“ நீதிக்கதைகள் எங்கே போயின. “ திருப்பூர் சட்டமன்ற உறுப்பினர் குணசேகரன் அவர்கள் கேள்வி!
“ நீதிக்கதைகள் எங்கே போயின. “ திருப்பூர் சட்டமன்ற உறுப்பினர் குணசேகரன் அவர்கள் கேள்வி. “ நம் பாடத்திட்டத்திலும் வாழ்வியலிலும் உள்ள நீதிக்கதைகள் இன்றைய கால கட்டத்தில் எங்கே போயின . ரோபோக்களின் காலமாகிவிட்டது இன்று. குழந்தைகள் கைபேசிகளுக்குள் அடைக்கலமாகிறார்கள். கல்வி மன அழுத்தங்களைத் தருகிறது. புத்தகங்கள் என்றைக்கும் நண்பனாக இருக்கும். பழங்காலத்தினை நினைக்க, அசை போட , எதிர்காலக்கனவுகளை விதைக்க புத்தகங்களுக்கு முக்கியமான இடம் இருக்கிறது . புத்தகங்கள் மனிதர்களை தங்கள் பக்கம் கொண்டு வரும். மனித நேயத்தை வளர்க்கும் .பொது அறிவை வளர்க்கும் . சமூக மாற்றம் புத்தகங்களால் நிகழும் ..மத நல்லிணக்கத்திற்கு அஸ்திவாரமாய் இருக்கும் இன்றைக்கு வாசிப்பு குறைந்து வருவது வருத்தம் தருகிறது . நீதிக்கதைகள் தந்த மறுமலச்சியை நினைத்து புத்தக வாசிப்பை குழந்தைகள், இளைஞர்கள் மத்தியில் வளர்ப்பது நமது இன்றைய முக்கியமான கடமை ”
மேற்கண்டவாறு திருப்பூர் தெற்கு சட்டமன்ற உறுப்பினர் குண்சேகரன் புத்தக வெளியீட்டு நிக்ழ்ச்சியில் பேசினார். சுப்ரபாரதிமணியனின் சுற்றுச்சூழல் கட்டுரைகள் அடங்கிய “ பச்சைப் பதிகம் ” நூலை வெள்ளியன்று மக்கள் மாமன்ற நூலகத்தில் வெளியிட்டுப்பேசுகையில் இவ்வாறு தெரிவித்தார். நூலின் முதல் பிரதியை மக்கள் மாமன்றத்தின் அமைப்புத்தலைவர் சி சுப்ரமணீயன் பெற்றுக்கொண்டார் . வழக்கறிஞர் ரவி வரவேற்புரை நிகழ்த்தினார். மாமன்றத்தின் செயல் தலைவர் ராஜா, எழுத்தாளர்கள் ஆனந்த குமார், வின்செண்ட் உட்பட பல எழுத்தாளர்களும் சத்ருகன் உட்பட ,சிவாஜி மன்ற உறுப்பினர்களும் கலந்து கொண்டார்கள் சத்ருகன் நன்றி உரை வழங்கினார்.
“ பச்சைப் பதிகம் ” Rs 100 vasagasalai, Chennai Publication
பச்சைப் பதிகம் (சுற்றுச்சூழல் கட்டுரைகள்) - சுப்ரபாரதிமணியன் -
அணிந்துரை : தியடோர் பாஸ்கரன்
தமிழ்நாட்டில் பசுமை இலக்கிய வெளியில் தோன்றிய முன்னெடுப்புகளில் சுப்ரபாரதிமணியன் அவர்களின் படைப்புகள் சிறப்பிடம் பெறுகின்றன. கட்டுரைகள் மூலமும் புனை இலக்கியம் மூலமும் புறவுலகைப் பற்றிய ஒரு விழிப்பை உருவாக்கி வருகின்றார். சுற்றுச்சூழல் பற்றிய கரிசனமும் சமூகநீதி பற்றிய அக்கறையும் பின்னிப் பிணைத்துள்ளன என்பதையும் சுற்றுச்சூழல் சீரழிவால் முதல் அடி வாங்குவது ஏழைமக்கள்தான் என்பதையும் அவரது படைப்புகள் காட்டுகின்றன. இதை திருப்பூரை விடத் துல்லியமாக வேறு எந்த இடத்திலும் பார்க்க முடியாது எனலாம்.contd
இயற்கையுடனும்மற்ற உயிரினங்களுடனும் நமக்கு இருந்த மரபுப்பூர்வமான பிணைப்பு இப்போது துண்டிக்கப்பட்டிருக்கின்றது. இயற்கையினின்று நாம் அந்நியப்பட்டுப் போய்விட்டோம். நம்மைச் சுற்றியுள்ள புறவுலகை, அதிலுள்ள உயிரினங்களை நாம் கண்டுகொள்வதேயில்லை. நம் வீட்டுப் பூந்தொட்டிக்கு வரும் வண்ணத்துப்பூச்சி, மரத்தில் வந்தமரும் கரிச்சான் குருவி, நீலவானம், விண்மீன்கள், மேகக்கூட்டம் எதையுமே நாம் பார்ப்பதில்லை…இன்று பெளர்ணமி என்பதை நாட்காட்டியைப் பார்த்துத்தான் தெரிந்து கொள்கிறோம். பெருநகர வாழ்வில் அந்தஸ்து, அதன் அடையாளங்கள், பொருள், புகழ் என்று அலையும் நமக்கு இவை தெரிவதில்லை. இன்று நம்மை வதைக்கும் சூழியல் கொடுமைகளுக்கு இந்த அந்நியப்படுத்துதல் ஒரு முக்கிய காரணம்.
அறுந்து போன இந்தப் பிணைப்பு பற்றிய ஒரு புரிதல் ஏற்பட்டால் சூழலியல் சீர்கேட்டிற்கும், வறுமைக்கும் உள்ள தொடர்பு, நம் வாழ்வின் அன்றாட வளத்திற்கும் பல்லுயிரியத்திற்கும் உள்ள பிணைப்பு ஆகியவற்றை மக்கள் உணர்ந்து செயல்பட முடியும். ஆனால் தமிழ்நாட்டில் சுற்றுச்சூழல் சீரழிவு பற்றிய கரிசனம் உருவாகவில்லை. அதற்கு ஒரு காரணம் தமிழில் இந்தப் பொருள் சார்ந்த நூல்கள் மிகவும் குறைவு. ஆகையால்தான் மக்கள் சார்ந்த இயக்கம் ஒன்றும் இங்கு பெரிதாக உருவாகவில்லை (கூடங்குளம் அணுசக்தி எதிர்ப்பு இயக்கம் ஒரு விதிவிலக்கு) இந்தப் பின்புலத்தில்தான் சுப்ரபாரதிமணியனின் கட்டுரைகளை நாம் பார்க்க வேண்டும்.
சீரழிக்கப்பட்டு மறைந்து வரும் ஆறுகளைப் பற்றி எழுதுகின்றார். ஐம்பதாண்டுகளுக்கு முன் ஓடிக்கொண்டிருந்த நொய்யல் நதி இன்று அழிந்து போய்விட்டது. அதே போலத்தான் நஞ்சராயன் ஏரி பற்றி இவர் எழுதியிருப்பதும். தமிழ்நாட்டில் பல நீர்நிலைகளுக்கும் இதே கதிதான். ஏரிக்கு வரும் சிறுசிறு கால்வாய்களை மறித்து வீடுகள் கட்டி விடுவதால் ஏரிகள்வறண்டு போகின்றன; நீரற்றுக் கிடக்கும் இந்த இடத்தைக் கொஞ்சம் கொஞ்சமாக ஆக்கிரமித்து விடுகின்றார்கள். கோயம்பத்தூரில் பரந்திருந்த வாலாங்குளத்தின் இன்றைய நிலையைப் பாருங்கள்.வலசை வரும் மனிதர்களைப் பற்றி சுப்ரபாரதிமணியன் எழுதியிருக்கும் கட்டுரை அண்மையில் நம்நாட்டில் நிகழ்ந்த அவலத்தைப் பற்றிய தீர்க்க தரிசனம் போலுள்ளது.
இந்நூலில் இடம் பெற்றுள்ள காலநிலை மாற்றம், பல்லுயிரியம் போன்றகருதுகோள்களைப் பற்றிய கட்டுரைகள் எளிய நடையில் உள்ளன.சுற்றுச்சுழல் பற்றிய ஒரு பரந்த விழிப்பிற்கு இந்தக் கட்டுரைகள் உதவும் என்பதில் சந்தேகம்இல்லை.
அனுப்பியவர்: இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.