லக்சர் கோவில் எகிப்தின் 18 ஆவது அரசவம்சத்தைச் சேர்ந்த ஆமன்ஹோரப்111 என்பவரால் உருவாக்கப்பட்டது. பின்பு 19 ஆவது அரச வம்சத்தைச் சேர்ந்த மகா இராம்சியால் (இராம்சி11) பிரமாண்டமாக கட்டப்பட்டது. ஏனைய அரசர்களது காலத்தில் சில கட்டிடவேலைகள் நடந்த போதிலும் மேற்குறிப்பிட்ட இரு அரசர்களுமே இந்தக் கோயிலைப் பொறுத்தவரை முக்கியமானவர்கள்.
முகப்பில் தனியாக நின்று கொண்டிருந்த ஓபிலிஸ்க் (Obelisk) என்ற பிரமாண்டமான தூணைப் பற்றிய விடயங்களை எமது வழிகாட்டி முகமட் சொல்லிக் கொண்டிருந்தபோது, அதன் அருகே நின்ற இரண்டு எகிப்திய சிறுவர்கள் கல்லில் செதுக்கிய வண்டுகளை (Scarab or Dung beetle) (நமது ஊரில் சாணியை உருட்டும் வண்டுகள்) எமக்கு விற்க முனைந்தார்கள். அந்த வண்டுகளின் அடையாளம் பண்டைய எகிப்திய கலாச்சாரத்தில் முக்கியமானது. அக்காலத்தில் இந்த வண்டுகளை புனித அடையாளமாக கொள்வார்கள். விலை உயர்ந்த கற்களில் வண்டு உருவங்களை பதக்கமாகச் செய்து பெண்கள் அணிவதுடன் பரிசுப் பொருளாக மற்றவர்களுக்கு கொடுப்பதும் வழக்கம். அந்தச் சிறுவர்கள் வைத்திருந்த செதுக்கிய கல்வண்டின் அடியில் எகிப்தின் பண்டைய குறியீட்டு மொழியில் ஏதோ எழுதப்பட்டிருந்தது.
ஆமன்ஹோரப்111 அரசாளும் போது தனது காலத்தில் அரச வம்சத்தில் பிறக்காத பெண்ணை திருமணம் முடித்த தகவலையும் அரசபையில் நடந்த முக்கிய சம்பவங்களையும் நூற்றுக்கு மேற்பட்ட வண்டுகளில் எழுதி வெளிநாடுகளுக்கு அனுப்பினான்.
இப்பொழுதும் குறிப்பிட்ட தகவல் பதிந்த வண்டுகள் சில நாடுகளில் உள்ளன. இதை உலகத்தின் முதலாவது தந்திச்சேவை என வரலாற்றில் வர்ணிக்கப்படுகிறது. என்னைப் பொறுத்தவரை இக்காலத்து முக நூல் மாதிரியான விடயம் எனலாம்.
நைல்நதியின் கிழக்குக் கரையில் வடக்கு தெற்காக கட்டப்பட்டிருக்கும் லக்சர் கோயிலின் நுழைவாயில் வடக்கில் உள்ளது. இதன் இடது பக்கத்தில் வரிசையாக ஸ்பின்ங்ஸ் உருவங்கள் கல்லில் செதுக்கப்பட்டு வரிசையாக அமைந்துள்ளன. எகிப்தின் கோயில்கள் அடிப்படையில் இந்துக் கோயில்களின் அமைப்பைக் கொண்டவை. முதலில் தெரியும் இராஜகோபுரம். அதைக் கடந்தால் உள்ளே அமைந்த பெரிய திறந்தவெளி மைதானம் தென்படும். அதனைக்கடந்தால் மூடிய இருளான உள் மண்டபம். இதைக் கடந்து சென்றால் உள்ளே கர்பக்கிரகத்தில் விக்கிரகங்கள் இருக்கும். இந்துக் கோயிலின் அமைப்பை போன்றே எகிப்திய கோயில்கள் அமைந்துள்ளன.
இராட்சத பைலோன்கள் (Pylons) வாசலில் உள்ளன. இவற்றை கோபுரவாசலுக்கு ஒப்பிடலாம். இந்த பைலோன்களில் எகிப்திய அரசர்களின் மெய்க்கீர்த்திகள் மற்றும் கோயிலுக்கு அவர்கள் கொடுத்த நன்கொடைகள் பற்றிய விபரங்கள் செதுக்கப்பட்டுள்ளன. லக்சர் கோயிலின் பைலோனில் மகா இராம்சி நடத்திய மிகவும் பிரசித்தி பெற்ற கடேஷ் யுத்தம் (Battle Of Kadesh) பற்றிய விபரங்கள் செதுக்கப்பட்டு இருந்தன. இந்த கடேஷ் யுத்தம் பண்டைக்காலத்தில் நடந்தது. அந்தவரலாறும் மிகவும் தெளிவாக வரலாற்றில் பதியப்பட்டிருக்கிறது. லக்சர் கோயிலின் பைலோனில் செதுக்கப்பட்டவை தற்போது காலத்தால் அழிந்து விட்டது. இந்த பைலோனுக்கு முன்பாக கருங்கல்லில் 25 மீட்டர் உயரமான ராம்சியின் இராட்த உருவச் சிலைகள் உள்ளன. உள்ளே இருப்பது விசாலமான திறந்த மைதானம். இதை ராம்சியின் மைதானம் என்கிறர்கள். இதைச் சுற்றி அழகான துண்கள் வரிசையாக நிற்கின்றன. இவையும் மகா ராம்சியால் அமைக்கப்பட்டன. இந்த மைதானத்தில் நின்றபடி பார்த்தால் கிழக்குப் புறத்தில் பிற்காலத்தில் கட்டப்பட்ட பள்ளிவாசல் கூரைப்பகுதி மிக உயரமாக தெரிந்தது. இந்தப் பள்ளிவாசல் 13ஆம் நூற்றாண்டில் கட்டும் காலத்தில் இந்தக் லக்சர் கோயில் மண்ணால் மூடப்பட்டிருந்து. 1881ஆம் ஆண்டு மீண்டும் அதனைக் கண்டுபிடித்தபோது எவ்வளவு ஆழமாக இந்தக்கோயில் புதையுண்டிருந்தது என்பதை இந்த பள்ளிவாசலின் உயரத்தில் வைத்து புரிந்து கொள்ள முடியும்.
பள்ளிவாசல் கூரைப்பகுதி
உள்ளே சென்று பார்த்தபோது, உள்மண்டபமும் அதனது தூண்களும் அந்தத் தூண்களின் மேலே பாரிய நீண்ட கல்லால் அமைந்த விட்டங்களும் தெரிந்தன. கூரையை தாங்குவதற்காக அவை அமைந்திருந்தன. சுமார் நூறு மனிதர்கள் ஓரே நேரத்தில் அவற்றில் ஏறி நிற்கமுடியும் என வழிகாட்டி சொன்னார். அதனைப் பார்த்த போது அவற்றை எப்படி இவ்வளவு உயரத்தில் வைத்திருப்பார்கள் என்ற வியப்பு ஏற்படுவது தவிர்க்க முடியாதது. கோயிலின் உட்பகுதி ஆமன்ஹோரப்111 காலத்தில் கட்டப்பட்டாலும் கட்டிடத்தின் உட்பகுதி அலங்கரிக்கப்பட்டது அவரது பேரனான துட்டன்காமன்(Tutankhamun) காலத்திலாகும். லக்சர் கோயிலில் பிரமாதமாக வருடாந்த உற்சவம் ஒன்று நடைபெறும் அதை ஓபற்(Opet Festival) என்பார்கள்.
உற்சவகாலத்தில் கார்நக்(Karnak temple) கோயிலில் இருந்து ஆமுன், முட், கொன்சு ஆகிய மூன்று தெய்வங்களும் லக்சர் கோயிலுக்கு ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு சிலநாட்கள் அங்கு தங்க வைக்கப்படுவார்கள். இந்த உற்சவகாலத்தில் எகிப்தின் பலபகுதிகளையும் சேர்ந்த மக்கள் கூடுவார்கள். இந்த உற்சவத்தை முன்னின்று நடத்துவது எகிப்தின் அரசர்களே. இந்த உற்சவத்தின் காட்சிகளே லக்சர் உள்மண்டபத்தில் துட்டன்காமனால் செதுக்கப்பட்டிருந்தது. 4 ஆம் நூற்றாண்டில் இந்த கோயிலின் சில பகுதிகள் கிறீஸ்த்தவ தேவாலயமாகவும் பயன்பட்டதால் உள்மண்டப சுவர்களில் பல பைபிளின் காட்சிகள் சித்திரங்களாக வரையப்பட்டிருந்ததையும் எம்மால் பார்க்க முடிந்தது. புனிதமான மூலப்பகுதியில் ஆமுன், முட், கொன்சு ஆகிய தெய்வங்களின் கோயில் உள்ளது. பழையகாலத்தில் விக்கிரகங்கள் வெண்கலத்திலோ தங்கத்திலோ அமைந்திருக்கும்.
பைபிளின் காட்சிகள்
மத்திய வம்சத்து அரசர்களல் சில கட்டிடங்கள் ஆரம்பத்தில கட்டப்பட்டாலும்; அதன் ஆதாரங்கள் தற்பொழுது இல்லை. அதே போன்று பிற்கலத்தில் ரோமரால் கட்டப்பட்ட பகுதிகளும் பெரிதும் அழிந்துவிட்டன. லக்சர் கோயிலை விட்டு வெளியேறும்போது அந்தக்கால கட்டிடக்கலையின் நுணுக்கத்தை வியக்காமல் இருக்க முடியவில்லை.
நாங்கள் கெய்ரோவில் இருந்து ஐநூறு கிலோமீட்டர் தொலைவில் உள்ள இந்த லக்சர் பிரதேசத்திற்கு வந்தபோது வரலாற்றில் ஆயிரம் வருடங்களை பின்னால் தள்ளிவிட்டோம் என்பதை உணர முடிந்தது. ஆயிரம் வருடங்கள் சாதாரணமானது அல்ல. சிலுவை யுத்தத்திற்கும் இரண்டாம் உலக யுத்தத்திற்கும் இடைப்பட்டகாலம். உலகத்தில் எவ்வளவு மாற்றங்கள் நடந்த காலம்.
இந்த ஆயிரம் வருடங்களில் எகிப்தில் பெரிதாக மாற்றம் நடந்ததா என்ற கேள்வியும் எழுகிறது. இந்தக் கேள்விக்கு இல்லையெனப் பதில் சொல்லிவிட்டுத்தான் மாற்றங்களைப் பற்றிய சிந்தனைக்குப் போகவேண்டும். எகிப்தின் அரசர், இராணுவம், மற்றும் மதம் ஆகிய முக்கிய விடயங்களில் மாற்றங்கள் நடைபெறவில்லை.
அதேவேளையில் எகிப்தில் சில விடயங்கள் நடந்தன. கற்களினால் பிரமிட்டுகளைக் கட்டிய பழைய அரசர்கள் காலத்திற்குப் பிறகு எகிப்து இருநூறு வருடங்கள் நலிவடைந்தது. பல அரச வம்சங்கள் சிலகாலங்கள் ஆண்டன, போட்டி அரசுகள் உருவாகின என நம்பினாலும் அதற்கான சான்றுகள் எதுவும் இல்லை.
மீண்டும் மத்திய வம்சத்து அரசர்கள் பதவிக்கு வந்தபோது பிரமிட்டுகள் கட்டப்பட்டாலும் அவை சிறியவைகளாகவும் செங்கட்டிகளால் கட்டப்பட்டவையாகவும் இருந்தன. அவை மெம்பிசின் பிரமிட்டுகள்போல் இல்லாமல் சிறியனவாக இருந்தமையால் அவற்றுள் பல அழிந்துவிட்டன. அத்துடன் பிரமிட் கட்டுவதும் நலிவடைந்தது.
மத்திய கால அரசர்கள் காலத்தின் பின்பு மீண்டும் ஒரு நலிவடைந்த காலம் எகிப்தில் உருவாகியது. இக்காலத்தில் ஹைக்சோஸ் (Hyksos) எனப்படும் வெளிநாட்டவர்கள் எகிப்தை ஆண்டார்கள் என்பதற்கான பப்பரசிலான குறிப்புகள் உள்ளன. இவர்கள் பலஸ்தீனத்தில் இருந்து வந்திருக்கலாம் என நம்பப்படுகிறது. இவர்கள் குதிரைகள் இழுக்கும் இரதங்களில் வந்தபடியால் எகிப்தியரை வென்றார்கள். குதிரைகளுடன் ஒட்டகங்களும் அங்கு வந்தன.
எப்பொழுதும் குதிரைகளின் வருகை சரித்திரத்தில் பல மாற்றங்களை ஏற்படுத்துகிறது. இந்தியாவிற்கு ஆப்கானிஸ்தர், மொகலயார் வந்து இந்தியவை வென்றதற்கும் இந்தக் குதிரைகளே காரணம் என சரித்திர ஆசிரியர்கள் கூறுவார்கள். தற்காலத்து குண்டுவீசும் விமானங்களைப்போன்று வேகமாகவும் செல்லும் இயல்பும் இலகுவாக திரும்பக்கூடியதாகவும் இருப்பதுமே இதற்குக் காரணம்.
குதிரைகள் பூட்டிய இரதங்களை கொண்டு வந்த ஹைக்சோசினர் வடக்கு பகுதியை மட்டுமே ஆண்டார்கள். தென்பகுதியில் உள்ள ஆன்மீக தலைநகரம் தீப்பஸ் எகிப்தியர்கள் வசமிருந்தது.
வரலாற்று ஆசிரியர்களில் ஒரு பகுதியினர் இந்த ஹைக்சோசை, யூதர்கள் இருந்த யோசப் காலமாக கருதுகிறர்கள். மேற்கத்தியர்கள் 18 – 19ஆம் நூற்றாண்டில் எகிப்தை அகழ்வாராய்வு செய்யத் தொடங்கியதே பைபிளில் சொல்லப்பட்ட எகிப்து சார்ந்த விடயங்களுக்கு ஆதாரங்களைத் தேடித்தான். இங்கிலாந்தில் ஆரம்பத்தில் எகிப்திய ஆய்வினைத் தொடங்கியவர்கள் பைபிள் சொசைட்டியினர்தான்.
இது ஏன்? என பார்ப்போம்.
பைபிளின் பல முக்கிய விடயங்களில் எகிப்து சம்பந்தப்பட்டிருக்கிறது.
1) யோசப்பின் கதை ( ஆபிரகாமின் பேரன் ஜேக்கப் எனப்படும் இஸ்ரேலின் மகன்.)
2) மோசஸ் எகிப்தில் இருந்து யூதரை வெளியே கொண்டு சென்றது.
3) இஸ்ரேலிய அரசனுக்குப் பயந்து யோசப்பும் மேரியும் குழந்தை யேசுவுடன் எகிப்தில் வாழ்ந்ததாக கூறப்படுகிறது.
4) தோமஸ் மற்றும் பீட்டரால் எழுதப்பட்டதாக கருதப்படும் வேதாகமம் எகிப்திலே கண்டுபிடிக்கப்பட்டது. (Non- Canonical gospels)
5) கிறீஸ்துவுக்கு பின்னான 400 வருடங்கள் அலக்சாண்டிரியா கிறி;ஸ்துவ சமயத்தின் முக்கிய இடமாக கருதப்பட்டது.
பைபிளின்(Genesis 37-50) பழைய ஏற்பாட்டில் சொல்லப்படும் யோசப்பின் வரலாறு மிகவும் சுவையானது. பல திருப்பங்களையும் எதிர்பார்ப்புகளையும் உள்ளடக்கிய நாவல் போன்றது.
ஆபிரகாமின் பேரனான ஜேகப்பின் மகன்கள் பன்னிருவரில் ஒருவன் யோசப். இந்த யோசப் முதுமைக் காலத்தில் பிறந்ததால் ஜேக்கப் அவன் மீது அதிக பரிவுகாட்டியதால் பொறாமை கொண்ட மற்றைய சகோதரர்களால் எகிப்திய வியாபரிகளுக்கு அடிமையாக யோசப்பை விற்கிறார்கள். யோசப் அடிமையாக வளர்ந்து எகிப்திய அரசனிடம் உத்தியோகம் பார்க்கும் போட்ரிபர் (Potiphar)என்பவனின் மாளிகையில் பொறுப்பான வேலை செய்யும்போது, போட்ரிபரின் மனைவியின் காதலை ஏற்க மறுத்ததால் அந்தப் பெண், யோசப் தன்னை பலாத்காரம் செய்ய வந்ததாக பொய்யான குற்றம் சுமத்தியதால் யோசப் எகிப்திய சிறையில் அடைக்கப்படுகிறான்.
எகிப்திய அரசன் தனது கனவில் ஏழு கொழுத்த பசுக்களையும் பின்பு ஏழு மெலிந்த பசுக்களையும் காணுவதோடு நன்றாக விளைந்த ஏழு சோழப் பொதிகளையும் சப்பட்டையான ஏழு பொதிகளையும காணுகிறான். அவனது இந்த விசித்திரமான கனவிற்கு எகிப்திய மதகுருமாரினால் விளக்கம் சொல்லமுடியவில்லை.
சிறையில் தடுத்துவைக்கப்பட்டிருப்பவர்களின் கனவுகளுக்கு விளக்கம் சொல்லும் யோசப்பின் திறமை பற்றிய செய்தி ஒரு அரண்மனை உத்தியோகத்தவன் மூலம் அரசனை அடைகிறது. தனது விசித்திரமான கனவுக்கு எகிப்திய அரசன் யோசப்பிடம் விளக்கம் கேட்ட போது, அந்தக்கனவு எகிப்தில் ஏழுவருடம் நன்றாக விவசாயம் பெருகியும் அதன்பின்பு வரும் ஏழுவருடங்கள் பஞ்சம் ஏற்படும் என்பதை குறிப்பதாக யோசப் விளக்கியதால் அரசனின் நன்மதிப்பை பெறுகிறான். அவனுக்கு எகிப்தின் உணவு தானிய விநியோகததிற்கு பொறுப்பான எகிப்தின் பிரதம மந்திரி பதவி கொடுக்கப்படுகிறது. விவசாயம் நன்றாக இருந்த காலத்தில் உணவு தானியங்கள் விவசாயிகளிடம் இருந்து கொள்வனவு செய்யப்பட்டு களஞ்சியங்களில் சேகரிக்கப்படுகிறது.
ஏழு வருடங்கள் எகிப்தின் நைல்நதி பெருகி ஓடாதபடியால் பஞ்சம் வந்தபோது யோசப் சேகரித்த தானியத்தை மக்களுக்குக் கொடுத்து அதற்காக விவசாயிகளின் நிலத்தை வாங்கி அரசுடைமையாக்கியதாக சொல்லப்படுகிறது. அந்த நிலத்தில் பிற்காலத்தில் விவசாயம் செய்பவர்கள் ஐந்தில் ஓரு பகுதியை அரசனுக்கு திறையாக கொடுக்கும் முறையை எகிப்தில் நடைமுறைப்படுத்தியது யோசப்தான் என பைபிள் கூறுகிறது.அத்துடன் குதிரை இரதத்தில் யோசப் செல்வதாகவும் சொல்லப்படுகிறது.
பைபிளில் பல தடவை எகிப்திய அரசரைப் பற்றி சொன்னாலும் எந்த இடத்திலும் மன்னனின் பெயர் குறிப்பிடப்படவில்லை. யோசப் காலத்தில் யோசப்பின் மறறைய சகோதரர்கள் எகிப்திற்கு வந்து மிக வசதியாக வாழ்வதாகவும், இதைப்போல் யோசப்பின் தந்தையான ஜேக்கப் இறந்தபோது எகிப்தியர்கள்போல் மம்மியாக்கப்பட்டு இஸ்ரேலுக்கு எடுத்து செல்லப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது.
பைபிளில் சொல்லப்பட்ட யோசப்பின் கதைக்கான புதைபொருள் சான்றோ, அல்லது பப்பரஸ் வரைவுகளோ இல்லை. ஆனால் ஏழு வருடகால பஞ்சத்திற்கான குறிப்புகள், எகிப்திய பெயர்கள் என்பனவும் மற்றும் ஜேக்கப் 35 நாட்கள் மம்மியாக பதப்படுத்தியது, 70 நாட்கள் துக்கம் அனுசரித்தவை முதலான குறிப்புகள் எகிப்திய வரலாற்றுக் குறிப்புகளை ஒத்து உள்ளன என்பது வரலாற்று ஆசிரியர்களின் கருத்தாகும்.
இந்த ஹைக்சோஸ் என்ற வெளிநாட்டவர்கள் இறுதியில் தீப்பஸ்சை ஆண்டவர்களால் போரில் வெளியேற்றப்படுகிறார்கள். இவர்களில் காமோஸ் என்ற முக்கியமனவர் இறந்த பின்பு, ஆமோஸ் (Ahmose) (1517-1546 BC) என்ற சகோதரனது கீர்த்தி வாய்ந்த 18 ஆவது அரச பரம்பரையுடன் புதிய அரசர்பரம்பரை உருவாகத் தொடங்குகிறது. இந்தப் பரம்பரையில் வந்த ஆமன்ஹோரப்111 முப்பது வருடம் ஆண்டபோது இந்த லக்சர் கோயில் கட்டப்பட்டது.
ஆமன்ஹோரப்111 மற்ற அரசர்கள் போன்று போர்களில் நாட்டம் காண்பிக்காமல் இந்த லக்சர் கோயிலை கட்டியதுடன், அதிக காலம் தலைநகரான மெம்பிஸ் செல்லாமல் தீப்பஸ் நகரத்தில் வசித்ததாகவும் வரலாறு கூறுகிறது. பபிலோன் சிரியா போன்ற அயல் நாடுகளின் இளவரசிகளை திருமணம் செய்து கொண்டு வர்த்தக ஒப்பந்தங்கள் செய்ததாலும் போர் தவிர்க்கப்பட்டதாகவும் அக்காலப்பகுதியில் எகிப்தில் வர்த்தகம் பெருகி நாடு செழிப்பாக இருந்ததாகவும் அறியப்படுகிறது.
(தொடரும்)
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.