[பூமிப்பந்தின் பல்வேறு திக்குகளிலும் பரந்து சிதறி வாழும் தமிழ் மக்களிடமிருந்து அவர்கள் வாழும் பகுதிகளில் படைக்கப்படும் கலை, இல்க்கியச் செயற்பாடுகளை அறிமுகப்படுத்தும் அல்லது ஆய்வுக்குட்படுத்தும் கட்டுரைகளை 'பதிவுகள்' எதிர்பார்க்கின்றது. ஏற்கனவே நாம் வேண்டியதைக் கருத்தில்கொண்டு மலேசியத் தமிழ் இலக்கியம் பற்றிய கட்டுரையினை எழுத்தாளர் வே.ம.அருச்சுனன் எழுதியிருந்தார். அக்கட்டுரை ஏற்கனவே பதிவுகள் இணைய இதழில் வெளிவந்திருக்கின்றது. தற்போது ஆஸ்திரேலியாவில் வசிக்கும் எழுத்தாளர் கே.எஸ்.சுதாகர் ஆஸ்திரேலியத் தமிழ் இலக்கியம் பற்றிய கட்டுரையின் முதற் பகுதியினை அனுப்பியிருக்கின்றார். அக்கட்டுரை இங்கு பிரசுரமாகின்றது. அவருக்கு எமது நன்றி. இதுபோல் ஏனைய நாடுகளிலுள்ள எழுத்தாளர்களிடமிருந்தும் கட்டுரைகளை எதிர்பார்க்கின்றோம் ஒரு பதிவுக்காக.- பதிவுகள்-] அவுஸ்திரேலியா வாழ் தமிழ் எழுத்தாளர்களைக் கருத்தில் கொண்டு காலத்துக்குக்காலம் சில இலக்கியச்சஞ்சிகைகள் சிறப்பிதழ்களை வெளியிட்டுள்ளன. 'அம்மா', கணையாழி, மல்லிகை, ஞானம், ஜீவநதி போன்ற இந்த வெளியீடுகளுக்குப் பொறுப்பாக அருண் அம்பலவாணர் (நட்சத்திரன் செவ்விந்தியன்), ஆசி கந்தராஜா, லெ.முருகபூபதி, அருண்.விஜயராணி போன்றோர் உறுதுணையாக இருந்திருக்கின்றார்கள். இந்தக்கட்டுரை அதிலுள்ள படைப்புக்களை விமர்சனம் செய்வதை விடுத்து, அவுஸ்திரேலியத் தமிழர்களின் இலக்கியச்சூழல் பற்றியும் அந்த சிறப்பிதழில் எழுதிய அவுஸ்திரேலியத் தமிழ்ப்படைப்பாளர்கள் பற்றியதுமான ஒரு அறிமுக நோக்கில் எழுதப்படுகிறது. இந்தச் சிறப்பிதழ்களில் மல்லிகை, கணையாழி, ஜீவநதி என்பவை கனதியான படைப்புகளைக் கொண்டிருந்தன.
அம்மா சிறப்பிதழ்
1999 ஆம் ஆண்டு பிரான்சிலிருந்து வெளிவந்த 'அம்மா' என்ற சஞ்சிகை ஒரு 'ஆஸ்திரேலியச் சிறப்பிதழ்' வெளியிட்டிருந்தது. அதன் தொகுப்பாளராக நட்சத்திரன் செவ்விந்தியன்1 இருந்திருக்கின்றார். தொகுப்பாளரின் படைப்பு உட்பட மொத்தம் ஆறு எழுத்தாளர்கள் பங்கு கொண்ட 'ஒரு' சிறப்பிதழ் இது. ஒரு மொழிபெயர்ப்புச்சிறுகதை (ஆழியாள்2), மூன்று சிறுகதைகள் (மாவை நித்தியானந்தன்3, ஏற்கனவே மரபு சஞ்சிகையில் வெளிவந்த வீரசிங்கம் வசந்தன்4, யோகன்5 என்பவர்களின் இரண்டு சிறுகதைகள்) மற்றும் இரண்டு கட்டுரைகள்(லெ.முருகபூபதி6, அருண் அம்பலவாணர்). இந்தச்சிறப்பிதழிலும் கவிதை மருந்திற்கும் இல்லை. மதுபாஷினி (ஆழியாள்) மட்டுமே இத்தொகுப்புக்காக தனது உழைப்பை செலவிட்டு ஒரு தரமான தமிழ்மொழிபெயர்ப்பைத் தந்துள்ளார். சல்மன் ருஷ்டியின் மொழிபெயர்ப்பு ஆஸ்திரேலியா பற்றிய ஒரு நுணுக்கமான பதிவாக அமைகிறது. இதில் தொகுப்பாளர், சிறப்பிதழ் வெளிவருவது பற்றி ஏற்கனவே உதயம் பத்திரிகையில் அறிவித்தல் கொடுத்திருந்ததாக சொல்கின்றார்.
(ஹெர்பி - ஆங்கிலத்தில் ஆர்ச்சி வெல்லர், தமிழில் ஆழியாள் ; புலம்பெயர்ந்த ஆஸ்திரேலிய தமிழர்களின் சிறுகதை இலக்கியச்சூழல் - நட்சத்திரன் செவ்விந்தியன் ; அநாதை - வீரசிங்கம் வசந்தன் ; அம்மாவின் கடிதம் - யோகன் ; கார்வாங்குதல் - மாவை நித்தியானந்தன் ; அடிலயிட் எழுத்தாளர்விழாவில் - ஆங்கிலத்தில் சல்மன் ருஷ்டி, தமிழில் நட்சத்திரன் செவ்விந்தியன் ; அவுஸ்திரேலிய தமிழ் இதழ்கள் - லெ.முருகபூபதி )
இதில் புலம்பெயர்ந்த ஆஸ்திரேலிய தமிழர்களின் சிறுகதை இலக்கியச்சூழல் பற்றி அருண் அம்பலவாணர் (நட்சத்திரன் செவ்விந்தியன்) எழுதுகையில்
1 - 'அவுஸ்திரேலியாவின் பிரபல்யமான தமிழ் எழுத்தாளர்களாக இருப்பவர்கள் லெ.முருகபூபதி, மாத்தளை சோமு, அருண் விஜயராணி போன்றவர்கள். இவர்கள் புலம்பெயர்வதற்கு முன்னரே எழுத்தாளர்களாக அடையாளம் காணப்பட்டவர்கள். இவர்கள் சிறுகதை என்ற வடிவத்தையோ சாத்தியங்களையோ அறியாதவர்கள். அறிந்தாலும் அவற்றைப் பிரயோகித்து எழுதுமளவிற்கு திறமையற்றவர்கள். இவர்கள் எழுதுபவற்றுள் பெரும்பாலானவை புதிய விசித்திரமான கதைப்பின்னலை போடுவதும் அவிழ்ப்பதுமான கதைகளே.இவர்கள் பயன்படுத்துகிற மொழியும் மிகப்பலவீனமானது'
2 - 'மாவை நித்தியானந்தனும் அ.சந்திரகாசனும் ஆஸ்திரேலிய தமிழ்ச்சஞ்சிகைகளில் சிறுகதைகளை எழுதியுள்ளனர். முதற்குறிப்பிட்டவர்கள் போலல்லாது இவர்கள் நவீன சிறுகதை வடிவத்தை அறிந்தவர்கள். தமிழின் நவீன சிறுகதைகளை வாசித்த அனுபவமுடையவர்களெனினும் இவர்களின் கதைகளும் ஆரம்பநிலையிலேயே உள்ளன. ...... வெகுகுறைவாக எழுதியுள்ள போதும் குறிப்பிடத்தகுந்த சிறுகதைகளை எழுதுபவர்களாக யோகன் என்கின்ற எஸ்.யோகானந்தனையும், பூமாமைந்தன் என்கிற வீரசிங்கம் வசந்தனையுமே குறிப்பிட முடியும். இவர்களும் இன்னும் உழைக்க வேண்டும்.'
அந்தக்கட்டுரையின் உள்ளடக்கத்தை, இன்று 13 வருடங்கள் கழிந்த நிலையில் மீள நோக்குகையில் அவரது ஆருடகம் பொய்த்துப் போய்விட்டது போலத்தான் தெரிகிறது. ஏன்? அந்தச் சிறப்பிதழைத் தொகுத்த நட்சத்திரன் செவ்விந்தியன் என்பவரே இன்று இலக்கிய உலகில் இருந்தும் ஒதுங்கிவிட்டார். அவர் குறிப்பிடும் யோகன், வீரசிங்கம் வசந்தன் என்னும் இருவரும் இன்னமும் அவுஸ்திரேலியாவில்தான் இருக்கின்றார்கள். ஆனால் எழுதுவதைவிட்டு ஒதுங்கிவிட்டார்கள். இயல்பாகவிருக்கின்ற ஆர்வம் திறமையை எந்தவொரு சக்திகளும் ஒருபோதும் தடை செய்துவிடப் போவதில்லை. அங்கீகாரம் வழங்குவதன் மூலம் எழுத்தாளன் உருவாகுவதில்லை என்பதையே இது காட்டுகின்றது.
கணையாழி சிறப்பிதழ்
ஆகஸ்ட் 2000 இல் வெளிவந்த இந்த ஆஸ்திரேலியா சிறப்பிதழின் (தொகுப்பிற்கு உதவி - ஆசி.கந்தராஜா) ஆசிரியர் தலையங்கம் இணையம் பற்றிச் சொல்கின்றது. 12 வருடங்கள் கழிந்த பின்னரும் இப்பொழுதும் பொருத்தமாக உள்ளது. இதில் செ.பாஸ்கரனின்7 'பழக்கம்', அசன்8 என்பவரின் 'அடையாளம்' என்ற கவிதைகள் உள்ளன. ஆர்ச்சி வெல்லர் என்ற பழங்குடி எழுத்தாளரின் 'கருப்புக் கண்ணீர்' என்ற கவிதையை டேவிட் சித்தையா9 என்பவர் மொழிபெயர்த்துள்ளார். பரமேஸ்வரி நல்லதம்பி10 எழுதிய 'ஆஸ்திரேலியாவின் இந்தியத்தமிழர்கள்' என்ற கட்டுரையில் ஆஸ்திரேலியாவில் மூன்றில் ஒரு திருமணம் விவாகரத்தில் முடிகின்றது எனவும் மனிதர்கள் இயந்திரங்களாக இயங்க நேரிட்டதே இதற்குக் முக்கிய காரணம் என்கின்றார். மற்றும் கலாநிதி வே.இ.பாக்கியநாதன்11 'ஆஸ்திரேலிய ஆதிவாசிகளும் அவர்களின் இன்றைய நிலையும்', மாத்தளை சோமு12 'ஆஸ்திரேலிய ஆதிவாசிக்கதைகள்', கே.எஸ்.சிவசம்பு13 'ஆஸ்திரேலியாவில் தமிழ்மொழிக்கல்வி', ம.தனபாலசிங்கம்14 'ஆஸ்திரேலியா புலம்பெயர் |மாக்கள்| கலந்திருந்து உறையும் நாடு', மா.அருச்சுனமணி15 'தென் துருவத் தமிழரும் சைவ நெறியும்' என்ற கட்டுரையையும் எழுதியுள்ளனர். முருகபூபதி 'கற்றுக் கொள்வதற்கு', த.கலாமணி 'மிச்செல்', அருண் விஜயராணி16 'தொத்துவியாதிகள்' என்ற சிறுகதைகளை எழுதியுள்ளனர். அருண்விஜயராணியின் சிறுகதையை பின்னர் தமிழ்நாட்டின் பிரபலகவிஞர் தமிழச்சி சுமதி தங்கபாண்டியனால் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டது என அறிகின்றேன். இந்தச்சிறப்பிதழின் முக்கிய அம்சமாக எஸ்.பொ17 எழுதியிருக்கும் 'இவ்வழி ஏகின் எவ்வழி புக்கும்?' என்ற கட்டுரையையும், பேராசிரியர் பொன்.பூலோகசிங்கத்தின்18 நேர்காணல் (காண்பவர் ஆசி.கந்தராஜா19) 'கலை உணர்வுகள்' என்பதையும் குறிப்பிடலாம். முன்னவரின் கட்டுரை மதம் ரீதியாக தமிழை அணுகுகின்றது, பின்னவரின் நேர்காணல் ஆஸ்திரேலியாவில் தமிழ்க்கல்வி பற்றி அலசுகின்றது.
அம்பி20 எழுதிய 'தமிழரிடையே நிலவும் மொழிப்பிரச்சினை' கூர்ந்து நோக்கப்படவேண்டயதொன்று. அவுஸ்திரேலியாவிற்கு இந்தியா இலங்கை மலேசியா சிங்கப்பூர் போன்ற நாடுகளிலிருந்து தமிழர்கள் குடியேறியுள்ளார்கள். ஒவ்வொருநாட்டிலும் வாழ்ந்து வளர்ந்தவர்களுக்கு அவர்கள் மொழிவழக்கும் சொற்களஞ்சியமுமே தெரிந்திருக்கும். அவுஸ்திரேலியாவில் வளரும் பிள்ளைகளுக்கு பாடத்திட்டத்தை எழுதும்போது எல்லாநாட்டினரையும் கருத்தில் கொண்டு ஒரு பொதுவான பாடத்திட்டமொன்றை வகுக்கப்பட வேண்டும் என்கின்ற கருத்தை வலியுறுத்துகின்றது இக்கட்டுரை.
1. அருண் அம்பலவாணர் (நட்சத்திரன் செவ்விந்தியன்) - தொண்ணூறுகளில் சரிநிகரில் எழுதத் தொடங்கியவர். இவரது முதல் கவிதைத் தொகுப்பான 'வசந்தம் 91' நான்காவது பரிமாணம் (கனடா - 1994) வெளியீடாக வந்தது. 'எப்போதாவது ஒருநாள்' கவிதைத் தொகுப்பு (தாமரைச்செல்வி பதிப்பகம், சென்னை, 1999)
2. மதுபாஷினி (ஆழியாள்) - தொண்ணூறுகளில் எழுதத் தொடங்கியவர். உரத்துப்பேச (2000, The Parker, சென்னை), துவிதம் (2006, மறு வெளியீடு, 20 Dulverton Street, Amaroo, Canberra ACT 2914, Australia) என இரண்டு கவிதைத்தொகுப்புகளைத் தந்துள்ளார். இவரது மின்னஞ்சல் - இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
3. மாவை நித்தியானந்தன் - மெல்பேர்ணில் பாரதி பள்ளி என்ற தமிழ்ப்பாடசாலையை உருவாக்கி நடத்தி வருகின்றார். பல நாடகங்களை எழுதி நெறியாள்கை செய்துள்ளார். 'திருவிழா' என்ற வீதி நாடகம் பிரபலமானது. 'பாப்பா பாரதி' சிறுவர் வீடியோ ஒளிப்பதிவு நாடா (3 பாகங்கள்- 1996), ஓவியர் மருதுவின் ஓவியங்களுடன் வெளிவந்த 'சின்னச் சின்ன கதைகள்' (1994) என்பவை இவரது நூல்கள். அத்துடன் "சின்னச் சின்ன நாடகங்கள்', 'சட்டியும் குட்டியும்', 'நாய்க்குட்டி ஊர்வலம்' என்ற நாட நூல்கள் இலக்கியன் வெளியீடுகளாக (2011) வந்துள்ளன.
4. வீரசிங்கம் வசந்தன்
5. யோகன்
6. லெ.முருகபூபதி - 1972 இல் 'கனவுகள் ஆயிரம்' என்ற மல்லிகையில் வெளிவந்த சிறுகதை மூலம் அறிமுகமானவர். 'சுமையின் பங்காளிகள்' (1975), 'சமாந்தரங்கள்' (1986), 'வெளிச்சம்' (1998), 'எங்கள் தேசம்' (2000), 'கங்கை மகள்' (2005), 'நினைவுக் கோலங்கள்' (2006) சிறுகதைகள் ; 'சமதர்ம பூங்காவில்' (1990) பயண நினைவுகள் ; 'நெஞ்சில் நிலைத்த நெஞ்சங்கள்' (1995), 'இலக்கிய மடல்' (2001), 'மல்லிகை ஜீவா நினைவுகள்' (2001), 'ராஜ ஸ்ரீகாந்தன் நினைவுகள்' (2005), 'எம்மவர்' (2001), 'உள்ளும் புறமும்' கட்டுரைகள் ; 'பறவைகள்' (2001) நாவல் ; 'பாட்டி சொன்ன கதைகள்' சிறுவர் இலக்கியம் ; 'சந்திப்பு' நேர்காணல் (1998) ; 'அம்பி வாழ்வும் பணியும்' (2203), 'இலங்கையில் பாரதி' ஆய்வு நூல்கள் ; 'கடிதங்கள்' (2001) கடித இலக்கியம். இவரது தொகுப்புகள் - நம்மவர் (மலர்), 'உயிர்ப்பு' (அவுஸ்திரேலியா தமிழ் எழுத்தாளர்களின் சிறுகதைகள்), 'வானவில்' (அவுஸ்திரேலியா தமிழ் எழுத்தாளர்களின் கவிதைகள்), Being Alive (அவுஸ்திரேலியா தமிழ் எழுத்தாளர்களின் கதைகளின் மொழிபெயர்ப்பு - மொழிபெயர்த்தவர்கள் சியாமளா நவரட்ணம், நவீனன் இராசதுரை) இவரது மின்னஞ்சல் - இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
7. செ.பாஸ்கரன்
8. அ.சந்திரகாசன்
9. டேவிட் சித்தையா - 'நாவல் வளர்ச்சி கிறிஸ்துவ இலக்கியம்' (மெய்யப்பன் பதிப்பகம், 31 சிங்கர் தெரு, பாரிமுனை, சென்னை- 1008), 'ஆறுமாதம் சிறையில் இருந்தேன் (கதைகள் - பூங்கொடி பதிப்பகம்), 'இளம் தம்பதிகளுக்கு ஓர் இனிய நூல்' (குட்புக் பப்ளிகேஷன்), 'ஐம்பது வயதுக்குப் பிறகும் அமைதியான வாழ்க்கை' (மணிமேகலைப்பிரசுரம்), 'கனவுகளைப் பற்றிய சுவையான ஆய்வுகள்' (மணிமேகலைப் பிரசுரம்)
10. பரமேஸ்வரி நல்லதம்பி
11. கலாநிதி வே.இ.பாக்கியநாதன் - யாழ்ப்பாணம் பொதுநூலகத்தில் நூலகராகப் பணிபுரிந்தவர். நூற்பகுப்பாக்கம் (அயோத்தி நூலக சேவைகள்), நூலகர் கையேடு (காந்தளகம், 1989) 2000இல் அமரத்துவம் அடைந்துவிட்டார்.
12. மாத்தளை சோமு - மலேசியத் தமிழ் உலகச் சிறுகதைகள் நூலின் ஆசிரியர். 'தோட்டக்காட்டினிலே' (மூவர் சிறுகதை), 'நமக்கென்றொரு பூமி', 'அவன் ஒருவனல்ல', 'அவர்களின் தேசம்' (1995), 'கறுப்பு அன்னங்கள்', 'மாத்தளை சோமுவின் சிறுகதைகள் (2003, பாடும்மீன் பதிப்பகம்) சிறுகதைத்தொகுப்புகள் ; 'அந்த உலகத்தில் இந்த மனிதர்கள்' (1991), 'எல்லை தாண்டா அகதிகள்' (1994), அவள் வாழத்தான் போகிறாள்', 'மூலஸ்தானம்' (1998) நாவல்கள் ; 'நான்காவது உலகம்' குறுநாவல் ; 'மாத்தளை முதல் மலேசியா வரை', 'லண்டன் முதல் கனடா வரை', 'சிட்னி முதல் நோர்வே வரை' பயணக்கதைகள் ; 'இலங்கைநாட்டு தெனாலிராமன் கதைகள்' குட்டிக்கதைகள், 'சீனத் தெனாலிராமன் கதைகள்' குட்டிக்கதைகள் 'வியக்கவைக்கும் தமிழர் அறிவியல்' கட்டுரை (2005), 'திருக்குறளுக்கான அறிவியல் அகவுரை' உரைநூல் போன்ற புத்தகங்களைத் தந்துள்ளார்.
13. கே.எஸ்.சிவசம்பு
14. ம.தனபாலசிங்கம்
15. மா.அருச்சுனமணி
16. அருண் விஜயராணி - 1972 முதல் எழுதி வருகின்றார். கன்னிகாதானங்கள் (1990, சென்னை தமிழ் புத்தகாலயம்) என்ற சிறுகதைத்தொகுதியை வெளியிட்டுள்ளார். மின்னஞ்சல் இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
17. எஸ்.பொ - இவரது மொழிப்பெயர்ப்பு நாவல்களாக 'ஹால' (2011, செம்பென் ஒஸ்மா - Sembene Ousmane என்ற செனகல் நாட்டு எழுத்தாளர்), 'தேம்பி அழாதே பாப்பா' 'Weep Not Child' (நுகுகி வா தியங்கோ என்ற கென்யா நாட்டு எழுத்தாளர்), 'மக்களின் மனிதன்' (2011, ஆபிரிக்க எழுத்தாளரான சீனு ஆச்சுபே -Chinua Achebe), 'மிரமார்' (2011, ஆபிரிக்க எழுத்தாளர் நகிப் மஹ்•பூஸ் - NaguibFouz), 'மானக்கேடு' (2011, ஆபிரிக்க எழுத்தாளர் ஜே.எம்.கேற்சி - J.M.Coetzee), 'நித்திரையில் நடக்கும் நாடு' (2011, ஆபிரிக்க எழுத்தாளர் மையா கெளரோ - Mia Couto), 'வண்ணாத்திப்பூச்சி எரிகிறது' (2011, ஆப்பிரிக்க எழுத்தாளர் ஜொன்னி வீரா - Yvonne Veera), 'கறுப்புக் குழந்தை' (2009, ஆப்பிரிக்க எழுத்தாளர் கமரா லேய் - Camara Laye).
'வீ', 'ஆண்மை', 'எஸ்.பொ.கதைகள்' என்ற சிறுகதைத்தொகுப்புகள் ; 'தீ', 'சடங்கு', 'மாயினி' நாவல்கள் ; அப்பையா, அப்பாவும் மகனும், வலை + முள், பூ, தேடல், இஸ்லாமும் தமிழும், மத்தாப்பு + சதுரங்கம், ' ? ', 'ஈடு' நாடகம் (அ.சந்திரகாசனுடன் சேர்ந்து எழுதியது), மணிமகுடம், தீதும் நன்றும், காந்தீயக் கதைகள் (2008, சிறுகதைகள்), காந்தி தரிசனம் (2008), எஸ்.பொ அறிக்கை, நனவிடை தோய்தல், நீலாவணன் நினைவுகள், முறுவல், கீதையின் நிழலிலே, 'மகாவம்ச (2009, சிங்களவர் கதை மொழிபெயர்ப்பு) என்பன இவரது நூல்கள்.பெருங்காப்பியம் பத்து (தொகுப்பாசிரியர்), இனி ஒரு விதி செய்வோம் (நேர்காணல்கள், கட்டுரைகள்) நூல், ஏறக்குறைய 2000 பக்கங்களில் எழுதப்பட்ட 'வரலாற்றில் வாழ்தல்' என்ற சுயசரிதையையும் எழுதியுள்ளார். (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும். , 1/23 Munro Street, Eastwood - NSW 2122, Australia)
18. பொன்.பூலோகசிங்கம் - 'தமிழ் இலக்கியத்தில் ஈழத்தறிஞரின் பெருமுயற்சிகள்' கட்டுரைத்தொகுப்பு (1970), 'ஈழம் தந்த நாவலர்' கட்டுரை (1997), 'இந்துக் கலைக்களஞ்சியம்' (முதலாவது தொகுதி, 1990), 'நாவலர் பண்பாடு', 'சிலப்பதிகார யாத்திரை' கட்டுரைத்தொகுதிகள்.
19. ஆசி கந்தராஜா - பதினாறு பேர்களின் நேர்முகம் கொண்ட 'தமிழ் முழங்கும் வேளையிலே' நூல் (2000), பாவனை பேசலன்றி (2000), உயரப் பறக்கும் காகங்கள் (2003) சிறுகதைத்தொகுப்புகள், HORIZON (தேர்ந்தெடுத்த 10 சிறுகதைகளை தமிழ்நட்டைச் சேர்ந்த பேராசிரியர் பார்வதி வாசுதேவ் மொழிபெயர்த்துள்ளார்) இவை மூன்றும் மித்ர வெளியீடுகள் (32/9 ஆற்காடு சாலை, கோடம்பாக்கம், சென்னை 600 024, இந்தியா. மின்னஞ்சல் - இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும். ) இவரது மின்னஞ்சல் : இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
20. அம்பி - இயற்பெயர் இராமலிங்கம் அம்பிகைபாகர். 'உலகளாவிய தமிழர்' (1999), கிறீனின் அடிச்சுவடு, அம்பி பாடல், வேதாளம் சொன்ன கதை, கொஞ்சும் தமிழ், அம்பி கவிதைகள், மருத்துவத்தமிழ் முன்னோடி டாக்டர் கிறீன், Lingering memories, Scientific Tamil Pioneer, A Strring of Pearls, பாலர் பைந்தமிழ் என்பவை இவரது நூல்கள். [தொடரும்]
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.