யார் யாரிடம் எத்தகைய கேள்விகளை கேட்கவேண்டும் என்ற முன்தீர்மானத்துடன், இவர்களை நேயர்களுடன் இணைத்திருக்கிறார். பின்னர், நூல்வடிவில் வாசகர்களுடன் அவர்களை இணைத்திருக்கிறார். அந்தவகையில் இந்த முயற்சி வெற்றியாகவே அமைந்திருக்கிறது. பத்திரிகை, வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றுபவர்களுக்கு இந்த நூல் பயனுள்ளதாகும். ஆனால், எத்தனைபேர் படிப்பார்கள் என்பது எமக்குத்தெரியாது.
இத்தகைய நூல்களை மாநகர நூலகங்களிலும் - பாடசாலை, கல்லூரிகள், பல்கலைக்கழக நூலகங்களில் மாத்திரமல்லாது, தமிழ்ப்பத்திரிகை - வானொலி - தொலைக்காட்சி அலுவலக நூலகங்களிலும் இடம்பெறவைத்து வாசிக்கச்செய்யவேண்டும். (இத்தகைய வேண்டுகோள்களும் எமது அபிலாஷைகள்தான்).
"பண்ணிசையில் நாட்டியத்தை கொண்டுவரவேண்டும் என்ற தனது நெடுநாள் ஆசை லண்டனில்தான் நிறைவேறியது" எனச்சொல்கிறார் தையல் சுந்தரம் பரந்தாமன். " குனித்த புருவமும் கொவ்வைச்செவ்வாயில் குமிழ் சிரிப்பும் பனித்த சடையும் பவளம் போல் மேனியில் பால் வெண்ணீறும்" தளபதி படத்தில் ஏ.ஆர். ரஹ்மான் கொண்டுவந்துவிட்டார். ஆனால், அது ஒரு குத்துப்பாடலுக்குள் செருகப்பட்டதுதான் கொடுமை.
1966 காலப்பகுதியில் யாழ்ப்பாணம் இராமநாதன் அக்கடமியில் இசை விரிவுரையாளராக இருந்திருக்கும் தையல் சுந்தரம் அவர்கள், லண்டனில் வதியும் அதன் பழைய மாணவிகளைக்கொண்டே நாட்டியத்தில் பண்ணிசையை புகுத்தி கலை நிகழ்ச்சி நடத்தி நிதிசேகரித்து இராமநாதன் அக்கடமிக்கு அனுப்பியிருக்கிறார்.
இலங்கை வானொலி, இசைக்கு வழங்கிய முக்கியத்துவம் பற்றியும் அங்கிருந்த இசைக்கலைஞர்களின் உழைப்பையும் நினைவுபடுத்துகிறார் சரஸ்வதி பாக்கியராஜா. உலகில் பல நாடுகளில் இசைநிகழ்ச்சி நடத்தியிருக்கும் அம்பிகா தாமோதரம், நேபாளம் சென்ற சமயம் அவர்களின் மொழியில் பயிற்சி பெற்று, அந்தமொழியிலேயே பாடியிருக்கிறார். அத்துடன், லண்டனில் குஜராத்தி மாணவர்களின் நடன அரங்கேற்றத்தில் குஜராத்தி மொழியில் பாடி ஆசத்தியிருப்பவர். இலங்கையில் சிங்கள மாணவர்களுக்காகவும் அரங்கேற்றங்களில் பாடியிருக்கிறார்.
Melodic System பின்பற்றி வரும் நாம், மேற்கத்தைய இசை மரபையும் (Harmonic System) வைத்து சுருதி சுத்தத்துடன் கர்நாடக இசையை முன்னெடுத்துச்செல்லவேண்டும் என்கிறார் மாதினி சிறீக்கந்தராசா.
கந்தளாயில் ஒரு காலத்தில் தமிழ் மீனவர்கள் பாடிய நாட்டுப்பாடலை தமிழ்நாட்டில் வாழ்ந்த திகோணமலைக்கவிராயர் தருமு சிவராம் எவ்வாறு கவிதையாக மாற்றியிருக்கிறார் என்ற செய்தியை சுவாரஸ்யமாகச்சொல்கிறார் தமிழரசி சிவபாதசுந்தரம். வலையில் சிக்கிய ஆமைக்கும் மீனுக்கும் நண்டுக்கும் தவளைக்கும் மத்தியில் யார் அதிலிருந்து தப்பிக்கத்தெரிந்த அதிபுத்திசாலி என்ற வாதம்தான் அந்த நாட்டுப்பாடலின் ஆழம்பொதிந்த கருத்து. முன்னர் இலங்கையில் பல்கலைவேந்தன் சில்லையூர் செல்வராசன் சில கவியரங்கு மேடைகளில் இதனைப்பாடக் கேட்டிருக்கின்றோம். மகரந்தச்சிதறல் நூலிலிருந்துதான் அதன் ரிஷிமூலத்தை நாம் தற்போது அறிகின்றோம்.
மறைமலை அடிகளைப் பெற்ற தாயார் சின்னம்மை புங்குடுதீவில் வல்லன் என்ற இடத்தைச்சேர்ந்தவர் என்றும் 1920 களில் இறுதிக்காலத்தில் இங்குதான் வாழ்ந்திருக்கிறார் என்ற செய்தியையும் இந்த நேர்காணலில் அறிகின்றோம்.
புலம்பெயர்ந்த நாடுகளில் தமிழ்ச்சிறார்கள் தமிழ் அரிச்சுவடியில் உள்ள எழுத்துக்கள் தொடர்பாக எழுப்பும் கேள்விகளை ஆராய்கிறார் றீற்றா பற்றிமாகரன். ஆங்கில இலக்கியம், மேற்கத்தைய நாடகம் மற்றும் இசையில் ஞானம் மிக்கவரும் நாடக எழுத்தாளரும் ( ஒரு பாலைவீடு, கண்ணாடி வார்ப்புகள் முதலான நாடகங்கள்) மனித உரிமைப்போராளியுமான நிர்மலா ராஜசிங்கம், இலங்கையில் கொல்லப்பட்ட ரஜனி திராணகமவின் சகோதரி. இலங்கையிலும் லண்டனிலும் கலந்துகொண்ட போராட்டங்கள் குறித்து விரிவாகப்பேசியிருக்கிறார்.
போரில் பெண்கள் மீதான பாலியல் வன்முறையைப்பற்றிய (சுமதி சிவமோகன் எழுதியது) In the shadow of the gun என்ற பரிசுபெற்ற நாடகத்தையும் தமிழில் மொழிபெயர்த்து லண்டனிலும் கனடாவிலும் மேடையேற்றிய நிர்மலாவுடனான நேர்காணல் இத்தொகுப்பில் மிக முக்கியமானது. நாம் அறியாத பல செய்திகளை உள்ளடக்கியது.
" பெண்களுக்கு ஒரு சரித்திரம் இருக்கிறது. அதை ஆண்கள் நிழலாக்கலாம். ஆனால், அதனை நிஜமாக்க வேண்டும் என்ற உறுதியுடன் பெண் எழுத்துக்களை எழுதியாகவேண்டும்" என்று வலியுறுத்துகிறார் ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்.
ஈழத்து தமிழ் இலக்கிய முன்னோடி எழுத்தாளர் சி. வைத்திலிங்கத்தின் புதல்வி யமுனா தர்மேந்திரன், லண்டனில் ஹரோ பிரதேசத்தில் நூலகராக பணியாற்றுபவர். வாசகர் வட்டத்தினை அமைத்து இயக்குவிப்பவர். வாசிப்பிலிருக்கும் தேக்கம் களைவதற்கு நல்ல ஆலோசனைகளைத்தருகிறார். சில்லிருக்கையின் துணையுடன் வாழும் உதயகுமாரி பரமலிங்கம் என்ற படைப்பாளினியின் தன்னம்பிக்கை செயற்பாடுகள் சிலிர்ப்பைத் தருகின்றது. அவரது வாழ்வே போராட்டம்தான். ஆனால், தன்பலம் தான் அறிந்து இயங்கும் அவருடைய இயல்பை அர்த்தமாகவும் அழகாகவும் நவஜோதி வெளிக்கொண்டுவந்திருக்கிறார். தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்ள ஆசைப்படுபவர்கள் இந்த நேர்காணலை அவசியம் படிக்கவேண்டும்.
மேடை நாடகம் - வானொலி நாடகம், சினிமா முதலானவற்றுடன் தொலைக்காட்சி, வானொலி, மேடை நிகழ்ச்சிகளின் அறிவிப்பாளராகவும் இயங்கியிருக்கும் ஆனந்தராணி பாலேந்திராவின் அனுபவங்கள், சமகாலத்தில் எம்மவர்களின் பிள்ளைகளுக்குத் தேவையான சிறுவர் நாடகத்துறைக்கு மெருகூட்டும் ஆலோசனைகளையும் தருகிறது. இந்த நூலின் இறுதிப்பகுதியில் இடம்பெறும் மருத்துவம் என்ற அங்கத்தில் நான்கு பெண்கள் முன்வைக்கும் கருத்துக்களும் ஆலோசனைகளும் புகலிடத்தமிழர்களை நோக்கியே நகருகின்றன.
குறிப்பிட்ட நேர்காணல்கள், எம்மவர்களின் புகலிட வாழ்வுக்கோலங்களை சித்திரிக்கின்றன. அத்துடன் தேவைப்படும் மருத்துவ ஆலோசனைகளையும் தருகின்றன. வீட்டில் செய்யவேண்டிய பயிற்சிகள் பற்றிய பாடங்களாகவும் அந்த நேர்காணல்கள் அமைந்துள்ளன. குறிப்பாக டாக்டர் மாலா ராதாக்கிருஷ்ணன் சிறந்த உளவளத்துறை ஆலோசகராகவே நாம் அறிந்துகொள்ள வேண்டிய சமூக - குடும்பச்சிக்கல்களையும் சொல்லித் தீர்வுகளும் தருகின்றார். இவருடைய சகோதரர்தான் ஒரு காலத்தில் யாழ்ப்பாணம் பரியோவான் கல்லூரியின் கிரிக்கட் துடுப்பாட்ட வீரர் தெய்வேந்திரா.
இவர் ஐம்பதுகளில் யாழ்ப்பாணத்தில் கிரிக்கட் நாயகனாகத்திகழ்ந்தார் (பக்கம் 241) என்பது எனது நினைப்பின் பிரகாரம் தவறு. அவர் அறுபதிற்குப்பின்னர்தான் அங்கு பிரபலமானார். 1968 இல் யாழ். பரமேஸ்வராக்கல்லூரி பல்கலைக்கழகமாக மாறியது ( பக்கம் 17 ) என்ற தகவலும் தவறுதான். இவை - நேர்காணல் தொகுப்புகளில் நேர்ந்துவிடக்கூடிய சிறிய தவறுகள்தான். எனினும் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.
நவஜோதி ஜோகரட்னம் எமது தமிழ் மக்களுக்கு குறிப்பாக புலம்பெயர்ந்து வாழும் எம்மவருக்குப் பயனுள்ள நேர்காணல்களை லண்டன் சண்றைஸ் வானொலியூடாக ஒலிபரப்பியிருக்கிறார். இத்கைய நேர்காணல் தொகுப்பு முறைமையை ஏனைய நாடுகளில் வானொலிகள் நடத்தும் ஊடகவியலாளர்களும் தொடரவேண்டும் என்று சொல்லத்தக்கதாக இந்த நூல் அமைந்துள்ளது.
தமிழில் வானொலி நேர்காணல் துறையில் பயிற்சி பெறுவதற்கு விரும்பும் புதிய தலைமுறையினருக்கும் இந்த நூல் பாடநூலாக விளங்கும். கல்வி, மருத்துவம், இசை, ஓவியம், நடனம், விளையாட்டு என்பன அஞ்சல் ஓட்டப்பாணியில் தலைமுறை தலைமுறையாக வளர்வதுபோன்று வானொலி - தொலைக்காட்சி ஊடகத்துறையும் வாழையடி வாழையாக வளரவேண்டும். அவ்வாறு வளர்வதற்கு நவஜோதி பாதை செப்பனிட்டுக்கொடுத்துள்ளார். இந்த நேர்காணல் தொகுப்பில் இடம்பெறும் 33 பெண்களும் இங்கிலாந்திலிருந்துகொண்டு செய்த சேவைகள் காலத்தையும் கடந்து பேசப்படும்.
நவஜோதி, அந்தனி ஜீவாவின் கொழுந்து இதழ் நடத்திய புதுமைப்பித்தன் ஞாபகார்த்த சிறுகதைப் போட்டி, லண்டன் பூபாளராகங்கள், தி. ஞானசேகரனின் ஞானம் இதழ் , தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றமும் சரசு- ராமசாமி அறக்கட்டளையும் இணைந்து நடத்திய போட்டி, லண்டன் புதினம் பத்திரிகை நடத்திய போட்டி உட்பட எட்டு சிறுகதை போட்டிகளில் பரிசுகளைப் பெற்றவர்.
CeeI TV ‘தரிசனம்’ GTV போன்ற லண்டன் தமிழ் தொலைக்காட்சிகளிலும், ETBC, Sunrise, Kismath, London Tamil radio போன்றவற்றில் அறிவிப்பாளராகவும், நிகழ்சித் தயாரிப்பாளராகவும் பணிபுரிந்த அனுபவம் கொண்ட நவஜோதி ஜோகரட்னம், பாமுகம் FA TV இல் ‘மகரந்தச் சிதறல்’ என்ற நிகழ்ச்சியில் 600 இற்கும் அதிகமான இலக்கிய, அரசியல், சமூக பிரமுகர்களை பேட்டி கண்டு நேர்காணல் ஒலிபரப்பில் சாதனை படைத்திருக்கிறார்.
இலங்கையில் முன்னர் பண்டாரவளை மற்றும் கோப்பாய் ஆசிரியப் பயிற்சிக் கலாசாலைகளில் ஆசிரியப் பயிற்சி பெற்று, தலவாக்கலை சென். பற்றிக்ஸ் கல்லூரியில் ஆசிரியையாகப் பணியாற்றியவர். வேல். ஆனந்தன், வீரமணி ஐயர், பத்மினி போன்றவர்களின் நடனச் சூழலுக்கும் பரிச்சயமான நவஜோதி, நடனத்துறையிலும் தனது ஆளுமையை வெளிப்படுத்தியுள்ளார். இவ்விதம் கலையார்வம் கொண்ட நவஜோதி லண்டனில் இசை, நடன நிகழ்வுகளில் மேடைத் தொகுப்பாளராகவும் நன்கு அறியப்பட்டவராவார். லண்டனில் ‘தமிழ் பெண் எழுத்தாளர்கள்’ என்ற தலைப்பில் இவர் எழுதிய கள ஆய்வுக் கட்டுரை பெரும் பாராட்டைப் பெற்றுள்ளது. அவ்வப்போது தான் படித்த நூல்கள் பற்றியும் விமர்சனங்களை எழுதிவருகிறார்.
எமது இலக்கிய குடும்பத்தின் மூத்த எழுத்தாளர் ( அமரர் ) அகஸ்தியரின் வழித்தோன்றலான நவஜோதி ஜோகரட்னம், மேலும் பல சாதனைகளை புரிவார் என்ற நம்பிக்கை, அவரது வாழ்விலிருந்தும் பணிகளிலிருந்தும் எமக்குத் தெரகிறது.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.