87, 88இல் இருந்து புகலிடச் சூழலையும், வாழ்வனுபவங்களையும் பாடுகளமாகவும், பாடுபொருளாகவும் வைத்து அன்றைய புகலிடச் சஞ்சிகைகளில் ஏராளமான கதைகள் வெளியாகியிருக்கின்றன. முயன்றால் ஆயிரம் இத்தகைய கதைகளைத் தொகுக்க முடியும். நோர்வேயிலிருந்து வந்த சுவடுகள், சுமைகள், சக்தி, உயிர்மெய் எனப் பார்த்தாலே நூற்றுக்கு மேற்பட்ட கதைகளைச் சொல்ல முடியும். தவிர தாயகம், தூண்டில், ஓசை, மனிதம், தேடல், தேனீ, அக்கினி, எக்ஸில், உயிர்நிழல், சஞ்சீவி, சிந்தனை, அஆஇ, உயிர்ப்பு, ஊதா, இனி, காகம், கண், பள்ளம், மற்றது, நம்மொழி, தேசம், பனிமலர் என இன்னும் பல புலம்பெயர் சஞ்சிகைகள் பத்திரிகைகள் இத்தகைய கதைகளுக்கு பெரும் தளத்தை அமைத்திருந்தன. சிறுகதைகளுக்காகவே பிரான்ஸிலிருந்து "அம்மா" இதழ் வெளியானது. 'ஓசை'யூடாக புலம்பெயர் சிறுகதைத் தொகுப்பும் வெளியாகியிருந்தது. சக்தி பெண்கள் சஞ்சிகையின் வெளியீடாக "புது உலகம் எமை நோக்கி" பெண்கள் சிறுகதைகள் வெளியானது.
அப்படி எதுவும் வந்தாக இல்லை எனப் பதிவு செய்பவர்கள் தேடலற்ற, வாசிப்பனுபவம் அற்றவர்கள் என்றுதான் சொல்ல முடியும். வேறென்னத்தைச் சொல்ல...? அப்படி புலம்பெயர் கடந்தகாலச் சஞ்சிகைகளைத் தட்டிப் பார்க்க ஆர்வமுள்ள புதிய ஆய்வாள ஜெர்னலிஸ்டுக்கள் தொடர்பு கொள்ளுங்கள் என்னிடம் இருக்கும் எல்லாவற்ரையும் தட்டிப் பார்க்கத் தருகிறேன். சொந்தமாக வேண்டுமானாலும் எடுத்துப் போகலாம். பயன்படும்.
புலம்பெயர் பத்திரிகைகள் பற்றிய ஆய்வு இன்று மிக மிக அவசியமான ஒன்று. ஆனால் அது இலகுவான கருமமும் அல்ல. 30இற்கு மேற்பட்ட சஞ்சிகைகள், பத்திரிகைகள் வந்தன. அன்று வெளியான எல்லாப் பிரதிகளுமே குறிப்பிட்ட ஒருசில விடயத்தில் ஒத்த கருத்தில் நகர்ந்தன. "எழுத்துச் சுதந்திரம், பேச்சுச் சுதந்திரம், அனைத்து ஒடுக்குமுறைகளுக்கும் எதிரான போர்க்குரல்" என. ஆனால் இப்போ அந்த சஞ்சிகைகளை நடாத்திய பலர் தமது அரசியல் நிலைப்பாடுகளையும் மாற்றிக் கொண்டு விட்டனர். எமக்கு அது பிரச்சனை இல்லை. ஆனால் அந்தந்தக் காலத்தில் வெளியான இந்த சஞ்சிகைகளின் பணி மிக அளப்பரியது. நிச்சயம் இவை பற்றிய விரிவான பதிவொன்று வந்தேயாக வேண்டும்.