தீபா மேத்தாவின் 'வாட்டர்'
உலக அளவில் சில தினங்கள் கவனத்தைப் பெறுகின்றன. உதாரணமாக நண்பர்கள் தினம், காதலர்கள் தினம், அன்னையர் தினம் என்று அடுக்கிக்கொண்டே போகலாம். சில விழிப்புணர்வு தினங்களும் கவனிப்பாரின்றி நம்மைக் கடந்து செல்கின்றன. அவற்றில் மாற்றுத் திறநாளிகள் தினம் (Dec 4), குழந்தைத் தொழிலாளர்கள் தினம் (Jun 12), உலக எயிட்ஸ் தினம் (Dec 1) என்று பல முக்கியமான தினங்களைச் சொல்லலாம். "ஜூன் 23 - சர்வதேச விதவைகள் தினம்" என்று ஐநா அறிவித்துள்ளது. கைம்பெண்களின் உணர்வுகள் நசுக்கப்படும் சமுதாயம் நம்முடையது. கணவனை இழந்த பெண் தனக்குத் தெரிந்த ஆணுடன் பொது இடத்தில் பேச நேர்ந்தால் அவள் மீது சமூகத்தின் சந்தேகப் பார்வை விழுகிறது. சாதாரணமாகப் பேசினாலும் கள்ளத் தொடர்பாகத் தான் பார்க்கிறது.
"காதுகுத்து, குலதெய்வ வழிபாடு, நேர்த்திக்கடன்" போன்ற தெய்வ காரியங்களுக்கு குழந்தையின் தலையை மழிப்பது வழக்கம். குழந்தையைக் குதூகலப்படுத்த நாலு வரி பாடல் உண்டு.
"மொட்ட பாப்பாத்தி
ரொட்டி சுட்டாளாம்...
எண்ணை பத்தலையாம்
கடைக்கு போனாளாம்....
காசு பத்தலையாம்
என்ன பண்ணாலாம்?"
..............................
'கட காறன பாத்து கண்ணடிச்சாளாம்...'
பெரியவர்கள் சிரித்து, குழந்தையையும் சிரமப்படுத்தி சிரிக்கவைக்க இந்தப் பாடலை பலமுறை நான் கேட்டதுண்டு. இங்கு கடைசி வரி காட்சிப் படுத்தும் படிமம் வாழ்க்கையை இழந்தவள் மீதான தரக்குறைவான பகடி.
தீபா மேத்தா இயக்கிய "வாட்டர்" திரைப்படம் சமூகத்தால் விதவைகள் எவ்வாறு இந்தியாவில் புறக்கணிக்கப் பட்டார்கள் என்பதை விவாதிக்கும் முக்கியமான படம். பல லட்ச ரூபாய் பொருட் செலவில் கங்கைக் கரையில் தொடங்கிய படப்பிடிப்பு, சில மத அமைப்புகளின் எதிர்ப்பால் மேலும் தொடர முடியாமல் முடங்கியுள்ளது. நட்டப்பட்டு நாடு திரும்பிய தீபா மேத்தாவின் தொடர் முயற்சியால், ரகசியமாக இலங்கையில் படப்பிடிப்பை துவங்கி 2005-ல் வெளிவந்து கனடா நாட்டின் சார்பில் ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட படம்.
“A widow should be long suffering until death, self-restrained and chaste. A virtuous woman who remains chaste when her husband has died goes to heaven. A woman who is unfaithful to her husband is reborn in the womb of a jackal.” From the Laws of Manu, Chapter 5 Verse 156-161, Dharamshastras என்ற மனுசாஸ்திர வரிகளுடன் படம் துவங்குகிறது.
கங்கைக் கரையினில் 1930-களில் அமைந்த கதைக்களம். சுய்யா என்ற 7 வயதுச் சிறுமி மணப்பெண் கோலத்தில் அலங்கரிக்கப்பட்டு மாட்டு வண்டியில் அழைத்து செல்லப்படுகிறாள். கரும்பை சுவைக்கும் அவளின் மீது ஒரு மனிதனின் பாதம் படுகிறது. கரும்பின் ஒரு முனையால் எரிச்சலுடன் பாதத்தை தட்டிவிடுகிறாள். அது அவளுடைய இறந்த கணவனின் பாதம் என்று தெரியாத வயது. சில நொடிகளில் மறையும் காட்சி என்றாலும் (பிணத்தின் கால், கரும்பு, சுவைக்கும் பெண்) அற்புதமான மறைமுகக் குறியீடு.
அக்கரையில் பிணங்கள் எரிய படகில் பயணம் ஆகிறார்கள். தூங்கிக் கொண்டிருக்கும் சுய்யாவைத் தட்டி எழுப்பி அலங்காரத்தைக் கலைக்கிறார்கள். தலை மழிக்கப்பட்டு விதவைகள் காப்பகத்தில் திணிக்கப் படுகிறாள். கதவு இழுத்து அடைக்கப்படுகிறது. அன்றிலிருந்து சிறுமியின் சந்தோஷங்களும் மறுக்கப்படுகிறது.
மதுமிதா என்ற கிழவியின் கட்டுப்பாட்டில் விடுதி இயங்குகிறது. அவளின் முன்பு சுய்யா நிறுத்தப்படுகிறாள். அவளிடமிருந்து தப்பித்து ஓட நினைத்த சிறுமி விடுதியைப் புரட்டிப் போடுகிறாள். ஓடிக் கலைத்து சகுந்தலா என்ற நடுத்தர வயதைத் தொட்ட விதவையிடம் தஞ்சம் அடைகிறாள். சந்தனம் அரைக்கும் அவள் சுய்யாவின் தலையில் குளிர்ச்சி ஏற்படத் தடவுகிறாள்.
கல்யாணி என்ற இளம் விதவையுடன் மேலும் பல கிழவிகள் சாகும் வரை அந்த விடுதியில் வாழ்ந்தாக வேண்டிய நிர்ப்பந்தத்தில் இருக்கிறார்கள். காலு என்ற நாயுடனும் கிருஷ்ண வழிபாட்டிலும் பகலைக் கடத்தும் கல்யாணி, இரவில் விபச்சாரத்தில் திணிக்கப்படுகிறாள். அவள் தான் விடுதியின் வாடகைக்கும், ஒரு வேலை உணவுக்கும் மூலதனம். குலாபி என்ற திருநங்கை மூலம் வாடிக்கையாளர்களை வளைத்துப் போடுகிறாள் மதுமிதா. சகுந்தலாவும் தீவிர பக்தி உடையவள். நடுத்தர வயதைக் கடந்தவள். தனது சந்தேகங்களை மந்திரம் ஓதும் ப்ரோகிதரிடம் கேட்டு தெரிந்துகொள்வாள்.
குருஜி விதவைகள் தங்களுடைய வாழ்க்கையை எப்படி அமைத்துக் கொள்ளலாம்?
"இறந்த கணவனுடன் உடன்கட்டை ஏறலாம் அல்லது ஆசைகளை துறந்துவிட்டு வாழலாம் அல்லது குடும்பம் சம்மதிக்குமெனில் இறந்தவனுடைய சகோதரனை மணந்துகொண்டு வாழலாம்" என்று மனுதர்மம் கூறுகிறது. ஆனால் விதவைகள் சுதந்திரமாக வாழலாம் என்று இப்போது சட்டம் இயற்றி இருக்கிறார்கள்.
"அப்படியெனில் அந்த சட்டத்தைப் பற்றி எங்களுக்கு ஏன் யாரும் தெரியப்படுத்தவில்லை?" என்று அப்பாவித்தனமாக சகுந்தலா கேட்கிறாள்.
எங்களுக்குப் பயன்படாத சட்டத்தை நாங்கள் ஏன் கவனிக்கப் போகிறோம் என்ற குருஜியின் வார்த்தையை விக்கித்து கேட்கிறாள் சகுந்தலா.
கல்கத்தாவில் வக்கீல் படிப்பை முடித்து விட்டு சொந்த ஊரான ராவல்பூருக்குத் திரும்புகிறான் நாராயண். காந்தியக் கொள்கையில் தீவிர நம்பிக்கை உடையவன். தற்செயலாக கங்கைக் கரையில் கல்யாணியை சந்திக்கிறான். அவள் மீது காதல் கொண்டு திருமணம் செய்ய ஆசைப்படுகிறான். இது தெரிந்த மதுமிதா கல்யாணியை சிறை வைக்கிறாள். அந்த ஆத்திரத்தில் மதுமிதா வளர்த்த 'மித்து' என்ற கிளியை சுய்யா கொன்று விடுகிறாள்.
தாய் தந்தையரை சமாதானம் செய்து திருமணத்திற்கு சம்மதம் வாங்குகிறான் நாராயன். சகுந்தலாவின் துணிச்சலான முடிவால் கல்யாணி விடுவிக்கப் படுகிறாள். விடுதியை விட்டு வெளியேறும் கல்யாணி நாராயணனுடன் செல்கிறாள். வீட்டை நெருங்கும் சமயத்தில் அவனுடைய தந்தையின் பெயர் கேட்கிறாள். பெயரைக் கேட்டதும் படகை வந்த திசைக்கே திருப்பச் சொல்கிறாள். அதற்கான காரணத்தை நாராயன் கேட்க, "உன்னுடைய தந்தையிடம் கேள்" என்று சொல்லிவிட்டு விடுதிக்கே போகிறாள். மதுமிதா அவளை சேர்க்காததால் கங்கையில் சென்று விழுந்துவிடுகிறாள்.
திருநங்கை குலாபி மூலம் கல்யாணியின் இடத்தை நிரப்ப சுய்யாவை பயன்படுத்துகிறாள் விடுதித் தலைவி. இது தெரியாத சகுந்தலா அவளை பல இடங்களில் தேடுகிறாள். சுய்யா இருக்குமிடம் தெரிந்துகொண்டு காப்பாற்ற ஓடுகிறாள் சகுந்தலா. அதற்குள் எல்லாம் முடிந்து விடுகிறது. மயங்கிய நிலையில் இருக்கும் சூயாவை தோளில் போட்டுக் கொண்டு நடக்கிறாள். வழியில் எல்லோரும் காந்தியைப் பார்க்க ஓடுகிறார்கள். சகுந்தலாவும் அங்கு சென்று தியானத்தில் அமர்கிறாள். ரயில் புறப்படும் சமயத்தில் சுய்யாவை காந்தியிடம் கொடுக்க ஓடுகிறாள். அதே ரயிலில் நாராயணும் இருக்க அவனிடம் சேர்பிக்கிறாள். அதனுடன் சுபம்.
நல்ல கதையம்சமுள்ள படமாக இருந்தாலும் குறைகளும் ஏராளமாக இருக்கின்றன. சகுந்தலாவாக நடித்த சீமா பிஸ்வாஸ், சுய்யாவாக நடித்த சரளா, விடுதித் தலைவி மதுமிதா, குந்தி ஆகிய பாத்திரங்களை ஏற்றவர்கள் நிறைவாக செய்திருக்கிறார்கள். கல்யாணி மற்றும் நாராயன் கதாப்பாத்திரத்தில் வந்த லீசா ரே மற்றும் ஜான் அப்ரஹாம் நடிப்பு படு மோசம். தேவையில்லாத பாடல்கள் (AR ரகுமான்) படத்தின் வேகத்தைக் குறைக்கிறது. அதை சரிகட்டும் விதமாக பின்னணி இசை (மைக்கேல் தன்னா) அமைந்துள்ளது.
படத்தின் ஜீவனே இந்தக் கதாப்பாத்திரங்களில் தான் இருக்கிறது. இயக்குனர் கவனம் எடுத்து கையாண்டிருக்கலாம். அதே போல நாராயன் முதன் முதலாக காதல் சொல்ல வரும் இடத்தில் ஜீவனே இல்லை. விதவையை மணக்க இருப்பதாக தாயிடம் சொல்லும் இடத்திலும் சொதப்பி இருக்கிறார்கள். தாயும் மகனும் முட்டிக்கொள்ளும் படி எடுத்திருந்தால் உச்ச காட்சியாக அமைந்திருக்கும்.
கோவத்தில் கிளியை சிறுமி கொள்வதாக எடுத்ததற்கு பதில், வானில் பறக்கவிட்டிருக்கலாம். விடுபட்ட கிளி மீண்டும் விடுதிக்கே வந்துவிடுவதாகவோ அல்லது இறைகிடைக்காமல் கங்கைக் கரையில் ஒதுங்கும் படியோ காண்பித்திருந்தால் அழகிய குறியீடாக அமைந்திருக்கும். பறவை பறந்து எங்கோ சென்றிருந்தாலும் விதவைகளின் சுதந்திரம் தொடங்கியதற்கான ஆரம்பக் குறியீடாக அதனைக் காட்சிப்படுத்தி இருக்கலாம்.
சுயாவைத் தவிர மற்ற அனைவரும் முதியவர்கள் என்பது நெருடலாகவே இருந்தது. இன்னும் ஓரிரு சிறுமிகளை கதாப்பாத்திரங்களாக்கி, அவர்கள் விடுதி வாழ்க்கைக்கு பழக்கப்பட்டது போல காண்பித்திருந்தால் இன்னும் சிறப்பாக அமைந்திருக்கும். மொத்தத்தில் இன்னும் கொஞ்சம் ஆழமாக தோண்டி இருந்தால் தண்ணீர் தெளிவாகவும், சுவையாகவும் இருந்திருக்கும். அதற்கான பலனும் கிடைத்திருக்கும்.
நிலா நிலா ஓடிவா
நில்லாமல் ஓடிவா
மலை மீது ஏறிவா
மல்லிகைப் பூ கொண்டுவா
நிலவின் முகம் குழந்தையின் முகமாகத்தான் இருக்க வேண்டுமா என்ன? புரட்சியின் முகமாக இருக்கக் கூடாதா? நில்லாமல் ஓடி, மலைமீது பூ எடுப்பவர்கள் மறுமலர்ச்சிக்காக எடுக்கக் கூடாதா? 2001-ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் படி இந்தியாவில் 35 மில்லியன் விதவைகள் இருக்கிறார்கள். அவர்களின் வாழ்க்கைத் தரம் பெரிதாக ஒன்றும் உயர்ந்துவிடவில்லை. அவர்களின் நிலை மாறி சமூகத்தில் உயர்ந்த நிலையை அடைய 'விதவைகள் தினம்' போதுமான விழிப்புணர்ச்சியை ஏற்படுத்துமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்
நன்றி: திட்டிவாசல் வலைப்பதிவு http://thittivaasal.blogspot.com/2010/12/blog-post_28.html