அத்தியாயம் மூன்று: சித்துவான் தேசிய வனம்
அந்தி மயங்கிய நேரத்தில் இரண்டு, மங்கிய மஞ்சள் நிறக் கண்கள் இமைக்காது என்னை ஊடுருவியவாறு இருந்தது. இதுவரையில், இவ்வளவு அருகில் காரியல் முதலையை (Gharial Crocodil) அருகில் சென்று பார்த்ததில்லை. இதுவே சந்தனு மகாராஜாவின் மனைவியான கங்காதேவி பயணித்த வாகனமாக சொல்லப்படுகிறது.
மரக்கட்டைபோல் தூரத்தில் தெரிந்தபோதும் அருகே நெருங்கிப்பார்த்தபோதுதான், பிரவுண் நிற வட்டமான கண்கள் நீளமான பலம்வாய்ந்த தாடை பெரிய மூக்கு பகுதி செதில்கொண்ட முதுகாக நாலடி நீளத்தில் அசையாது ஆற்றங்கரையில் கிடந்தது. அதனது பார்வை தொடர்ந்து என்னை குத்துவதுபோல் இருந்தது.
இந்த உலகத்தில் உனது முப்பாட்டன் பிறக்க முன்பே நான் பிறந்தேன். பல மில்லியன் வருடங்கள் முன்பு இந்த உலகத்தையே ஆண்ட டைனோசரின் உறவினன் நான் தெரியுமா?
இப்படியான அலட்சியமான எண்ணம் அதனது மனதில் இருப்பது தவிர்க்கமுடியாது.
ரப்ரி நதி இமயமலையின் சாரலில் இருந்து வரும் சிறிய ஆறு . நாங்கள் தற்போது நிற்கும் காட்டு விடுதிகளுக்கும் சித்துவான் தேசிய வனத்திற்கும் இடையே ஓடுகிறது.
நாங்கள் ஆறு மணித்தியாலங்கள் வீதி மார்க்கப் பிரயாணத்தில் புக்கராவிலிருந்து சித்துவான் தேசியவனம் பார்க்கச் சென்றோம் . இந்தத் தேசிய வனத்தில் வங்காளப்புலிகளும் ஒற்றை கொம்புள்ள காண்டாமிருகம் வாழ்கிறது . தங்கும் விடுதிக்கு செல்ல மாலை ஐந்து மணியாகிவிட்டது. அறையில் பெட்டிகளை வைத்து விட்டு அருகே இருந்த ஆற்றை நோக்கிச் சென்றோம். அப்பொழுது ஆற்றின் கரையில் இருவர் முழுமரத்தில் கோதி எடுத்த படகோடு நின்றார்கள் . மிகவும் புராதன தொழில்நுட்பம் – எனக்கு இராமாயணத்தில் படகோட்டிய குகனின் ஞாபகம் வந்தது . பேசமொழி தெரியாது. சமிக்ஞைகளில் பேசிய எங்களை, எங்களது பிரயாண வழிகாட்டி ஆற்றில் படகில் போக ஒழுங்கு படுத்தி, தானும் ஏறிக்கொண்டார்
அமைதியான நதியில் மெதுவாக மேலும் சென்றபோது கரையில் முதலைகள் பல நீளங்களில் படுத்துக் கிடந்தன. உள்ளே ஏற்பட்ட பயத்தை வெளிக்காட்டாது, அருகே செலுத்தச் சொன்னேன் . காரியல் முதலை (Gharial Crocodil) இந்திய உபகண்டத்திற்கு பிரத்தியேகமானது . பாகிஸ்தான் , நேபாளம் மற்றும் இந்தியாவின் ஆறுகளில் முக்கியமா கங்கை – சிந்து நதிகளில் வாழ்கின்றன. இவை சேற்றில் வாழும்( mugger crocodile) முதலையுடன் சேர்ந்து வாழ்கின்றன .இரண்டும் உருவத்தில் மிகுந்த வேறுபாடுள்ளவை. முதலைகளைக் கடந்து சென்றபோது கொக்குகள், நாரைகள் ,மீன்கொத்திகள் என ஏராளமான பறவைகளை ஆற்றில் காணக்கூடியதாக இருந்தபோதும், என்னைக் கவர்ந்தவை Ruddy Shelducks எனப்படும் நீர்ப்பறவைகள். செம்மண்ணிறத்தில் வாத்துபோல தெரிந்தாலும் அவைகள் வாத்துக் குடும்பங்களல்ல .
இந்தப் பறவைகள் உள்ளூர் வெளியூர் என பயணித்தபோதும் ஆண் – பெண் சோடியாக தங்களது காலம் முழுவதும் ஒன்றாகச் சீவிக்கும். ஒன்று இறந்தால் மற்றது பட்டினி கிடந்து உயிர் விடும் . நேபாளத்தில் காதல் பறவைகள் எனச் சொல்லப்படும் இவை ஐரோப்பா மற்றும் சீனா, மங்கோலியா போன்ற நாடுகளில் இருந்து 22 000 அடி உயரத்தால் பறந்து இமயமலையைத் தாண்டி குளிர்காலத்தில் இங்கு வருபவை . இவைகள் எக்காலத்திலும் நேபாளிகளால் கொல்லப்படுவதில்லை . அந்த மாலை நேரத்தில் இந்தப்பறவைகளின் சத்தமும் இனிமையான சங்கீதமாக இருந்தது.
அடுத்தநாள் காலை ஒன்பது மணிக்கு சித்துவான் வனச் சவாரிக்கு யானையில் செல்வதற்கு மறுத்து, ஜீப்பில் சென்றோம். காடு முழுவதும் முகில் மூடியிருந்ததால் எதுவும் தெரியவில்லை. கிட்டத்தட்ட 1000 சதுர கிலோமீட்டர் கொண்ட இந்த வனம் இந்தியாவின் வால்மீகி தேசிய வனத்தோடு சேர்ந்து கொள்கிறது .1984 இல் ஆரம்பிக்கப்பட்ட இதன் பாதுகாப்பு நேபாள நாட்டின் இராணுவத்திடமுள்ளது.
முதல் இருமணி நேரமும் அதிகதூரம் பார்க்க முடியவில்லை. வாகனத்திற்கு அருகில் வருபவை புள்ளிமான்கள் மட்டுமே அத்துடன் மயில்கள் பயமின்றித் திரிந்தன . காண்டாமிருகம்புள்ளிமான்
புலிகளைத் தேடிய பயணத்தில் இறுதியாக ஒரு மரத்தில் கீறப்பட்டிருந்த அடையாளத்துடன் இங்கு புலி வந்த மணமிருப்பதாக எங்கள் வழிகாட்டி கூறினான் . வரும் வழியில் ஆற்றுக்கு ஒரு பக்கத்தில் புலி தண்ணீர் அருந்த வரும் என்று காத்திருந்தோம் . பிரயோசனமில்லை . ஒற்றைக்கொம்பு ரைனேசர் படுத்திருந்தது. எழும்ப மறுத்தது . வாகனத்தை அருகில் செலுத்தவோ நாங்கள் இறங்கவோ முடியாது .
வங்கப்புலிகளை காணாதபோதும் அழகான அடர்த்தியான மழைக்காடு . மறக்க முடியாத நான்கு மணிநேரப் பயணமாக அமைந்தது.
அன்று மாலையில் மீண்டும் ஆற்றில் பயணிக்க முடிந்தது .அரைமணி நேரப் படகுப் பயணத்தில் நாராயணி ரிப்ரி ஆறுகள் அந்தி மயங்கும் நேரத்தில் ஒன்று கூடும் இடத்தைப் பார்க்க முடிந்தது . புத்தபெருமான் அவதரித்த லும்பினி
நேபாளப் பயணத்தில் இறுதியாகச் செல்லும் இடமாக கவுதம புத்தர் அவதரித்த லும்பினி இருந்தது. நேபாளத்தில் சாக்கிய வம்சமென்பது தற்பொழுது அங்கு தமிழ் நாட்டில் முதலியார் – பிள்ளை என்பதுபோல சாதிப்பேராக மாறிவிட்டது.
புத்த மதம் பல காரணங்களால் எனக்கு நெருங்கியது . கட்டளைகளாக எதுவுமில்லாது, ஒழுக்கத்தையும் அறத்தையும் கடமைகளாகக் கொண்டு (சீலம்) மக்கள் வாழவேண்டுமெனச் சொல்வதுடன், தற்போதைய ஜனநாயக வாழ்வு முறைக்குள் வரக்கூடிய ஒரே மதமாகத் தெரிகிறது.
இரண்டாவதாக புத்த மதத்தின் பிரிவுகளை தேரவாதம், மாகாஜான மற்றும் தாந்திரீக பிரிவுகள் மட்டுமல்ல, அவற்றில் உள்ள உட்பிரிவுகளை தத்துவ பிரிவுகளாக ஏற்று வாதங்களை மேலெடுக்கிறது.
மூன்றாவதாக குட்டையாக மாறாது ஓடும் நதியாக வெவ்வேறு காலங்களில் பிரதேசத்திற்கேற்ப தன்னை மாற்றிக் கொள்கிறது.
நான்காவதாக புத்தருக்குப் பின்பாக நாகார்ச்சுனர் (இந்தியா) பத்மசம்பாவ (தீபெத்) போன்ற முக்கியமானவர்களுக்குப் பிறகு ஒவ்வொரு நாட்டிலும் பல உட்பிரிவுகள் உருவாக்கப்பட்டிருக்கின்றன.
இறுதியாக அடுத்த உலகத்தைப் பேசும்போது இவ்வுலகத்திலும் மனிதர்களின் அகத்தேவைகளுக்காக நடனம் ,ஓவியம், இலக்கியம், என்பவைகளை மதத்தோடு வளர விட்டுள்ளது
உண்மைதான். சீனாவிலும் யப்பானிலும் நாட்டில் உடைவுகள் உருவானபோது தேசியத்தை உருவாக்கி நாட்டை பலப்படுத்தப் பயன்பட்டுள்ளது. தொடர்ச்சியாக அறநெறியை வலியுறுத்தியபடி மாற்றங்களைத் தொடர்ந்து ஏற்றபடி பயணிக்கும் ஒரே மதமாகவும் எனக்குத் தெரிகிறது.
பல காலமாக பார்க்க நினைத்திருந்த, புத்தர் அவதரித்த லும்பினிக்கு நெருங்கியபோது அந்தத் தெருவெங்கும் மேடுபள்ளமாக கிளறியபடி இருந்தமையால் நாங்கள் சென்ற ஜீப் வாகனம் உழவு யந்திரமாக மாறியது. சுற்றியுள்ள இடங்கள் எல்லாம் புழுதியால் மறைந்திருந்தது . ஜீப்பின் கண்ணாடிகள் மூடியிருந்தபோதும் வாய்க்குள் கபிலவஸ்துவின் மண் கடிபட்டது. அந்த மண்வாசனையை நுகர்ந்தோம்.
எந்த நாட்டிலும் பகுதி பகுதியாகவே பாதையைத் திருத்துவார்கள். ஆனால், நேபாளத்தை ஆளும் கம்யூனிஸ்டுக்கள் முழு நேபாளத்தையும் ஒரே நேரத்தில் கிளறுகிறார்கள் என்று நினைத்தேன் . இறுதியில் விடுதியை அடைந்தபோது வாகனம் போகாது பாதைகள் மூடப்பட்டிருந்தது . சுற்றி வந்தோம் . அந்தப் பகுதியிலிருந்த கடைகள் வியாபார நிலையங்களைப் பார்க்கப் பரிதாபமாக இருந்தது.
நாம் ஒருநாள் பயணத்தில் இப்படி குறைபடுகிறோம் . ஆனால் பாவம் அவர்கள். அன்றாடம் என்ன செய்வார்கள்?
கொரோனாவின் காரணமாகச் சீனா மூடப்பட்டுவிட்டது . உல்லாசப்பிரயாணிகள் குறைந்த காலம். அதிகமானவர்கள் விடுதிகளில் இல்லை. வயல் வெளிகள் ஊடாக உழவு யந்திரத்தில் வருவதுபோல் வந்து சேர மாலை மூன்று மணியாகிவிட்டது . அடுத்தநாள் காலை வெளியேறவேண்டும்.
உடனடியாக உணவருந்திவிட்டு லும்பினி பூங்கா சென்றோம். மூன்று மைல் நீளமும் ஒரு மைல் அகலமுமான யுனெஸ்கோவால் அங்கீகரிக்கப்பட்ட பிரதேசம்.
வாகனத்தில் போகவேண்டும். ஆனால் , எமது வாகனத்தை உள்ளே அனுமதிக்கவில்லை . எமது ஜீப்பை தவிர்த்து ஓட்டோவில் சென்றோம் . ஆனால் எமது வாகனத்தை விடப் பெரிய வாகனங்கள் உள்ளே சென்றன . ஆக மொத்தம் புத்தர் அவதரித்த இடத்திலும் விசேட சலுகை பெறலாம்..
ஒவ்வொரு நாட்டினரும் தங்களது யாத்திரிகர்களுக்கு மடாலயங்கள் நடத்தி பராமரிக்கிறார்கள் . மதகுருமாருக்கு நிரந்தர வசிப்பிடங்கள் உள்ளன. நான் இலங்கையில் பிறந்தவனாகையால் இலங்கையின் மடாலயத்திற்கு சென்றேன் . பெரிய கட்டிடம் ஆனால் பராமரிப்பு குறைவாக உள்ளது. காற்றினால் ஓடுகள் கிளம்பி இருந்தது.
மாயாதேவி குழந்தையை பிரசவிக்கத் தாய் வீடு சென்றபோது பிரசவம் நடந்தது . இங்கு தாய்க்கே பிரதான கோயில் – மாயாதேவி கோயில். இங்கு புத்தர் பிறந்த இடமாக வெள்ளை நிறத்தில் ஓரு இடமுள்ளது. அவர் பிறந்த உடனே எழுந்து நடந்ததாகக் கதைகள் சொல்லப்படுவதால் புத்தரின் காலடித்தடங்கள் உள்ளது. புத்தரை மாயாதேவி நின்றபடியே பிரசவித்தார். மும்மூர்த்திகள் அங்கு சென்றார்கள் என பல கதைகள் உள்ளன. இவைகள் நம்பிக்கை உள்ளவர்களுக்கான விடயம்.
இந்தக் கோவிலின் அருகில் பிக்குகளது மடங்கள் உடைந்த நிலையில் உள்ளன . அவை செங்கட்டிகளால் ஆனதால் பிற்காலத்தில் உருவாக்கப்பட்டதாக இருக்கலாம். இந்தப்பிரதேசம் வணக்கத்துக்குரிய இடமாகப் புத்தர் பிறக்குமுன் ஐநுறு நூற்றாண்டுகள் முன்பே இருந்தற்கான ஆதாரங்கள் இருக்கின்றன.
அசோகமன்னன் இங்கு வருகை தந்து கற்தூணை எழுப்பினார். அன்று முதல் இந்த இடத்தை புத்தபகவான் பிறந்த இடமாகப் பிரகடனம் செய்ததுடன், இந்த இடத்தில் உள்ளவர்களுக்கு வரிச்சலுகை அளித்தாகவும் பிரகிருத எழுத்தில் எழுதப்பட்டுள்ளது.
மகத நாட்டை ஆண்டு மவுரிய அரச பரம்பரையை உருவாக்கிய சந்திரகுப்த மன்னனின் காலத்தில் பிரமி எழுத்துரு இருக்கவில்லை என ஆராச்சியாளர்கள் சொல்கிறார்கள் . அவனது பேரானகிய அசோகனது காலத்தில் பல செய்திகள் கல்வெட்டுகளில் எழுதப்படுகிறது .
10 ஆம் நூற்றாண்டில் இரஸ்சிய மொழிக்கு அக்காலத்தில் இரண்டு சகோதரர்களால் பைசன்ரீனிய மன்னரின் கட்டளைப்படி ( Cyril and Methodius) எழுத்து மொழி உருவாகியது.
அதுபோன்று ஏற்கனவே வட இந்தியாவில் பேசப்பட்ட சமஸ்கிருதம் – பாலி மொழிகளின் உச்சரிப்பிற்கேற்ப அசோகனின் கட்டளையில் பிராகிருத எழுத்து உருவானதாகப் பலர் நம்புகிறார்கள். ஓலை, துணி, மரப்பட்டை போன்றவற்றில் எழுதப்பட்டபோதும் பின்னாளில் கல்லில் எழுதியதாலேதான் தெளிவாக ஆதாரத்துடன் நமக்கு கிடைக்கிறது
மதமும் தேசபக்தியும் பலவேளைகளில் தர்க்கத்திற்கு அப்பாற்பட்டவை. எனது வழிகாட்டி, நேபாளத்தின் சில பகுதிகளில் இந்தியா தொடர்ந்து தனது படைகளை வைத்திருக்கிறது என பல தடவை வரைபடத்தில் காட்டினான் .
தற்போதைய நேபாளத்தின் அந்தப் பகுதி அக்கால அசோகனிடம் இருந்திருக்கவேண்டும். அல்லாதபோது லும்பினியில் அசோகனது கல்வெட்டில் எப்படி இந்த இடத்திற்கு வரி விலக்கு கொடுக்கமுடியும்? என்றேன்.
இந்த இடம் எப்பொழுதும் நேபாளத்தின் நிலமென்றான்.
மாயாதேவி புத்தரை பிரசவிப்பதற்கு முன்பாக நீராடிய புஸ்கரணி (Puskarani) என்ற பொய்கையும் உள்ளது. சிறிது அருகே நின்ற அரசமரத்தருகே இலங்கையில் இருந்து வந்த பக்தர்கள் குழுவாக உச்சரித்தபடி நின்றனர்.
என்னைத் தொடர்ந்து சில நிமிடங்களில் ஓர் இலங்கை பிக்கு வந்தார் . யாசகம் கொடுப்பது எனது வழக்கமில்லை . மேலும் எத்தனை பேருக்கு கொடுக்க முடியும் ?
பிக்குகள், பணத்தையோ பொருளையோ அடுத்த வேளைக்கு சேமித்து வைக்கக்கூடாது என்று புத்தர் தனது சங்கத்திற்கு அறிவுறுத்தியது நினைவுக்கு வந்தபோது, எனது கையில் நேபாளிய பணமிருக்கவில்லை. வழிகாட்டியிடமிருந்து கடன் வாங்கி 100 ரூபா நேபாளிய நோட்டைக்கொடுத்தேன் .
லும்பினியில் பல நாடுகள் விகாரைகளும் மடங்களும் அமைத்துள்ளன பெரும்பான்மையானவை மகாயான பவுத்த பிரிவைச் சேர்ந்தன.. மக்கள் தயாராகும் வரை காத்திருக்கும்படி சாக்கிய முனி சொல்லியதாக கூறி சூனியவாதத்தை (Emptiness) வலியுறுத்தும் மகாயானம் பல அடுக்குகள் கொண்டது அது பற்றி பேசுதல் இங்கு அதிகமானது .
இரண்டு மணித்துளிகள் மட்டும் லும்பினியில் செலவழிக்க முடிந்தது.
[முற்றும்]
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.