நடிகை சுஜாதாவின் மறைவு தென்னிந்திய திரைப்படத் துறைக்குப் பேரிழப்பாகும் என்பதைத் திரைப்பட ரசிகர்கள் கட்டாயம் ஏற்றுக் கொள்வார்கள். திரைப்படத் துறையில் எனக்கு உள்ள ஈடுபாடுகாரணமாக இக்கட்டுரையை வரையவேண்டும் என்ற ஆர்வம் எனக்கு ஏற்பட்டது. எனவேதான் சுஜாதாவைப் பற்றிய கட்டுரை ஒன்றுடன் துயர் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். 58 வயதான நடிகை சுஜாதா சில மாதங்களாகச் சென்னையில் நோய் வாய்ப்பட்டிருந்தார். அவருக்கு மேற்கொண்ட சிகிட்சை தகுந்த பலன் தராததால் சென்ற புதன் கிழமை (06-04-2011) இவர் சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார்.
நடிகை சுஜாதா எங்கே பிறந்தார் என்பதில் உள்ள கேள்விக்கு இதுவரை சரியான பதில் கிடைக்கவில்லை. 1952ம் ஆண்டு மார்கழிமாதம் 10ம் திகதி நடிகை சுஜாதா இலங்கையில் பிறந்தார் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இலங்கையில் எந்த இடத்தில் பிறந்தார் என்பதற்கான சரியான விவரம் கிடைக்கவில்லை. 1950 களில் கேரளாவில் இருந்து யாழ்ப்பாணம் வந்து கல்வி கற்பித்த பல மலையாள ஆசிரியர்களில் அவரது தந்தையும் ஒருவர். இவரது தந்தையாரான ஆசிரியர் மேனன் அவர்கள் சிறந்த விலங்கியல் ஆசிரியராகத் திகழ்ந்தார். இவர் 1956ம் ஆண்டுவரை யாழ்ப்பாணக் குடாநாட்டிலே உள்ள தெல்லிப்பழை மகாஜனாக் கல்லூரியில் கல்வி கற்பித்தாக முன்னாள் மகாஜனாக் கல்லூரி அதிபர் பொ. கனகசபாபதி அவர்கள் உறுதி செய்திருந்தார். மேனன் தனது குடும்பத்தோடு தெல்லிப்பழையில் தங்கியிருந்தாகவும் தெரியவருகின்றது. எனவே 1952ம் ஆண்டு மார்கழி மாதம் 10ம் திகதி பிறந்த நடிகை சுஜாதா அவர்கள் தெல்லிப்பழையில் பிறந்திருக்கலாம் என்று ஊகிக்கமுடிகிறது. ஆசிரியர் திரு.மேனனின் வெற்றிடத்தை நிரப்பவே 1957ம் ஆண்டு திரு. பொ. கனகசபாபதி அவர்கள் விலங்கியல் ஆசிரியராக மகாஜனாக் கல்லூரிக்குச் சென்றதாகத் தெரிவித்தார். பின் அவர் மகாஜனாக் கல்லூரியின் அதிபராகவும் பணியாற்றினார். கனடாவில் உள்ள சில மகாஜனாக்கல்லூரி பழைய மாணவர்களும் தாங்கள் 1954,1955களில் திரு. மேனனிடம் விலங்கியல் கற்றதாகத் தெரிவித்தனர். நடிகை சுஜாதா இலங்கையின் தென்பகுதியில் உள்ள காலி என்ற இடத்தில் பிறந்ததாகவும் சிலர் குறிப்பிடுவர். ஆனால் மகாஜனாக் கல்லூரியில் இருந்து மாற்றலாகி 1956ம் ஆண்டுதான் ஆசிரியர் மேனன் அவர்கள் காலிக்குச் சென்றதற்கான குறிப்புகள் இருக்கின்றன. அச்சமயத்தில் நான்கே வயதான சுஜாதா பள்ளிக்குச் சென்றிருக்க வாய்ப்பில்லை. எனவே தந்தையாரின் காலிக்கான இடமாற்றத்தின் பின்புதான், சுஜாதா காலியில் உள்ள றிப்பொன் பெண்கள் பாடசாலையில் ஆரம்ப கல்வியைக் கற்றார். எனவேதான் நடிகை சுஜாதா பிறந்த இடம் காலி என்று சிலர் நம்புகின்றனர். தென்னிலங்கையில் கல்வி கற்றதால் தமிழைவிட சிங்களத்திலும், ஆங்கிலத்திலும் அவர் புலமை பெற்றிருந்தார். புதின்ம வயதுவரை இலங்கையில் வாழ்ந்த சுஜாதா, அவரது 14வது வயதில் பெற்றோருடன் கேரளாவிற்குத் திரும்பிச் சென்று அங்கே தனது கல்வியைத் தொடர்ந்ததாகத் தெரிய வருகின்றது. நடிகை சுஜாதாவின் தாய் மொழி மலையாளம் என்பதும் குறிப்பிடத்தக்கது.
நடிகை சுஜாதாவை ஜோசி பிரகாஷ் என்பவர்தான் முதன் முதலாக மேடை நாடகமான பொலீஸ் ஸ்டேசனில் நடிக்க வைத்தது மட்டுமல்ல, திரையுலகத்திற்கும் அறிமுகப் படுத்தினார். இவரது கணவரின் பெயர் ஜெயகர். சஜீத் என்ற ஆண் மகனுக்கும், திவ்யா என்ற பெண்ணுக்கும் இவர் தாயாவார். டூ கல்யாண் (1968) என்ற இந்திப் படத்திலும், தபாஸ்வினி என்ற மலையாளப் படத்திலும் இவர் முதலில் தோன்றினாலும் ஏர்ணாம்குளம் ஜங்ஷன் என்ற மலையாளப்படத்தில் நடித்த போதுதான் கே. பாலச்சந்தரின் கண்களில் பட்டார். 1974ல் பிரபல இயக்குனரான கே. பாலச்சந்தர் எடுத்த அவள் ஒரு தொடர் கதை என்ற படம் தான் சுஜாதாவைச் சிறந்த ஒரு நடிகையாகத் தமிழ் திரையுலகில் இனம் காட்டியது. எம்.எஸ்.விஸ்வநாதனின் இசையமைப்பில் வெளிவந்த இந்தப்படத்தில் சுஜாதாவுடன் கமலஹாசன், ஸ்ரீபிரியா, விஜயகுமார் ஆகியோர் நடித்திருந்தனர். 1976ல் வெளிவந்த இளையராஜாவின் பாடல் மூலம் பிரபல்யமான அன்னக்கிளியில் கதாநாயகியாக நடித்ததன் மூலம் மேலும் இவரது புகழ் ஓங்கியது. மீண்டும் இவர் 1977ல் கே. பாலச்சந்தரின் ‘அவர்கள்’ படத்தில் ரஜினிகாந், கமலஹாசன் ஆகியோரோடு அனு என்ற பாத்திரமேற்று நடித்துப் புகழ் பெற்றார்.
அன்றைய பிரபல தமிழ்த் திரைப்படத்துறை நடிகர்களான சிவாஜி கணேசன், கமலஹாசன், ரஜனிகாந் ஆகியோரோடு கதாநாயகியாக நடித்த பெருமை இவருக்கு உரியது. இவர் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்திப் படங்களிலும் நடித்திருக்கிறார். அக்னி நாகேஸ்வரராவ், சோபன்பாபு, கிருஷ்னா, மோகன்பாபு, சிரஞ்சீவி போன்றவர்களோடும் வேற்று மொழிப் படங்களில் நடித்திருக்கின்றார்.
அமரர் நடிகை சுஜாதா அவர்கள் சுமார் 150 படங்கள் வரை நடித்திருப்பதாகத் தெரியவருகின்றது. இதில் சுமார் 50 மேற்பட்ட தமிழ்ப்படங்களும் அடங்கும். இவர் கதாநாயகியாக மட்டுமல்ல 1980 களின்பின் தாயாரின் பாத்திரம் ஏற்றுத் திறமையாக நடித்துப் பலரின் பாராட்டையும் பெற்றுக்கொண்டார். இவர் நடித்த கடல் மீன், அந்தமான் காதலி, விதி, கோயில்காளை, புனர்ஜென்மம், உன்னை நான் சந்தித்தேன் போன்ற படங்கள் பலராலும் பாராட்டப் பெற்றன. இவர் நடித்த கடைசிப்படம் தெலுங்கில் வெளிவந்த நாகர்யுனாவின் படமான ஸ்ரீ ராமதாசு (2006) என்பதாகும். ரஜனிகாந்தின் பாபா படத்தில் (2002) ரஜனிகாந்தின் தாயாகவும் இவர் நடித்தார். இவரது கடைசித் தமிழ் படமான வரலாறு படத்தில் (2004) அசினின் தாயாராக நடித்தது உங்களுக்கு ஞாபகமிருக்கலாம். இவர் தனது சிறந்த நடிப்பிற்காக தமிழக அரசின் கலைமாமணி, மற்றும் நந்தி விருது போன்றவற்றைப் பெற்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.