பயணத்தொடர்: வட இந்தியப் பயணம் (3) - நடேசன் -
தர்மசாலாவிலிருந்து எங்களது பயணம் அமிர்தசரஸ் நோக்கி திரும்பியது. பொற்கோவில் எனக்கு மிகவும் விரும்பி பார்க்க வேண்டிய பிரதேசமாக இருந்தது. மாலையில் பொற்கோவிலை அடைந்தபோது, மிகவும் பிரகாசமான ஒளி வெள்ளத்தில் தங்க கோபுரம் தகதகவென மின்னியதுடன் சுற்றியிருந்த வாவியில் அந்தக்காட்சி பிரதிபலித்து கண்களைக் கவர்ந்து செல்லும் காட்சியாய் எம் முன்னே விரிந்தது. அங்கு மக்களுக்கும் கடவுளுக்கும் இடையே பூசாரி, முல்லா அல்லது பாதிரி எனத் தரகர்கள் எவருமில்லை என்பது முக்கிய விடயமாகும்.அத்துடன் அங்குள்ளவர்கள் எல்லோரும் வேதனமற்று வேலை செய்தார்கள். என்னோடு வந்த சுவிஸ் மற்றும் ஆங்கிலய பெண்கள் இருவரும் இரு மணி நேரமாகச் சப்பாத்தி செய்ய உதவினார்கள். அதன்பின் அங்குள்ள உணவையே நாம் உண்டோம். சப்பாத்தி, பருப்பு, மற்றும் சர்க்கரை சோறு என மிகவும் எளிமையான உணவுதான். ஆனால் பல்லாயிரக்கணக்கானவர்களுக்கு தொடர்ந்து உணவூட்டிக்கொண்டே இருந்தார்கள்.
நடந்து செல்லும்போது, எனக்கு முன்பு தரையில் ஒரு இலை வந்து விழுந்தது. உடனே ஒரு சீக்கியப் பெண் அதை குனிந்து எடுத்தார். அப்படி ஒரு சுத்தம்! இந்தியாவில் சுத்தத்தை ஆராதிப்பவர்களாகச் சீக்கியர்கள் எனக்கு தோன்றினார்கள்.