27 பிப்ரவரி 2002 எஸ்-6-கோச் சபர்மதி எக்ஸ்பிரஸ் கோத்ரா சம்பவம்-59 இந்துக்கள் எரிக்கப்பட்டது. யாரும் மறக்க முடியாத, இந்திய அரசியலையே திசைதிருப்பிய நிகழ்ச்சி இது. குஜராத்தின் சங்கப்பரிவாரப் பட்டாளங்கள் இச்சம்பவத்தைச் சாக்கு வைத்து தங்களது பா.ஜ.க. நரேந்திர மோதி அரசு எந்திரத்தின் உதவியைக் கொண்டு முகமதியர்கள் மீதான தங்கள் துவேஷத்தைக் கட்டவிழ்த்து விட்டனர். 2500 பேர் படுகொலை நூற்றுக்கணக்கில் பெண்கள் மீது வன்புணர்ச்சி, 2 லட்சத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் சொந்த நாட்டில் அகதிகளாக விரட்டப்பட்ட கொடுமை என இந்தியா பாகிஸ்தான் பிரிவினைக்குப் பின், திட்டமிட்ட சதியின் மூலம் நிகழ்த்தப்பட்டது இது. மறு விசாரணைக்குப் பின் புதிய தீர்ப்பு பல உண்மைகளை வெளிச்சத்துக்குக் கொண்டு வந்துள்ளன. மூன்றரை மணிநேரம் ஓடக்கூடிய ஃபைனல் சொலூஷன் படம் 4 பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது.
மூன்றரை மணிநேரம் ஓடக்கூடிய ஃபைனல் சொலூஷன் படம் 4 பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது.
1) பெருமிதமும் படுகொலையும் (Pride and Genocide)
2) பீதியின் சுவடுகள் (The Terror Trail)
3) துவேஷம் பரப்பும் அதிகாரம் (The Hate Mandate)
4) நம்பிக்கையும் நம்பிக்கைத்தகர்ப்பும் (Hope and Despair)
'இறுதித் தீர்வு' (Final Solution) : shttp://video.google.com/videoplay?docid=3829364588351777769#
Final Solution: http://rakeshfilm.com/finalsolution.htm
முதல் பகுதியானது படுகொலை, அதன் உடனடித் தாக்கம், சங்கப்பரிவாரங்கள் அரசுத் துணையுடன் தூண்டிய சதிப்பின்னல்களின் வடிவங்கள் ஆகியவற்றைச் சித்தரிக்கிறது.
இரண்டாம் பகுதியில், அகமதாபாத் குல்பர்க் பகுதியில் நடைபெற்ற தாக்குதல்களையும், நரேந்திர மோதியின் கௌரவ யாத்திரை வழிச்சுவட்டில் பஞ்ச் மஹல்-தேலோல், காலோல் பகுதியில் முகமதியப் பெண்மணிகளுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளை சாட்கியங்களின் மூலம் படம்பிடிக்கிறது.
குஜராத் அசெம்பிளித் தேர்தலில் கோத்ரா சம்பவத்தைச் சரியாகப் பயன்படுத்திக் கொள்ளும் சங்கப் பரிவாரப் பரிச்சாரகளத்தை மூன்றாம் பகுதி பதிவு செய்கிறது. கலவரம் முடிந்த பின்னம்-ஓராண்டு கழித்து தொடரும் வன்முறைகள், இந்து முஸ்லிம் மக்கள் மீது இதன் பாதிப்பு, தனிமைப்படுத்தப்படும் சிறுபான்மையோர், பொருளாதாரப் பகிஷ்கரிப்புக்கு உள்ளாகும் முகமதியர்கள் என ஆய்வு செய்கிறது இறுதிப்பகுதி.
புத்தரும், விவேகானந்தரும், கபீர்தாஸரும், மீராபாயும், வள்ளலாரும் இதர ஸூஃபி பக்தி மார்கிகளும் போதித்து வந்த சகிப்புத்தன்மைக்குச் சோதனை ஏற்பட்டுள்ளதை மிகச் சரியாகவே உணர்ந்து கொள்ள இந்த ஆவணப்படம் உதவும். இது புனைகதையல்ல.
பன்முகக் கலாச்சார அடுக்குகள் மூலமே நமது சமூகக்கட்டமைப்பு பலமான அஸ்திவாரத்துடன் கட்டப்பட்டுள்ளது. இதைப் பெயர்த்தெடுக்கும் சீர்குலைவுவாதிகளை இனம் கண்டுகொள்ள இத்தகயை ஆவணப்படங்கள் உதவிடும். சமூக நல்லிணக்கத்துக்கு வழிகாட்டும்.
இந்தியாவில் தணிக்கைச் சான்றிதழ் ஃபைனல் சொலூஷன் படத்திற்கு மறுக்கப்பட்டுவிட்டாலும் சர்வதேச அளவில் அதிர்வலைகளைப் படம் எழுப்பியிருக்கிறது. உல்ப்காங் ஸ்டாட் விருது நெட்பேக் சிறப்பு நடுவர் விருது பெர்லின் சர்வதேசத் திரைப்படவிழா, மனிதநேய விருது, (வெள்ளிப் பதக்கம்) ஆவணப்பட வரிசையில் ஹாங்காங் சர்வதேசத் திரைப்படவிழா என்று பெருமகளும் விருதுகளும் பெறற 40 க்கும் மேலான திரையிடல்களைச் சந்தித்து விட்டது சர்வதேசத் திரையரங்குகளிலும், தொலைக்காட்சி நிறுவனங்கள் மூலமும் மேலும் ரிலீஸ் செய்யப்பட உள்ளது.
இனி படத்தின் இயக்குநர் ராகேஷ் சர்மாவை பிரமானந்த் சிங் கண்ட நேர்காணல்:
உங்கள் படத்துக்குத் தணிக்கைச் சான்றிதழ் பெறப் போரடிய அனுபவத்தைச் சொல்லமுடியுமா?
ஜனவரியிலேயே முடிந்துவிட்ட இப்படத்திற்குத் தணிக்கைச் சான்றிதழ் இன்னும் கிடைத்தபாடில்லை திரைப்படத்தை வரவழைத்துத் திரையிட்ட விழாக்களிலும் இதர இடங்களிலும் நல்ல வரவேற்பு இருந்து கொண்டிருக்கிறது. (தணிக்கைச் சான்றிதழ் கேட்டுத் தொல்லைப்படுத்தாத இடங்களில்) படத்தின் துவக்கத்திலேயே தணிக்கைச் சான்றிதழ் பெறாத விஷயத்தைக் குறிப்பிட்டிருக்கிறேன். எப்படி இதைத் திரையிடலாம் என எனக்கு விளக்கம் கோரி பிப்ரவரி மாதத்திலிருந்தே நோட்டீசுகள் வர ஆரம்பித்தன. இதற்கு மெனக்கிடும் இவர்களுக்குச் சான்றிதழ் வழங்கத் துப்பில்லை பொறுமையுமில்லை.
அப்படியானால் தணிக்கை விவாதம் இன்னும் தொடர்வதாகத்தானே பொருள்? இவ்வாறான நீதியின் காவலர்கள் தேவையா? தடைகள் பல கடந்து முன்னேறிவரும் நாட்டுக்கு இது உகந்ததா?
கடந்த 10 அல்லது 12 ஆண்டுகளாக மீடியா வளர்ச்சி காரணமாகத் தணிக்கை விதியை உருவாக்குபவர்களிடம் எந்த நேரத்தில் எந்தச் சிந்தனை உதிக்குமென்று யாருக்கும் தெரியாது. இன்று சாடிலைட் தொலைக்காட்சி யுகத்தில் ஒரு தொலைக்காட்சி சானலின் காமிரா, தேர்தல் பேச்சுக்களைப் பதிவு செய்ய முடிகிறது ஆனாலும் அதே பேச்சின் ஒரு பகுதியை எனது படத்தில் பயன்படுத்திக்கொள்ள அனுமதிக்காக நெடுநாள் தவம் கிடக்கவேண்டியுள்ளது. நீதிமன்றத்துக்குச் சென்று, போராடி மீள்வதற்குள் படம் குளோஸ் ஆனந்த் பட்வர்த்தனின் போரும் அமைதியும் (War and Peace) படத்தையும் இப்படித்தான் தீர்த்துக் கட்டினார்கள்.
இப்படிச் செய்பவர்களுக்கு மாறிவரும் தொழில்நுட்பமாற்றம் பற்றி ஒன்றுமே தெரியாது என்று பொருளல்ல. தங்கள் பிரச்சாரத்துக்கு என்றால் இதைச் சரியாகப் பயன்படுத்திக்கொள்ளத் தெரிகிறது. உதாரணமாக விஸ்வ இந்து பரிஷத் பிரச்சார வி.சி.டி யான ராம்சேவக் அமர் ரஹா லட்சக்கணக்கில் மக்களைச் சென்றடைந்தது. சந்தையில் ரூ.50 விலையுள்ள இந்த சி.டி குஜராத் தேர்தலின்போது ரூ.5க்கு விற்கப்பட்டது. நரேந்திர மோதி இதற்கு ஒரு படி மேலேயே சென்றுவிட்டார். கோத்ரா சம்பவப் பிரச்சார வி.சி.டி.யை இந்தியா டுடே இதழின் இலவச இணைப்பாக. தனது புதுமைத்திட்டப்படி வழங்கினார். குஜராத் அரசு விளம்பரம் போன்று ஒரு சில கோடி ரூபாய் மட்டுமே செலவு அவருக்கு. அவ்வளவுதான். ஆனால் தணிக்கை போர்டுக்கு மட்டும் இதன் கொடுக்கல்-வாங்கல்-விற்றல்-விநியோகம்-திரையிடல் சட்டமீறல் பற்றி ஒன்றும் தெரியாதாம். காதில் பூ சுற்றுகிறார்கள்.
தற்சமயம் மும்பய் தணிக்கைக்குழுவில் அரசியல் கட்சிகளின் சார்பில் 12 அல்லது 13 உறுப்பினர்கள் இருக்கின்றனர். இந்தியன் எக்ஸ்பிரஸ் இதுபற்றி ஒரு கவர் ஸ்டோரியே எழுதியது. ஒரு உறுப்பினரிடம் கடைசியாகப் பார்த்த திரைப்படம் ஒன்றைக் கூறமுடியுமா? என்று கேட்டதற்கு நினைவில்லை என்றாராம். பின்னர் யோசித்து கிரிக்கெட் பற்றிய படம் அது என்று லகான் படத்தைப் பற்றிக் குறிப்பிட்டாராம். இப்படிப்பட்டவர்கள்தாம் நமது மக்கள் எதைப் பார்க்கவேண்டும் என்று தீர்மானிக்கின்றனர். கடவுள்தான் காப்பாற்ற வேண்டும்.
பெரும்பாலும் கலவரங்கள் தொடர்பான படங்களில் சித்தரிக்கப்படும் வன்முறை சாவுகள் பற்றிய எந்தக் காட்சியுமின்றி இதரவைதான் பைனல் சொலூஷனில் இடம் பெறுகின்றன என்ன காரணம்?
கலவரங்களை 1986 முதலே பார்த்துக்கொண்டு இருப்பவன் நான். திரைப்படத்தைத் தயாரிப்பது இரண்டாம் பட்சம்தான். மக்களின் எதிர்வினை, அரசியல், வன்முறையின் முரண்நிலை இவைகளையே முதலில் கையாள முற்படுகிறேன். எனக்கென்னவோ, இத்தகைய துயரம், சாவு போன்ற காட்சிகளைச் சிந்தரிப்பதில் சிக்கலிருப்பதாகவே உணர்கிறேன். 1993 மும்பாய் கலவரத்தின்போது திரைப்படத்தயாரிப்புக்கும் அப்பால் ஒன்றைச் செயல்படுத்த எண்ணினேன். மிகவும் பாதிப்புக்குள்ளான ஜோகேஷ்வரில் நிவாரண முகாம் ஒன்றை ஏற்படுத்தி என்னாலான உதவியைச் செய்தேன். இம்முறை குஜராத் சம்பவத்தின்போது நமது வரலாற்றின் திருப்புமுனையாக இது இருக்குமென்று நினைத்தேன். ஏன் சொல்கிறேன் என்றால், ஒரு அரசே வெளிப்படையாக வந்து இனவாத வன்முறையை ஆதரிப்பது இதுவே முதல் முறை. மும்பய் கலவரத்தின்போது நிகழ்ந்ததைப் போல முதல் 34 நாட்கள் நடைபெற்ற பைத்தியக்கார வெறியாட்டம் போலல்ல இம்முறை குஜராத்தில் தொடக்கதினம் முதல் எல்லாம் திட்டமிட்டபடி அரங்கேறியது. மாதக்கணக்கில் இது நிகழ்வதை அரசு அனுமதித்துக்கொண்டுதானிருந்தது. சமூக நீதியாவது, மண்ணாங்கட்டியாவது? இதைப் பொறுக்க முடியாத திரைப்பட இயக்குநர்கள், நிருபர்கள், மனித உரிமை ஆர்வலர்கள் யாராக இருந்தாலும், அரசு முடுக்கிவிட்ட இந்த பயங்கரவாதத்தை வெளிச்சம் போட்டுக் காட்ட முனைந்தவர்கள் எவராக இருந்தாலும் ஒடுக்கப்பட்டனர்.
குஜராத்தில் பெருமையைச் சிதைக்க முற்பட்டவர்களாகச் சித்தரிக்கப்பட்டனர். இத்தகைய தேர்தல் நேரச் சாகசப் பேச்சுக்கள் தேர்தலைத் தீர்மானிக்கும் உத்தியாகக் கைகொடுத்தன. இதையெல்லாம் பார்த்துக் கொண்ருந்த எனக்கு இதில் சிவற்றையாவது ஆவணப்படுத்தலாமே என்று தோன்றியது. இதற்கு ஒரு தொலைநோக்குப்பார்வை தேவை என்றுணர்ந்தேன். 30 அல்லது 40 பேர் இதே குஜராத் சம்பவம் பற்றி எடுக்கத் திட்டமிட்டிருப்பதுவும் தெரியும். இச்சம்பவத்தின் ஆதாரசுருதியான கண்ணிகள், இணைப்புகள் எங்கிருந்து தொடங்கின என்பதை ஆய்வதில் நான் தெளிவாகவே இருந்தேன். அதனால்தான் இதை ஆவணப்படுத்துவதில் தாமதம். நூற்றுக்கணக்கான மணிநேரம் செலவழித்ததில் தயாரானது பிரத்தியேகத் துண்டுப்படங்கள் (Footage)
படம் எடுக்கும்போதே உருவாக்கமும் நிகழ்ந்ததா?
வன்முறை தொடங்கியவுடனேயே களத்திற்குச் சென்றுவிட்டேன். வன்முறை ஓய்ந்த பின்னர்தான் இதைப் பதிவு செய்வதெனவும் தீர்மானித்துக் கொண்டேன். எனவேதான். தேர்தல் பிரச்சாரத்தைப் படமெடுக்க ஆரம்பித்தேன். மளமளவென தானாகவே இணைப்புகள் பின்னிக்கொண்டன. ஒவ்வொரு நிகழ்வையும் பதிவு செய்ய காமிரா எத்தனித்தபோதெல்லாம் தென்படும் சுவரெழுத்துக்களும், படங்களும் பலவற்றைச் சொல்லத் தொடங்கின. இல்லாதபட்டசத்தில், கலவரத்தின் மௌனசாட்கிகளாகிப்போன சிதிலங்கள் பேசின. ஒரு நபரைப் பேட்டி காணத் தொடங்கும்போது அவ்வழியாகத் தேர்தல் பிரச்சார வேன் ஒன்று தற்செயலாகச் செல்லும். இவ்வாறு தொடர்புகள் அடுக்கடுக்காகி விசாலப்படுத்திக்கொண்டே சென்றன. இன்னொன்றும் கூடவே நிகழ்ந்தது. மீடியா ஏற்படுத்தும் களைப்பைப் () போக்க மக்களை அனுமதித்தேன். அது சரியாகவே வேலை செய்தது. பேட்டி கொடுக்கத் தயாரானவர்களை மொய்த்துக்கொண்டது மீடியாக்கூட்டம்.
ஒலி அளவு பிசகாமல், சொன்னதையே திருப்பித் திருப்பி மனப்பாடம் பண்ணியது போல் ஒப்பித்த பாணி (ஒரு சிறுவன் 108 முறை பேட்டியெடுக்கப்பட்டு பிரபலமாகிவிட்டதாகத் தெரிவித்தான்.) சிந்தித்துக் கவனமுடன் பேசுவதிலிருந்து மாறுபட்டிருந்தது. எனவே யதார்த்தத்தை மீறிய பிரசங்கத்தனமும் படத்தில் தென்படும்.
ஒருவழியாக மீடியா களைப்பு சீரானது. படம் எடுக்கப்படும்போதே, கலவரங்களையும் தாண்டியதாக, நிகழ்வுகளின் விளைவுகளாகச் சில எதிரொலிகள் பதிவாகின. மக்கள் இழப்பு, தேசம், சமரசம், அடக்கி வைக்கப்பட்ட பொருமல்கள்.. எல்லாம் பிழைப்புக்காக-என்ன செய்வது? எனக்குத் தெரியும். எப்படியும் எனது படத்துக்குப் பல சவால்கள் எதிர்ப்படும் என்று அதனால், படத்தில் சித்தரிக்கப்பட்ட சம்பவங்களுக்கு ஆதார உண்மைகளையும் திரட்டி வைத்திருந்தேன்.
படம் எடுக்கும்போதே என்னென்ன ஆபத்துக்களை நீங்கள் சந்தித்தீர்கள்?
படத்தைத் தயாரிக்கும்போதே ஏற்ற இறக்கங்களுடன்தான் சிலர் சரியாகவே ஒத்துழைத்தார்கள். சிலரால் பிரச்சனைகள் நேர்ந்தன. படமெடுத்த மற்றவர்களுக்கு நேர்ந்த, அதே அனுபவங்கள்தாம் எனக்கும். பயங்கரவாத் தந்திரங்கள் மத்தியிலேயே நானும் சிக்கியிருந்தேன். ஆஜ் தக் நிருபர் ஓட ஓட விரட்டப்பட்டார். அவரது கையை முறிந்தனர். ஆசியன் ஏஜ் நிருபரைக் கடுமையாகத் தாக்கினர். என்.டி.டி.வி நிருபர்களும் விதிவிலக்கல்ல. பர்ககாதத் துரத்தப்பட்டதையும் கண்டேன். இப்போது மோதி என்.டி.டிவியை ஒரு வாரமாகப் புறக்கணித்தையும் மக்கள் புரிந்துகொண்டுவிட்டார்கள். இத்தகைய பயங்கரவாதம் பயம் கட்டவிழ்த்து விடப்பட்ட வேளையில்தான் 40 இயக்குநர்களும் விடாது எல்லா நிகழ்வுகளையும் ஆவணப்படுத்தினர் என்பதைச் சொல்லவேண்டும். காரணமில்லாமலேயே நான் ஒரு தடவை கைது செய்யப்பட்டேன். அத்வானியின் ரதயாத்திரையைச் சில ஆண்டுகள் முன்பு படமெடுக்கும்போது பார்த்த இரு நபர்கள் காவல் நிலையத்தில் தென்பட்டனர்.
சிலர் நட்பு கிட்டியது. இதன்பின்னும், அரைகுறையாகக் காதில் விழுந்த உரையாடல்கள் என்னை அச்சுறுத்தின. மூன்றாம் சரச் சித்தரவதைக் குள்ளாக்கப்படுவேன் என்பதை உணர்த்தினார்கள். நல்லவேளையாக நான் வைத்திருந்த அடையாள ஆவணங்கள், எனது அடையாளத்தை உணர்த்த மேற்கொண்ட சில தொலைபேசி அழைப்புகள் என்னைக் காக்க உதவின. காஷ்மீர் பயங்கரவாதியாக நான் விசாரிக்கப் படுவதிலிருந்து எப்படியோ தப்பினேன். (அவர்களுக்குள் யாரோ கொடுத்த தகவல் மூலம் இத்தகைய சந்தேகத்தின் அடிப்படையில் சிறை வைக்கப்பட்டேன்.) உள்ளுர் பத்திரிகைப் புகைப்படக்காரர்கள் என்னைப் படம் எடுத்தனர். வெளியில் பெரும்கூட்டம்.
சிலர் என்னை தாடி வைத்த முகமதியாராகப் பார்த்ததால் குழம்பிப் போனதாகச் சொன்னார்கள். அவர்களிடம் ஏன் உங்கள் மோதிகூடத்தான் தாடி வைத்திருக்கிறார், அவரையும் இப்படித்தான் நினைப்பீர்களா? என்று கேள்வி எழுப்பினேன்.
படத்தில் காட்டப்பட்ட அந்த மாணவர் சிறுவன் என்ன காரணத்துக்காக?
எப்படி இளம் உள்ளங்கள் தம்மையறியாமலேயே பலியாகிறார்கள் என்பதற்கும், எதிர்கால சமூகத்தில் இவர்களும் ஒன்றிணைந்த அங்கமாகிவிடுகிறார்கள் என்பதற்கும் அச்சிறுவன் நல்ல உதாரணம். நான் இந்து என்று சொன்னபோது அவன் முகத்தில் தோன்றிய குழப்பத்தைக் கண்டு நான் அதிர்ச்சியுற்றேன்.
இழப்புக்கான ஈடு, புனரமைப்பு போனற் பிரச்சனைகளைத் தாண்டியும் நான் போக வேண்டியிருக்கும் இத்தகைய நிகழ்வுகளில் இது சகஜம்தானே. எதிர்காலத்துக்கு எதை உருவாக்கி விட்டுச் செல்கிறோம் என்பதைக் காண்பிக்க நினைத்தேன். இளம் உள்ளங்களில் எப்படி நஞ்சு கலக்கிறது என்பதை…. .. ஐந்து மாதங்களிலே முடிந்துவிடக்கூடிய பிரச்சனையல்ல இது. இத்துவேஷ நிகழ்வுகள் யுகம் யுகமாகத் தொடரும்.
இச்சிறுவன் வாலிபப்பவருத்தில் என்னவாக இருப்பான் என்பதைச் சித்திரிக்கமுடியுமா?
அவன் பயங்கரவாதியாக மாறக்கூடாது என்பதுவே நமது விருப்பம். என்ஜினீயராவேன், மருத்துவராவேன், வழக்கறிஞராக ஆவேன், கம்யூட்டர் ஆபரேட்டராக வருவேன் என்ற பல்லவிகளை அவன் பாட வேண்டாம். இந்துக்கள் மீதான அவநம்பிக்கையை அவன் மாற்றிக் கொள்வானா? முகமதிய நண்பர்களுடன் பழகிக்கழிந்த இளமைக்காலத்தை மறந்து அவநம்பிக்கை கொள்வாளோ அச்சிறுமி? சமூகத்தில் பன்முகப் பரிமாற்றத்துக்கான வாய்ப்பே இல்லாமல் போய்விடுமோ? அப்படியென்றால் எத்தகைய சமூகத்தைப் படைக்கவிருக்கிறோம் நாம்? விடைகள் அவ்வளவு எளிதல்ல என்று தெரிகிறது.
ஆனாலும் இதற்குத் தீர்வுதான் என்னென்ன?
யூதர்களைத் தீர்த்துக்கட்டப் பழங்கிய வார்த்தையையே எனது படத்தின் தலைப்பாக வைத்துள்ளேன். ஜெர்மானிய இனத்துவேஷ இயக்கத்துக்கும் நமது தேசத்தின் காவியமாக கலுக்கும் இடையேயான ஒற்றுமைகள் கண்டேன். ஏற்கனவே தனிமைப்படுத்தப்படும் நிகழ்வுகள் தாமாகவே துவங்கிவிட்டன. பள்ளிகளில் பிரிவினைகள் ஆரம்பமாகிவிட்டன. பொருளாதாரப் புறக்கணிப்புக்கான பல அறைகூவல்கள் தயார் நிலையில் பள்ளிப்புத்தகங்களில் விஷவித்து தூவப்பட்டுவிட்டது. முப்பதுகளில் ஜெர்மனியில் இப்படித்தான் நிகழ்வுகள் துவங்கின. இப்படியே போனால் எதை நோக்கி? இறுதி தீர்வு. .. பண்பாடே துடைக்கப்படுவதற்காகவோ. இதே போன்று இல்லாவிடினும், இரண்டாம்தரப் பிரஜைகளாகச் சிலர் மாற்றப்பட்டு விடுவார்கள். எந்த இனத்தைச் சார்ந்தோர் என்பதை அடையாளங்கண்டு.
எதுதான் தீர்வு என்று ஒவ்வொருவரையும் என் படம் மூலம் கேள்வி எழுப்புகிறேன். இப்படித்தானே என்னிடமும் கேட்கப்பட்டது என்ன தீர்வு நீங்கள் சொன்னது மாதிரியே எளிதானதல்ல இதற்கா விடை நம்மிடமே இதற்கான விடை உண்டு. எனக்குக் கிடைத்த எச்சரிக்கையைக் கொண்டு உங்களை எச்சரிக்கிறேன். பங்கிட்டுக்கொள்கிறேன். தீர்வுகள் பல உண்டு. ஒவ்வொருவருமே நம்மால்
முடிந்ததைக் காணலாம். பல்வேறு கண்ணோட்டங்கள் இதில் இருக்கலாம். சிலர் வாக்களிக்க மறுக்கலாம். சிலர் இத்தகைய விழிப்புணர்வை ஏற்படுத்த நன்கொடை வழங்கக்கூடும். சிலர் கிடைத்துக்கொண்டிருக்கிற நன்கொடையை நிறுத்தக்கூடும் (தேசியவாதம், நாட்டுப்பற்று என்ற பெயரில் வெளிநாட்டு வாழ் இந்தியரின் () நன்கொடையில் ஜீவிக்கும் நடவடிக்கைகளைத் தான் இ-மெயில் மூலம் பலப்பல நடவடிக்கைகள் மூலம் எதுவானாலும் பரவாயில்லை. பலவழிகளில் ஒவ்வொருவரும் செயலாற்றவேண்டும் . .. நான் சொல்ல வேண்டுவதெல்லாம் …. .. நிலைமை இருண்டதாகவே இருக்கிறது. இதற்கு வழிதேடுவதே நமது நடவடிக்கையாக இருக்கட்டும்.
உங்கள் படங்களைத் திரையிடும்போது இதற்கு எதிர்வினை என்னவாக இருந்தது?
கிட்டதட்ட எல்லாத் திரையிடல்களிலும் சாதகமாகவே இருந்ததென்பேன். இத்தகைய அரசியலில் மிக உணர்ச்சிவயப்படக்கூடிய நாடுதான் ஜெர்மனி திரைப்பட நுட்பத்துக்காக மட்டுமின்றி, உள்ளடக்கத்துக்கும் சேர்த்து உணர்ச்சிகரமான தாக்கத்தை ஏற்படுத்தியது. பெர்லின் சர்வதேசத்திரைப்பட விழா. விருது பெற்ற திரைப்படங்களல்லாது நான்கு முறை திரையிடப்பட்ட அனுபவமுண்டு. இப்படத்துக்கு அதுவும் 100 தியேட்டர்களில் முதல் பக்கத்திலேயே திரையிடல் பற்றிய செய்தியைத் தாங்கிய பத்திரிகைகள்.
ஒரு ஆவணப்பட இயக்குநருக்கு, அதிலும் மீடியாவால் புறக்கணிக்கப்பட்டவனுக்கு இப்படியும் ஒரு வாழ்வா என்று எனக்கு உணர்ச்சிமேலிட்டது. அமெரிக்காவிலும், பிரிட்டனிலும் வலது சாரி ஆதரவுக்கருத்தைத் தாங்கிய எண்ணற்ற மனிதர்களைச் சந்தித்தேன்.
இதுவரை 40 திரையிடல்களில் 3, 4 இடங்களில் தொந்தரவு இருந்தது. (அவையோரே அவர்களை விரட்டியடித்தனர் என்பது வேறு விஷயம்) மீதி இடங்களில் சாதகமானதாகவே இருந்தது. நல்லவிதமாகச் செயல்படுகிறார்கள் இந்த வலதுசாரிகள் என்றல்லவா நாங்கள் நினைத்துக் கொண்டிருந்தோம். இத்தகைய அரசியலை ஒருபோதும் ஆதரிக்கமாட்டோம் என்று வெளிப்படையாகவே பேசினர். என் படம் இத்தகைய எதிர்வினை வரவழைத்தது பற்றி எனக்கு மகிழ்ச்சிதான். விருதுகள், சாதனைகள் என்று பெரும் வெற்றிகள் பெறுவது ஒரு ரகம். எவ்வளவு சிறிய இயக்கமானாலும் சாதகமான மாற்றத்தை வரவழைக்கும் உணர்ச்சிகரமான தாக்கத்தை ஏற்படுத்துவதாக அமைவது இன்னொரு ரகம். இரண்டுமே எனக்குக் கிட்டியதில் மகிழ்ச்சியே,
நன்றி சினிமா இன் இண்டியா
ஜுலை-செப்டம்பர் 2004
ஆங்கில இதழ் தமிழில் இரா.குமரகுருபரன்.