முல்லைமணியின் நினைவும், சிறுகதைகளும்! - நவஜோதி ஜோகரட்னம், லண்டன் -
நான் கல்வி கற்றது இளவாலைக் கொன்வன்ற். ஆசிரியராகப் பணியாற்றியது தலவாக்கெல்ல சென்ற் பற்றிக்ஸ் கல்லூரி. பண்டாரவளை பிந்துனுவௌ ஆசிரிய பயிற்சிக் கலாசாலையில் எனது ஒரு வருட பயிற்சியை முடித்த பின்னர் மிகுதிக் காலப் பயிற்சியை நான் கோப்பாய் ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையில் மேற்கொண்டிருந்தேன். நாட்டு நிலை கொந்தளிப்பான நிலை. 1980களின் முற்பட்ட காலப்பகுதி அது. அவ்வேளை திரு.முல்லைமணி அவர்கள் எனது விரிவுரையாளராக இருந்தார்; என்பது பெருமை தருகின்ற விடயம். அவ்வேளையில் கவிஞர் இ.முருகையன், வேல் ஆனந்தன், வீரமணி ஐயர். புவனேஸ்வரி ராமகிருஷ்ணா, துரைராஜா, அடைக்கலமுத்து, சுவர்ணா நவரட்னம் போன்ற பலர் விரிவுரையாளர்களாகக் கடமையாற்றியவர்கள். அவர்களின் மாணவியாக இருந்தேன் என்பதும் பசுமையான நினைவுகளாகி வருகின்றன. அவ்வேளை திருமதி ஆனந்த குமாரசுவாமி அவர்கள்தான் அதிபராக இருந்தார்.
முல்லை மணி சேரிடம் நான் தமிழ் பயிலும் வாய்ப்பு ஏற்பட்டதை பெருமையாகக் கருதுகின்றேன். அவ்வேளை ரசிகமணி கனக செந்திநாதனின் ‘விதியின் கை’ நாவல் மற்றும், இலங்கையர்கோனின் ‘வெள்ளிப்பாதசரம்’ என்ற சிறுகதைத் தொகுப்பு இரண்டு நூல்களும் (எமது 'சிலபஸ்') ஆய்வுகள் மேற்கொள்ள வேண்டி இருந்தது. நான் எழுதிய ஆய்வுகளைப் பார்த்ததின் பின்னர் கூடுதலாக சம்பாஷனைகளும் ஏற்பட்டன. நான் மேற்கொண்டிருந்த இரு நூல்களின் ஆய்வுகளும் தினகரன் வார இதழ் பத்திகையில் வெளியாகியிருந்தன. அதற்கு ஊக்கமளித்தவர்கள் முல்லை மணி சேர், நிட்சயமாக எனது இனிய தந்தை அகஸ்தியர் என்பதையும் இவ்விடத்தில் நினைவுகொள்ள விரும்புகிறேன்.