[ஜூலை 2009 இதழ் 115 மார்ச் 2010 இதழ் 123 வரை , பதிவுகள் இணைய இதழில் எழுத்தாளர் ஜெயந்தி சங்கர் சிங்கப்பூர்/மலேசிய எழுத்தாளர்கள் வரிசை' என்னும் தலைப்பில் எட்டு எழுத்தாளர்களைப் பற்றி எழுதியிருந்தார். அத்துடன் அறிமுகம் செய்விக்கப்பட்ட எழுத்தாளர்களினதும் படைப்புகளையும் அவர்களைப் பற்றிய குறிப்புகளில் உள்ளடக்கியிருந்தார். ஒரு பதிவுக்காக, பதிவுகளின் புதிய வடிவமைப்பிக் அவை பதிவுசெய்யப்பட வேண்டிய அவசியம் கருதி, அவை இங்கு, படைப்புகள் தவிர்த்து , மீள்பிரசுரமாகின்றன. - பதிவுகள்-]
1. அறிமுகம்: (சிங்கப்பூர்) எழுத்தாளர் சித்ரா ரமேஷ்
சித்ரா ரமேஷ் இலக்கியத்தைக் குறித்துப் பேசுமிடத்தில், 'இறைவன் இலக்கியம் இரண்டுமே இருக்கும் இடம் தெரியாமல் இருக்கும் பரம்பொருள் தானே!', என்று சொல்லியிருப்பார். சமீபத்தில் நடந்த நூல் வெளியீட்டு விழா ஒன்றில் 'வாழ்க்கையில் இலக்கியம்' என்ற தலைப்பில் விறுவிறுப்பாகவும் சரளமாகவும் உரையாற்றி எல்லோரையும் அசத்தியவர். இவருக்கு எழுத வேண்டும் என்பதில் மிகப் பெரிய குறிக்கோள் இல்லாததால் அதிகமாக எழுதுவதை விட அதிகமாகப் படிக்க விரும்பும் வாசகியாகவே தன்னை அறிமுகப்படுத்திக் கொள்கிறார். படிப்பது என்ற விஷயம் பொழுது போக்கிற்காக சில சமயம் நிகழலாம். ஆனால், எழுதுவது என்பது வெறும் பொழுது போக்கிற்காக மட்டும் செய்யப்படும் விஷயம் இல்லை என்று சொல்வார் சித்ரா, பதின்ம வயதிலேயே இவரது கட்டுரைகள் தமிழாசிரியையை விட இவருடைய தோழிகளுக்கு மிகவும் பிடித்திருக்கும். அந்தக் கட்டுரைகள் எந்த இலக்கண வரையறைக்குள்ளும் வராமல் சித்ராவின் பாணியில் அமைந்தவை. வெகுஜனப் பத்திரிகை ரசனையிலிருந்து விலகிநின்ற மேம்பட்ட எழுத்துக்களை இவரது மூத்த சகோதரர்தான் இவருக்கு அறிமுகம் செய்திருக்கிறார்.
'திண்ணை' இணையதளத்தில் 'ஆட்டோகிரா·ப்' என்ற 25 வாரங்கள் வெளியான இவரதுகட்டுரைத் தொடர் பரவலான வாசிப்பையும் கவனத்தையும் பெற்றது. சித்ரா, இந்தத் தொடரை 'எதிர்பாராமல் நடந்த இனிய விபத்து' என்று குறிப்பிடுவார். பெரிய திட்டங்கள் எதுவுமில்லாமல் எழுதத் துவங்கி, பின்னர் வாராவாரம் எழுதியிருக்கிறார். இந்தத் தொடருக்கு இன்றும் தொடர்ந்து வாசகர் கடிதங்கள் வந்தபடியிருக்கின்றன. இதுகுறித்துச் சொல்லும்போது, "வாசகர்கள் அந்த 'ஆட்டோகிரா·ப்'பில் தமது கையெழுத்தையும் பார்க்கிறார்கள் என்று தோன்றுகிறது", என்பார் சித்ரா. வாசிக்கும் யாராலும் கட்டுரையில் சொல்லப்பட்டவற்றுடன் தன்னைப் பொருத்திப்பார்க்க முடியும். இந்தக் கட்டுரைகளில் சொல்லப் பட்டவை அவரது இளமைப்பருவத்தின் 'மலரும் நினைவுகள்' எனினும், சாதாரண நினைவலைகளைப் போலில்லாமல் ரசித்துச் சிரிக்கக்கூடிய அங்கதத்துடன் ஆங்காங்கே நிகழ்கால நிகழ்வுகளுடன் பொருத்தி மிகவும் சுவாரசியமாக எழுதியிருப்பார். இக்கட்டுரைத் தொடரில் இவரின் சமூக அவதானிப்புகளின் ஆழமும் விசாலமும் வாசிப்பவருக்கு தெள்ளெனப்புரியும்; பிரமிப்பையும் ஏற்படுத்தும். மொழி பாய்ச்சலாய் இருக்கும். கிரேஸி மோகன் நாடகங்களில் ஒரு ஜோக்குக்குச் சிரித்து முடிக்கும் முன்னர் சிரிப்பலையில் அடுத்த ஜோக் காணாமல் போவதைப் பார்த்திருப்பீர்கள், இல்லையா? அதுபோல அடுத்தடுத்த வாக்கியங்களுக்கு அடுக்கடுக்காகச் சிரிக்கத் தயாராக இருக்க வேண்டும். படித்து முடித்ததும் சொந்த நினைவுகளில் மூழ்கவும்தான்.
நகைச்சுவை என்றாலும் அதில் உள்ளுறையாக ஒரு உன்னத நோக்கம் இருக்க வேண்டும் என்று நம்புகிறார் சித்ரா. சார்லி சாப்ளின் நகைச்சுவையைப் போல். எழுத்து என்பது ஒரு காலப்பதிவு. அதில் ஈடுபடும் போது பொறுப்புணர்ச்சி தேவை. தவறான வார்த்தைகளோ அல்லது கருத்துக்களோ எழுத்தின் மூலம் பதிவு செய்யப்படும் போது அந்த தவறுக்கு ஒரு எழுத்தாளனே முழுப் பொறுப்பு. எனவே, எழுத்தும் எண்ணங்களும் எப்போதும் உன்னதங்களையே சொல்ல வேண்டும் என்பது ஒரு இலட்சியவாதம். அப்படி இலட்சியவாதங்கள் பேசி ஏமாற்றிக் கொள்ளும் இலட்சிய எழுத்தாளர் தான் இல்லை என்றும் ஒரு தவறானக் கருத்தைச் சொல்வதன் மூலம் சமுதாயப் பொறுப்புணர்ச்சியற்று இருக்க விரும்பவில்லை என்றும் சொல்வார். 'கனமான நோக்கம்' ஒன்றைமுன் கூட்டியே தீர்மானம் செய்து கொண்டு கதைகள் எழுத முடியாது. கட்டுரைகள் எழுதலாம். கதையின் இயல்பான ஓட்டத்தில் அவ்வப்போது கதாசிரியர் உள்ளே புகுந்து 'திருடாதே பாப்பா திருடாதே' என்று அறத்தைப் பேசாமல் ஆனால் அதே சமயம் அறம் வளர்க்க நினைக்கும் என்ற அடிப்படை எண்ணங்கள் எழுதுவதில் தனக்கு உண்டு என்றும் கூறுவார்.
சித்ராவின் 'பிதாமகன்' என்ற சிறுகதை அவருக்கு அங்கீகாரம் வாங்கிக் கொடுத்த இன்னொரு முக்கியப் படைப்பு என்று துணிந்து சொல்லி விடலாம். இன்றைய காலகட்டத்தில் உலகளாவிய ஒரு பிரச்சனையைப் பேசும் இந்தச் சிறுகதை அற்புதமானது. வெளிநாட்டில் இறந்துபோன தந்தையின் பிரேதத்தைத் தன் சொந்த நாட்டுக்கு/ ஊருக்கு எடுத்துச் செல்ல முயலும்போது எதிர்கொள்ளும் சவால்களினூடாகப் பயணிக்கும் சிறுகதை இது. நெருக்கடிகள் மிகுந்த உலகில் ஒவ்வொரு செயலுமே வெறும் கடமையாகச் செய்யப் படுகின்றன என்பதைச் சுவாரசியமாகச் சொல்லும். செய்நேர்த்தியிலும் சரி வடிவத்திலும் சரி இந்தச் சிறுகதை சிறப்பாக அமைந்திருந்தது. வாசிப்பவருக்கு மூத்த தமிழ் எழுத்தாளர் தி. ஜானகிராமனின் எழுத்தை வாசித்தது போன்ற அனுபவம் ஏற்பட நிறைய வாய்ப்புகள் உண்டு. இந்தச் சிறுகதை சித்ரா ரமேஷின் எழுத்தின் மீதான எனது நம்பிக்கையைப் பலப்படுத்தியது என்றே உணர்ந்தேன்.
அதிக இடைவெளிகள் இல்லாமல் தொடர்ந்தும் எழுதவேண்டிய திறன்மிகுந்த ஓர் எழுத்தாளர் இவர். எண்ணிக்கையில் குறைவாகவே எழுதியிருந்தாலும் எழுதியவை 'சத்தான கதைகள்' என்று தன்னம்பிக்கையுடன் கூறும் சித்ரா ரமேஷ் ஒரு முதுகலைப் பட்டதாரி. தமிழகத்தில் பிறந்த இவர் இப்போது சிங்கப்பூர்க் குடிமகள். சிறுவயதில் கவிதைகள் மற்றும் கட்டுரைகள் எழுதியிருக்கிறார். 1990களின் துவக்கத்தில் சிங்கப்பூருக்கு வந்த பிறகுதான் சிறுகதைகள் எழுதத் தொடங்கியிருக்கிறார். சிங்கப்பூரில் குடியேறிய பிறகு பல நட்புகள், சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழகம், தமிழ் முரசு, இணையம் போன்ற பல ஊடகங்களின் மூலம் படிப்பதற்கான இவருக்கான எல்லைகள் விரிவடைந்திருக்கிறது.சித்ராவின் அனைத்து முயற்சிகளுக்கும் துணைநிற்கும் அனுசரணையான இவரது கணவர் ரமேஷ் ஒரு பொறியாளர். பொறியியல் படிக்கும் கௌதம் என்ற ஒரு மகன், புகுமுகவகுப்பில் பயிலும் சுருதி என்ற ஒரு மகள் என்று இரண்டு குழந்தைகள் இவருக்கு.
எழுத்தைக் குறித்து கேட்டால் சொல்ல இவருக்கு நிறைய இருக்கிறது. யாரும் கையைப் பிடித்து எழுது என்று வற்புறுத்த முடியாது என்பார். அதே நேரத்தில் எழுதாமல் இரு என்று கையைக் கட்டிப் போடவும் முடியாது. எழுதாமல் இருக்க வேண்டும் என்ற எண்ணம் எழுதிக் குவித்து இனிமேல் எழுத எதுவுமில்லை என்று நீர்த்து போகும் போதோ, அல்லது எழுத்து, இலக்கியம் எல்லாவற்றிலும் அவநம்பிக்கை ஏற்படும் போதோ நிகழலாம். இப்போதைக்கு இவருக்கு எழுத வேண்டாம் என்ற தீர்மானம் எதுவுமில்லை. கண்டிப்பாக இன்னும் நிறைய எழுத வேண்டும் என்ற எண்ணமே உண்டு. எழுத வேண்டும் என்று அவகாசம் கிடைக்கும் போது எழுத எதுவும் தோன்றாமல் போய்விடுகிறது. வேலைப் பரபரப்பில் இதை இப்படி எழுதலாமே என்ற கற்பனைகள் தோன்றும். பரீட்சை எழுதும் போது கவிதை வரிகள் எழுத வருவது போன்ற வாழ்வின் அபத்தங்களில் இதுவும் ஒன்றுரைப்பார். கையில் பேப்பர் பேனா எல்லாம் இருக்கும் போது வெற்றுத் தாள்கள் மட்டுமே மிஞ்சும்.
'கடல் கடந்த கனவு' என்ற இவரது சிறுகதை சிங்கப்பூர் எழுத்தாளர் கழகம் நடத்திய சிறுகதைப்போட்டியில் பரிசு பெற்றது. தேசிய கலைகள் மன்றம் மற்றும் சிங்கப்பூர் பிரெஸ் ஹோல்டிங்க்ஸ் இணைந்து இரண்டாண்டுகளுக்கு ஒருமுறை நடத்தும் 'தங்கமுனைப் பேனா விருது -2005'ல் 'பறவைப்பூங்கா'விற்காக மூன்றாம் பரிசு பெற்றார். 'கடவுளின் குழந்தைகள்' என்ற இவரது சிறுகதை நாடக வடிவமாக்கப்பட்டு சிங்கப்பூர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது. சிறந்த மேடைப்பேச்சாளரான இவர் ஓர் ஆசிரியருமாவார். இவரிடம் விஞ்ஞானப் பாடங்கள் பயிலும் மாணவர்கள் மெச்சிப் பேசுவதை நானே கேட்டதுண்டு. மாணவன் மெச்சும் ஆசிரியராக விளங்குவது,> அதுவும் இந்த யுகத்தில் எத்தனை சிரமம் என்று ஆசிரியர்கள் அறிவார்கள்.
பட்டிமன்ற மேடைகளிலும் இவர் பேசுவார். இயல்பாகவே கலகலப்பாகப் பேசி எல்லோரையும் கவரும் இவர், மனதில் பட்டதைப் பளிச்சென்று பேசக்கூடியவர்.வீட்டுப் பராமரிப்பிலும் சமையல் கலையில் கூடச் சிறந்து விளங்குபவர். சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழகத்தில் செயலவை உறுப்பினராக பதவி வகிக்கும் இவரின் தலைமைத்துவமும் ஆளுமையும் சிங்கப்பூரில் மிகவும் பிரசித்தம். சித்ராவின் சமீபத்திய கனவு - விரைவில் தனது சிறுகதைத் தொகுப்பு ஒன்றைப் பதிப்பிப்பது. அந்தத் தொகுப்பு வெளிவரும்போது சிங்கப்பூர்த் தமிழ்ச் சிறுகதை எழுத்தாளர்களிடையே இவருக்கு இருக்கும் முக்கிய இடம் உறுதிப்படும் என்பதில் சந்தேகமில்லை.
2. அறிமுகம்: (சிங்கப்பூர்) எழுத்தாளர் எம்.கே.குமார்
புதுக்கோட்டை மாவட்டத்தின் ஆவுடையார்கோவில் அருகிலிருக்கும் தீயத்தூர் இவரது சொந்த ஊர். தற்போது 32-33 வயதாகும் எம்.கே.குமார் படித்ததெல்லாம் சென்னை தரமணியிலுள்ள வேதியல் தொழிநுட்பக்கல்லூரியில். திருச்சி தூத்துக்குடியில் ஆறாண்டுகள் பணியாற்றிவிட்டு ஏழெட்டு ஆண்டுகளாக சிங்கப்பூரில் ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் பணிபுரிகிறார்.
காலச்சுவடு, வார்த்தை போன்ற சில அச்சிதழ்களிலும் அனைத்து இணைய இதழ்களிலும் இவரது சிறுகதைகள், கட்டுரைகள், கட்டுரைத் தொடர்கள் மற்றும் கவிதைகள் பிரசுரமாகியுள்ளன. தமிழோவியம் மின்னிதழில் எழுதிய 'மாஜுலா சிங்கப்பூரா' என்ற சிங்கப்பூர் வரலாறு குறித்த தொடர் வாசகர்களுக்கிடையே இவருக்கு நல்ல பெயர் வாங்கிக் கொடுத்தது.
15 சிறுகதைகள் அடங்கிய 2006ல் பிரசுரமாகியுள்ள இவரது சிறுகதைத் தொகுப்பின் பெயர் 'மருதம்'. மருதுசேர்வை எனும் பெயரிலான முக்கிய கதாப்பாத்திரத்தைக் கொண்ட ஒரு சிறுகதையின் பெயர் இது. விவசாய வாழ்க்கையைச் சித்தரிக்கும் ஒரு கதை இது என்பதும் முக்கிய செய்தி. நூலின் தலைப்பு சொல்வதுபோல இந்தத் தொகுப்பின் பெரும்பாலான சிறுகதைகள் தஞ்சாவூர் விவசாயப் பகுதிகளைக் களமாகக் கொண்டவை. மூத்த எழுத்தாளர் நாஞ்சில் நாடன் இந்நூலுக்கு எழுதி வழங்கிய முன்னுரையில் குமார் மீதான தனது நம்பிக்கையைப் பதிவுசெய்திருப்பார். கிராமியக் களமும், கருவும், பாத்திரங்களும் எம்.கே.குமாருக்கு மிகவும் இலகுவான பரப்பு என்று இந்தத் தொகுப்பின் சிறுகதைகள் நிரூபிக்கின்றன. சம்பவங்களும் கதாமாந்தர்களும் மிக இயல்பாகவும் எளியாகவும் புனையப்பட்டவை.
சங்க இலக்கியங்களின் போக்குகளும் மொழிகளும் இவரில் பெருந்தாக்கத்தை ஏற்படுத்தியிருப்பது இவரின் சில சிறுகதைகளில் உணரலாம். பரிக்ஷ¡ர்த்தமான மொழிச்சோதனைகள் பல செய்யக்கூடிய இவரது எழுத்தில் அதற்கான சாத்தியங்கள் நிலவுகின்றன. ஆகவே, ஓரளவிற்கு இயல்பாகவும் அமைகின்றன. 'வேட்டை' போன்ற மிகச்சில கதைகளில் மட்டும் கொஞ்சம் ஒட்டாமல் விலகி நிற்கும் மொழி வாசகனுக்கு ஒருவித சுவாரஸியத்துடன் புலப்படக்கூடும்.
சிங்கப்பூரைக் களமாகக் கொண்ட சிறுகதைகளையும் எம்.கே. குமார் எழுதியுள்ளார். அவை இந்நாட்டின் இடங்களின் பெயர்களையும் உள்ளூர் வழக்குகளையும் மட்டுமே கொண்ட சிறுகதைகளன்று. உள்ளூர் வாழ்க்கையையும் சமூகசிக்கல்களை நல்லமுறையில் உள்வாங்கிக் கொண்ட பின்னர் எழுதப்பட்டவை. உதாரணமாக, 'மஹால் சுந்தர்' என்ற இவரது சிறுகதை சிங்கப்பூரின் பல்லினக் கலாசாரத்தைப் பிரதிபலிக்கும் ஒரு நல்ல சிறுகதை. பிலிப்பைன்ஸ் நாட்டின் ஒரு பெண் சிங்கப்பூருக்கு பணிப்பெண்ணாக வந்து வேலைசெய்கிறாள். தனது பங்களாதேஷ் காதலனால் ஏற்படும் கர்பத்தைக் கலைக்க உதவுவது சுந்தர் எனும் இன்னொரு இந்திய நண்பன். நிரந்தர வாழ்க்கைத் துணையைத் தேடும் ஒரு சராசரி ஆணுக்கு ஏற்படும் குழப்பங்களுடனும் ஊருக்குப் போய் முறையாகத் திருமணம் முடித்துத் திரும்பும் சுந்தர் என்று நகரும் இக்கதையில் முடிவும் மிகவும் எதார்த்தமாக அமைகிறது. முழுக்க முழுக்க சிங்கப்பூரைக் களமாகக் கொண்ட சிறுகதைகள் மட்டுமே அடங்கிய இவரது ஒரு தொகுப்பு இனிமேல் தான் வெளியாக வேண்டியுள்ளது.
எழுதாமல் இருக்கமுடியுமா என்று குமாரிடம் கேட்டால் சுருக்கமாக 'முடியும்' என்று சொல்வார். இவருக்கு எழுத்து பொழுதுபோக்கும் இல்லை. அதற்கு கனமான ஒரு நோக்கமும் இல்லை என்று சொல்லும் குமார் எழுத்தைத் தன் 'அகத்துடனான கலவி' என்றும் சொல்வார். வாசிப்பவனுக்கு எத்தனை நெருக்கத்தில் இருக்கிறது என்பதே இலக்கியத்தின் நோக்கமாக இருக்கவேண்டும் என்று கருதும்> எம்.கே.குமார் இலக்கியத்தை உலகவாழ்க்கையின் ஒரு சாளரமாகப் பார்க்கிறார். படிக்கும் போது இந்தச் சாளரம் திறந்து கொள்கிறது என்பார். வாழ்க்கைக்கு இலக்கியம் தேவையா என்ற விவாதத்திற்குள் புகுந்தால், 'தன்னையறிந்தவனுக்கு எதுவுமே தேவையில்லை' என்று கூறுவார். இவரை மிகவும் கவரும் எழுத்தாளர் சுந்தர ராமசாமி. ஏனெனில், வார்த்தைகளில் வாழ்வைச் சொன்ன ஓர் எழுத்தாளர்
அவர்.
பழந்தமிழ் மொழியைக் கையாளவதிலும் நவீனமாக எழுதுவதிலும் இவருக்கு இருக்கும் திறமை சிறுகதையில் அதிக புதுமுயற்சிகளுக்கு வழிசெய்கிறது. கவிதையிலும் இவர் குறிப்பிடத்தகுந்த ஆக்கங்களைச் செய்துள்ளார். எழுத்துத் துறையில் மென்மேலும் துடிப்போடு இயங்குவதற்கான அனைத்துத் திறன்களுமுடையவர் எம்.கே.குமார். எழுத்துப்பயணத்தில் அதிக காலம் தேங்கி நின்றுவிடாமல் தொடர்ந்தும் எழுதுவாரேயானால், இவரது பங்களிப்பு கணிசமானதாகும். சிங்கப்பூர் தமிழிலக்கியத்துக்கு சிறந்த ஓர் எழுத்தாளர் கிடைத்துவிடுவதும் உறுதி. வெள்ளைச் சிரிப்புடன் இதமாகப் பேசிப்பழகும் இவர், காலச்சுவடு நடத்திய சுந்தர ராமசாமி நினைவுச் சிறுகதைப்போட்டி - 2008ல் முதல் பரிசைப் பெற்றவர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
இவருக்கு குறும்படங்களிலும் ஆர்வமுண்டு. 'பசுமரத்தாணி' இவரின் முதல் குறும்படம். இவர் சிங்கப்பூர் எழுத்தாளர் கழகத்தின் வாழ்நாள் உறுப்பினர்.
3. அறிமுகம்: (மலேசிய) எழுத்தாளர் கே. பாலமுருகன்
சமீபத்தில் அச்சிதழ்களிலும் இணைய இதழ்களிலும் அடிக்கடி கண்ணில் படும் பெயர் கே. பாலமுருகன். இவரை நாம் தயங்காமல் எழுதிக் 'குவிக்கும்' எழுத்தாளர்கள் பட்டியலில் சேர்த்துவிடலாம். என்னைக் கவர்ந்தது இவரது படைப்புக்களின் எண்ணிக்கையன்று. அவை ஆக்கப்படும் நவீன முறையில் தான் இவரின் எழுத்து எனக்குத் தனித்துத் தெரிந்தது. குறிப்பாக, சிறுகதைகளின் மொழியிலும் விதவிதமான உத்திகளிலும் புதிதாகச் செய்யும் குறிப்பிட்ட சிலரில் இவரும் கவனிக்கப்படுகிறார். திடுக்கிடும் திருப்பங்களையோ நாடகத்தன்மையான நிகழ்வுகளையோ நம்பி இயங்காமல் வாசகனுக்கு வாழ்வனுபவத்தை மட்டுமே விட்டுச்செல்லும் நோக்கில் இவரது சிறுகதைகள் உருவாவதை என்னால் உணர முடிந்திருக்கிறது. அதுவே தனிச்சிறப்பாகவும் தெரிகிறது.
எழுதுவது எவ்வளவு முக்கியம் என்று உணராத ஒரு தருணத்தில் எழுதத் தொடங்கியதாகச் சொல்ல்லும் இவர் ஏதோ ஒரு சக்தி, வேகம், தொடர்ந்து தன்னை எழுதுவதற்கு முன்னகர்த்தியதென்பார். எழுதாமல் இருக்கும் சமயத்தில் அதை ஈடுகட்ட வாசிக்கத் தொடங்கிவிடுவார்.
விரைவில் இவர் மணம் முடிக்கப் போகும் பெண்ணின் பெயர் கவிதா. மலேசியாவின் கெடா மாநில தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் செயலாளராக இருக்கும் இவர் "அநங்கம்" என்கிற மலேசிய தீவிர சிற்றிதழின் ஆசிரியர் பொறுப்பில் உள்ளார். இவரது எழுத்துக்களைத் தொடர்ந்து வாசிப்பவர் 'நகர்ந்து கொண்டிருக்கும் வாசல்கள்' மற்றும் 'நடந்து கொண்டிருக்கிறார்கள்' என்பது போன்ற இவரது சிறுகதைகளில் தலைப்புகள் கூட சற்று வித்தியாசமாகவும் சுவாரஸியமாகவும் இருப்பதைக் கவனிக்கலாம்.
26 வயதாகும் பாலமுருகன், "பலமுறை கடவுள்களிடம் நேரடியாகப் பேசியிருக்கிருக்கிறேன் அவ்வப்போது சன்னலின் விளிம்பில் உலகத்திற்காகக் காத்திருப்பேன்", என்று தன்னைப்பற்றிய அறிமுகமாக தனது வலைப்பதிவில் எழுதியிருப்பார். இவர் மலேசியநாட்டில் சுங்கைப்பட்டாணி என்ற ஊரில் இருக்கும் தமிழ்ப்பள்ளி ஒன்றில் ஆசிரியராகப் பணியாற்றுகிறார். மலேசியாவிலேயே பிறந்து வளர்ந்தவர் என்பதால், மலாய் மொழியிலும் இவருக்கு கற்பிக்கும் அளவிலான தேர்ச்சியுண்டு.
இவரது சிறுகதைகள் உள்ளடங்கிய மலேசிய ஊர்களையும் மக்களையும் சித்தரிப்பவை. இவரது எழுத்துக்களில் மலேசியத் தோட்டங்கள் நிறைய இடம் பெறுகின்றன. நகர்சார்ந்தும் இவரால் எழுதமுடியும் என்ற நம்பிக்கை பிறக்கிறது. மலேசியாவில் பாலமுருகனைப் போன்ற பத்திருபது துடிப்புள்ள இளம் தமிழ் எழுத்தாளர்கள் துளிர்த்தாலே போதும். மலேசிய தமிழிலக்கியத்தின் எதிர்காலத்துக்கு உத்திரவாதம் கிடைத்துவிடும் என்பது என் கருத்து.
எழுத்தாளன் என்பவனே ஏதோ ஒரு குழப்பத்திலும் சந்தேகத்திலும், அதிருப்தியாலும்தான் எழுதிக் கொண்டிருப்பதாக நினைக்கும் இவர் அந்த மாதிரியான உலக உணர்வுகள் இருக்கும்வரை, சாமன்ய மனிதனாக இருக்கும்வரை ஏன் எழுதாமல் இருக்க வேண்டும் என்ற உணர்விலேயே தொடர்ந்து எழுதுவாராம். எழுத்தாளனைப்பற்றிச் சொல்லும் போது பாலமுருகன், "சமூகத்திற்காக எழுதுபவன் சீர்த்திருத்தவாதியாகவோ அரசியல்வாதியாகவோ ஆகிவிடலாம், தனக்காக மட்டும் எழுதுபவன் சுயநலவாதியாக கருதப்படலாம்,, அல்லது பின்நவீனத்துவாதி ஆகிவிடலாம்.. நோக்கத்திற்காக-நோக்கத்துடன் எழுதுபவன் மட்டும்தான் அசல் இலக்கியவாதி என்கிற மாயை இருக்கிறது. அது வெறும் மாயையே. வாழ்க்கையை - மனிதர்களைப் பற்றி முணுமுணுக்க நினைத்தாலும் அது ஒரு படைப்பு உருவாதற்கான தருணம்தான். பலப்படுத்தப்பட்ட சீர்தூக்கி அமைக்கப்பட்ட மிக நேர்த்தியான ஒரு நோக்கம் இருக்க வேண்டும் என்று தோன்றவில்லை", என்பார்.
'நடந்து கொண்டிருக்கிறார்கள்' என்ற சிறுகதை தேசிய பல்கலைக்கழகம் சிறுகதை போட்டி-2006 ல் முதல் பரிசும் 'பழைய பட்டணத்தின் மனித குறிப்புகள்' என்ற சிறுகதை தேசிய பல்கலைக்கழகம் சிறுகதை போட்டி-2007ல் இரண்டாம் பரிசும் பெற்றுள்ளன. 'நகர்ந்து கொண்டிருக்கும் வாசல்கள்' என்ற இவரது புதினம் மலேசிய தமிழ் எழுத்தாளர் சங்கமும் ஆஸ்ற்றோ வானவில்லும் இணைந்து நடத்திய மலேசிய தமிழ் நாவல் எழுதும் போட்டியில் முதல் பரிசை வென்றது. இவர் எழுதிய 'போத்தகார அண்ணன்' என்ற சிறுகதை மலாயாப் பல்கலைக் கழகத்தின் பேரவை கதைகள் 21(2006) மாணவர் பிரிவில் முதல் பரிசும் 'கருப்பாயி மகனின் பட்டி' மலாயாப்பல்கலைக்கழகம் (2007) பொது பிரிவில் இரண்டாம் பரிசும் பெற்றுள்ளன.
கவிதை முயற்சிகளையும் தொடர்ந்து மேற்கொண்டு வரும் இவர் கவிதையிலும் பாடுபொருள் மற்றும் சொல்லும் முறைகளில் பல சோதனைகளைச் செய்து வருவதாக உணர முடிகிறது. மலேசிய நாளிதழ் 'மக்கள் ஓசை'யில் 'ஒரு நகரமும் சில மனிதர்களும்' என்ற தொடர் கட்டுரையும் வார்த்தை, யுகமாயினி, உயிரெழுத்து போன்ற இதழ்களில் சிறுகதைகளும் சிற்றிதழ்களில் கவிதைகளும் என்று தொடர்ந்து எழுதிவரும் இவர் தற்போது மலேசிய ஆசிரியர் கவிதைகள் தொகுப்பு நூலாக்கத்தில் ஈடுபட்டுள்ளார்.
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் நடத்திய சிறுகதை போட்டியில் '1 மணி பேருந்து' என்ற சிறுகதை மூன்றாம் பரிசை வென்றது. மலேசிய எழுத்தாளர் சங்கம் நடத்தும் மாதாந்திர கதை தேர்வில் இவ்வருடம் ஜனவரி மாதத்திற்கான சிறந்த கதையாக இவரின் 'அலமாரி' தேர்வானது. இவ்வருடம் மார்ச் மாதத்தில், மக்கள் ஓசை நடத்திய மோதிரக் கதை போட்டியில் 'அப்பா வீடு' சிறந்த சிறுகதையாக தேர்வாகிப் பிரசுரம் கண்டுள்ளது. இவரது படைப்புகள் நூல்வடிவில் விரைவில் வரவேண்டியுள்ளது.
4. அறிமுகம்: (மலேசிய) எழுத்தாளர் ரெ.கார்த்திகேசு
1952 முதல் எழுதி வரும் மலேசியாவின் முன்னணிச் சிறுகதை/நாவல் எழுத்தாளரான ரெ.கார்த்திகேசு, தோட்டங்களைப் பற்றியும் அங்கு வாழும் மக்களையும் சித்தரிக்கும் படைப்புகளே மலேயாவில்/ மலேசியாவில் நிறைய எழுதப்பட்ட காலகட்டத்தில், நகர்சார்/பெருநகர்சார் வாழ்வைப்பதிவு செய்த சிலருள் முக்கியமானவராகிறார். மலேசிய இதழ்களிலும், தமிழ் நாட்டின் தீபம், கணையாழி, கல்கி, இந்தியா டுடே, தீராநதி, காலச்சுவடு, யுகமாயினி, வார்த்தை ஆகிய இதழ்களிலும் எழுதியுள்ளார். இணைய இதழ்களான 'திசைகள்' 'திண்ணை' 'பதிவுகள்' ஆகியவற்றிலும் எழுதியுள்ளார். தனது 17வது வயதிலேயே நாடு தழுவிய சிறுகதைப் போட்டியில் முதல் பரிசுபெற்றபோது தமிழவேள் கோ.சாரங்கபாணியிடமிருந்து 'சிறுகதை மன்னன்' என்ற பாராட்டைப் பெற்றார்.
உண்மையில் ரெ.கார்த்திகேசு அவர்களுக்கு அறிமுகம் தேவையில்லை. இவர் நன்கு அறியப்பெறுபவர். தனது 12வது வயதில் சிறுவர் இதழ்களில் எழுதத் துவங்கி, மூன்று தலைமுறைகளாக எழுத்துலகில் தொடர்ந்து இயங்கி வரும் ரெ.கார்த்திகேசு அவர்களின் மகன் 'ஸித்தார்' எனும் ஹிந்துஸ்தானி வாத்திய இசையில் வல்லவர். அவர் இசையாசிரியரும் கூட. ரெ.கார்த்திகேசுவின் மூத்த சகோதரர் ரெ.சண்முகம் மலேசியாவில் நன்கு அறியப்பட்ட இசைக் கலைஞர். அறுபத்தெட்டு வயதிலும் எழுத்துலகில் தொடர்ந்து இயங்கிவரும் மலேசிய எழுத்தாளர் ரெ.கார்த்திகேசு மலேசியாவின் பினாங்கில் இருக்கும் மலேசிய அறிவியல் பல்கலைக் கழகத்திலிருந்து ஓய்வு பெற்றவர். தொடர்புத் துறைப் பேராசிரியராகவும் 'துணை டீன்' பதவியிலும் இருந்தவர்.
1920ல் மலேயாவுக்கு வந்த இவரது தகப்பனார் திருச்சியைச் சேர்த்தவர். தாயார் மலேயாவில் பிறந்தவர். தோட்டப்புறத் தமிழ்ப்பள்ளியில் தன் ஆரம்பக்கல்வியைக் கற்ற ரெ.கார்த்திகேசு பின்னர் ஆங்கிலத்தில் இடைநிலைக் கல்வி பயின்று, 1968ல் மலாயா பல்கலைக் கழகத்தில் இந்திய இயல் பிரிவில் இளங்கலைப்பட்டம் பெற்றார். 1977ல், Columbia வில் இதழியலில் முதுகலைப்பட்டத்தைப் பெற்றார். இங்கிலாந்தின் Leicester ரில் 1991ல், பொதுமக்கள் தகவல் சாதனத் துறையில் முனைவர் பட்டம் பெற்றார்.
உதாரணத்துக்கு ரெ.கார்த்திகேசுவின் ஒரேயொரு சிறுகதையைப் பற்றி கொஞ்சம் விரிவாகச் சொல்கிறேன். தொழிலில் முதலை இழந்து பங்குதாரர்களால் விரட்டப்பட்டு சாகும் விரக்தியில் இருளை நோக்கிச் செல்லும் படித்த பகட்டான பாஸ்கரன் என்ற ஒரு (முன்னாள்) முதலாளிக்கும் சீனனிடம் வேலை செய்யும் நாகராஜ் என்ற ஒரு சாதாரணத் தொழிலாளிக்கும் இடையே நடக்கும் உரையாடலாக 'இன்னொரு தடவை' சிறுகதை ஆரம்பிக்கும். எளியவன் கொண்டு வந்த சாராயத்தை இருவரும் குடிப்பார்கள். பிறகு, அவரவர் வாழ்க்கை மற்றும் பெண்டாட்டி பற்றிய குறைகள் சொல்லிப் பேசிவிட்டு பாஸ்கரன் நாகராஜையும் 'வா சாவோம்' என்றழைப்பான். போதையில் இருவரும் ஒரு பங்களாவுக்குப் பின்னால் இருக்கும் நீச்சல் குளத்தில் போய் விழப்போவார்கள். முதலில் பாஸ்கரன் நாகராஜுக்கு 'சாவுத் தோழ'னாக வந்ததற்கு நன்றி சொல்லிவிட்டு நீருக்குள் குதித்துவிடுவான். ஆனால், நாகராஜனோ, 'நாங்குடியை நிறுத்திட்டேன்னா என் பெண்டாட்டி என்னோட வருவான்னு நெனக்கிறேன். கடைசியா இன்னொரு தடவ முயற்சிக்கிறேன். வல்லன்னா அப்புறம் பார்த்துக்குவோம்', என்று சொல்லிவிட்டு தள்ளாடியபடி வேலியின் ஓட்டைக்குள் புகுந்து வெளியேறிப் போய்விடுவான்.அதிக விவரணைகளின்றி பெரும்பாலும் உரையாடலாகவே கச்சிதமாக அமைந்திருக்கும் இந்தச் சிறுகதையின் சிறப்பே வாசித்து முடித்ததும் ஏராளமான கேள்விகள் நம் மனதில் முளைப்பது தான்.
இன்னொரு தடவை என்று சொல்லும் நாகராஜுக்கு மட்டும் வாழ்க்கையின் மீது ஒரு துளி நம்பிக்கை எப்படி இன்னமும் மிச்சமிருக்கிறது? வசதிகள் என்று நினைத்துக் கொண்டிருக்கும் லௌகீகங்களுக்கும் அவை கொணருமென்று நம்பியிருந்த மகிழ்ச்சியும் வெறும் மாயையா? பொதுவாகவே, மில்லியன் கணக்கிலான 'டர்ன் ஓவர்', கார் பங்களா, வீடு, வாசல் என்றிருப்போருக்கு வாழ்வின் மீது இருக்கவேண்டிய நம்பிக்கை சடாரென்று காணாமல் போவதேன்? கீழ் மட்டத்தில் வாழும் எளிய மக்களை ஒப்பு நோக்க மேல்மட்டத்தில் இருப்போருக்கு வாழ்க்கையில் ஏற்படும் தோல்விகளைச் சந்திப்பதில் தைரியம் இல்லாமல் போவதேன்? வசதியானவனுக்கு மனைவி, 'சனிய'னாக இருக்க எளியவனுக்கு தன் மனைவியின் மீது அன்பு இருக்கிறது. சுற்றியிருப்போர் மீது தான் குற்றமும் குறையும். 'அந்திம காலம்', 'காதலினால் அல்ல' ஆகிய இரு நாவல்கள் மற்றும் பல சிறுகதைகள் உள்ளிட்ட ரெ.காவின் படைப்புகளில் பலவற்றை இணையத்தில் http://www.tamil.net/projectmadurai/akaram1.html என்னும் முகவரியில் வாசகர்கள் வாசிக்கலாம்.
மலேசிய வானொலியின் முன்னாள் ஒலிபரப்பாளரான இவர் வானொலி நாடகங்களையும் எழுதியுள்ளார். தமிழ்ப் புத்திலக்கியம் பற்றிய திறனாய்வுக் கட்டுரைகள் பலவற்றையும் எழுதியுள்ளார். மலேசிய மற்றும் ஆசிய பொதுமக்கள் தொடர்புச் சாதனங்கள் பற்றி அனைத்துலகக் கருத்தரங்குகளில் ஆங்கிலம் மற்றும் மலாய் மொழிகளில் கட்டுரைகள் படைத்துள்ளார். 1974ல் பிரசுரமான 'புதிய தொடக்கங்கள்', 1995ல் பிரசுரமான 'மனசுக்குள்', 2001ல் பிரசுரமான 'இன்னொரு தடவை', 2003ல் பிரசுரமான 'ஊசி இலை மரம்' ஆகியவை இவருடைய சிறுகதைத் தொகுதிகள். 2004ல் விமர்சன முகம் என்ற கட்டுரை நூல் ஒன்றையும் எழுதியுள்ளார். இந்நூலில் உள்ள ஒவ்வொரு கட்டுரையும் முக்கிய இலக்கிய ஆவணம். பெரும்பாலும் மலேசிய தமிழ் இலக்கியச் சூழலையும் ஓரளவுக்கு தமிழ்நாடு மற்றும் புலம் பெயர்ந்தோர் எழுத்துக்களின் வளர்ச்சியையும் ஆராயும் பயனுள்ள கட்டுரைகள். இது தவிர, மலாய் மொழியில் 1994ல் 'Sejarah Perkembangan TV di Malaysia' ('மலேசிய தொலைக் காட்சி வரலாறு') என்னும் நூல் வெளியாகியிருக்கிறது.. மலாயாப் பல்கலைக் கழகம், தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழகம், பொள்ளாச்சி NGM கல்லூரி போன்ற பல கல்வி நிறுவனங்களின் மாணவர்கள் இவரது படைப்புக்களை ஆராய்ந்து கட்டுரைகளும் ஆய்வேடுகளும் எழுதியுள்ளனர்.
தமிழ் நேசன் பவுன் பரிசு, மலாயாப் பல்கலைக் கழகப் பேரவைக் கதைகள் போட்டி முதலிய போட்டிகளுக்கு நீதிபதியாக இருந்துள்ளார். மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் துணைத் தலைவராகவும் பினாங்கு இந்து அறப்பணி வாரியத்தில் உறுப்பினராகவும் இருந்துள்ளார். பினாங்கு இந்து சங்கத்தின் செயலாளராகவும் பினாங்கு பயனீட்டாளர் சங்கத்தின் துணைச் செயலாளராகவும் இருந்துள்ளார். மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் 'தனிநாயக அடிகள் விருது' பெற்றதுடன் மாதாந்தரச் சிறுகதைத் தேர்வில் பலமுறை தங்கப் பதக்கம் பெற்றுள்ளவர் ரெ.கார்த்திகேசு. 'அந்திம காலம்' நாவலும் (1998) 'ஊசி இலை மரம்' சிறுகதைத் தொகுப்பும் (2003) மலேசியாவில் ஆண்டு தோறும் வழங்கப்படும் மிகச் சிறந்த நூலுக்கான டான் ஸ்ரீ மாணிக்கவாசகம் பரிசு பெற்றுள்ளன. கணையாழி இதழின் சம்பா நரேந்திரர் குறுநாவல் போட்டியில் பரிசு பெற்றுள்ளார் (1999). 'கல்கி' வைரவிழாவை ஒட்டிய சிறுகதைப் போட்டியில் (2002) முதல் பரிசு பெற்றார். 'திண்ணை' இணைய இதழ்/மரத்தடி குழுமம் நடத்திய அறிவியல் புனைகதைப் போட்டியில் இரண்டாம் பரிசு பெற்றுள்ளார் (2005); 'மனசுக்குள்' நூலுக்கு லில்லி தெய்வசிகாமணி பரிசு கொடுக்கப் பட்டுள்ளது (1996). தமிழ் நாடு இலக்கியச் சிந்தனை மாதாந்திரக் கதைத் தேர்வில் இவர் கதை தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது (2003). இவருக்கு மலேசிய அரசாங்க விருதான KMNம் வழங்கப்பட்டுள்ளது.
5. அறிமுகம்: (சிங்கப்பூர்) எழுத்தாளர் சுப்ரமணியம் ரமேஷ்
எஸ்.ரமேஷ், மணிமலர் ரமேஷ், ரமேஷ் சுப்பிரமணியன், ஆத்மரச்மி, மானஸாஜென் ஆகிய பல புனைப்பெயர்களில் சுப்பிரமணியன் ரமேஷின் படைப்புகள் பிரசுரமாகியுள்ளன. சிறுகதை, குறுநாவல், கவிதை போன்ற பல தளங்களிலும் பல்வேறு ஊடகங்களிலும் இயங்குபவர் இவர். இவரது படைப்புகள் தினமணிக்கதிர், ஆனந்த விகடன், கணையாழி, காலம், காலச்சுவடு, உயிர்மை, மகிளா ஜாக்ரதி (கன்னடம்), புதிய பார்வை, வல்லினம், தமிழ் முரசு, தமிழ் அரசி ஆகிய பத்திரிக்கைகளிலும், திண்ணை, வார்ப்பு, திசைகள், பதிவுகள், மரத்தடி போன்ற இணைய இதழ்களிலும், பிரசுரம் கண்டுள்ளன. 1980ல் குமுதத்தில் முதல் ஜோக், 1982ல் ஜூ.வி விஷ¤வல் டேஸ்ட் மிர்ரரில் முதல் புகைப்படம், 1989ல் ஆனந்த விகடனின் முதல் சிறுகதை, புதியபார்வையில் முதல் கவிதை, கணையாழியில் முதல் குறுநாவல், புதிய பார்வையில் முதல் ஓவியம் என்றே இவரது பயணத்தின் துவக்கங்கள் அமைந்துள்ளன.
சமீபத்தில் வல்லினம் (காலாண்டிதழில்) செப்-டிச 2008, 'கண்டடைதல்' என்ற சிறுகதையில், ரமேஷ் தத்துவார்த்தமானதொரு மொழிச்சோதனை செய்திருந்தார். அதே வேளையில் மொழி கடினப்படவுமில்லை. பணியிடத்தில் எதிர்கொள்ளும் சவால்களை ஒரு ஆணின் இடத்திலிருந்து சொல்லிக் கொண்டு வரும் கதை. கதாநாயகன் தன் மகளுடன் விலங்கியல் பூங்காவில் துருவக்கரடியின் மெய்ப்பாடுகளை அவதானித்தபடி தன்னை அந்த விலங்குடன் ஒப்பிட்டுக் கொள்கிறான். கரடியின் ஒவ்வொரு வலியையும் அசைவையும் சொற்ப உணவுக்காக தன் வலுவையும் மறந்து அது போடும் கூழைக்கும்பிடாகப் பார்க்கிறான். இந்த நொடியில், சட்டென்று அங்கே பார்க்க ஒன்றுமில்லை என்றெண்ணி இடத்தை விட்டு நகர்ந்துவிடுவான். தன்னையே பார்த்த உணர்வை அவன் அனுபவித்துவிடுகிறான். வாழ்க்கையில் இது தான் பாதை என்று நிர்ணயித்துக் கொண்டு செல்லவிழைவதை விடவும் செல்லும் வழியெல்லாமே பாதை தான் என்பதைச் சொல்லித் தன் சிறுகதையை முடித்திருப்பார்.
1966ல் இவர் ஓவியக்கலையில் விடைவிடாது தொடர்ந்து இயங்கி வருபவர். இவரது ஓவியங்கள் தமிழகத்திலும், சிங்கப்பூரிலும், தனி நபர் கட்சிகளாகவும், குழுக் காட்சிகளாகவும் பார்வைக்கு வைக்கப்பட்டிருக்கின்றன. சில ஓவியங்கள் புதிய பார்வையில் அட்டைப் படமாகவும், கிரீஷ் கர்னாட்டின் 'நாகமண்டலா' (தமிழாக்கம்) உட்பட அட்டைப்படங்களாகவும், புதிய பார்வை, காலச்சுவடு, தமிழரசி போன்ற இதழ்களில் இவரது கோட்டோவியங்களாகவும் இடம் பெற்றிருக்கின்றன.
எழுதும் முறைமையில் மீது தனக்கு இருக்கும் கேள்விகள் தன்னை எழுதவிடாமல் செய்து கொண்டிருக்கிறது. பத்திற்கு மேற்பட்ட சிறு கதைகளும் குறுநாவலும் ஒரு வருடத்திற்குள்ளாகவே பிரசுரம் ஆன பின்னர் எழுதுவதையே நிறுத்தி விட்டு, மறுபடி சிங்கப்பூர் வந்த பின்னர் எழுதிக் கொண்டிருக்கிறார். எழுதாத போது படிப்பது, நாடகம் போடுவது ('அய்க்யா' என்றொரு நாடகக்குழுவில் இணைந்து 'குட்டி இளவரசன்', கா·காவின் 'விசாரணை', ப்ரியா டெண்டுல்கர், பாதல் சர்க்கார், பாலகுமாரனின் சேவல் பண்ணை) இவரது ஈடுபாடுகள்.
ஓவியம் வரைவது, புகைப்படம் எடுப்பது ஆகியவைகளோடு, கடம் திரு.வினாயக்ராமின் தம்பி திரு. குருமூர்த்தியிடம் இரண்டு வருடகாலம் வயலின் கற்றுக் கொண்ட அனுபவமும், சிங்கப்பூரில் திரு. ராதா விஜயனிடம் கீ-போர்டு கற்றுக் கொண்ட அனுபவமும் இவருக்கு உண்டு.
தி.ஜா நினைவுக் குறுநாவல் திட்டத்தில் இவருடைய 'வலியுணரும் தந்திகள்' பரிசு பெற்றது. தேசிய கலைகள் மன்றம் மற்றும் சிங்கப்பூர் பிரெஸ் ஹோல்டிங்க்ஸ் இணைந்து இரண்டாண்டுகளுக்கு ஒரு முறை நடத்தும் 'தங்கமுனைப் பேனா விருது' போட்டியில் சிறுகதைக்கு முதல் பரிசு பெற்றிருக்கிறார். அதே போட்டியில் 2003ல் ஆறுதல் பரிசையும் 2005ல் மூன்றாவது பரிசையும் கவிதைக்காகப் பெற்றார்.
பத்தாண்டுகளாக சிங்கப்பூரில் வாழ்ந்து வரும் இவர் வேலுரைப்பிறப்பிடமாகக் கொண்டவர். முன்பு சென்னையில் பல ஆண்டுகள் பணியாற்றியுள்ளார். அக்காலங்களில் சிறுபத்திரிக்கையுலகில் இயங்கிய அனுபவமும் இவருக்குண்டு. இவரது மனைவி ஷீலாவும் ஒரு ஆர்க்கிடெக்ட்; சிறந்த ஓவியரும் கூட. ஒன்பது வயது சிநேகா மற்றும் நான்கு வயது சஞ்சனா ஆகிய இரு மகள்கள் இவருக்கு.
இறைமையை எழுத்தாக்க விழையும் இவர், எழுத்தின் சாத்தியப் பாடுகள் மீது தனக்கு இருக்கும் ஐயங்கள் தன்னை எழுத விடாமல் செய்து கொண்டிருப்பதாகக் கருதுகிறார். எழுத்து தன் தேடல், தன் அடையாளம், தின வாழ்வில் நசுங்கிப் போயிருக்கும் தன் மனசாட்சியின் குரல், மரணத்தை வெல்லும் வழி, இறைவனாக ஒரு செயல், இப்போதைய உலகினை சற்றே நேர்படுத்த தன்னையும், சமூகத்தையும் சற்றே விசாலப்படுத்தும் ஒரு கருவி இப்படியாக எழுத்திற்கும் தனக்கும் உள்ள உறவை பாவித்துக் கொள்வதினிலும்... கட்டற்ற துள்ளலில் பல்பம், கரி, பென்சில் இப்படி அகப்பட்டவற்றைக் கொண்டு, சுவர், தாள் என அகப்பட்டவற்றில் கிறுக்கி வரைந்து அந்த லயிப்பிலேயே தூங்கிப் போய் விடுவதுமான சிறுவனின் மலர்வினை ஒத்த படைப்புக் கணங்கள் வாய்க்கையில் கிடைக்கும் அபூர்வ மகிழ்ச்சித் தருணங்கள் தனக்கு உவப்பானதெனக் கூறுகிறார். மேலும் இவர் விழிப்புணர்வோடு வாழ்வினை அணுகும் போது அனுபூதியாய் வாய்ப்பதை எழுத்தாக்குவதையே உன்னத எழுத்தென்றும், அதற்கான விழைவே தன் படைப்பின் இலக்கெ என்றும் கூறுகிறார்.
எழுதுவது மேலும் குறித்துக் கேட்டால் ரமேஷ், "இறைவனது படைப்பில் ஒற்றைத்தன்மையோடு எதுவும் இல்லை, எழுதுவது எதுவாக வேண்டுமானாலும், எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம், ஆனால் மனதிற்கு உகந்ததாக இருக்க வேண்டும், உங்களுக்கும், உங்களின் அன்புக்குரியவர்களுக்கும் வேண்டாம் என்ற எதையும் எதற்காகவும் நீங்கள் மற்றவர்க்குத் தரலாகாது. நீங்கள் தரும் எது குறித்தும், அவை மற்றவர்களின் வாழ்வினில் விளைவிக்கும் வினை குறித்த பொறுப்புணர்வு வேண்டும், இந்த பெரிய அலகிலா விளையாட்டில் உங்களின் பங்கை பொறுப்புடன் விளையாட வேண்டும்", என்பார். அறிவு, சிந்தனை, வார்த்தைகள், எல்லாமே வெறும் எண்ணங்கள், மனதின் கூச்சல், இவை அனைத்தும் ஈகோவைத் தன் மூலமாகக் கொள்பவை; மௌனத்தின் முன் கரைந்து போகக் கூடியவை; இலட்சியங்களும், கொள்கைப் பிரகடனங்களும் தன் இலக்கல்ல என்றும், மௌனத்தை கைகொள்வதே தன் இலக்கெனவும் நம்புகிறார். மௌனமாய் இருப்பதென்பது மௌனத்தைக் குறித்து எழுதுவதோ, பேசுவதோ, எண்ணுவதோ அல்ல. விழிப்புணர்வோடு மௌனத்தில் ஆழ்வது. அப்படியான ஒரு நிலையில் படைப்பது சாத்தியமா? (வியாசன், அரவிந்தர், அருணகிரி, வள்ளலார், சித்தர்கள், லா-வோ-ட்சூ, சூ·பிகள்,...) அப்படி சாத்தியமென்பதோ, சாத்தியமில்லை என்றோ இப்போது முடிவாக அடைய முடியுமானால், முடிவுவை சிந்தித்துக் கொண்டுதான் இருக்கிறேன் என்று ஆகிறது. மேலும் எண்ணங்களற்று முடிந்தால் அது யார் எழுதிய எழுத்து? என்பதே தன்னை அலைகழிக்கும் தற்போதைய கேள்வி? என்பார்.
'படைப்பு' பற்றிய இவரது ஒரு கவிதை -
தோண்டிய பள்ளத்தில் ஈரம் காட்டி
அள்ளும் பொழுதே உறிஞ்சிக் குடித்திடும்
நதிமணல் படுகை
நான் கூசி ஒதுங்கும் யாவற்றையும்
பேதமற்றே தழுவிடும் என் நிழல்
சூன்யத்தில் ஒளிரும் ஒலியினைப் பெயர்த்திட
வண்ணமாய் வழிந்து பரவும் கீதம்
தழுவிச் செல்லும் காற்றின் விரல்களை
நிரந்தரமாய் பற்றிக் கொள்ள விழையும் கொடி.
ரமேஷ¤டன் நாம் ஓவியம் இலக்கியம் என்று எது குறித்துப் பேசினாலும் இவரது மூளை சரசரவென்று ஓடிச்சென்று ஜென்/தாவோ தத்துவத்திலோ வேறு ஆன்மீகக் கோட்பாட்டுத் தளத்திலோ சென்று நிலைக்கும். அது மென்மையாகப் பேசும் அவரது பேச்சிலும் வெளிப்பட்டுவிடும். 2006ல் பிரசுரமான 'சித்திரம் கரையும் வெளி' எனும் கவிதைத் தொகுப்பு இவரது முதல் நூல்
6. அறிமுகம்: (சிங்கப்பூர்) பாலுமணிமாறன்
1998 முதல் சிங்கப்பூரில் நிரந்தரவாசியாக வசித்து வரும் பாலுமணிமாறன் பிறந்தது தமிழகத்தின் தேனி மாவட்டத்திலுள்ள கூளையனூர். அந்தச் சிற்றூரைத் தனது 'வேர்' என்று பெருமிதத்துடன் குறிப்பிடும் இவர் மலேசியநாடு தான் இவரது இலக்கிய உணர்வை உயிர்பித்தது என்று சொல்வார். சிங்கப்பூரின் வசந்தம் ஒளிவழியின் 'நவரசம்' எனும் தொலைக்காட்சி நிகழ்ச்சிக்கு எழுதியிருக்கும் இவர் ஒரு பிரெஞ்சு நிறுவனத்தில் எம் ஆர் டீ ப்ராஜெக்டில் க்வாலிடி மானேஜராக பணிபுரிகிறார். 1996-97ல் பணி நிமித்தமாக மலேசியாவில் இருந்த போது, அங்குள்ள தினசரி, வார, மாத இதழ்களில் இவர் எழுதிய கதை, கவிதைகள் மலேசியத் தமிழ் வாசகர்களின் பரவலான கவனத்தைப் பெற்றன. குறிப்பாக, 'மக்கள் ஓசை'யில் 15 வாரங்கள் தொடர்ந்து எழுதிய 'வாரம் ஒரு இளமைக் கதை' இவரை மேலும் கவனத்துக்குரியவராக்கியது. மலேசியாவில் குறுகிய காலமே வாழ்ந்திருந்தாலும் அங்கே நிலவும் தமிழிலக்கியச் சூழல் குறித்த தெளிந்த பார்வை கொண்டிருக்கிறார்.
பாலுமணிமாறன் மலேசியச் சூழலை மையமாக வைத்து எழுதிய சிறுகதைகளின் தொகுப்பான "எங்கே நீ வெண்ணிலவே", மறைந்த மலேசியத்தமிழ் எழுத்தாளர் சங்கத்தலைவர் ஆதிகுமணன் தலைமையில் 1997-ல் கோலாலம்பூரில் வெளியீடு கண்டது. அதன் பிறகு, இவர் சிங்கப்பூருக்குக் குடிபெயர்ந்துவிட்டார்.
10 வயதில் படித்த மாக்ஸிம் கார்க்கியின் தமிழ்மொழிபெயர்ப்பான "தாய்" இவரில் பதித்த தடம் மிக நீளமானதும், ஆழமானதுமாக இருக்கிறது. எழுத்து என்பதை படிப்பின் மற்றும் வாழ்க்கை பற்றிய வாசிப்பின் நீட்சி என்று சொல்லும் இவர், "நிறையப் படிக்கிற போது கொஞ்சமாக எழுத முடிகிறது; கொஞ்சமாக படிக்கிற போது, எதுவுமே எழுதத் தோன்றுவதில்லை", என்கிறார்.
சிங்கப்பூரில் "கவிமாலை" "கவிச்சோலை" போன்ற நிகழ்ச்சிகளில் தென்படும் இளம் கவிஞர்களை உற்சாகப் படுத்துவதை வழக்கமாக வைத்திருக்கும் இவர், 1983 முதல் 2005 வரை தான் எழுதிய கவிதைகளைத் தொகுத்து "அலையில் பார்த்த முகம்" என்ற பெயரில் சிங்கப்பூரில் வெளியிட்டதை மனநிறைவுடன் குறிப்பிடுவார்.
எழுத்து இந்த பூமியைப் புரட்டிப் போடும் நெம்புகோலாக மாறி விடுமென்ற நம்பிக்கை தனக்கில்லை என்பார். ஒரு எழுத்தாளன் தொடர்ந்து எழுதுவதன் மூலம், தொடர்ந்து தன்னையே செழுமைப்படுத்திக் கொள்கிறான் என்று நம்பும் இவரை அதிகம் ஆக்கிரமித்தவர் எழுத்தாளர் அமரர் சுஜாதா. அவரை வியந்து ரசிக்கும் பாலுமணிமாறன் அவருடைய 'நகரம்' சிறுகதையின் தாய், தனது குழந்தையோடு எத்தனையோ வருடங்களாக தன் மனதுக்குள் நடந்து கொண்டிருக்கிறாள் என்பார்.
சிங்கப்பூரின் ஒரே தமிழ் நாளேடான தமிழ் முரசிலும், மலேசியப் பத்திரிக்கைகளிலும், இணைய இதழ்களிலும், வலைப்பூவிலும் வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் தொடர்ந்து எழுதி வருகிறார். சமீப காலமாக மற்ற ஊடகங்களிலும் இவரது தடங்கள் பதிகின்றன. சிங்கப்பூரின் 'வசந்தம்' தமிழ் தொலைக்காட்சியில், தொடுவானம், கனவுகள்-கதவுகள், நாம் போன்ற நிகழ்ச்சிகளின் Script Writer ஆக விளங்குகிறார்.
இளம் வயதில் இவருக்கு சாண்டில்யனின் கதைகள் மற்றும் கண்ணதாசனின் எழுத்துகள், குறிப்பாக 'விளக்கு மட்டுமா சிவப்பு', 'அர்த்தமுள்ள இந்துமதம்', 'ராகமாலிகா' ஆகியவை இவருக்கு மிகவும் பிடித்திருந்தன. மறைமலை அடிகளின் நடையும் இவரை வசீகரித்தது. ஒரு தலைமுறையையே பாதித்த எழுத்துக்குச் சொந்தக்காரர் என்று இவர் கருதும் பாலகுமாரன் இவரையும் பாதித்துள்ளார். அதே காலத்தவர்களான மாலன், சுப்ரமண்ய ராஜூ, ரவிச்சந்திரன், வாஸந்தி போன்றவர்களின் எழுத்துக்களும் இவரைக் கவர்ந்துள்ளன. 15 வயதில் வாசித்த சுந்தர ராமசாமியின் 'புளிய மரத்தின் கதை', இவருள் பல கிளைகளோடு நீண்டது. மொழிபெயர்க்கப்பட்ட ரஷ்ய நூல்கள் பனி படர்ந்த வெளிகளில் இவரை உலவ விட்டன. "உண்மையில் என் 15 வயதிற்குப் பிறகு நான் அதிகம் வாசிக்கவில்லை என்பதை அவ்வப்போது ஒரு சோகமாக உணர்கிறேன்" என்று சொல்லும் இவரது தாய் மாமா திரு. இராசு பவுன்துரை அவர்கள் தொடர்ந்து கொடுத்த ஊக்கத்தில் இவர் இளமையில் பல நூல்களைத் தேடிப் படித்திருக்கிறார். ஜே.பி.சாணக்கியாவின் சிறுகதைத் தொகுப்பு தனக்குள் சில தீக்குச்சிகளை வீசியது என்று கூறும் பாலு மணிமாறன், "பாலுணர்வு ஆடையைக் களைந்துவிட்டுப் பார்த்தாலும் நிர்வாணமற்றிருந்தன அந்தக் கதைகள்", என்கின்றன. ஆங்கிலப் படைப்பிலக்கிய நூல்களை இவர் படிப்பதில்லை என்றாலும், வர்த்தகம், விளையாட்டு போன்ற துறை சார்ந்த ஆங்கில நூல்களை அடிக்கடி படிப்பதுண்டு. இணையத்திலும் வலைப்பதிவிகளிலும் இடம் பெறுகின்ற விஷயங்கள் creative என்பதை விட, informative என்ற நிலையில் தான் பெரிதும் இருக்கின்றன என்று கருதுகிறார்.
தலைமைத்துவ குணத்தை இயல்பாகவே கொண்ட இவர் நிகழ்வுகளை ஒருங்கிணைக்கவும் வழிநடத்தவும் செய்வதில் சமர்த்தர். மலேசிய சிங்கப்பூர் தமிழிலக்கிய உலகிற்குப் பெரும்பங்காற்றும் நோக்கில் "தங்கமீன் பதிப்பகம்" என்ற பெயரில் பதிப்பகத்தை துவங்கி இதுவரை சிங்கப்பூர் பெண் எழுத்தாளர்களின் சிறுகதைத் தொகுப்பான 'வேறொரு மனவெளி'யையும் முனைவர் சபா இராஜேந்திரனின் 'கலவை' சிறுகதைத் தொகுப்பையும் பதிப்பித்துள்ளார். மூன்றாவது நூலைப் பதிப்பிக்கும் வேலையில் மூழ்கியுள்ளார்.
7. அறிமுகம்: (சிங்கப்பூர்) எழுத்தாளர் ரம்யா நாகேஸ்வரன்
சுமார் பத்தாண்டுகளாக சிங்கப்பூரில் வாழ்ந்து வரும் ரம்யா நாகேஸ்ரன் எடுத்துக் கொள்ளும் வேலையில் ஈடுபாட்டுடன் சிறப்பாகச் செய்வதில் கெட்டிக்காரர். 1970ல் பிறந்த இவர் இந்தியாவில் தனது வழக்கறிஞர் பயிற்சியை முடித்த பிறகு அமெரிக்கா, ஸ்விட்சர்லந்து, சிங்கப்பூர் என்று பல நாடுகளுக்குப் புலம்பெயர்ந்து பணியாறியவர். குழந்தைகளுக்காக வேலையை விட்டுவிட்டு முழுநேர இல்லத்தலைவியாகி விட்டார். தமிழகத்தில் பிறந்து வளர்ந்த ரம்யாவின் வாழ்க்கைத் துணைவர் முனைவர் திரு. அனந்த நாகேஸ்வரன் பன்னாட்டு வங்கி ஒன்றின் உயரதிகாரி. இவர் ஒரு econimist மட்டுமின்றி 'Mint' போன்ற இதழ்களின் பத்தி எழுத்தாளரும் ஆவார். இவரை BBC போன்ற பல்வேறு ஊடகங்களின் நேர்காணல்களில் அடிக்கடி காணலாம். இவர்களுக்கு ஒன்பது வயதில் தன்யா என்ற ஒரு மகளும் ஏழு வயதில் வ்யாஸ் என்ற ஒரு மகனுமுண்டு.
தாய் நாட்டை விட்டு வெளியே பல வருடங்களாக வாழ்ந்து வந்தாலும், தன் நாட்டு மக்களுக்கு தம்மால் முடிந்த அளவில் உதவும் நல்லெண்ணம் கொண்ட சில வெளிநாட்டு இந்தியர்களில் ஒருவர் ரம்யா. இதற்கு இவருக்கு இவரது கணவரது தொடர் ஊக்கமும் நல்லாதரவும் இருந்து வருகிறது. சிங்கப்பூரில், 'Focus India Forum' எனும் அமைப்பை நிறுவி ஐந்தாண்டுகளாக நடத்தும் ரம்யா இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் நல்ல நோக்கங்களுக்கான பல நடவடிக்கைகளுக்கு வித்திட்டவர். நிதி திரட்டி பங்கீடு செய்வதுடன் நன்கொடையாளருக்கும் பயன்பெறுவோருக்குமான பாலமாகவும் இயங்கி வருகிறார். அத்துடன் முறையாகச் செயல்படும் நன்கொடை நிறுவனங்களைக் குறித்த விழிப்புணர்வையும் கொணர விரும்புகிறார். இதன் நீட்சியாக இந்தியாவிலிருந்து இவ்வாறான நிறுவனத் தலைவர்களை சிங்கப்பூருக்கு வரவழைத்து உள்ளூர் இந்தியர்களைச் சந்திக்க ஏற்பாடு செய்யவும் திட்டமிட்டுள்ளார். இதன் முதல் கட்டமாக 'GOONJ' ன் நிறுவனர் திரு. அன்ஷ¤ குப்தாவை 2008ம் ஆண்டு வரவழைத்திருந்தார். அன்ஷ¤வுடன் 'Focus India forum' அமைப்புடன் இணைந்து ஐந்தாண்டுகளாகப் பணியாற்றியுள்ளார்.
ரம்யாப் பொருத்தவரை இலக்கியம் என்பது மனிதனை மேலும் ஆழமானதும் உயரமானதுமான ஒரு தளத்துக்கு எடுத்துச் செல்லக் கூடியது. மனித இயல்புகளையும், இசை போன்ற கலைகளையும் உலகின் அனைத்தையுமே முன்பைவிட நெருக்கமாகவும் தெளிவாகவும் அறிய இலக்கியமானது பயன்பட வேண்டும். வாசகனை உற்சாகப்படுத்தியும் பண்படுத்தியும் அவனை மேம்பட்ட மனிதனாக்க வேண்டும். வாசித்த பிறகு, ஒரு விஷயத்தைக் குறித்த அவனின் பார்வை வேறொரு பரிமாணத்தை அடைதல் வேண்டும். சிறுகதைகளில், முகத்தில் அறைவது போல 'நீதி'யைச் சொல்வது கூடாது. இருப்பினும், வாசித்த பிறகு, ஒருவரைச் சில நொடிகளேனும் நிதானித்து யோசிக்கச் செய்தல் சிறப்பு என்பார்.
எழுத்தின் மொழிக்கோ கருவுக்கோ படைப்பாளியைப் பொறுப்பாக்குதல் சரில்லையென்று என்று கருதும் இவர் சொல்ல நினைக்கும் விஷயத்தை உளப்பூர்வமாகச் சொல்லி வாசனை வாசிப்பதில் முழுமையாக ஈடுபடச்செய்வது படைப்பாளிக்கு இருக்கும் முக்கிய பொறுப்பு என்பார். தன் கருத்துக்கும் கொள்கைக்கும் புறம்பானவற்றை வாசகனில் ஒரு வெற்றுப் பரபரப்பை ஏற்படுத்தவென்றே படைப்பாளி எழுதுவது கூடாது என்றெண்ணும் இவர் இன்னொன்றையும் சொல்வார். நேரத்தையும் உழைப்பையும் செலவழிக்கிற ஒரு படைப்பாளி கண்டிப்பாக பகிரக் கூடியவற்றை மட்டுமே ஈடுபாட்டுடனும் ஆத்மார்த்தமாகவும் எழுதுதல் வேண்டும்.
சிறுவயதில் பொழுதுபோகாமல் தொந்தரவு செய்யும் ரம்யாவை அவரது தந்தை சென்னை புத்தகக் கடைகளுக்குக் கூட்டிக்கொண்டு போய் விடுவாராம். நூறு இருநூறு என்று அவர் கையில் பணத்தைக் கொடுத்து, உனக்குப் பிடித்த புத்தகங்களைத் தேர்ந்தெடுத்துக்கொள் என்று சொல்வாராம். அப்படித்தான் இவரக்கு வாசிப்பிலும் அது தரும் மகிழ்ச்சியிலும் ஈடுபாடு ஏற்பட்டிருக்கிறது.
ரம்யாவுக்கு எழுதுவதற்கான உந்துதலைக் கொடுத்தது - பெருநகரங்களின் மேல்த்தட்டு மத்திய வர்க்கத்தினரைக் குறித்து அதிகமும் எழுதி மறைந்த எழுத்தாளர் ஆதவனின் எழுத்துக்கள். மிகச் சாதாரண மனிதர்களையும், விஷயங்களையும், நடவடிக்கைகளையும் குறித்து எழுதிட விரும்பும் ரம்யா வாசகனை முன்பைவிட ஆழமாகச் சிந்திக்க வைக்கவே முயல்கிறார். பாத்திரங்களின் மனங்களில் ஊடுருவி, பாத்திரத்தின் சிந்தனைத் திசைகளையும் முறைமைகளையும் கற்பனை செய்து எழுத இவருக்குப் பிடிக்கும். தனக்குப் புரிந்ததும் தோன்றியதுமான சிறுதுளியைத் தன் வாசகனுடன் பகிர்ந்து கொள்ளும் விழைவு இவரில் உண்டு.
சம்பவம் சார்ந்தும் காட்சிப்படுத்துதல் சார்ந்தும் எழுதுவதையும் விட உணர்வுகள் மற்றும் அவை சார்ந்த சிந்தனையோட்டங்களைக் கொண்டு சிறுகதை புனையும் முறையில் இவர் அதிக நம்பிக்கை கொண்டுள்ளார். இவரது திறன்கள் அனைத்தையும் வெளிப்படாதிருக்கின்றன என்பதை இவர் அறிவாரா என்று தெரியவில்லை. தொடர்ந்து எழுத்து முயற்சிகளில் இறங்காமலிருக்கும் இவர் இடைவெளி இல்லாமல் தொடர்ந்து எழுதினால் எழுத்தில் மேலும் மேலும் மேம்படலாம். அதற்கான அனைத்துத் திறன்களும் ரம்யாவுக்கு உண்டு. இதுவரை பல்வேறு தமிழக சிங்கப்பூர் இதழ்களில் பிரசுரமாகியுள்ள 22 சிறுகதைகளை எழுதி, அதில் ஐந்திற்கு பரிசுகள் வாங்கியுள்ளார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. சிங்கப்பூரின் தேசிய கலைகள் மன்றம் மற்றும் சிங்கப்பூர் பிரெஸ் ஹோல்டிங்க்ஸ் இணைந்து இரண்டாண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் 'தங்கமுனைப் பேனா விருது' போட்டியில் 'முகவரிப் புத்தகம்' எனும் சிறுகதைக்கு மூன்றாம் பரிசு பெற்றிருக்கிறார். கல்கி இதழ் வருந்தோறும் நடத்தும் அமரர் கல்கி நினைவுச் சிறுகதைப்போட்டியில் இவரது சிறுகதைகள் பரிசுக்கும் பிரசுரத்துக்கும் தேர்வாகியுள்ளன. இது தவிர, ஆனந்த விகடன் ஏற்பாடு செய்து நடத்திய 'தண்ணீர் சேமிப்பு விழிப்புணர்வு' தொடர்பான சிறுகதைப் போட்டியில் ஆறுதல் பரிசும், சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழகத்தின் ஏற்பாட்டில் நடந்த சிறுகதைப் போட்டியில் பரிசும் பெற்றுள்ளார்.
என்னுடன் இணைந்து விகடன் பிரசுரத்தின் வெளியீடாக 'சிங்கப்பூர் வாங்க' என்ற நூலை எழுதியுள்ளார். அது தவிர, புதுதில்லியைச் சேர்ந்த ரோலி புக்ஸ் என்ற பதிப்பகத்தினரால் வெளியிடப்பட்ட 'Pregnancy Care Made Easy' என்ற ஒரு ஆங்கில நூலையும் தன் தோழியுடன் சேர்ந்து எழுதியுள்ளார்.
8. அறிமுகம்: (மலேசியா) சை.பீர்முகம்மது
மலேசியத் தலைநகரான குவாலலம்பூரில் 1942ல் பிறந்த சை.பீர்முகம்மது 1959 முதல் எழுதி வருகிற மூத்த எழுத்தாளர்களுள் முக்கியமானவர். கிட்டத்தட்ட 55 ஆண்டுகளாக இவர் ஏதோவொரு விதத்தில் தன்னை இலக்கியத்துடன் இணைத்துக் கொண்டு வந்திருக்கிறார். 12 வயதுமுதலே தன் எழுத்தார்வம் தொடங்கியதாகச் சொல்லும் இவர் மலேசியாவில் ஜப்பானிய ஆக்கிரமிப்பின் போது ஏற்பட்ட வெடிச் சத்தத்துடன் பிறந்ததாக வேடிக்கையாகச் சொல்வார். தனது கட்டுமானத்துறை நிறுவனத்தின் நிர்வாகத் தலைவராக இருக்கும் இவர் தனது குடும்ப உணவகங்களையும் கவனித்துக் கொள்பவராக இருந்து வருகிறார்.
பள்ளியில் நான்காம் வகுப்பு படிக்கும் போதான காலங்களில் சிங்கப்பூரின் தமிழ்முரசு இவருக்குப் படிக்கக் கிடைக்கும். அதில் மாணவர் மணி மன்றம் என்ற ஒருபகுதி ஒவ்வொரு திங்கட்கிழமையும் வரும். வீட்டில் 1954முதல் தொடர்ந்து வீட்டில் வாங்கியதால் விடாமல் வாசித்தார். மாணவர் மணிமன்றத்தில் நிறைய மாணவர்கள் எழுதினார்கள். தானும் எழுதிப்பார்த்தால் என்ன என்று யோசித்தவர் சின்னச்சின்ன கட்டுரைகள் எழுதி அனுப்பியிருக்கிறார். அதன்பிறகு பேச்சுப்போட்டிகளில் கலந்து பரிசுகளும் பெற்றார். பள்ளியில் சை.பீர்முகம்மது மட்டும் தான் இஸ்லாமியர். பெரும்பாலோர் யாழ்ப்பாணத்தமிழர்கள்.
தந்தையின் முதல் மனைவிக்குப் பிறந்த மகனான இவர் பத்து வயதில் தான் பள்ளியில் சேர்க்கப் பட்டிருக்கிறார். சில ஆண்டுகளிலேயே இவரது தந்தை தனது இரண்டாம் மனைவியின் மூலம் வரிசையாகப் பிறந்த 13 குழந்தைகளையும் குடும்பம் பெருகுவதையும் காரணம் காட்டி படிப்பை நிறுத்திக் கொள்ளச் சொன்னார். இதைக் கேட்ட சை.பீர்முகம்மது வீட்டை விட்டு ஓடிப்போய், பெரியப்பா வந்து கூட்டிப் போகும் வரை ஒரு பஞ்சாபி குடும்பத்துடன் நான்காண்டுகள் வசித்தார். நான்கு மணிக்கு எழுந்து பஞ்சாபி வீட்டு மாடுகளையும் கொட்டிலையும் சுத்தப்படுத்திப் பராமரிந்து வந்திருக்கிறார். பள்ளி விட்டு வீடு திரும்பி மாடுகளை மேய்க்கக் கூட்டிப்போய் வந்து இரவில் தான் தன் பாடத்தைப் படிப்பார்.
பள்ளியை விட்டு வெளியேறியது பிறகும் இவருக்கு மாணவர் மணிமன்றம் போன்ற ஒரு அமைப்பு தேவைப்பட்டிருக்கிறது. மாணவர் மணிமன்றம் போன்ற ஓர் அமைப்பை குவாலலம்பூரில் துவங்கினர். 1964ல் பினாங்கில் ஒரு மாநாடும் நடந்திருக்கிறது. ஏழு ஊர்களில் இதேபோல ஆரம்பிக்கப்பட்ட மன்றங்கள் சேர்ந்து தமிழ் இளைஞர் மணிமன்ற அமைப்பு உருவாகியிருக்கிறது. இதன் முதல் துணைச்செயலாளராக நியமிக்கப்பட்டார். பின்னாளில் இந்த அமைப்பு மலேசியாவெங்கும் விரிந்து பல கிளைகள் உருவாகின.
இளமையில் கல்கண்டு பத்திரிக்கையின் கேள்வி பதில் அங்கத்தை வாசித்து தன் அறிவை வளர்த்துக்கொண்டதாகச் சொல்லும் இவர் ரயில்வே ஊழியர்கள் சேர்ந்து நடத்திய முத்தமிழ்ப் படிப்பகம் என்ற தனியார் நூலகத்தைத் தன் வாசிப்புக்குப் பயன்படுத்தியிருக்கிறார். படிப்பு நின்று போனதும் ஒரு பத்திரிக்கை ஏஜெண்ட்டிடம் வேலைக்குச் சேர்ந்து வேலைக்கு இடையில் தமிழகத்திலிருந்து வந்த அனைத்து இதழ்களையும் வாசித்தார்.
மு.வ, அகிலன், நா.பா, க.நா.சு, புதுமைப்பித்தன் என்று துவங்கிய இவரது வாசிப்பு ஜெயகாந்தனில் வலுப்பெற்று மௌனி, லா.ச.ரா என்று நீண்டு சுந்தரராமசாமி, பிரபஞ்சன், ஜெயமோகன், எஸ்.ராமகிருஷ்ணன் ஆகியோரின் எழுத்துக்களில் லயித்திருக்கிறது. குறிப்பாக பிரபஞ்சனின் 'பிரும்மம்' சிறுகதை இவருக்குள் மாற்றுச் சிந்தன்பையை விதைத்ததாகச் சொல்வார். இவரது கணிப்பில் ஜோ.டி.குரூஸ் எழுதிய ஆழிசூழ் உலகு 2000க்குப் பிறகு வெளியான புதினங்களில் முக்கியமானது.
'வண்மணல்' எனும் சிறுகதைத் தொகுப்பு, 'பெண் குதிரை' எனும் நாவல், 'கைதிகள் கண்ட கண்டம்' எனும் பயண நூல், 'மண்ணும் மனிதர்களும்' எனும் வரலாற்றும் இந்தியப் பயண நூல், 'பயாஸ்கோப்காரனும், வான்கோழிகளும்' ஆகியவை இவரது நூல்கள். இது தவிர, மலேசியத் தமிழர்களின் வாழ்வும் இலக்கியமும் எனும் கட்டுரை நூலையும் தொகுத்துள்ளார். 'கைதிகள் கண்ட கண்டம்' எனும் நூலை எழுதியதன் மூலம் இவர் மலேசியநாட்டில் பயண இலக்கியக் கட்டுரைகளுக்கான புதுப் பாதையை வகுத்துள்ளார். இந்நூலில் தன் திறமையின் மூலம் கட்டுரைக்குள் கதைக்குரிய சுவாரஸியத்தைக் கொணரமுடியும் என்றும் நிரூபித்துள்ளார். மலேசியத் தமிழிலக்கியத்தை உலகப் பார்வைக்குக் கொண்டு செல்லவேண்டும் எனும் முக்கிய நோக்கத்துடன் 93 மலேசிய எழுத்தாளர்களுடைய 50 ஆண்டு சிறுகதைகளை 'வேரும் வாழ்வும்' எனும் பெயிரில் மூன்று தொகுதிகளாகத் தொகுத்துள்ளார்.
பிற இனங்களையும் சமயங்களையும் அவற்றின் சிறப்பான கொள்கைகளையும் கூறுகளையும் போற்றி மதிக்கும் மாண்புடைய இவர் எங்கே குறை கண்டாலும் வெறுப்பவராக இருக்கிறார். அத்துடன் அதை வெளிப்படுத்தத் தயங்காத துணிச்சல் கொண்டவராகவும் அறியப் பெறுகிற இவரின் படைப்பு முதன்முதலில் தமிழகப் பத்திரிக்கையில் பிரசுரமானது 1966ல். சிங்கப்பூர் மலேசியாவுக்கு வந்திருந்த தீபம் இதழின் ஆசிரியர் நா.பார்த்தசாரதி அவர்கள் இவருக்கு நண்பராகி, சை.பீர்முகம்மது எழுதியனுப்பிய மலேசிய நிகழ்வுகளை 'கடல் கடந்த இலக்கியம்' என்ற பெயரில் தொடராகப் பிரசுரித்தார்.
இளம்/வளரும் எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் பண்பாளருமான இவர் மலேசிய தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் செயலாளர், உதவித் தலைவர், துணைத் தலைவர் ஆகிய பதவிகளை வகித்து இந்திய குத்தகையாளர் சங்கத் தலைவராகவும் பணியாற்றியுள்ளார். நல்ல எழுத்தையோ படைப்பையோ அடையாளம் காணும் போது அங்கீகரிக்கும் மூத்த மலேசிய எழுத்தாளர் மட்டுமின்றி தமிழிலக்கியம் சார்ந்த விலாசமான அறிவுடைய இவர் சுவாரஸியமான ஒரு மேடைப் பேச்சாளரும் கூட