18 நாட்கள்: மொரோக்கோ – மதினாக்களின் நாடு. June 20, 2016
தொலைந்துபோக…
நமது பயணத்தில் சென்ற மூன்றாவது நாடு மொரோக்கோ. இந்த நாடு இரண்டு வகையில் எங்களுக்கு முக்கியமானது. முதலாவது ஆபிரிக்க கண்டத்திலுள்ள ஒரு நாட்டிற்கு முதன் முதலாக செல்கின்றோம். இரண்டாவது இதுவே நாம் செல்கின்ற முதல் முஸ்லிம் நாடுமாகும். இந்த நாட்டின் பழங்குடி மக்கள் பாபர் (Berber) என்ற மனிதர்கள். இவர்கள் இந்தியாவிலிருந்து வந்திருக்கலாம் என நம்பப்படுகின்றது. இயற்கையுடன் வாழ்ந்த இந்த மக்களையும் நாட்டையும் ஒன்பதாம் நூற்றாண்டிற்கு முதல் ரோமர்கள் ஆக்கிரமித்து ஆண்டார்கள். வரலாறு எழுதும் மேற்குலகினர் ரோமர்கள் பிற்காலங்களில் இந்த நாட்டை விட்டு விட்டுச் சென்றதாகவும் முஸ்லிம்கள் பின் ஆக்கிரமித்ததாகவும் எழுதுகின்றார்கள். இஸ்லாமிய வரலாற்றாசிரியர்களோ பாபர்கள் கடவுளின் தூதர்களை எதிர்பார்த்திருந்தாகவும் முஸ்லிம்கள் வந்தபின் இஸ்லாமே தமது மதம் என உணர்ந்து ஏற்றுக் கொண்டார்கள் என்றும் கூறுகின்றார்கள். இவ்வாறுதான் வரலாறு என்பது ஆதிக்கத்திலிருப்பவர்களின் வரலாறாகவே உள்ளது. ஆனால் வரலாறுகளை எழுதும் பெரும்பாலானவர்கள் இன்னுமொரு நாட்டை தமது நாட்டினிர் மதத்தினர் ஆக்கிரமித்து ஆண்டார்கள் என்ற உண்மையைக் கூறுவதுமில்லை. ஏற்றுக்கொள்வதுமில்லை. ஆரம்பகால பாபர்கள் இந்த ஆக்கிரமிப்பாளர்களின் வருகையை எப்படிப் பார்த்தார்கள் என ஒருவரும் கூறுவதில்லை. இதுவே வரலாறுகளின் தூரதிர்ஸ்டம். இப்பொழுதும் இவர்களில் பெரும்பாலானவர்கள் காடுகளிலும் மலைகளிலும் பாலைவனங்களிலும் அலைந்து திரிந்தே வாழ்கின்றனர்.
இந்த நாட்டை அரேபியர்கள் 9ம் நூற்றாண்டில் ஆக்கிரமித்தபின் முதல் மதீனா 10ம் நூற்றாண்டில் வெஸ்சில் (Fes/Fez) கட்ட ஆரம்பிக்கப்பட்டு 15ம் நூற்றாண்டுவரை தொடர்ந்தது கட்டி முடிக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக மொரோக்கோவின் பல நகரங்களில் மதீனாக்கள் கட்டப்பட்டன. இன்று மொரோக்கோ பல மதீனாக்களைக் கொண்ட ஒரு நாடு. தான்ஜீர் (Tangier). செவ்செவ்வோன்(Chefchaouen). வெஸ் (Fez). மரகாஸ் (Marrakesh) மற்றும் பல நகரங்களிலும் பெரிய சிறிய மதீனாக்கள் உள்ளன. தொலைந்து போக விருப்பமானவர்களுக்கும் தொலையாமல் இருப்பதற்கான சவாலை எதிர்கொள்பவர்களும் பயணிக்க வேண்டிய நகரங்கள் இவை. ஏனெனில் இந்த மதினாக்கள் திட்டமிட்டு கட்டப்பட்டவையல்ல. மதினாக்களின் மத்தியில் கஸ்பா அல்லது ரியாட் ஒன்று முதன் முதலாக கட்டப்பட்டுள்ளது. அதனுடன் இணைந்து தமது தேவைக்கும் விருப்பத்திற்கும் புதிதாக குடியேறியவர்கள் சிறிய கஸ்பாக்களையும் சிறிய பெரிய ரியாட்களையும் கட்டியுள்ளார்கள். வெளியிலிருந்து பார்க்கும் பொழுது சிறிய வீடுகளாக இருக்கும். ஆனால் உள்ளே சென்றால் அழகிய வேலைப்பாடுகளுடன் பெரிய நாற்சதுர வீடுகளாக இருக்கும். கஸ்பா என்பது ஒரு குடும்பத்திற்குரியது. நான்கு கோபுரங்களைக் கொண்ட நாற் சதுர வீட்டின் ஒவ்வொரு கோபுரத்திலும் ஒரு மனைவியார் என மொத்தமாக நான்கு மனைவிமார் வசிக்கலாம். ரீயாட் என்பது கொஞ்சம் பெரியதும் வசதியானதுமாகும். சிலவற்றில் நடுவில் நீந்திக் குளிப்பதற்கான வசதிகளும் பூந்தோட்டங்களும் உள்ளன.
இந்த வசிப்பிடங்களுக்கான வீதிகள் மிகவும் குறுகியவையாகவும் சுற்றிச் சுற்றி செல்பவையாகவும் திடிரென்று முடிபவையாகவும் இருக்கும். இக் குறுகிய வீதிகளின் மேலாலும் வீடுகள் விஸ்தரிக்கப்பட்டு கட்டப்பட்டிருக்கும். ஆகவே பல இடங்களில் இக் குறுகிய வீதிகள் இருட்டாக இருக்கும். சில சந்திகளில் மட்டுமே வெளிச்சங்கள் உள்ளன. ஆகவே இதனுடாக நடந்து திரிவதற்கு ஒரு மனப்பயம் தயக்கம் உள்ளது. இந்த மதீனாக்களைச் சுற்றி உயரமான பெரிய சுவர்கள் கட்டப்படிருக்கின்றன. ஒவ்வொரு மதீனாக்களுக்கும் பல வாசல்கள் இருக்கின்றன. இவை முக்கியமான சந்திகள். அடையாளங்கள். இதிலிருந்து வெளியேறுவதற்கான ஒரே வழி மேல் நோக்கி அல்லது கீழ் நோக்கி செல்லும் குறுகிய பாதையால் தொடர்ந்து சென்றால் எதாவது ஒரு வாசலை அடையலாம். காலை வேளைகளில் ஒரு வாசலினுடாகப் பயணித்து மீண்டும் அதே வீதியால் வருவது என்பது மிகவும் சவாலான விடயம்.IMG_1031 ஏனெனில் பத்து மணியின் பின் பல கடைகளை திறக்கப்பட்டு புதிய பாதையாக காட்சியளிக்கும். மீள வருவதற்கு நாம் வைத்திருந்த குறிப்புகளை கண்டுபிடிப்பது மிகவும் கஸ்டமானதாக இருக்கும். இப்படி காலை மதியம் மாலை இரவு என ஒவ்வொரு நேரத்திற்கும் வித்தியாசமான ;தோற்றத்தை தருபவையாக இந்த் மதீனாக்கள் இருக்கின்றன. இதற்குள் கார்கள் தடை செய்யப்பட்டுள்ளன. தள்ளு வண்டில்களும் கழுதைகளும் மட்டுமே; பயன்படுத்தப்படுகின்றன. பல இடங்களில் நீர் விநியோக தாங்கிகள் அழகாக கட்டப்பட்டு நீர்ப்பாசனத் திட்டம் சிறப்பாக செயற்படுத்தப்படுகின்றது. இதிலிருந்து வரும் நீரையே அனைவரும் எல்லாவற்றுக்கும் பயன்படுத்துகின்றனர்.
குடிநீர்
பல மாற்றங்கள் இவர்கள் வாழ்வில் ஏற்பட்டபோதும் இன்னும் பழங்கால நடைமுறை வாழ்வுடன் குறிப்பாக மதீனாக்களின் உள்ளே வாழ்கின்றார்கள். பார்பர்களின் தான்ஜீர் (tagine) உணவு வகைகளே பிரபல்யமாக இருக்கின்றன. இதைவிட இனிப்பு பண்டங்களும் மாலை நேரத்தில் வீதியோரத்தில் பெண்கள் விற்கின்ற தோசை ரொட்டி போன்ற உணவு பிரபல்யமானவை. அதேநேரம் கடந்த கால வாழ்வுமுறைகள் இன்று வெறுமனே சான்றுகளாக மட்டுமே உள்ளன. உதாரணத்திற்கு முன்பு இவர்களின் வீடுகளில் இரண்டு விதமான அழைப்பு மணிகள் உள்ளன. ஒன்று குடும்பத்தாருக்கு. மற்றது வெளியாருக்கு. இந்த அழைப்பு மணியின் ஒலிக்கு ஏற்ப வீட்டினுள் இருக்கின்ற பெண்கள் உள்ளறைகளுக்குச் செல்வார்கள். அல்லது அப்படியே இருப்பார்கள். இந்த அழைப்பு மணி உள்ள கதவுகள் இன்றும் உள்ளன. ஆனால் யாரும் பயன்படுத்துவதில்லை.
இந்த நாடு பிற்காலங்களில் ஸ்பானியர்களாலும் பிரான்சினாலும் ஆக்கிரமிக்கப்பட்டு 1956ம் ஆண்டு விடுதலையடைந்தது. அராபிய மொழி உத்தியோக பூர்வ மொழியாகப பயன்படுத்தப்படுகின்றது. இருப்பினும் பிரஞ்சு மொழியைப் பெரும்பாலானவர்கள் சாராளமாகப் பேச சிலர் ஸ்பானிய மொழியையும் பேசுகின்றார்கள். இந்த மூன்று மொழியும் தெரியாமல் இந்த நாட்டில் பயணிப்பது என்பது கொஞ்சம் கஸ்டமான காரியம். ஏனெனில் ஆங்கிலம் பேசுகின்றவர்கள் மிக மிகக் குறைவு.
இன்று ஒரு மொரோக்கோ பிரஜையாக இருப்பதற்கு முஸ்லிமாக இருக்க வேண்டியது அவசியமாகும். இந்த நாட்டில் சக மத பிரஜைகளாக யூதர்கள் மட்டுமே இருக்கின்றனர். மற்றும் படி எந்த சக மதத்தினரும் பிரஜைகளாக முடியாது என்கின்றது சட்டம் எனக் கூறுகின்றார்கள். இந்த நகரங்களில் பல திசைகளில் இருக்கின்ற பல பள்ளிவாசல்களில் இருந்து ஐந்து தொழுகைக்கான நேரங்களின் போதும் ஒரே நேரத்தில் பாங் ஒலி கேட்கும். இதுவே இது ஒரு முஸ்லிம் நாடு என்பதை பறைசாட்டிக் கொண்டிருக்கும்.
பயணத்தின்போது பாதுகாப்பாக பயணிக்கலாம். அதிகம் பிரச்சனையில்லை;. பெண்கள் தனியாக பயணிப்பது கொஞ்சம் கஸ்டம். கவனமாகப் பயணிக்க வேண்டும். முடிந்தளவு அதிக மனிதர்கள் கூட்டமாக இருக்கின்ற இடங்களில் சுற்றித் திரிவது நல்லதும் பாதுகாப்பானதுமாகும். இருப்பினும் சில பெண்கள் தனியாகச் சுற்றித் திரிகின்றார்கள்.
உல்லாசப் பயணிகள் என அடையாளம் கண்டால் பலர் பல சமான்களை விற் ஓடிவருவார்கள். சிறுவர்களிலிருந்து பெரியவர்கள் வரை மதீனாக்களை சுற்றிக் காட்ட முன்வருவார்கள். தாம் உதவி செய்ய விரும்புவதாக கூறுவார்கள். நாம் வழியைத் தவறவிட்டவர்கள் என அறிந்தால் தாம் வழிகாட்டுவதற்கு முண்டியடிப்பார்கள். இவர்களது உதவியை ஏற்றுக் கொண்டு சென்றால் இறுதியில் அவர்கள் கேட்கும் பணத்தைக் கொடுக்க வேண்டும். ஆகவே ஆரம்பத்திலையே கேட்பதற்கு நன்றி எனக் கூறி தவிர்த்துவிட வேண்டும். முதல் முறை ‘சுக்கிரான்’ என நன்றி தெரிவிக்கலாம். அல்லது இன்னும் உறுதியாக கூறுவதாயின் ‘லா சுக்கிரா’ சொன்னால் மீளவும் கேட்கமாட்டார்கள். மேலும் குறிப்பாக பாலைவனங்கள் அல்லது நகரை அல்லது மதீனாவைச் சுற்றிப் பார்க்க யாரையாவது நியமித்தால் அவர்களுடன் தெளிவான உடன்பாட்டிற்கு எழுத்து மூலம் வாருங்கள். மேலும் அவர்கள் கூறுகின்ற பணத்திலிருந்து ஒன்றில் மூன்று பங்கை கேட்கலாம். அரைவாசிக்கு கூட செல்லாது பார்த்துக் கொள்ள வேண்டும்.
அடுத்த பதிவில் மொரோக்கோவின் ஒவ்வொரு நகரங்களிலும் நாம் பெற்ற அனுபவங்களை எழுத முயற்சிக்கின்றோம்.
நோர்வேயில் நான்கு நாட்கள் July 8, 2016
ஸ்பெயினிலிருந்து நோர்வேக்குப் பயணமானோம். நாம் வருவது நோர்வேக்குப் பிடிக்கவில்லையோ என்னவோ நன்றாக மழை பெய்தது. மப்பும் மந்தாரமுமாகவே இருந்தது. நோர்வேயில் நம்மை அழைத்துச் செல்ல (தங்கையின் கணவரின்) உறவினர் ஒருவர் வந்ததினாலும் அவர் வீட்டில் தங்கியதாலும் பல பிரச்சனைகள் தீர்க்கப்பட்டன. கத்திரிக்காய் பிரட்டல் மற்றும் பருப்புக் கறியுடன் நல்ல தமிழ் சாப்பாடு. வயிறு நிறைய நன்றாக சாப்பிட்டோம்.
நோர்வே வந்தவுடன் சஞ்சயன் தன்னை அழைக்கும் படி கூறியிருந்தார். மதிய சாப்பாட்டின் பின் அவரை அழைத்தேன். அவர் தனக்கு வேலை முடிந்து விட்டதாகவும் தான் அழைத்துச் செல்ல வருவதாகவும் கூறினார். நோர்வேயிலுள்ள முக்கியமான மிக உயரமான ஸ்கேட்டிங் செய்கின்ற இடத்திற்கு அழைத்துச் சென்றார். பின் தமிழ் கடை ஒன்றில் சூசியமும் சாப்பிட்டு தேநீரும் குடித்தோம். இரவு வீட்டில் கொண்டு வந்து விட்டுவிட்டுச் சென்றார்.
நாம் தங்கியிருந்தது ஒஸ்லோவின் எல்லைக்கு அருகாமையில் இருந்த கிராமம் ஒன்றில். காலை எழும்பி நாமாகவே பஸ் பிடித்து ஒஸ்லோ நகருக்குச் சென்றோம். திங்கட்கிழமை எவ்வாறு சுவிடனுக்கு செல்வது என விசாரித்தோம். புகையிரதத்திற்கு 1500 குரோணரும் பஸ்சிற்கு 500 குரோணரும் சொன்னார்கள். இப்படிச் செல்வதா அல்லது பணத்தைச் சேமிப்பதற்காக றிட்சக்கில் (Hitchhik) செல்வதா என யோசித்தோம். மற்றவர்களுடன் உரையாடிவிட்டு முடிவெடுப்போம் எனப் பிற்போட்டோம்.
ஒஸ்லோவின் முக்கியமான ஒரு இடமான ஒபேரா கவுஸ் பார்க்கச் சென்றோம். மழையில் நனைத்து சென்ற எமக்கு ஏமாற்றமே காத்திருந்தது. அன்று அது முடியுள்ளதாக கூறினார்கள். மீண்டும் மழையில் நனைந்தவாறு நடந்து வந்து பெரும் மழைக்கு ஒதுங்கி காத்திருந்தோம். நன்றாக பசி எடுக்க பக்கத்தில் இந்தியன் கடைகள் இருக்கா என நம் தொலைபேசியில் தேடினோம். பக்கத்தில் பஞ்சாபி கடை இருப்பதாக கூறியது. அதை நோக்கி செல்லும் பொழுதே சஞ்சயனுக்கு அழைப்பு விடுத்தோம். அவர் தான் கொஞ்சம் பிந்தி வருவதாக கூறி எங்களைச் சாப்பிடச் சொன்னார். 90 குரோணருக்கு ஒரு தாளி இருந்தது. இரண்டு தாளிகள் எடுத்தோம். நல்ல சாப்பாடு. சாப்பிட்டு முடிய சஞ்சயனும் தனது மகளுடன் வந்தார். மகளை கடை ஒன்றில் இறக்கிவிட்டு நாம் நோர்வே தமிழர்கள் “தூசனப் பார்க்” (Vigeland /Frogner Park) என அழைக்கின்ற ஒரு பார்க்கிற்கு சென்றோம்.
நமக்கு எல்லாவற்றையும் எதிர்மறையாகவும் தவறாகவுமே பார்த்துப் பழக்கம். அது “தூசனப் பார்க்” இல்லை. ஒரு சிற்பக் கலைஞர் (Gustav Vigeland) மனித உறவுகளையும் உணர்ச்சிகளையும் மட்டுமல்ல உணர்வுகளையும் மிக அழகான சிற்பங்களாக வடித்திருக்கின்றார். இருபது வருடங்களுக்கு மேலாக இந்த சிலைகளை செதுக்கியுள்ளார். அனைத்து சிற்பங்களும் நிர்வாணக் கோலத்தில் இருப்பதால் அவை “தூசனப் பார்க்” என நம் தமிழர்களால் அழைக்கப்படுகின்றது. ஆனால் இந்த சிற்பங்கள் நிர்வாணத்திற்கும் அப்பால் மிக நுண்ணுணர்வுடன் செதுக்கப்பட்டவை. முள்ளந் தண்டின் எலும்புகள் மட்டுமல்ல அதிலிருக்கின்ற ஏற்ற இறக்கங்களும் ஒவ்வொரு மனிதரின் வயதிற்கு ஏற்ப அவர்களின் உடல்களில் ஏற்படும் மாற்றங்களையும் மிக நூணுக்கமாக செதுக்கி வடிவமைத்த சிலைகள் இவை..
மாலை தமிழர்கள் நிர்வகிக்கும் அழகான கடை ஒன்றில் தேநீரும் நல்ல வடையும் சாப்பிட்டோம். றிப்னாட்டிசம் மூலமாக மன நோய்களைத் தீர்க்கும் நல்லையா பத்மநாதன் அவர்களும் எம்மைச் சந்திக்க வந்தார். இச் சந்திப்பை முடித்துக் கொண்டு சரவணனின் வீடு நோக்கி சென்றோம். சராவுடன் இரவு உணவை முடித்துக் கொண்டு 12 மணிபோல வெளியே வந்தால் அப்பொழுதுதான் இருள ஆரம்பித்ததுபோல மெல்லிய இருட்டு சூழ்ந்திருந்தது. சஞ்சயன் நாம் தங்கியிருந்த வீட்டில் எம்மைக் கொண்டு வந்து விட்டுவிட்டுச் சென்றார்.
காலை எழும்பி நமது உடைகளை கழுவிவிட்டு 12 மணிபோல ஒஸ்லோ நகரை நோக்கி பஸ்ஸில் சென்றோம். ஒருவருக்கான பயணச் சீட்டின் விலை 75 குரோணர். சாப்பாடு, பயணச் செலவுகள் மட்டுமல்ல தண்ணீரும் விலை கூடிய நாடு. ஆனால் இவர்களது குழாயில் வரும் நீர் குடிப்பதற்கு நூறு வீதம் உத்தரவாதமானது. இன்று இன்னுமொரு இந்தியன் கடையில் சாப்பிட்டோம். ஒருவருக்கு 99 குரோணர் கொடுத்தோம். மாமிசம் சாப்பிடுபவர்களுக்குப் பரவாயில்லை. மரக்கறி உண்பவர்களுக்கு பயனற்றது.
சாப்பிட்டுவிட்டு சிறிது தூரம் நடக்க இளவாளை விஜேயேந்திரன் ஏற்கனவே கூறியபடி அழைத்தார். தான் இன்னும் 10 நிமிடங்களில் வந்து ஏற்றுவதாக கூறி வந்தார். அவருடன் கற்காலத்தில் பயன்படுத்திய கற்கள் இருந்த இடத்தைச் சுற்றிப் பார்க்கச் சென்றோம். இது இன்னுமொரு முக்கியமான வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பார்க் (Ekebergparken). இரண்டு மூன்று கிலோ மீட்டர்கள் சுற்றி நடக்க வேண்டும். மழையும் தூரிக் கொண்டிருந்தது. பெரும் மழை பெய்யும் சாத்தியமும் தெரிந்தது. பெரும் மழை பெய்தால் திரும்பி வருவோம் எனத் தீர்மானித்துக் கொண்டு சென்றோம்.
இங்கு ஒளியில் ஒரு படைப்பை ஒருவர் உருவாக்கியிருக்கின்றார். குகை போன்ற இடத்தினுள் செல்ல நமது வல மற்று இடப் புறங்களில் ஒளியின் நிறங்கள் மாறும். அதன் அருகில் சென்றுபார்த்தால் அது ஒரு பாதாளம் போல தோன்றும். அல்லது அண்ட வெளிபோல தோன்றும். அதைக் கடந்து இன்னுமொரு இடத்திற்குச் செல்ல மேலே வட்டமாக ஒரு வெளி. கீழே நாம் இருப்பதற்கு வட்ட வடிவிலான இருக்கை. அதில் இருக்கும் பொழுது அந்த அமைதியில் தியானம் தானாக நடைபெறுகின்றது. நாமாக அமைதியாகவில்லை. அந்த சூழல் அமைதியை உருவாக்க நாமும் அதை உள்வாங்கி அமைதியாகின்றோம். மிக இனிமையான வித்தியாசமான அனுபவம். ஒஸ்லோவின் அருகில் இருந்தும் பலர் சென்று பார்க்கவில்லை எனக் கவலைப்பட்டார்கள்.
இந்த இடத்திலிருந்து விஜேயின் வீடு நோக்கிச் சென்றோம். அவரது துணைவியார் ஆறு கறிகளுடன் சோறு சமைத்திருந்தார். பசியில் படம் எடுக்க மறந்துவிட்டோம். நல்ல வெட்டு ஒன்று வெட்டிவிட்டு உதைப்பந்தாட்டத்தைப் பார்த்துக் கொண்டிருந்தோம். விஜேயேந்திரன் அதிபர் கனகாசபாபதி மீது மிக அதிகம் அன்பும் மதிப்பும் வைத்திருக்கின்றார். அவர் நான்கு வருடங்கள் மட்டுமே அதிபராக இருந்தபோதும் பாடசலையிலும் மாணவர்களின் கல்வியிலும் ஏற்பட்ட முன்னேற்றங்களையும் கூறினார். அதிபரைப் பற்றிக் கதைக்க ஆரம்பித்தால் தொடர்ந்து கதைத்துக் கொண்டிருப்பார் என அவரது துணைவியார் கூறினார்.
இரவு 12 மணிபோல நமது வீட்டில் அவரும் அவரது மகனும் கொண்டுபோய் விட்டார்கள். காலை எழுந்து சுவிடனுக்குப் பயணமானோம். றிட்சக் செய்வோம் என யோசித்தோம். ஆனால் நமது தோலின் நிறத்திற்கு அது சவால் நிறைந்த பயணம். இவ்வாறு சிந்தித்தனால் காலை பஸ்ஸை தவறவிட்டு மதியத்திற்கே பதிவு செய்ய முடிந்தது. விஜேயேந்திரன் நாம் தங்கியிருந்த வீட்டுக்கு வந்து நம்மை அழைத்துச் சென்றார்.
நோர்வேயில் ஒஸ்லோ நகரில் தங்குவதற்கும் சுற்றிப் பார்ப்பதற்கும் சங்கர், சஞ்சயன், மற்றும் விஜேயேந்திரன் ஆகியோரின் பங்களிப்பு கிடைத்திருக்காவிட்டால் நன்றாக கஸ்டப்பட்டிருப்போம். முகநூலில் அறிமுகமாகி உட்பெட்டியில் உரையாடி உருவான உறவிது. அவர்களே முன்வந்து நம்மை அழைத்துச் சென்று பங்களித்தனர். நாம் சென்ற அன்றுதான் சங்கர் குடும்ப அங்கத்தவர்கள் அனைவரையும் ஒன்றாக கண்டோம். அதன்பின் அனைவரையும் ஒன்றாக சந்திக்கும் சந்தர்ப்பம் கிடைக்காததால் படம் ஒன்று எடுக்க தவறிவிட்டோம்.
கடந்த ஒரு மாத காலமாக நமது பணத்திலும் நண்பர்கள் மற்றும் உறவினர்களின் பங்களிப்பிலும் தங்கிப் பயணம் செய்தோம். இனிவரும் ஒன்றரை மாதங்கள் சாப்பாட்டிற்கும் தங்குமிடத்திற்கும் நிற்கின்ற இடங்களில் வேலை செய்யப் போகின்றோம். பாரதிக்கு ஏற்கனவே இவ்வாறன அனுபவங்கள் இருந்தபோதும் shirleyக்கு இதுவே முதல் முறை. இதுபற்றிய அனுபவத்தை எழுதும் வரை காத்திருங்கள்.
5ம் நாள் – ஸ்பெயின் – மலக்கா மக்களின் நகரம் July 12, 2016
முதன் முதலாக எந்த ஒரு நாட்டிற்குப் போகும் பொழுது எப்பொழுதும் ஒரு பயம் தயக்கம் இருக்கும். புரியாத மொழி தெரியாத மனிதர்கள். பரிட்சயமில்லாத இடம். இருப்பினும் ஒவ்வொரு முறையும் புதிய ஒரு நாட்டிற்கு பயணம் செய்ய தயங்கியதில்லை. அப்படித்தான் இலன்டனிலிருந்து ஸ்பெயினுக்கான நமது பயணம் ஆரம்பமானது. இரவு 11.30 மணிக்கு ஸ்பெயின் குடிவரவு அதிகாரிகள் சிரித்த முகத்துடன் வரவேற்க வெளியே வந்தோம். மலக்கா விமான நிலையத்திலிருந்து நகரத்திற்கு பஸ்ஸில் அரை மணித்தியாலத்தில் செல்லலாம் என அறிந்தோம். ஆனால் அடுத்த பஸ் 12 மணிக்கு என்பதால் வாடகைக் காiரை விசாரித்தோம். அவர்கள் 25 ஈரோக்கள் சொன்னார்கள். ஆகவே அதைத் தவிர்த்து ஆறு ஈரோக்களுடன் பஸ்சில் 12.30 மணிக்கு நகரத்தைச் சென்றடைந்தோம்.
எங்களுக்கு ஸ்பானிய மொழி தெரியாது. அவர்களுக்கு ஆங்கிலம் தெரியாது. இருந்தாலும் தமது டேட்டாவை (data) பயன்படுத்தி நாம் எங்கு இறங்க வேண்டும் என்ற தகவலை தேடி விரிவாக தந்தார்கள். பஸ் சாரதியும் நாம் இறங்க வேண்டிய இடத்தைக் காட்டி உதவினார். மலக்கா நகரில் இறங்கியவுடன் தங்குமிடத்திற்கு எந்த வழியில் செல்வது எனத் தெரியவில்லை. பஸ் நிலையத்தில் நின்ற ஒருவரைக் கேட்க அவரும் தனது டேட்டாவைப் பயன்படுத்தி பக்கத்தில் தான் இருக்கின்றது எனக் கூறி குறிப்பிட்ட சந்தியில் சென்று விசாரிக்கும் படி சைகையால் காட்டினார். அந்த சந்தியில் நின்று நாம் தேடியபோது அதில் நின்றவர்கள் தாமாக வந்து எங்கே செல்ல வேண்டும் எனக் கேட்டு குறிப்பிட்ட இடத்திற்கு கொண்டு போய் விட்டார்கள். அவர்கள் உதவி செய்திருக்காவிட்டால் குறிப்பிட்ட இடத்தைக் கண்டுபிடிக்க மிகவும் கஸ்டப்பட்டிருப்போம். ஏனெனில் தொடர்மாடிக் கட்டிடத்தின் ஒரு தளத்தை தங்குமிடமாகப் பயன்படுத்துகின்றார்கள். அது ஒரு ஓடைக்குள் சிறிய அடையாளத்துடன் இருந்தது.
நாம் மனிதர்களிடம் ஒரிடத்திற்கு செல்வதற்கான வழி கேட்க வேண்டிய காரணம் வழமையாக நாம் பயணங்களின் போது பயன்படுத்தும் புத்தகத்தை (Lonely Planet) வாங்கவில்லை. இந்த நூலைப் பற்றி முதன் முதலாக நாம் சென்ற இந்தியப் பயணத்தின் போதுதான் அறிந்தோம். அதுவும் ஒரு கதை. பின்பு அதைப் பதிவு செய்கின்றோம். அன்றிலிருந்து பயணங்களின் போது நமது உடலின் இன்னுமொரு அங்கமாக இருந்தது. இம் முறை அதன் இழப்பை ஒவ்வொரு கணமும் உணர்ந்தோம். ஆனால் அதை வாங்கி வைப்பதற்கு நம் பொதியில் இடமில்லை. அதேவேளை இரண்டு நாட்களுக்கு மட்டும் டேட்டா வாங்குவதில் பயனில்லை என்பதுடன் வீண் செலவு என்பதால் அந்தப் பயன்பாட்டையும் தவிர்த்திருந்தோம். இவையே நாம் இடங்களைக் கண்டுபிடிப்பதற்கு கஸ்டத்தை ஏற்படுத்தியது. நடுயிரவில் ஒரு நாட்டிற்கு வந்த டேட்டா வாங்க முடியுமா?.
நமது தங்கும் விடுதி நான்காவது மாடியில் இருந்தது. shirleyக்கு அங்கிருந்த லிப்டில் மேலே செல்ல தயக்கம். மனப் பயம் உள்ளது. ஆகவே களைப்பாக இருந்தபோதும் பசி வயிற்றைப் புடுங்கியபோதும் படிக்கட்டுகளில் ஏறி சென்றோம். நமது பதிவு வேலைகளை முடித்துவிட்டு முதல் வேலையாக ஏதாவது கடையில் சென்று சாப்பிடுவோம் என்று அந்த நடு நசியிலும் தேடிச் சென்றோம். நடு நசி என்பது எங்களுக்கும் அந்த நேரத்திற்கும் தான். ஆனால் அந்த நகரம் இந்த நேரத்திலும் விளக்கின் ஒளிகளாலும் உல்லாசமான மனிதர்களாலும் நிறைந்திருந்தது. ஐஸ் கீரிம் கடைகள் மட்டுமே திறந்திருந்தன. ஆனால் எங்களின் பசியை ஆற்ற ஒரு இந்தியன் மெக்சிகன் கடை திறந்திருந்தது. அதிகாலை ஒரு மணிக்கு நான்கு சப்பாத்திகளும் ஒரு பன்னீர் கறியும் ஓடர் செய்து சந்தோசமாக சாப்பிட்டோம். சாப்பிட்டபின் உடல் உறம் பெற்றது. நகரத்தின் அழகில் நித்திரை பறந்து சென்றது. மத்தியதரைக் கடலிலிருந்து குளிர்மையான மெல்லிய காற்று வீசி நம்மைப் பரவசப்படுத்திக் கொண்டிருந்தது. நாம் மாபில்கள் பதித்த நிலத்தில் நடந்து திரிந்தோம். ஆண்கள் மட்டுமல்ல சிறுவர்களும் அழகான இளம் பெண்களும் அழகிய விதவிதமான ஆடைகள் அணிந்து திரிந்தார்கள். பாரதிக்கு பெண்கள் அழகாக இருந்தார்கள். shirleyக்கு அவர்கள் அணிந்திருந்த ஆடைகள் அழகாக இருந்தன. பல ஜஸ் கீரிம் கடைகளில் பல விதமான ஜஸ் கீரிம்கள் நம்மை வரவேற்க அந்த அதிகாலையிலும் வாங்கிக் குடித்தோம். மிகவும் மகிழ்ச்சியான தருணங்கள்.
மலக்கா மிக அழகிய நகரம். முக்கியமான இடங்களில் கார்கள் பாவனையில் இல்லை. மிக மிக சுத்தமான நகரம். பார்க்க வேண்டிய இடங்களை நடந்தே பார்க்கலாம். கிரிஸ்தவ நாடாக இருந்தபோதும். கடந்த கால முஸ்லிம் அரசர்களின் ஆக்கிரமிப்பினால் இஸ்லாமிய பண்பாடுகள் பாதிப்புகள் நிறைந்த நகரம். கட்டிடக்கலை, உணவு மற்றும் பாத்திரங்களில் இதன் பாதிப்புகளைக் காணலாம். இந்த நகரத்தின முக்கிய அடையாளமே முஸ்லிம் அரசர்களின் அரண்மனையும் கோட்டையுமாகும். மழை நீரை எவ்வாறு சேமித்துப் பயன்படுத்தலாம் என்பதையும் மற்றும் வடிகாலமைப்பையும் அந்தக் காலத்திலையே சிறப்பாக நிர்மானித்திருக்கின்றார்கள். ஈழத்தைப் போல வறண்ட பிரசேங்களில் இருந்து வந்த நமக்கு கற்பதற்கு இவ்வாறான பல விடயங்கள் உண்டு.
அதிகாலையில் இரண்டு மணிக்குப் பின்பே படுக்க சென்றதால் காலையில் 9 மணிக்குப் பின்பே எழும்பினோம். வெளிக்கிட்டு ஒரு பேக்கரியில் தேநீருடன் இனிப்பு பன் சாப்பிட்டு விட்டு நடக்க ஆரம்பித்தோம். சாதாரண மனிதர்களைப் போல உல்லாசப் பயணிகளுக்கான தகவல் நிலையத்தில் இருந்தவர்கள் உதவ முன்வரவில்லை. இருப்பினும் ஞாயிற்றுக் கிழமைகளில் சில இடங்கள் குறிப்பிட்ட நேரத்திற்கு இலவசமாக விடுவார்கள் என்ற தகவலை அறிந்தோம். இதனால் சிறப்பான கட்டிடக் கலை கொண்ட தேவாலயத்தையும் இந்த தேவாலத்தில் சிற்பங்களையும் ஓவியங்களையும் வரைந்த முக்கியமான கலைஞர்களின் ஓவியங்களையும் பார்வையிட்டோம். இவற்றைப் பார்த்து முடிய மதியம் ஆகிவிட்டது. சாப்பிட கடைக்குச் சென்றால் நமக்கான உணவுகள் கிடைப்பது கஸ்டம். இரவு இந்திய உணவு சாப்பிட்டதால் இன்று ஸ்பானிய உணவு வகை ஒன்றை சுவைத்துப் பார்க்க விரும்பினோம்.
கடல் வாழ் உயிரினங்களினதும் (கடற்புஸ்பங்கள் – நன்றி நுஃமான சேர்) மற்றும் தரை வாழ் உயிரினங்களினதும் உணவு வகைகளை அழகாக படம் பிடித்துப் போட்டிருந்தார்கள். இவற்றிக்கு Paella எனப் பெயர். ஆனால் நாம் உண்பதற்கு இந்த ஸ்பானிய வகையைச் சேர்ந்த உணவில் ஒரே ஒரு மரக்கறி உணவு வகை இருந்தது. shirleyக்கு இறால் வகை உணவை சுவைத்துப் பார்க்க விருப்பம். ஆனால் shirley ஒன்று இரண்டு இறால்களை மட்டுமே சாப்பிடக்கூடியவராகையாலும் மேலும் அந்தச் சாப்பாடு 10 ஈரோக்களுக்கு மேல் என்பதால் வீண் செலவு என்றும் அந்த எண்ணத்தைக் கைவிட்டார். இறுதியாக இருவரும் சாப்பிடக்கூடியவகையில் மரக்கறி உணவைக் காட்டி எடுத்தோம். சோற்றுடன் மரக்கறியைப் போட்டு ஒருவகையான தட்டையான சட்டியில் அவித்திருந்தார்கள். இது மரக்கறி Paella. இச் சட்டியில் போடப்படும் உணவின் பெயருடன் Paella என்பது சேர்க்கப்படும். உப்புச்சப்பில்லாத உணவு. ஆனாலும் பசிக்களையில் உண்டு முடித்தோம். இப் பிரதேசம் மத்தியதரைக் கடற்கரை ஓரத்தில் இருப்பதால் கடல் வாழ் உயிரினங்களில் செய்யப்படும் உணவுகள் சுவையானவை எனக் கூறுவார்கள்..IMG_4093
இப்பொழுது shirleyக்கு வைனை சுவைத்துப் பார்க்க விரும்பினார். இலசவமாக வைன் சுவைக்கும் இடம் இருப்பதாக ஏற்கனவே அறிந்திருந்தோம். இந்த இடத்தையும் மனிதர்களின் உதவியைக் கேட்டு கண்டுபிடித்தோம். அவித்த இறால்களை சாப்பிட்டுக் கொண்டு பலர் வித விதமான வைன்களை குடித்துக் கொண்டிருந்தார்கள். shirley ஒருவாறு தனது தேவையையும் விருப்பத்தையும் விளக்கி நடுத்தர இனிப்பு சுவையுள்ள வைனை வாங்கிக் குடித்தார். மிகவும் சுவையாக இருந்தமையால் இன்னுமொரு சொட் அடிக்க விரும்பினார். ஆனால் பின் வெறித்துவிடும். இடங்களைப் பார்க்க முடியாது படுக்கத்தான் வேண்டிவரும் என்பதால் அந்த முயற்சியைக் கைவிட்டார்.
இன்று ஞாயிற்றுக் கிழமை என்பதால் பல இடங்களைப் பார்க்க இலவசமாக குறிப்பிட்ட நேரங்களுக்கு மட்டும் விடுவார்கள். மலக்காவின் முக்கியமான அடையாளமான கோட்டையையும் அரண்மனையையும் பார்க்கச் சென்றோம். அரண்மனை ஒரு நூதனசாலையாக இருந்தது. அழகிய பூந்தோட்டங்கள், மழை நீர் சேமிப்பு முறைகள், சிறந்த வடிகாலமைப்பு, மற்றும் கடந்தகால மட்பாண்டங்களையும் காட்சிக்கு வைத்திருந்தார்கள். இதைப் பார்த்து முடிய களைத்துவிட்டோம். இருந்தாலும் பக்கத்தில் மலை உச்சியிலிருந்த கோட்டையையும் பார்க்கச் சென்றோம். கோட்டையிலிருந்து மலக்கா நகரத்தைப் பார்ப்பது ஒரு அழகிய தோற்றம். அதன் பாதுகாப்பு சுவர்களின் வழியாக சுற்றி வரும் பொழுது நகரத்தினதும் கோட்டையினதும் பல பகுதிகளைப் பார்க்கலாம். கோட்டையிலிருந்து கீழே இறங்கினோம். அப்பொழுது ஒன்றைக் கவனித்தோம். புதிய புனரமைப்புகளை செய்தபோதும் மரங்களை வெட்டாமல் பாதுகாத்துள்ளார்கள். பழையநகரங்களை புனரமைக்கின்ற நாடுகளைச் சேர்ந்தவர்கள் கற்க வேண்டிய விடயம் இது. மலையடிவராத்திற்கு வந்தபோது ஆறு மணியாகிவிட்டது. கடைசி இரண்டு மணித்தியாலங்களை பிக்காசோவின் ஓவியங்களை இலவசமாக பார்க்க அனுமதிப்பார்கள். ஆனால் எங்களுக்கு அதைப் பார்க்க ஒரு மணித்தியாலங்களே இருந்தது. மிகவும் களைப்பாக இருந்தபோதும் சென்று பார்த்தோம். பிற ஓவியங்களிலிருந்து அவரின் ஓவியங்கள் வித்தியாசமானவை என்பது நாம் அறிந்ததே. இவர் மனித மனங்களைப் பற்றியா, அல்லது தனது மனதில் உள்ளவற்றையா, அல்ல சக மனிதர்களின் மனதில் என்ன இருக்கின்றது என இவரது மனதில் தோன்றுவதையா ஓவியங்களாக வடிக்கின்றார் என்பது ஆய்வுக்குரியது. ஆனால் அதை ஆழமாக அறிவதற்கு அதிக நேரம் தேவை. ஆகவே முழுமையாகப் பார்க்க முடியவில்லை. ஏழு மணிக்கு வெளியே வந்தபோது களைப்பு மட்டுமில்லை பசியும் எடுத்தது. ஒரு கடையில் அழகான பீட்சா படம் 5 ஈரோக்கள் என்ற தகவலுடன் இருக்க வாங்கி சாப்பிட்டோம். சிறிய சமையலறைக்குள் கைக் குழந்தையையும் வைத்துக் கொண்டு துணைவரும் துணைவியும் சமைக்கின்றார்கள். ஆகவே அவர்களால் தமது கவனத்தை முழுமையாக சமைப்பதில் செலுத்தமுடியவில்லை என நினைக்கின்றோம். பெரிய பீசா. ஆனால் சுவையேயில்லை. சாப்பிடமுடியாமல் அப்படியே அரைவாசியை வைத்துவிட்டு எழும்பி கடற்கரையை நோக்கி நடக்க ஆரம்பித்தோம்.IMG_0092
கடற்கரையின் துறைமுகம் இருக்கின்ற பக்கத்தில் விதவிதமான சாப்பாட்டுக் கடைகள். சனம் நிறைந்து வழிந்தது. அப்படியே நடந்து வெளிச்ச வீட்டையும் கடந்து சென்றால் நீளமான நீலமான கடற்கரை. கடற்கரையிலிருந்து வீதியை நோக்கி காலில் மண்படாமல் வருவதற்கு பல பாதைகள் அமைத்து அதன் முடிவுகளில் குளிப்பதற்கான வசதிகளையும் செய்து வைத்திருக்கின்றார்கள். அப்படியே நடந்து பெரும் வீதியைக் கடந்து நாம் தங்கியிருக்கின்ற பிரதான இடத்திற்கு செல்லும் பாதை முழுக்க நீளமான அடர்த்தியான கிளைகள் படர்ந்த உயரமான மரங்கள். பாதசாரிகள் நடப்பதற்கும் இளைப்பாறுவதற்கும் ஏற்ப நிழல் தரும் மரங்கள் அதற்கருகாமையில் குழந்தைகள் விளையாடுவதற்கும் காதலர்கள் சுற்றுவதற்குமான் பூங்கா. இப்படி மக்களின் நலன்களுக்கு ஏற்ப பல விடயங்களை அரசு செய்திருக்கின்றது. ஸ்பானிய அரசு இப்படி மக்களின் நலன்கள் எல்லாவற்றிலும் அக்கறையாக இருக்கின்றதாக என்பது ஆய்வுக்கு உரியதே. இருப்பினும் இதை நாம் வரவேற்க வேண்டும். செழிப்பான நகரம் மட்டுமில்லை மக்கள் ஆனந்தமாக இருப்பதுடன் புதியவரைகளையும் மகிழ்வுடன் வரவேற்கின்றனர். ஸ்பெயின் நாட்டின் சிவிலி மற்றும் பசலோனா நகரங்களிற்கும் பயணம் செய்தோம். இந்த இரண்டு அழகிய நகரங்களைப் பற்றி தொடர்ந்து பதிவு செய்வோம்.
7ம் நாள் சிவிலி நோக்கிப் பயணம்.
பகுதி ஒன்று: சுவிடன்: சாப்பாட்டிற்காக வேலை July 15, 2016
நமது பயணம் ஆரம்பித்த நாளிலிருந்து முதல் ஒரு மாதமும் காலையில் எழுந்தால் இரவு பத்து மணிக்குப் பின்புதான் அறைக்கு வந்து படுக்கப் போவோம். அதுவரை நடை … நடை… நடை. நான் ஒரளவு நடக்கக்கூடியவன். விரைவில் களைக்க மாட்டேன். களைத்தாலும் நடப்பேன். அப்படியான நானே “இனி நடக்க முடியாது” எனக் கூறுமளவிற்கு நடப்போம். இடங்களைப் பார்ப்பதற்கும் சாப்பிடுவதற்கும்…. பின் இடங்கள் தெரியாமல் அலைவது என நமது நடை தொடரும். சுவிடனில் சாப்பாட்டிற்கும் தங்குமிடத்திற்காகவும் வேலை செய்ய ஆரம்பித்ததுடன் நடப்பதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. பயணம் செய்யும் பொழுது இவ்வாறு வேலை செய்வது எனக்குப் புதிதல்ல.
2006ம் ஆண்டு இரண்டு மாதங்கள் இத்தாலியில் புளொரன்ஸ் மாகாணத்திலுள்ள சிறிய மலைக் கிராமம் ஒன்றில் குறிப்பிட்ட தொகை பணம் கட்டி ஒரு பயிற்சியில் இணைந்தேன். இப் பயிற்சியானது எவ்வாறு மூச்சை மன அழுத்தம் மற்றும் போரினால் வன்முறைகளால் ஏற்பட்ட ஆறாவடுக்களை களைவதற்குப் பயன்படுத்தாலம் என்பதை அடிப்படையாகக் கொண்டது. நூறு பேர்கள் கொண்ட குழுவில் உலகின் பல நாடுகளிலிருந்து பலர் வந்து கலந்து கொண்டனர். இப் பயிற்சியின் பின்பு ஜெர்மனியில் ஒரு மாத காலம் தங்கவேண்டியிருந்தது. அப்பொழுது ஜெர்மன் நாட்டிற்குள் பத்து நாட்களுக்குள் சுற்றக்கூடியவாறு ஒரு புகையிரதப் பயணச் சீட்டை வாங்கி கொண்டு பயணம் செய்தேன்.
ஜெர்மனின் புகையிரதங்கள் மிகவும் தரமானவை மட்டுமல்ல சொன்ன நேரத்திற்கு நிலையத்திற்கு வரும். ஒரு நகரத்திலிருந்து இன்னுமொரு நகரத்திற்கு இரண்டு மூன்று மணித்தியாலங்களில் பயணம் செய்யலாம். அந்தளவு விரைவாக செல்லக்கூடிய புகையிரதம். இத்தாலியிலிருந்து பிராங்போட் போய் அங்கிருந்து கனுவோருக்கு சென்று பின் இன்னுமொரு உள்ளுர்ப் புகையிரம் எடுத்து சிறிய கிராமம் ஒன்றிக்கு சென்றேன். இது சொந்தக்காரர்களின் வீடு. இங்கு சில நாட்கள் தங்கிவிட்டு ஒரு நாள் பார்த்தீபனைப் பார்க்க டொட்மன் சென்றேன். அவரை அவர் வந்திறங்கும் புகையிரத நிலையத்தில் சந்தித்தேன். களைத்துப் போய் வந்தார். கை கொடுத்தேன். உள்ளங்கை காய்ந்து போயிருந்தது. கடும் உழைப்பாளி. அருடன் ஒரு நாள் தங்கிவிட்டு அங்கிருந்து வெளிக்கிட்டேன்.இதன் பின் ஜெர்மனியில் எங்காவது தங்கி வேலை செய்வோம் என்பதே எனது நோக்கமாக இருந்தது.
முன்னாள் கிழக்கு ஜெர்மனிச் சேர்ந்த மிகச் சிறிய கிராமத்திற்கு பயணம் செய்தேன். அழகிய பச்சளைப் பசேல் என்ற நிலம். ஆனால் பாழடைந்து போயிருந்த பழைய புகையிரம் நிலையம். நான் மட்டுமே இறங்கினேன். புகையிரதம் சென்றுவிட்டது. சுற்றிவர மலையும் காடும். மலை மேடுகளிலிருந்து நீர் சொட்டிக் கொண்டிருந்தது. ஆபத்திற்கு கூப்பிடக் கூட வீடுகள் மட்டுமல்ல மனிதர்களும் அருகில் இல்லை. மனித நடமாட்டங்கள் அதிகம் இல்லாத பிரதேசம். அந்தளவு அமைதி. இனி என்ன செய்வது? அவர்கள் எழுதியபடி குறிப்பின்படி மெல்ல மெல்ல நடந்து தங்குமிடத்திற்குப் போய் சேர்ந்தேன். அது ஒரு பழங்கால கட்டிடம். அந்தக் கட்டிடத்தின் முன்னால் பழைய இரும்புகளை வளைத்து செய்த சிற்பங்கள் அல்லது ஓவியங்கள். எல்லாமே பார்ப்பதற்கு பயத்தை தந்தன. இங்கு சிலர் தங்கி நின்று ஓசோ தியானம் செய்வதுடன் தாமே மரக்கறிகளை உற்பத்தி செய்து சமைத்து உண்டு வாழ்கின்றனர். இவர்கள் மட்டுமே அந்த சுற்றுவட்டாரத்தில் வாழ்கின்றார்கள். இந்த இடத்தில்தான் நான் தோட்ட வேலை செய்தேன். இதேபோல இன்னுமொரு கிராமத்திற்கும் நீண்ட தூரம் நடந்துசென்று அங்கும் வேலை செய்தேன். இவர்களின் வாழ்வு முறைகளுடன் என்னால் ஒட்ட முடியவில்லை. விரைவில் அந்த இடங்களை விட்டு வெளியேறினேன்.
இந்த இடங்களில் செய்த வேலைகள் எனது தன்முனைப்புக்கு மிகப் பெரும் சவாலாக இருந்தன. என்னால் நிலைத்திருக்க முடியவில்லை. இதற்கு எனது மனம், தன் முனைப்பு முக்கிய காரணங்களாக இருந்தாலும் எனது உடலும் அதன் ஆற்றலும் ஒரு காரணம். நாம் ஏழைகளாக இருந்தபோதும் உதாரிகளாக திரிந்தவர்கள். தோட்ட வேலை செய்ய சொந்த நிலங்கள் இருக்கவில்லை. ஆகவே உடல் உரமாகவில்லை. செய்ததெல்லாம் கற்றது மட்டுமே. அதுவும் அரைகுறையாக. இருந்தாலும் முயற்சியை கைவிடவில்லை. அடுத்த வருடமும் மூச்சுப் பயிற்சியுடாக உடல் உள நலத்தைப் பேணுவதற்கான பயிற்சிப்பட்டறைக்கு வந்தேன். இத் துறையில் வேலை செய்ய மேலதிகமாக கற்போம் என நினைத்தேன். இதன் விளைவுதான் 2008ம் ஆண்டு யோர்க் பல்கலைக்கழத்தில் உளவியல் படிக்க ஆரம்பித்தமையாகும். இது சில விடயங்களை அறிந்து கொள்ளவும் பிரக்ஞை என்ற நூலை எழுதவும் பங்களித்தது. ஆனால் இத் துறையில் வேலை ஒன்றை எடுக்க முடியவில்லை. அதற்கு மேலும் படிக்க வேண்டுமாம். அதேநேரம் படிப்பை முடித்தவுடன் இலங்கைக்கு பயணம் சென்றேன். தொடர்ந்தும் இலங்கைக்கு செல்லும் நோக்கம் இருந்ததால் இத் துறையில் நிரந்தர வேலை செய்வது தொடர்பாக சிந்திக்க முடியவில்லை. வாழ்வும் நோக்கமும் மாறிவிட்டது. சரி இனி விடயத்துக்கு வருகின்றேன்.
இம் முறை ஸ்கன்டிநேவியன் நாடுகளுக்கு பயணம் செய்வதாக முடிவெடுத்ததால் சில கூட்டுப் பண்ணைகள் அல்லது கம்யூன்களில் வேலை செய்வோம் என முடிவெடுத்தோம். அப்பொழுதுதான் பணத்தைச் சேமித்து மேலும் நமது பயணத்தை தொடரலாம். அத்துடன் கூட்டுப் பண்ணைகளை நிர்வகிப்பது தொடர்பான அனுபவங்களையும் பெறலாம் என ;நினைத்தோம். முதலாவதாக சுவிடனின் தலைநகர் ஸ்டொக்லொமிலிருந்து 200km தூரத்திலுள்ள ஸ்கின்ஸ்பேர்க் கிராமத்தில் அமைந்துள்ள ஒரு கம்யூனில் சாப்பாட்டிற்காக வேலை செய்ய woofing பயன்படுத்தி விண்ணப்பித்தோம். இவர்கள் சிறு குழுவாக செயற்படுகின்றனர்.. பல வகையான தியானம் மற்றும் யோக பயிற்சிகளை செய்பவர்களுக்கு தமது இடங்களை வழங்கி சமைத்தும் கொடுக்கின்றனர். நாம் நமது சாப்பாட்டிற்கும் தங்கும் இடத்திற்குமான செலவுகளை இவர்களுக்கு தேவையான வேலைகளை செய்து கொடுப்பதனுடாக ஈடுசெய்கின்றோம்.
காலை, மதிய, இரவு உணவுகள் தயாரித்தல், சமையலின் பின் பாத்திரங்கள் மற்றும் மலசலகூடங்கள் கழுவுதல், தோட்டத்தில் களை புடுங்குதல் மற்றும் சுத்தம் செய்தல் என பல வேலைகள் செய்ய வேண்டும். ஒரு நாளைக்கு ஆறு மணித்தியாலங்கள் என்றுதான் கூறினார்கள். காலை உணவு தயாரிக்க இரண்டு மணித்தியாலங்கள், மதிய மற்றும் இரவு உணவு தயாரிக்க மூன்று மணித்தியாலங்கள். சாப்பாட்டின் பின் பாத்திரங்கள் கழுவ ஒரு மணித்தியாலம், துப்புரவு செய்ய இரண்டு மணித்தியாலங்கள் என நேரம் எடுக்கும். சாப்பாடு செய்பவர் அந்த நேரத்திற்கு கழுவத் தேவையில்லை. கிட்டத்தட்ட ஒரு நாளைக்கு ஐந்து அல்லது ஆறு மணித்தியாலங்களிற்கு வேலை செய்ய வேண்டிவரும். ஆனால் தேவையான அளவு சாப்பிடலாம். வேண்டிய நேரம் எடுத்தும் சாப்பிடலாம். பிரச்சனை எப்பொழுது உருவாகும் என்றால் தமற்குரிய பொறுப்புகளை செய்யாமல் தட்டிக்கழிப்பவர்களால் உருவாகும். ஆனால் நமது இயக்கங்களில் இருந்ததைப் போல ஒருவரும் பிரச்சனைகளை நேரடியாக கதைப்பதில்லை.
தமக்குரிய பொறுப்புகளை ஒவ்வொருவரும் புரிந்து உணர்ந்து பங்களித்தால் ஒருவரின் மீது அதிக சுமை விலாது. ஆனால் அவ்வாறான புரிந்துணவு நம்மத்தியில் மிக மிக குறைவு. இதனால் பொறுப்பை தட்டிக்கழிக்காமல் வேலை செய்பவர்களுக்கு சுமையும் களைப்பும் சோர்வும் அதிகமாகும். இது சில நேரங்களில் அலுப்பையும் எதிர்மறைத்தாக்கத்தையும் உருவாக்கிவிடும். இந்த நிலைமை இந்த வேலையில் மட்டுமல்ல கடந்த கால அரசியல் செயற்பாட்டிலும் சரி நண்பர்களுடனான செயற்பாட்டிலும் சரி பொது விடயங்களில் செயற்படும் பொழுதும் சரி இவ்வாறுதான் நடைபெறும். ஒரு சிலர் மட்டுமே எல்லாவற்றையும் பொறுப்புடன் செய்வார்கள். சிலர் நேரம் கடத்துவார்கள். சிலர் கடமைக்குச் செய்வார்கள். சிலர் கள்ளமடிப்பார்கள். இவ்விதமான போக்குகள் எல்லா இடங்களிலும் இருக்கின்றன. தவிர்க்க முடியாதவை. ஆனால் இந்தப் பிரச்சனைகள் மற்றும் முரண்பாடுகளையும் கடந்து சக்கரம் ஓடும். நாமும் ஓடுகின்றோம். எல்லாமே மூன்று நேரம் ஒழுங்காக சாப்பிடுவதற்காகத்தானே…. சாப்பிட்டபின்தானே கலை இலக்கியம் எல்லாம்…..இதன் முக்கியத்துவம் தெரிந்த சிலர் அடுத்த நேர பசியை வைத்தே பலரை சுரண்டுகின்றார்கள்….. பலர் தம் பசியைப் போக்கு எதையும் செய்யத் தயாராக இருக்கின்றனர்…… இதுதான நாம் அரசியல் செயற்பாட்டில் இறங்குவதற்கும் சமூகமாற்றத்தின் தேவைக்கமான அடிப்படை.
நாளை மிகுதியைப் பதிவிடுகின்றேன்.
பகுதி இரண்டு: சுவிடன்: கம்யூன் வாழ்வு அல்லது கூட்டுச் செயற்பாடு – July 17, 2016
நான் ஒரு சர்வதேசி
சுவிடனில் ஒரு சிறு கிராமத்தில் தோட்ட வேலை செய்து கொண்டிருக்கும் பொழுது இந்த வேலையை வெறுமனே கடைமைக்காக செய்வதா அல்லது நமது வீட்டுத் தோட்டத்தில் செய்வதுபோல மனம் ஒன்றித்து வேலை செய்வதா என சிந்தனை ஓடியது. மனித மனம் ஏமாற்றவே கூறும். ஆனால் எனது வீட்டில் எப்படி செய்வேனோ அப்படி செய்வதுதான் பொருத்தமானதும் சரியானதும் என என் அறிவு உள்ளுணர்வு கூறியது. ஆகவே ஒன்றித்து வேலை செய்தேன்
இலங்கை மண்! கனடா மண்! ஜெர்மன் மண்! சுவிடன் மண்!
மண் எங்கிருந்தாலும் ஒரே மண்.
அவற்றைத் தொடும் பொழுது அவ்வாறான உணர்வே எழுகின்றது.
நாடுகளின் பெயர்கள் தான் அவற்றைப் பிரிக்கின்றன.
சமுத்திரங்களும் கடல்களும் மண்ணைப் பிரிப்பதுபோல தோன்றுகின்றன.
ஆனால் ஆழத்தில் அவை இணைந்துதான் இருக்கின்றன.
எந்த மண்ணில் வேலை செய்தாலும்
இது எனது தோட்டம்.
எனது மண்.
.நான் ஒரு சர்வதேசி!
தேசியவாதியாகவும் உணரும் தருணங்கள் உள்ளன.
எனது மண் ஆக்கிரமிக்கப்படும் பொழுது
எனது தோலின் நிறம் இழிவு செய்யப்படும்பொழுது
எனது மொழி நிராகரிக்கப்படும்
சிரிப்பு
மனிதர்களின் சர்வதேச மொழி.
இந்தச் சிரிப்புக்கூட புறக்கணிக்கப்படும் பொழுது….
நான் ஒரு தேசியவாதியாகின்றேன்.
சர்வதேசியவாதியாக உணர்ந்தாலும்
தேசியவாதியாவும் உணர்வது தவிர்க்க முடியாதது.
ஏனெனில் சர்வதேசத்திற்குள் தேசமும் உள்ளடக்கம்.
சுவிடனில் நாம் வேலை செய்த இடத்தில் பல நாடுகளில் இருந்து வந்து பலர் வேலை செய்கின்றனர். பெரும்பாலும் இளம் வயதினர். தமது உயர்தர அல்லது பல்கலைக்கழ கல்வியை முடித்துவிட்டு தமது துறையை தெரிவு செய்வதற்கு முதல் இவ்வாறு பயணித்து புதிய அனுபவங்களையும் அறிவையும் பெற்றக் கொண்டு தமது துறையை தெரிவு செய்கின்றனர். சிலருக்கு இவ்வாறு வேலை செய்வதும் பயணிப்பதுமே வாழ்வு. சிலர் தமது வாழ்க்கை, உறவுகள் மற்றும் வேலை அழுத்தங்களிலிருந்து விடுபடுவதற்காகவும் இவ்வாறன செயற்பாடுகளை மேற்கொள்கின்றனர். நாம் வேலை செய்த குழுவில் இலண்டனிலிருந்து மூவர், ரொமேனியாவிலிருந்து ஒருவர் (இவர் சுவிடனையும் ஸ்பெயினையும் வாழ்விடமாக கொண்டவர்), மற்றும் இத்தாலி, இஸ்ரேல், ஸ்பெயின், நெதர்லாந்து, டென்மார்க், ஜெர்மன் எனப் பல நாடுகளைச் சேர்ந்தவர்கள் வேலை செய்தனர். ஒவ்வொருவருக்கும் வித்தியாசமான வாழ்க்கைப் பின்னணி உள்ளது. இவ்வாறு வேலை செய்வதிலுள்ள பல நன்மைகளில் ஒன்று இவர்களைப் போன்ற பலவிதமான மனிதர்களை சந்திப்பதாகும். மற்றும்படி சும்மா பயணம் செய்யும் பொழுது கட்டிங்களைப் பார்ப்பதுடன் சரி. மனிதர்களை சந்திப்பதும் சந்திப்பவர்களுடன் நட்புக்கொள்வதும் மிக அரிதாகவே கிடைக்கும். அந்தவகையில் இது பயனுள்ள ஒரு செயற்பாடே.
நாம் இந்த இடத்திற்கு வந்தபோது ஒரு குழு யோகா பயிற்சிகள் செய்து கொண்டிருந்தது. நாற்பது பேரளவில் இருந்தார்கள். அவர்களுக்காக நாம் நமது வேலைகளைச் செய்தோம். அந்த சக்தி நேர்மறையானதாக ஆனந்தமானதாக இருந்தது. ஒரு வாரத்தின் பின் புதியதொரு குழு வந்தது. இவர்கள் ஐம்பது பேர்களுக்கு மேல். எம்முடன் சேர்த்து மொத்தமாக 65 பேரளவில். இந்தக் குழு மிக அமைதியாக தியானம் செய்பவர்கள். கதை குறைவு. இல்லை என்றே சொல்லலாம். ஆகவே நாமும் கதைக்க முடியாது. கிட்டத்தட்ட “விபாசனா” தியானம் செய்வதைப் போல. விபாசனா தியானம் தொடர்பான எனது அனுபவத்தை எழுது வேண்டும். மிக முக்கியமான பயனுள்ள இலகுவான ஆனால் கஸ்டமான தியான முறை. குறிப்பாக மேற்குலகத்தினருக்கு சவாலானது. அதுவும் தியானங்கள் தொடர்பாக பரிச்சயமில்லாதவர்களுக்கு இவ்வாறான சூழலை எதிர்கொள்வதே மிகவும் கஸ்டமானது. ஆகவே பலர் மனதுக்குள் தமது எண்ணங்களுடன் போராடுவார்கள். இது மனச் சுமையை உருவாக்கவல்லது. இதனால் இவ்வாறான சூழுலில் வேலை செய்யும் பொழுது நடைமுறையில் பல முரண்பாடுகள் உருவாவதற்கான சாத்தியங்கள் உள்ளன. இந்த முரண்பாடுகளைக் களைவதும் சவாலான ஒரு விடயமே.
இந்த இடங்களில் வாழ்வதில் பல நன்மைகள் உள்ளன. முதலாவதும் முக்கியமானதும் எவ்வாறு ஒரு கம்யூன் வாழ்வை மேற்கொள்வது என்பதைக் கற்பதாகும்.. நம் ஒவ்வொருவருக்கும் குறிப்பிட்ட ஒரு விடயத்தில் ஆர்வமும் ஈடுபாடும் உள்ளது. இவ்வாறான வாழ்வுமுறை மூலம் அதைப் பூர்த்தி செய்யப் பங்களிக்கலாம். உதாரணமாக சிலருக்கு சமையல் ஒரு கலை. அவ்வாறானவர்களே சமையல் பொறுப்பை எடுப்பது பொருத்தமானதும் சரியானதுமாகும். இதுவே கம்யூனுக்கான அவர்களது பங்களிப்புமாகும். அதேநேரம் சமைப்பது பாத்திரங்களையும் மலசலகூடங்களையும் கழுவி சுத்தம் செய்வது என்பது அனைவரும் பங்களிக்க வேண்டிய ஒன்றாகும். ஆகக் குறைந்தது வாரத்தில் ஒருதரமாவது இந்த வேலைகளில் பங்களிக்க வேண்டும். ஏனெனில் பலருக்கு இந்த வேலைகள் தொடர்பாக மனதில் எதிர்மறையான பார்வைகள் ஆழமாகப் பதிந்துள்ளன. குறிப்பாக பெரும்பாலான ஆண்களுக்கு சமையல் செய்வது பாத்திரங்கள் கழுவுவது தொடர்பாக எதிர்மறையான உணர்வே உள்ளது. இதேபோல உயர் சாதி மற்றும் வர்க்க ஆண் பெண் இருபாலருக்கும் மலசலக்கூடங்கள் கழுவுவது என்பது கௌரவ குறைச்சலான ஒரு செயற்பாடு. அதேநேரம் இவர்கள் முற்போக்கான வர்க்க தேசிய அரசியல் எல்லாம் கதைப்பார்கள்.. இதுவே தத்துவத்திற்கும் நடைமுறைக்குமான முரண்பாடாகும். இவ்வாறான மனத்தடைகளிலிருந்து வெளியேறுவதற்கு இந்த வேலைகளை செய்வது மட்டுமே ஒரே வழி. மேலும் இந்த வேலைகளை செய்யும் பொழுதுதான் இதிலுள்ள கஸ்டங்களையும் இவ்வாறான வேலைகளையே தமது வாழ்வாக கொண்டிருப்பவர்களையும் புரிந்து கொள்ளலாம்..
மலசலகூடங்களை கழுவுவது தொடர்பாக எண்ணங்கள் வந்தால் இரண்டு நினைவுகள் ஆழ்மனதிலிருந்து மேலேழும். முதலாவது எனக்குப் பத்து வயது இருக்கும் பொழுது கண்ணால் கண்டதும் பாதித்ததுமான காட்சி. அப்பொழுது நானறிய அட்டன் நகரில் மலசல சுத்திகரிப்பவராக அவரை மட்டுமே கண்டிருக்கின்றேன். காலைவேளையில் மலசல வாளிகள் கொண்ட வண்டியைத் தள்ளிக் கொண்டு ஒவ்வொரு வீடுகளிலுமுள்ள மலசலகூடங்களுக்குச் சென்று அள்ளிக் கொண்டு போவார். இவர் ஒரு நகரசபை ஊழியராக இருந்தபோதும் வீடில்லாதவர். இவரது வாழ்விடம் அட்டனில் பிரபலமாக இருந்த தெய்வம் தந்த வீடு திரைப்பட தயாரிப்பாளர் வீகே.டி பொன்னுசாமி (இவர் 83 கலவரத்தில் கொல்லப்பட்டவர்.) அவர்களின் மின்சாரக் கடையின் முன் வாசல். இதன் ஒரு மூலையில் தான் குடியிருப்பார். யாருடனும் கதைக்கமாட்டார். ஆடைகள் கிழிந்து காணப்படும். ஆடைகளும் உடலும் கரிபிரண்டு ஊத்தையாக இருக்கும். தனது வேலைகளை முடித்துவிட்டு பகல் பொழுதுகளில் அந்தக் கடையின் முன்னால் போகின்ற கழிவுக் காணில் (வாய்கால்) தண்ணீர் அள்ளி சோறு சமைப்பார். இவருக்கு ஒரு அழகான கருத்த “மொழு மொழு”வென்ற உடலும் முட்டைக் கண்களும் கொண்ட குழந்தை ஒன்று இருந்தது. ஐந்து அல்லது ஆறு வயது இருந்திருக்கும். அந்தச் சிறுவன் இப்பொழுது எப்படி இருப்பான் என்று எப்பொழுதும் நினைப்பதுண்டு.
இரண்டாவது நாம் அட்டன் லிபர்ட்டி சினிமா கட்டிடத்தில் ஒரு அறையில் வாடகைக்கு இருந்தபோது நமக்கான மலசலக்கூடம் பொதுவானது. அந்தக் கட்டிடத்திலுள்ள தொழில் நீதிமன்றம், தொழிற்சங்கங்கள் மற்றும் வருவோர் போவோருக்கு என பொதுப் பயன்பாட்டிற்கு ஊரியது. சிலர் வழமையைப்போல் பொறுப்பில்லாமல் கண்ணடபடி அசுத்தம் செய்துவிட்டு செல்வார்கள். ஏழைகளின் வீட்டில் சிறுவர்களும் உழைப்பாளிகளே. நாம் கட்டிடத்தின் கீழேயிருந்து தண்ணீர் கொண்டுவர அம்மாதான் அதை ஒவ்வொரு நாளும் கழுவி சுத்தமாக வைத்திருப்பார். இறுதியாக இலங்கை சென்றபோது நாமிருந்த அறையும் மலசலக்கூடாமாக மாற்றப்பட்டிருந்தது.
எதிர்காலத்தில் இலங்கையில் ஒரு கம்யூன் அதாவது கூட்டுறவு வாழ்வுமுறையை பரிட்சித்துப் பார்ப்பதற்கு இந்த அனுபவங்கள் பயனிளிக்கும் என நம்புகின்றேன். மேம்பட்ட சமூக கட்டமைப்பை விரும்புகின்றவர்கள் இவ்வாறான பரிட்சாத்த முயற்சிகளில் தம்மை ஈடுபடுத்தி அனுபவங்களையும் படிப்பினைகளையும் பெறுவதே சிறந்த வழிமுறையாகும். அப்பொழுதான் “எனது இடம்”, “எனது பொருள்” என்ற சிந்தனை முறைகள் சவால்களை எதிர்கொள்ளும். சிலநேரம் இவ் வழிமுறைகளே எதிர்காலத்தில் புரட்சிகளை உருவாக்கலாம். மாறாக புரட்சி ஒன்று நடைபெற்றபின் இந்த வாழ்வுமுறைக்கு மாறுவோம் எனக் கனவு காண்பவர்கள் சிலநேரம் இறுதிவரை கனவு மட்டுமே காண்பவர்களாக இருப்பார்கள். முக்கியமாக எழுத்தாளர்கள் அரசியல் சமூக செயற்பாட்டாளர்கள் குறைந்தது ஒருவருடமாவது இவ்வாறான அனுபவங்களைப் பெறுவது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
இந்த இடத்தில் கற்ற இன்னுமொரு விடயம் எவ்வாறு சூற்றுச் சுழலைப் பாதுகாப்பது மற்றும் தோட்டங்களுக்கான உரத்தை நாமே உருவாக்குவதுமாகும்.. முதலாவது தோட்டங்களிலுள்ள களைகளையும் சுற்றுப் புறங்களிலுள்ள புல்லுகளையும் புடுங்கி ஒரிடத்தில் குமித்து மூடிவைக்க வேண்டும். அவை நன்றாக காய்ந்த பின் சமையல்கழிவுகளை ஒரிடத்தில் கொட்டி இந்த காய்ந்த புல்லுகளை அதன் மேல் போட்டு முடிவிடவேண்டும். இப்படி அதன் மேலே தொடர்ந்து செய்து வரும் பொழுது தோட்டத்திற்கான நல்ல பசளைகள் கிடைக்கும். இரசாயண பசளைகளைத் தவிர்க்கலாம். இது ஒரு சுழற்சி முறையாகும்.
சுழற்சி முறை இயற்கையின் இயல்பான இயக்கம். ஆனால் மனிதர்களின் சிந்தனை மட்டுமே நேர்கோட்டில் பயணிக்கின்றது. ஆகவேதான் அழிவுகளை மட்டும் சந்திக்கின்றது. சுழற்சி என்பது ஒரு வட்ட இயக்கம். பசளைகள் உணவுகள் கழிவுகள் என்பவற்றின் வட்ட சுழற்சி இயக்கம் போல நாமும் சில விடயங்களை சுழற்சி முறையில் வட்டவடிவில்தான் செய்ய வேண்டும். அதுவே அதியுயர் ஜனநாயத்தைதையும் சரியான பாதையையும் சம அதிகாரத்தையும் வழங்கும். குறிப்பாக இவ்வாறான கூட்டுச் செயற்பாடுகளில் பலர் சுத்தம் செய்தல் மற்றும் மலசல கூடங்களை கழுவுவதை தவிர்க்கவே விரும்புவார்கள். இவர்கள் தமது குறிப்பான சிறப்பான ஆற்றல்களினுடாக பங்களிப்பதற்கு அப்பால் சுழற்சிமுறையில் இவ்வாறான வேலைகளில் பங்கெடுக்க வேண்டும். அதற்கான திட்டங்கள் இவ்வாறான கம்யூன் வாழ்வில் நடைமுறைப்படுத்தபடுகின்றன. இவை திட்டமிட்டமுறையில் செயற்படுத்தப்பட வேண்டும். அல்லது விருப்பமில்லாத மனிதர்கள் தட்டிக்கழிப்பதற்கான சாத்தியங்கள் உள்ளன.
மறுபுறம் நாம் ஒருவர் மீது அன்பாகவும் அக்கறையாகவும் இருந்தால் அவர் அதிகம் வேலை செய்வதை விரும்பமாட்டோம். நாமும் சேர்ந்து வேலை செய்வோம். அல்லது அதிகம் வேலை செய்யாது தடுப்போம். இவ்வாறுதான் நானும் shirleyயும் ஒருவர் மீது ஒருவர் அக்கறையாக இருக்கின்றோம். இந்த அக்கறையும் அன்பும் பரஸ்பரம் ஒருவர் மீது ஒருவருக்கு இருந்தால் இவ்வாறான பல பிரச்சனைகள் இலகுவாக தீர்க்கப்படும். ஆனால் அவ்வாறான அன்பை எவ்வாறு உருவாக்குவது? இதுவும் ஒரு தேடலே.
இங்கு சமைக்கப்படும் சாப்பாடுகளில் சலாட்டைத் (இலை குழைகள்) தவிர ஒன்றையும் பெரும்பாலும் இதுவரை சாப்பிட்டதில்லை. எல்லாமே மரக்கறி சாப்பாடுகள். காய்கறிகள், தானியங்கள், கடலைகளை, விதைகள், மற்றும் பழங்கள் இவற்றைக் கொண்டு சமைக்கப்பட்ட வித்தியாசமான சாப்பாடுகள். கலவைகள் செய்முறைகள் எல்லாவற்றையும் ஒழுங்காக பதிவு செய்து வைத்துள்ளார்கள். நாம் அதைப் பார்த்து செய்ய வேண்டியதுதான். முடிந்தால் நாம் நமது படைப்பாற்றலைக் கொண்டு சிறு மாற்றங்களை செய்து மேலும் சுவையாக்கி அழகாக்கி அளிப்போம். சாப்பிடுகின்றவர்கள் பெரும்பாலும் சுவிடன் நாட்டைச் சேர்ந்தவர்கள். அனைவரும் புகழ்ந்துவிட்டு நன்றி கூறிச் செல்வார்கள்.
நாம் பசிக்காக இவற்றை சாப்பிட்டாலும் நமது புட்டும், கத்தரிக்காய், உருளைக்கிழங்கு சேர்த்த சின்ன வெங்காயப் பொறியல், முருங்கங்காய், உருளைக்கிழங்கு, கத்தரிக்காய்ப் பிரட்டல், தோசை, இடியப்பம், சொதி, சம்பல்…. இப்படி பல சாப்பாடுகளை அடிக்கடி நினைத்து வாயூறிக்கொள்வோம்.
இவற்றைச் சாப்பிட்டு வளர்ந்த உடம்பல்லவா இது!
நாம் முதலில் பலருடன் தங்கியிருந்தோம். ஆனால் நமது குரட்டை எங்களுக்கு சிறிய குடில் ஒன்றைப் பரிசளித்து நீர் ஏரிக்கு அருகில் தங்க வழிசமைத்தது. இந்த நீர் ஏறிய சிறியது ஆனால் ஆழமானது. இரவு பகலாக பலர் இதில் குதித்து நீந்தி நீராடுவார்கள். முதலில் தமது உடம்பை சூடேத்தி பின் ஏரியில் குதிப்பார்கள். எங்களுக்கு குளிர். வெய்யிலுக்காக காத்திருப்போம். வெய்யில் எப்பொழுது வரும் எனத் தெரியாது. மழை எப்பொழுது வரும் எனத் தெரியாது. இரண்டும் மாறி மாறி வரும்.எப்பொழுதாவது ஒரு நாள் வெயிலாகவே இருக்கும். அப்பொழுது மட்டுமே நாம் நீராடி நேரமிருந்தால் படகை எடுத்துக் கொண்டு ஒரு சுற்று சுற்றிவருவோம். அழகான இடம்.IMG_3683
நாளை செவ்வாயக் கிழமை பின்லாந்தில் செல்கின்றோம். அங்கு மேலும் இரண்டு வாரங்கள் தங்கி வேலை செய்யப் போகின்றோம். அந்த அனுபவத்தை எதிர்பார்த்தபடி
[பயணம் தொடரும்]
நன்றி: வலைப்பதிவு 'சூரியனை நோக்கி ஒரு பயணம்' https://ajourneytowardssun.wordpress.com