சிறுகதை; பிரியாவும் ஜேம்சும் - தேவகி கருணாகரன், சிட்னி, அவுஸ்திரேலியா -
- தேவகி கருணாகரனின் 'பிரியாவும் ஜேம்சும்' என்னும் இச்சிறுகதை மாறிவரும் உலகின் மாற்றத்தின் விளைவொன்றைப்பற்றிப் பேசுகிறது. அம்மாற்றம் என்ன என்பது பற்றி அறிய இச்சிறுகதையை முழுமையாக வாசியுங்கள். இக்கதையின் கூறு பொருளும், எழுத்து நடையும், பாத்திரப்படைப்பும் இதனை நல்லதொரு முக்கியமான சிறுகதையாக இதனை மாற்றியுள்ளன. இச்சிறுகதையில் வரும் குழந்தை கீர்த்தி நெஞ்சைத்தொடுகின்றாள். முடிவில் அவளில் ஏற்படும் மாற்றம் முக்கியமானது. அவ்வகையில் அவளொரு குறியீடு. மாறாத உணர்வுகள், கருதுகோள்களுடன் மாறுவதற்குச் சிரமப்படும் சமுதாயமொன்றைப் பிரதிநிதிப்படுத்தும் குறியீடு அவள். - பதிவுகள்.காம் -
அவுஸ்திரேலியாவின் நியுவ் சவுத் வேல்ஸ் மாநிலத்தின் கிராவின் புறநகரின் ’புனித அந்தோனியார்’ ஆரம்பப்பள்ளிக்குள் நுழைந்த பிரியா, தன் மகள் கீர்த்தியின் முதலாம் வகுப்பை அடைந்ததும், “வாடா குஞ்சு, வீட்டைப் போகலாம்,” எனக் கீர்த்தியை அன்போடு தூக்கிக் கொஞ்சிய பிரியாவை உற்று நோக்கி புதிதாக பார்ப்பது போல் பார்த்தாள் கீர்த்தி. திரும்பி நன்சிக்கு பக்கத்தில் நின்ற அவளது தாயாரையும் பார்த்தாள். ”இன்றைக்கு என்ன செய்தீங்கள்? கைவேலை செய்தீங்களா?” எனக் கேட்டபடி நன்சியைத் தூக்கிக் கொண்டுபோன அவளது தாயையும். பிரியாவையும், மாறி மாறிப் பார்த்தாள். அவளது சின்ன மூளைக்கு எதுவுமே புரியாது குழம்பியது. அந்தச் சின்ன மூளைக்கு எதோ புரிகிற மாதிரி இருந்தது ஆனால் புரியாத மாதிரியும் இருந்தது.
வீட்டுக்கு வந்ததும் குளிக்கும் தொட்டியில் பதமான சூட்டுக்கு வெந்நீரை, நிரப்பி கீர்த்தியைக் குளிப்பாட்டி, அவளுக்குப் பிடித்த `பணானாஸ் இன் பிஜாமாஸ்` பிரிண்ட் போட்ட, பிஜாமாவைப் போட்டு விட்டு, ”எங்கள் கீர்த்தி இளவரசி நல்ல வாசனையாக இருக்கிறாள்,” எனக் கீர்த்தியை முகர்ந்தபடி சொன்ன பிரியாவை., கீர்த்தி கட்டிப் பிடித்து முத்தம் கொடுத்தாள். பிரியா கிச்சனுக்கு போகவும், அறையிலிருந்த விளையாட்டுப் பொருட்களில் கீர்த்தியின் கவனம் லயித்துப் போக, முற்பள்ளியில் அவளது சின்ன மூளையில் எழுந்த சந்தேகம், கேள்வி எல்லாமே மறைந்து போய்விட்டது,
”கீர்த்திக் குட்டி, டினர் ரெடி!” எனப் பிரியா கிச்சனிலிருந்து அழைக்கவும், வாசற் கதவைத் திறந்து கொண்டு அவளது ஜேம்ஸ் டடி வரவும் சரியாகவிருந்தது. அவரைக் கண்டதும் கீர்த்தி ஓடிச்சென்று ஜேம்ஸ் மேல் தாவி அவர் கைகளுக்குள் தஞ்சமானாள். தந்தையைக் கொஞ்சியவளின் முகத்தில் ஒரே சந்தோசம். ஏனோ அவளுக்கு ஜேம்சோடு இருப்பதில் ஒரு தன்னம்பிக்கையும் மகிழ்ச்சியும்.