வ.ந.கிரிதரனின் கட்டடக் கா(கூ)ட்டு முயல்கள் – ஒரு பாா்வை! - ரஞ்ஜனி சுப்ரமணியம் -
- ஜீவநதி வெளியீடான வ.ந.கிரிதரனின் 'கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்' பற்றி எழுத்தாளர் ரஞ்ஜனி சுப்பிரமணியத்தின் பார்வையிது. - பதிவுகள்.காம்-
அதிர்வுகளையும் திடீர் பாய்ச்சல்களையும் அதிகம் தராத, ஆனால் உணர்வுகளை ஊடுருவும் வார்த்தைகளைக் கொண்டு, புலம் பெயர்ந்த மனிதர்களின் மனப் போராட்டங்களைக் கூறும் செம்மையான படைப்பாக, வ.ந.கிரிதரனின் கட்டடக் கா(கூ)ட்டு முயல்கள் என்னும் சிறுகதைத் தொகுப்பினை இனம் காணலாம்.
புலம் பெயர்ந்த முதலாம் தலைமுறையினரின் உள்ளத்து உணர்வுகள் சிக்கலானவை. புதிய தாயகத்தில் காலூன்றித் தலையெடுக்கவும் கலாசார முரண்பாடுகளை எதிர்கொள்ளவும், மொழிவழக்கினை அறிவதற்கும், தனக்கோர் அடையாளத்தை நிலை நிறுத்துவதற்குமான முயற்சிகள் மிகமிகக் கடினமானவை. புலம்பெயராத வாசகர் ஒருவரால் இவற்றை உள்ளபடி உணர்வது சிரமமானது. எனினும் அந்த இலக்கினைப் படைப்பாளி வெற்றிகரமாக எட்டியுள்ளார் என்றே கூறலாம். புலம் பெயர்வாளனாகவும், அவனை உற்று நோக்கும் வேறொரு மனிதனாகவும் எதிர்நின்று தன் புதிய தாயகத்தின் உள்ளக பரிமாணங்களை, இழந்த தாயகத்துடன் எடைபோடும் அணுகுமுறையில் வாசகருக்குப் புதியதோர் வாசலைத் திறந்து விட்டிருக்கிறார் கதாசிரியர்.
சம்பவக் கோர்வைகளால் கதைகளின் போக்கை நிர்ணயிக்காமல், உணர்வுகளின் மிகச்சிறிய இழைகள் கொண்டு வடிவமைக்கப்பட்ட இருபத்தேழு கதைகளைக் கொண்ட இத்தொகுப்பு, ஜீவநதி பதிப்பகத்தின் 194 ஆவது வெளியீடாகும்.
கனடாவின் டொராண்டோ மாநகரத்தின் பெருவீதிகளில், தனக்குள் தத்துவார்த்த விசாரணைகளையும் விசாரங்களையும் நடாத்திக் கொண்டு, புலம்பெயர்ந்த பல்தேச மனிதர்களைத் தன் பயணப்பாதை எங்கும் காணும், ஈழத்துப் புலம்பெயர்வாளர் ஒருவர் கதைகளின் நாயகனாகப் பாத்திரமேற்க, அவரை அகக்கண்ணால் பின்தொடரும் வாசகர் காணும் காட்சிகள் சிறந்ததோர் தளத்தில் சிந்திக்க வைக்கின்றன. கதைமாந்தர் உதிர்க்கும் தத்துவச் சாரல்களால் மனம் இடையிடையே சிலிர்த்து வியக்கிறது. வந்தேறுதேசத்தின் முதலாம் தலைமுறையினரின், ஆரம்பகால சோகங்களில் இடையிடையே எட்டிப் பார்க்கும் அங்கதம் சிறு புன்னகையுடனான ஆறுதலை தருகிறது.