பிரபல இந்திப்பட நடிகர் தேவ் ஆனந்த் தமது 88 ஆவது வயதில் லண்டனில் மாரடைப்பால் காலமானார். இந்தி படவுலகில் நடிகர், தயாரிப்பாளர், இயக்குநர் என பல பரிமாணங்களில் ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக ஒரு ஆளுமையை தேவ் ஆனந்த் செலுத்தியிருந்தார். அவரது திரைப்பட வாழ்க்கை 1946 ஆம் ஆண்டு தொடங்கியது. அப்போது முதல் பல தசாப்தங்களுக்கு இந்தியாவில் மிகவும் அறியப்பட்ட நடிகர்-இயக்குநராக தேவ் ஆனந்த் திகழ்ந்தார். 1949 ஆம் ஆண்டு நவ்கேதன் எனும் தனது சொந்த திரைப்பட நிறுவனத்தின் மூலம் 35 க்கும் மேலான படங்களை அவர் தயாரித்திருந்தார். இந்தி பட உலகில் இன்று பிரபலமாக இருக்கும் பலர் அவரால் அறிமுகப்படுத்தப்பட்டவர்கள் என்று சுட்டிக்காட்டுகிறார் திரைப்பட ஆய்வாளரும் எழுத்தாளருமான தியோடர் பாஸ்கரன். தேவ் ஆனந்த் அவர்களின் நடிப்பின் இலக்கணம், இந்தி சினிமா கதாநயகனுக்கே உரித்தான கவர்ச்சி மற்றும் இளமைத் துடிப்புடன் கூடிய நடிப்புதான் என்றும் கூறுகிறார் தியோடர் பாஸ்கரன்.
“ஒரு சகாப்தம் முடிவுக்கு வந்துள்ளது” என்று நடிகர் அமிதாப் பச்சன் தனது டிவிட்டர் இணையதளத்தில் அஞ்சலி செலுத்தியுள்ளார்.
“உங்களுக்கு பிரியாவிடை சொல்வது வருத்தமாகவுள்ளது” என்று பிரபல எழுத்தாளர் சல்மான் ரஷ்டி கூறியுள்ளார்.
சினிமாத்துறைக்கு அவர் ஆற்றிய சேவைகளைப் பாராட்டி இந்திய அரசு தாதா சாகேப் பால்கே விருது உட்பட பல உயரிய விருதுகளை வழங்கி கௌரவித்துள்ளது.
தேவ் ஆனந்த நடித்த, பிரபல எழுத்தாளர் ஆர்.கே.நாராயன் கதையான தி கைட் மற்றும் டாக்ஸி டிரைவர் போன்ற படங்கள் அவரின் நடிப்புக்கு சான்றாக உள்ளன எனவும் திரைப்பட விமர்சகர்கள் கூறுகிறார்கள்.
4. Dev Anand - Waheeda Rehman - Guide
நன்றி: http://www.bbc.co.uk/tamil/arts_and_culture/2011/12/111204_devanand_dead.shtm