ஆய்வு: கம்பராமாயணத்தில் நலம் விசாரித்தல்! - முனைவர் க.மங்கையர்க்கரசி, உதவிப்பேராசிரியர், அகர்சந்த் மான்மல் ஜெயின் கல்லூரி(சுழல்-II), மீனம்பாக்கம், சென்னை 600061, -
முன்னுரை
உறவினர்களையும், தனக்கு வேண்டப்பட்டவர்களையும் நலம் விசாரிப்பது சிறந்த பண்பாடும், பழக்க வழக்கமாகும். அத்தகைய பண்பாட்டிற்கும், பழக்கவழக்கங்களுக்கும் கொண்ட நலம் விசாரித்தலுக்கு கம்பர் தன் இராமாயணத்தில் முக்கியத்துவம் அளித்துள்ளார் என்பதனைக் கம்பராமாயணத்தின் வழி ஆராய்வோம்.
1.நகர மக்களின் நலனை இராமன் விசாரித்தல்
இராமன் தன் எதிரே வரும் ஊர் மக்களிடம் மிகுந்த கருணையோடு, செந்தாமரை மலர் போன்ற தன் முகம் ஒளி வீச,உமக்கு நான் செய்யத்தக்க செயல் எது? துன்பம் ஏதும் இல்லையல்லவா? உம் மனைவியும், புத்திசாலிகளான புதல்வர்களும் சுகமாகவும், நோயற்று வலிமை பெற் றவராகவும் இருக்கின்றனரா? என்று வினவுவான்.
"எதிர்வரும் அவர்களை எமையுடை இறைவன்
முதிர்தரு கருணையின் முகமலர் ஒளிரா
எது வினை இடர் இலை இனிதும் நும் மனைவியும்
மதி தரும் குமரரும் வலியர்கொல் எனவே"
(திரு அவதாரப்படலம் 312)
2.தசரதன் நலம் விசாரித்தல்
இராமனுக்கும், சீதைக்கும் திருமணம் செய்து வைக்க வேண்டும் என்பதற்காக தசரதன் தன் படைகளுடன் மிதிலை வருகிறான். அவனை எதிரே சென்று ஜனகர் வந்து வரவேற்கின்றார். ஜனகர் தேரை விட்டு இறங்கி வருகிறார். தசரதன் தன் செய்கையினால் ஜனகனை தனது தேருக்கு அழைக்கின்றான். ஜனகன் தேரில் ஏறியவுடன் அவனைத் தசரதன் கட்டித் தழுவுகின்றான். பின்பு ஒவ்வொருவராக தசரதன் நலம் விசாரிக்கின்றான்.