- வாலி : கம்போடியச் சிற்பம். -
முன்னுரை
கிட்கிந்தையின் மன்னன் வாலி. வானரக் குலத் தலைவன். சூரிய பகவானின் புத்திரன். சிறந்த சிவபக்தன். பாற்கடலைத் தனியாகக் கடையும் வல்லமை உடையவன். போரில் தனது எதிரில் நிற்பவர்களின் வீரத்தில் பாதியைத் தனக்கு வர, வரம் பெற்றவன். இலங்கை வேந்தன் இராவணனையே, தன் வாலில் கட்டித் தூக்கிய வலிமை பொருந்தியவன். நூல் பல கற்ற சிறப்புடையவன். சிறப்புகள் பல பெற்றவனானாலும் தன் வீரத்தில் தற்பெருமைக் கொண்டவன். மனைவியின் மேல் பேரன்பு கொண்டவன். வரம் பல பெற்றாலும் மதங்க முனிவரிடம் சாபமும் பெற்றவன். கோபம், நம்பிக்கையின்மை, தம்பி மனைவியைக் கைப்பற்றுதல், பிடிவாதம், பிறரை மதிக்காதத் தன்மை, தன் வீரத்தின் மீது கொண்ட கர்வம், வரபலத்தால் தன்னை யாராலும் வெல்லவே முடியாது என்ற இறுமாப்பு, யார் பேச்சையும் கேட்காதத் தன்மை போன்ற சில தீய குணங்களால் வீழ்ச்சியைக் கண்டவன் வாலி. இராமபிரானின் அம்பு பட்டதால், செய்த பாவத்தினின்று விடுபட்டு அமரரானான். இராமனின் அம்பு பட்டதால் மனமாற்றம் ஏற்பட்டு, இறக்கும் நிலையில் தம்பி சுக்ரீவனையும், மகன் அங்கதனையும் இராமனிடம் அடைக்கலப் படுத்தி விட்ட பின்பே, உயிர்த் துறந்தான். தம்பி சிலநேரம் மது அருந்திவிட்டு தீமை செய்தாலும் அவன் மேல் அம்பினை எய்து விடாதே என்றும், இராமபிரானிடம் கேட்டுக்கொள்கிறான்.அத்தகைய வாலியின் மாட்சியையும், வீழ்ச்சியையும் கம்பராமாயணத்தின் வழி ஆராய்வோம்
வாலியின் சிறப்பு
தேவர்களுடன் சேர்ந்து, அசுரர்களின் எதிரில் நின்று மத்தாய் இருந்து சுழல்கின்ற மந்திர மலையின் வடிவம் தேயவும், சீறும் தன்மை கொண்ட வாசுகி எனும் பாம்பின் நடுவுடலானது தேய்ந்து போகவும், திருப்பாற்கடலை முற்காலத்தில் தான் ஒருவனாய் நின்று கடைந்த தோள் வலிமை உடையவன். (நட்புக் கோட்படலம் 115) பூமியும், நீரும், தீயும் காற்றும் ஆகிய அழிவற்ற பூதங்கள் நான்கும் ஒன்று கூடியது போன்ற வலிமையுடையவன். அலைகளையுடைய எல்லைப்புறக் கடல்கள் சூழ்ந்துள்ள சக்கரவாளகிரி என்னும் மலையிலிருந்தும் இங்கு இருக்கும் மலையில் தாண்டும் வன்மையுடையவன். (நட்புக் கோட் படலம் 116) அவன் போரில், தன்னை எதிர்ப்பவர் வந்தால் அவர்களிடம் உள்ள வலிமையில் பாதி அளவைத் தான் அடையும்படியான வரத்தைப் பெற்றவன். எட்டுத்திக்குகளின் எல்லை வரையும், நாள்தோறும் சென்று அங்குள்ள ’அட்ட மூர்த்தி’ எனப்படும் சிவபெருமானின் திருவடிகளை வணங்கும் அன்பை உடையவன்.