பயணியின் பார்வையில் (2): உலகத்தில் 'சுத்தமான' தலைவர் அமிர்! ஊடகப் பயணத்தில் நிகழ்ந்த சுவாரசியமான சம்பவம்! - முருகபூபதி -
இலங்கையில் அமிர்தலிங்கம் அவர்கள் எதிர்க்கட்சித்தலைவராக இருந்த காலப்பகுதியில், அவரது உரைகளுக்கு ஊடகங்கள் முக்கியத்துவம் வழங்கின. இலங்கை வரலாற்றில் முதல் தடவையாக அப்போது ஒரு தமிழர் எதிர்க் கட்சித்தலைவராக தெரிவாகியிருந்தார். அவரது நாடாளுமன்ற உரைகளை சபாநாயகர் ஆனந்த திஸ்ஸ டீ அல்விஸின் துணைவியாரும் பார்வையாளர் கலரியில் அமர்ந்திருந்து செவிமடுத்து , அமிர் அவர்களுக்கு பாராட்டு கடிதங்களும் எழுதியிருக்கிறார்.
ஒரு தடவை வெளிவிவகார அமைச்சர் ஏ. ஸி. எஸ். ஹமீது தொடர்பாக ஏரிக்கரை இல்லம் ( Lake House ) வெளியிட்ட ஒரு செய்தி பாரதூரமான சர்ச்சைகளை உருவாக்கிவிட்டது. நாடாளுமன்றிலும் விவாதிக்கப்பட்டது. குறிப்பிட்ட பத்திரிகையின் ஆசிரியர் சிங்கள இனத்தைச் சேர்ந்தவர். அவரை நாடாளுமன்றம் அழைத்து பகிரங்கமாக மன்னிப்பு கோர வைத்தது. அதனைக் கண்டித்து, அந்தச் சிங்கள சிரேஷ்ட ஊடகவியலாளருக்காக குரல் கொடுத்தவர் அமிர்தலிங்கம். அவர் மூவினத்தையும் சேர்ந்த ஊடகவியலாளர்களிடம் நன்மதிப்பினைப் பெற்றிருந்தவர்.