இலங்கை மாணவர் கல்வி நிதியம் – அவுஸ்திரேலியா ( 1988 – 2021 )! மலையகத்தில் கொவிட் நெருக்கடி காலத்தில் இலங்கை மாணவர் கல்வி நிதியத்தின் பணிகள்! - முருகபூபதி -
அவுஸ்திரேலியாவிலிருந்து கடந்த 33 வருடகாலமாக இயங்கிவரும் தன்னார்வத் தொண்டு நிறுவனமான இலங்கை மாணவர் கல்வி நிதியத்தின் ( 1988 – 2021 ) ஏற்பாட்டில் கடந்த 2019 ஆம் ஆண்டு இலங்கை மலையகத்தில் நுவரேலியா மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட வறுமைக்கோட்டில் வாழும் ஏழைத்தமிழ் மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு உதவும் நிதிக்கொடுப்பனவு இவ்வாண்டும் அண்மையில் வழங்கப்பட்டது.
கடந்த காலங்களில் இலங்கையில் வடக்கு – கிழக்கில் நீடித்த போர் அநர்த்தங்களினால் பெற்றோரை, குடும்பத்தின் மூல உழைப்பாளிகளை இழந்த ஏழைத்தமிழ் மாணவர்களுக்கு உதவிய இலங்கை மாணவர் கல்வி நிதியம், மலையகத்தில் முன்னைய மண்சரிவு முதலான அநர்த்தங்களினாலும் தந்தையை இழந்தும் பாதிக்கப்பட்ட வறுமைக்கோட்டில் வாழும் மாணவர்களுக்கும் தற்போது உதவி வருகிறது. நுவரேலியா மாவட்டத்தில் நானுஓயா நாவலர் கல்லூரி, டெஸ்ஃபோர்ட் தமிழ் மகா வித்தியாலயம், கந்தப்பளை மெதடிஸ்ட் கல்லூரி மற்றும் மகளிர் பாடசாலை (Our Lady’ School ) , ஆரம்ப பாடசாலை முதலானவற்றைச் சேர்ந்த மாணவர்கள் இத்திட்டத்தில் உள்ளடக்கப்பட்டிருக்கின்றனர்.