உள்ளார்ந்த கலை , இலக்கிய ஆற்றல்களை கொண்டிருப்பவர்கள், தமது தாயகம் விட்டு, வேறு எந்தத் தேசங்களுக்கு புலம்பெயர்ந்து செல்ல நேரிட்டாலும், தமது ஆற்றல்களை வெளிப்படுத்தியே வருவார்கள். அதற்கு எமது புகலிட தமிழ் கலை, இலக்கிய உலகில் சிறந்த உதாரணமாகத் திகழ்பவர்களில் குறிப்பிடத்தகுந்த ஒருவர் எழுத்தாளரும் நாடகக் கலைஞருமான யாழ். பாஸ்கர். இவர் இந்தத் துறைகளில் தடம் பதித்து, வளர்ந்து ஆஸ்திரேலியா நாட்டில் இதழ் ஆசிரியராகவும் மலர்ந்தவர். யாழ்ப்பாணம் கொட்டடியைச்சேர்ந்த இவர், தனது ஆரம்பக்கல்வியை கொட்டடி நமசிவாயா பாடசாலையிலும், நவாந்துறை றோமன் கத்தோலிக்க தமிழ்ப்பாடசாலையிலும் பயின்று, பின்னர் யாழ். பரமேஸ்வராக் கல்லூரியில் இணைந்தார்.
கல்வியை நிறைவுசெய்துகொண்டு, 1984 ஆம் ஆண்டிலேயே கடலைக் கடக்கத் தொடங்கியவர். இவர் ஒரு கிரேக்க கப்பலில் வேலைக்குச்சேர்ந்து சமுத்திரங்கள் பலவற்றை கடந்து பயணித்திருப்பவர். இவர் சென்று திரும்பிய தேசங்களின் பெயர்களே சற்று நீளமானது. கடலோடியாக அமெரிக்கா, மெக்சிக்கோ, ஆர்ஜன்டைனா, நைஜீரியா, போலாந்து, ஜெர்மனி, பிரான்ஸ், இத்தாலி என சுற்றியலைந்துவிட்டு, இறுதியில் 1988 ஆம் ஆண்டளவில் இந்தியாவை வந்தடைந்தவர்.இலங்கையில் போர் மேகங்கள் சூழ்ந்திருந்த அக்காலப்பகுதியில் தாயகம் திரும்பாமல், கடல் வாழ்க்கை இனிப்போதும் எனக்கருதியதனாலோ என்னவோ, ஆஸ்திரேலியாக் கண்டத்திற்கு நிரந்தரமாக வந்து சேர்ந்தார்.
யாழ். பாஸ்கர், ஈழத்தின் மூத்த முற்போக்கு எழுத்தாளர் ம. பாலசிங்கம் அவர்களின் மருமகனும், பிரான்ஸில் வதியும் எழுத்தாளர் கலா. மோகன், டென்மார்க்கில் வதியும் இலக்கியவாதியும் மொழிபெயர்ப்பாளரும் அரசியல் பிரமுகருமான டென்மார்க் தருமகுலசிங்கம் ஆகியோரின் நெருங்கிய உறவினருமாவார். 1989 நடுப்பகுதியில் எனது சமாந்தரங்கள் கதைத் தொகுதியின் வெளியீட்டுவிழா மெல்பனில் நடைபெற்ற காலப்பகுதியில், அதில் உரையாற்றுவதற்கு சிட்னியிலிருந்து வருகை தந்த எழுத்தாளர் எஸ். பொ. அவர்களினால், எனக்கு அறிமுகமானவர்தான் யாழ். பாஸ்கர்.