உடல் - அரசியல் இரண்டும் இரு வேறுபட்ட தளங்கள் உடல் தோன்றியபோது அரசியல் தோன்றவில்லை. ஆனால் அரசியல் உடலை முன்னிறுத்தித் தோன்றியது எனலாம். அரசியல் என்பது என்ன? அதிகாரத்தை நிலை நிறுத்துதலை அல்லது செயல்படுத்துலை அரசியல் எனக் கூறலாம். ஆனால் இது மட்டும் தான் அரசியலா என்றால் இல்லை., அதற்குள் பல்வேறு பட்டுணர்வுகள் அல்லது கருத்துகள் நிலவுகின்றன. அதிகாரம் செய்தலும் அரசியல் அந்த அதிகாரத்திற்கு எதிராக குரல் எழுப்புவதும் அரசியல்.
உடல் அரசியல் எனில் எதைக் கூறலாம்? எந்த வரையறைக்குள் அதை நிலைப்படுத்துவது என்ற பல சிந்தனைகள் உள்ளன. மனித உயிர் தனக்கான வாழ்வை வாழவும் கொண்டாடவும் முக்கிய கருவியாக இருப்பது உடல். அந்த உடல் தனிமனித நனவிலி மற்றும் விருப்பம் சார்ந்து மட்டும் இயங்கக்கூடியதா எனக் கேட்டால் இல்லை. அவ்வுடல் சமூகம் வரையறுத்த பண்பாடு அதிகாரம் அனைத்திற்கும் உட்பட்டு இருக்கக் கூடியதாகும். உடலின் இயக்கம் மனம் மற்றும் அறிவு சார்ந்து இயங்க கூடியது. ஒரு தனி மனிதனை எவ்வாறு சமூக மற்றும் பொதுவெளியில் ஒரு கட்டுக்குள் இயக்க இயலுகிறது., என்ற கேள்விக்கு அரசு அதிகாரம் அல்லது சமூக பண்பாடு எனப் பதிலுரைக்கலாம்.
சமூகம், கலாச்சாரம், மதம், இனம், அரசு போன்ற அனைத்தும் அதிகாரத்தின் கருத்தியலை மட்டுமே உள்வாங்கி இயங்கக்கூடியதாகும் ஆகும். எனவே மனித உயிரும் உடலும் ஒரு அதிகாரத்தின் பாற்பட்டே இயங்க நேர்கிறது. இந்த அதிகாரம் யார் கையில் உள்ளது; அரசின் கையில் அரசு புரியக்கூடிய அரசியலில். எனவே தினம் தினம் மனிதர்கள் அரசியலை கடக்காமல் அல்லது அரசியல் இன்றி இயங்க இயலாது. முன்பே கூறியது போல அதிகாரம் செலுத்தக் கூடிய அரசியல் என ஒன்று இருந்தால் அதற்கு எதிராக குரல் கொடுப்பதும் செயல்கள் புரிவதும் மற்றொரு வகையான அரசியல்.
மனித உடல் மீது நிகழும் வன்முறை என்பது மிகப்பெரிய அத்துமீறல் ஆகும். அந்த வன்முறைக்கு எதிராக குரல் எழுப்புவது உடலரசியல் ஆகும். “அடி உதவுவது போல அண்ணன் தம்பி உதவ மாட்டான்” என்ற சொல்லாடல் நமது சமூகத்தில் பரவலாக இயங்கக்கூடியது. இதன்வழி அறிவது மனித உடலை வன்முறை எனும் அத்துமீறல் வழி கட்டுக்குள் கொண்டு வருதல் காலங்காலமாக நிகழக் கூடியது என்பதாகும்.
மனித உடலின் மீது நிகழும் வன்முறையானது அனைவருக்கும் ஒன்றுபோலவே உள்ளதா எனில் இல்லை ஆண் உடலில் நிகழ்தலும் பெண் உடலில் நிகழ்தலும் பல்வேறு மாற்றப்பாடுகள் உடையது. அதிலும் உட்பிரிவுகள் பல உள்ளன. பொதுவெளி, நிர்வாகம், அலுவல், குடும்பம் எனும் பல வழிகளில் பல்வேறு வகையாக நிகழும் ஒவ்வொரு மனித உயிரும் ஒவ்வொரு மாதிரியான அத்துமீறல்களை எதிர்கொள்ள நேரிடும்.
அத்துமீறல்களைப் பேசுதல் மட்டும்தான் உடலரசியலா? நிச்சயமாக இல்லை. உடலின் உழைப்பை, வலியை, வேட்கையை, கொண்டாட்டத்தைப் பேசுதலும் உடலரசியல் தான். ஆனால் இத்தகைய உடல் அரசியல் பாலின வகையில் நிச்சயமாக மாறும் தன்மையுடையது. சான்றாக ஜவுளிக்கடையில் வேலை செய்யும் இருபாலினத்தாரில் ஆணுக்கு சற்று அதிகமாகவும் பெண்ணுக்கு சற்று குறைவாகவும் ஊதியம் வழங்குவர். ஆனால் வேலைப்பளுவும் வேலை நேரமும் மாறுபடுவதில்லை. இந்த பெண்கள் தங்களது உழைப்பு சுரண்டலைப் பேசுகையில் அதில் வெளிப்படுவது உடலரசியல். திருப்பூரில் சிவகாசியில் தொழிற்சாலைகளில் வேலை செய்யும் பெண்களும் மேற்கூறிய உடல் அரசியலில் பேசப்பட வேண்டியவர்கள் தான். இத்தகைய உழைப்புச் சுரண்டல் ஆணுக்கு நிகழும் போது அங்கு கேட்கப்படும் அல்லது செயல்படும் உடலரசியல் வேறுவிதமானது,
மண்ணில் உழைப்பா ரெல்லாம் வரியராம்
உரிமை கேட்டால் அவர் மீது அம்பு பாய்ச்சும்
புலையர் செல்வாராம்
இதை பகலெல்லாம் தம் கண் மீது கண்டு கண்டு
அந்திக்கு பின் விண்மீனாய் கொப்பளித்த
விரிவானம் பாராய் தம்பி
என்ற பாவேந்தர் பாரதிதாசனின் பாடலில் வெளிப்படுவதும் உடலரசியல். உரிமையைக் கேட்கும் உரிமை கூட இல்லாது இருந்த நிலையும் கேட்க நேரிடும் போது உடல் துன்புறுத்தப்படுவதும்; உடல் வலியின் வழி உழைக்கும் வர்க்கத்தின் உழைப்பைச் சுரண்டுதும் தெளிவாக வெளிப்படுகிறது. இது அதிகாரத்திற்கு எதிரான உடலரசியல். மனித உழைப்பைச்சுரண்ட உடலைக் கட்டுக்குள் கொண்டு வரவேண்டும் எவ்வாரெனில் தொடர் வலியைக்கொடுத்து ஒரு மிருகத்தைப் பழக்கப்படுத்துவது போன்று மனித உடலை வலிக் கொடுத்து அத்துமீறி கட்டுக்குள் வைத்து கொள்வது அதிகாரம் செலுத்தும் உடலரசியல். இவ்விரண்டையும் இப்பாடலில் உணரமுடிகிறது.
சமத்துவம் சமத்துவம் சமத்துவமேயெனப்
பிரெஞ்சு புரட்சியில் ஒலித்ததுவே யின்று
பெண்டிர் உலகத்திலும் ஒலிக்குதுவாம்
ஆண்களைக் காட்டிலும் அனைத்திலும் முன்னிற்கும்
அதிகாரம் வேண்டுமென்னும் அர்த்தமில்லை
சமமாக நிற்கின்றாள்
சமமாக உழைக்கின்றாள்
சவமாக கருதாமல்
சமமாக நினையீரோ?
என்ற கவிஞர் மணிமேகலையின் கவிதை உரத்துச் சொல்வது ஒன்றைத்தான் பாலின சமத்துவம்.
மனித உயிர் என்கிற ரீதியில் பலர் ஒடுக்கப்பட்டாலும் பெண் என்கிற பாலின ரீதியிலும் இங்கு அவள் ஒடுக்கப்படுகிறாள். இதன் மூலம் இரு வகையான ஒடுக்குதல் பெண் மீது நிகழ்கிறது. பொதுவாக ஆணின் உடல் உழைக்கும் கருவியாக மாற்றப்பட்ட நிலையில் பெண்ணின் உடல் கூடுதலாக போகப்பொருளாகவும் நோக்கப்படுகிறது.
பெண் கவிஞர்கள் எழுதும் எழுத்து புலம்பல்கள் அல்லது சுய கழிவிரக்கம் என்கிற முன்முடிவுகளுடன்தான் எழுத்துலகம் நோக்குகிறது. முற்போக்கு பேசினாலோ, புதியசிந்தனைகளை வெளிப்படுத்தினாலோ பெண்ணின் உடலரசியல் பிழையான கண்ணோட்டத்துடன் பார்க்கப்படுகிறது. எனினும் கவிஞர்கள் தனக்கான சொல்லை மொழியை தயக்கமின்றி வெளிப்படுத்துகின்றனர்.
அத்தனை எளிதில்லை - ஒரு
அலைபேசி அழைப்பை பற்றிக்கொண்டு
அன்பின் வழிநடத்தல்
அன்பின் மறுதலிப்பை அன்போடு ஏற்றுல்
பசித்த கொடிய மிருகத்தை
புன்னகைக்க வற்புறுத்தல்
பெண்ணின் உடலில் நிகழும் தேடல் அது நிகழாத போது கோபமாக மாறும் நிலையை க்ருஷாங்கினியின் கவிதை சூசகமாக சொல்லிச் செல்கிறது. தன்னுடைய விருப்பத்தைக் காதலைக் காமத்தை அவள் வெளியில் சொல்லக் கூடாது என்பதே சமூகம் வகுத்த நியதி அதை வெளிப்படுத்தும் பெண்ணைப் பொது வெளியில் பொது உடைமையாக கருதும் நிலையே உருவாகிறது. பெண்ணின் உடலரசியலை ஏற்க சமூகம் தயாராக இல்லாத நிலையில் ஒழுக்கம் கெட்டவள் என்கிற வார்த்தை அத்துமீறலைத் தொடங்குகிறது. அதன் பின்பு அது செயல்களை வெளிப்படுகிறது இறுதியில் உடம்பின் மீதான வன்முறையாகவும் மாறுகிறது. பெண்கள் அணியும் நாகரீக உடை கூட எத்தனை எத்தனை பேரைக் கோபப்படுத்துகிறது அல்லது எரிச்சலூட்டுகிறது. இருசக்கர வாகனத்தில் பெண்கள் செல்லும் போது ஏதாவது ஒரு ஆணின் வாகனத்தை முந்திச் சென்று விட்டால் அதை கூட அவர்களால் ஏற்றுக்கொள்ள இயலாது தனது வாகனத்தை இன்னும் அழுத்தமாக திருகி அதிக சத்தத்துடன் அப்பெண்ணின் வாகனத்தை முந்திச் செல்வது ஆணின் ஆதிக்கத்தைக் கூறும் உடலரசியல். பாலின பாகுபாடுகளை மீண்டும் மீண்டும் நிகழ்த்தும் செயல்களை இதுபோல இன்னும் கூறிக்கொண்டே போகலாம். சமூகத்தில் பெண்கள் சமமானவர்கள் போல ஒரு பாவனை தான் உள்ளது அந்த பாவனையை பல ஆண்கள் நிஜம் என மீண்டும் மீண்டும் தான் நம்பிக்கொண்டு பெண்கள் மீது திணிக்க முற்படுகின்றனர். பெண்களின் பொருளாதாரமோ, பதவியோ, கல்வியோ, அறிவார்ந்த செயல்களோ தான் மதிக்கப்படுகின்றன. ஆனால் பெண் உடல் என்கிற ரீதியில் பல்வேறு வகையில் தொடர்ந்து ஒடுக்கப்படுகிறாள்.
நாட்டுப்புறப் பாடலில் ஒரு பெண் பாடும் பாடல் பெண்ணின் நிலையைக் கூறுகிறது.
ஆணாய்ப் பிறந்திருந்தால்
அப்பன் வீட்டு அரண்மனையில்
அம்பெடுப்பேன் வில்லெடுப்பேன்
ஐவருடன் பந்தடிப்பேன்
வீரவாழ்வு வாழ்ந்திருப்பேன்
மாரியம்மன்கோயிலாண்டை
மண்ணாய் பிறந்திருந்தால் - எனக்கு
மாசம் ஒரு பூசை வரும்
பெண்ணாய் பிறந்த குறை
புலம்பிக் கிடைக்கலாச்சு
மண்ணுக்கு இருக்கும் மரியாதை மதிப்பு கூட சக உயிரான பெண்களுக்கு இல்லை. ஊதியம் பெற்று இருந்தாலும் வீட்டில் பெண் தனக்கான வேலையை மறுக்க இயலாது. சமூகம் குடும்பம் என்கிற ரீதியில் ஒடுக்கப்பட்டாலும் அதில் இருந்து தன்னை விடுவித்துக் கொள்வதற்கான தேடலைத் தொடங்கிவிட்டனர். தனது உடல் தனது என்பதையும் உணரத்தலைப்பட்டு விட்டனர். எனினும் பாலின சமத்துவம் என்கிற ஒன்று நிகழ சில நூற்றாண்டுகள் ஆகலாம்.