படைப்புச் சுதந்திரமும் படைப்பாளிகள் நுண்ணுணர்வோடும் பொறுப்புணர்வோடும் இயங்கவேண்டிய அவசியமும். கவிஞர் லீனா மணிமேகலைக்குத் துணைநிற்போம்! - லதா ராமகிருஷ்ணன் -
சக கவிஞர் லீனா மணிமேகலையின் சமீபத்திய ஆவணப்படமான ‘காளி’ சர்ச்சைக்குள்ளாகியிருக்கிறது. குறிப்பாக, அதன் போஸ்டர். காளி புகை பிடிப்பதாகவும், கையில் LGBT (ஓரினப்புணர்ச்சியாளர்கள், திருநங்கைகள் முதலியவர்களின் உரிமைகளுக்காகப் போராடும் அமைப்பு) பதாகையைப் பிடித்திருப்பதாகவும் சித்தரிக்கப்பட்டிருப்பது. இந்து மதக் கடவுள் காளிமாதாவை இந்தச் சித்தரிப்பு அவமதிப்பதாய் ஆவணப்பட இயக்கு னரும், அதில் நடித்திருப்பவருமான கவிஞர் லீனா மணிமேகலை ஆங்கிலத் தொலைக்காட்சி சேனல்களில் பேசுபொருளாகியிருக்கிறார். அவர் மீது வழக்குகள் தொடரப்பட்டிருக் கின்றன. அவரைக் கைது செய்ய வேண்டும் என்று சிலர் குரல் கொடுக்கிறார்கள்.
படைப்புச் சுதந்திரத்திற்கான அச்சுறுத்தல்களுக்கு அடி பணிய மாட்டேன் என்று கவிஞர் லீனா மணிமேகலை கூறியிருக்கிறார். கனடாவில் தன் மீது வந்திறங்கும் காளி பல இடங்களை அங்கு சுற்றிப் பார்த்து, பல மனிதர்களோடு பேசிப் பழகி ‘அன்பு செழிக்கவேண்டும்’ என்ற கருத்தை வலியுறுத்துவதாகவே தன் படம் அமைந்திருப்பதாகத் தெரிவித்திருக்கிறார். ‘என் உயிரே போனாலும் பரவா யில்லை என்ற விதமாக அவர் பேசியிருப்பது - கொலை மிரட்டல் வந்ததுபோல் கருதவைக்கிறது. அப்படி வராத பட்சத்தில் இந்த வரி தேவை யில்லை என்று தோன்றுகிறது.