தொடர்கதை: ஒரு கல் - கரைந்தபோது (7) - ஸ்ரீராம் விக்னேஷ், நெல்லை வீரவநல்லூர் -
அத்தியாயம் 7
பொழுது விடிந்தபோது, மனதுக்குள் இனம்புரியாத பரபரப்பு. நேற்று முழுவதும், வாற்சப் வீடியோ காலில் பார்த்துப்,பேசிப்,பழகிய போதிலும் இன்று நேரிலே சந்திக்கப்போகின்ற அனுபவம், புதிதானதுதானே.
ஏற்கனவே பேசிவைத்தபடி, அம்மாவும் நானும் அக்காளிடம் அதிகாலையிலேயே விவரத்தைக் கூறியபோது, அக்கா உண்மையிலேயே அதிர்ந்துபோனதை அவளின் முகத்திலே கண்டுகொண்டேன்.
ஆனாலும், அதைக் காட்டிக்கொள்ளாமல் போலி மகிழ்ச்சியை வைத்துக்கொண்டு, புன்னகைத்தாள்.
அந்தப் புன்னகைக்குள்ளே பொதிந்து கிடக்கும் வேக்காடு, “இதை எப்படியாவது கெடுத்துவிட வேண்டுமே….” என்றே கொதிக்கும் என்பது எனக்குத் தெரியும். அத்துடன் அந்தக் கொதிப்பு எந்தக் கணமும் சீறி வெடிக்கலாம் என்னும் எதிபார்ப்பு எனக்குள் கலக்கத்தை ஏற்படுத்தத் தவறவில்லை.
“சந்தோசமான சமாச்சாரந்தான்…. ஆனா, இது எப்பிடி ஏற்பாடாயிச்சு….? நானும் சம்மந்தப் படல்ல….. என் வீட்டுக்காரரும் பஜார் பக்கம் போறதே அத்தி பூத்த மாதிரி…. ஏம்மா உனக்கு கோயிலையும் வீட்டையும் விட்டால் யாரையுமே தெரியாதே…. அப்புறம் எப்பிடி இது சாத்தியப் பட்டிச்சு…..”
இந்த ஏற்பாட்டுக்கான அடிப்படைச் சூத்ரதாரி யார் என்பதைத் தெரிந்து, அவரைச் சுட்டெரித்துவிடவேண்டும் என்று உள்ளுக்குள்ளே அவள் துடிப்பது எனக்குப் புரியாமல் இல்லை.
அம்மா பதில் சொன்னாங்க.
“நீ சொல்றது நெசந்தாம்மா….தக்க சமயத்தில ஒதவிபண்ண யாருமே இல்லைண்ணாலும், தெய்வத்தோட ஒதவியும், உங்கப்பா ஆத்மாவோட ஆசீர்வாதமும் இருக்கிறப்போ, அந்த ரெண்டுமே ஒரு கலியாணத் தரகரை பெரிய கோயில்ல வெச்சே அறிமுகப்படுத்தி, என்னய பேசவெச்சு சாத்தியப் படுத்திச்சுங்க….”
“சரிதாம்மா…. மாப்பிளை என்னவேலை…. அவுங்க குடும்பம் எப்பிடி…..?”
அக்காள் கேட்டதும்,
“ஒரு நிமிசம் இரும்மா…. வந்திடுரேன்……” என்ற அம்மா, குழந்தைபோல துள்ளிக்குதித்து தனது அறைக்கு ஓடியதை, கரவோடு அக்காளும், களிப்போடு நானும் நோக்கினோம்.
திரும்பி வந்தபோது, அம்மாவின் கையில், தினசரிப் பத்திரிகை ஒன்று இருந்தது. விரித்துக் காட்டியபோதுதான் கவனித்தேன். சரியாக இரண்டு வாரங்களூக்கு முன் வெளிவந்த பத்திரிகை அது.
“மணமகள் தேவை” பகுதியில், ஒரு விளம்பரத்தைச் சுட்டிக் காட்டினாங்க அம்மா.
“மதுரையைச் சேர்ந்தவரும், சென்னையில் வங்கி ஒன்றில் தலைமைப் பீடத்தில் மேனேஜராக இருப்பவரும், ஏற்கனவே திருமணமாகி மனைவியை இழந்தவரும், ஐந்து வயதில் ஒரு பெண்குழந்தை உள்ளவருமான, முற்போக்குவாத சமூக சீர்திருத்த எண்ணங்கொண்ட , முப்பத்தைந்து வயது மணமகனுக்கு, அழகும் ஓரளவு படிப்பும் உள்ள மணமகள் தேவை.
தாரம் இழந்தவர்கள், விவாக ரத்துப் பெற்றவர்கள், அங்க ஊனமுற்றவர்கள், முப்பது வயதுக்கு மேற்படாதவர்கள் புகைப்படத்துடன் விண்ணப்பிக்கவும்.
வரதட்சணை இல்லை. ஜாதி அவசியமில்லை. விபரங்களுக்கு…….
விலாசம் அரைப் பக்கத்துக்கு நீண்டது. விறைத்துப்போய் நின்றாள் அக்கா.
அமைதியைக் கலைத்தாக அம்மா.
“இந்தப் பத்திரிகையைத்தான் தரகர் ஏங்கிட்டதந்து, பேசினாரு…. தங்கச்சி போட்டோவையும், அவ படிப்பு, வாழ்க்கை சம்பந்தமான விவரத்தையும் நான் குடுத்தேன்…..
மாப்பிள்ளை வீட்டுக்குப் புடிச்சுப் போச்சு….. மதுரையிலயிருந்து காரில வர்ராக…. வந்து புரோக்கரை சந்திப்பாக…. வந்தவங்க எல்லாரையும் புரோக்கர்தான் இங்க கூட்டிக்கிட்டு வருவாக….. காலையில ஒம்பது டூ பத்தரைக்குள்ள வந்திடுவாக…..”
அம்மா பேசப்பேச அக்காளின் முகம் மாறிக்கொண்டிருப்பதை என்னால் அவதானிக்க முடிந்தது. உள்ளூரக் கொதிக்கும் எரிமலை சீறி வெடித்தது.
“இதெல்லாம் எங்களுக்குத் தெரியாம எதுக்காகச் செய்யிறீங்க….. தங்கச்சிக்கு கால் ஒண்ணு இல்லேங்கிறத்துக்காக, ஏற்கனவே தாலி அறுத்தவன்தான் கட்டிக்க வரணுமா….?”
ஒருகணம் துடித்தே போய்விட்டாக அம்மா.
“என்னடீ நீ…. இந்த நேரத்தில இப்பிடியான வார்த்தயை பேசிக்கிட்டு…. ஆண்டவனே…. நல்லது நடக்கப்போற நேரத்தில இப்பிடியொரு அபசகுன வார்த்தய கேட்டுபுட்டேனே….. என்ன ஆகப் போவுதோ…..”
நொந்துகொண்ட அம்மா ஒருகணம் அமைதியானாங்க.
“சரிசரி…. போனதெல்லாம் போகட்டும்….. மாப்பிளை வீட்டுக்காரங்க வந்து….. எல்லாத்தையும் பேசி முடிச்சுப் போறவரைக்குமாவது, நம்ம குடும்பச் சண்டையை தூரத் தள்ளி வெச்சிக்குவோம்….. நீயும், மாப்பிள்ளையும் முன்னால நிண்ணு பொறுப்பா எல்லாத்தையும் முடிச்சிட்டீங்கண்ணா ரொம்ப புண்ணியமா இருக்கும்மா….”
அக்காளை நோக்கிக் கையெடுத்துக் கும்பிட்டாங்க. என்னையும் அறியாமலே என் கண்கள் குளமாயின.
கருணை மழையால் கரைவதற்குக் கருங்கல்லால் முடியுமா? அல்லது கல் நெஞ்சக் காரியிடம் கருணைதான் பிறக்குமா?
இந்த இரண்டு வார்த்தைகளை எப்படித்தான் மாற்றி,மாற்றிப் போட்டாலும் தருகின்ற அர்த்தம் ஒன்றுதானே.
அதற்காக இவளிடமெல்லாம் போய், கையெடுத்துக் கும்பிடும் அம்மாவின் செயல், எனக்கு அதிகப் பட்சம்போல தோன்றியது.
அம்மாவை இத்தகைய நிலைமைக்கு ஆளாக்கிய அக்காள்மீது, கோபம் கோபமாக வந்தது எனக்கு.
பேயாக மாறிப் பேசினாள் அக்கா.
“ஓ…. முன்னால வேற நிண்ணு பொறுப்பா எல்லாத்தையும் முடிக்கணுமா….. முடிச்சுப்புடுறேன்…. எல்லாத்தையுமே முடிச்சுப்புடுறேன்….. இதை மட்டுமில்ல….. இனிக் காலத்திலயும் எவனுமே எங்களைக் கலந்துக்காம இவளைப் பொண்ணுகேட்டு வர்ரதை இத்தோட முடிச்சுப்புடுறேன்…. அவங்க வர்ரப்போ முன்னால போய் வீட்டு வாசல்லயே முடிச்சுப்புடுறேன்…..”
வருபவர்களைத் தகாத வார்த்தைகளால் திட்டி, நோகடித்து விரட்டிவிடும் நோக்கோடு, உக்கிர ரூபம் எடுக்கின்றாள் அக்கா என்பதைப் புரிந்துகொண்ட அம்மாவுக்குள், அப்போது வந்ததைக் “கோபம்” என்பதைவிட, “வெறி” என்பதே பொருத்தமாகும்.
ஆமாம் ; அக்காளை நோக்கி வெறியோடு பாய்ந்தாங்க அம்மா. கண்கள் இரண்டும் சிவப்பேற, “கொலை வெறி” என்பார்களே, அதை இப்போதுதான் அம்மாவிடம் பார்த்தேன்.
அம்மாவின் இரண்டு கைகளும், ஏக காலத்தில் அக்காளின் கழுத்தைப் பற்றின.
“ஏட்டி…… எடுபட்ட செருக்கி முண்டை….. உன்னையெல்லாம் பொறந்த வூட்டுக்குள்ளயே கொண்ணிருந்தா நான் எப்பவுமே சந்தோசமா இருந்திருப்பேன்…. ”
மறுகணம் யாருமே எதிர்பார்க்கவில்லை. அம்மாவின் தலை மயிரைப் பற்றிப் பிடித்தாள் அக்காள்.
“கெழட்டுச் செருக்கி…. இந்த வயசிலயே ஒனக்கு இத்தனை “தில்” இருந்தா, ஒன்னய விடச் சின்னவ எனக்கு , எப்பிடி “தில்” இருக்கும்…. பாரு….”
இதற்குமேல் பொறுமையாயிருக்க என்னால் முடியவில்லை. வலது கைப் பக்கமிருந்த கைத்தடியை எடுத்து, தலை கீழாகப் புரட்டி, கால்ப்புறத்து விளிம்புப் பகுதியை கையிலே இறுக்கமாகப் பற்றிக்கொண்டு, நன்றாக ஓங்கி, எனது பலம் அனைத்தயும் ஒன்று திரட்டி, அக்காள் முதுகிலே ஒரு “போடு”போட்டேன்.
“ஐயையோ………………”
அலறியபடி எனதுபக்கம் திரும்பினாள் அக்காள்.
அவளின் இரண்டு தொடைகளிலும் படுமாறு நன்கு குறிபார்த்து, அடுத்தடுத்து நாலைந்து “போடுகள்” போட்டேன். நிற்க முடியாமல் கீழே விழுந்தாள்.
அடுத்தகணம், எப்படித்தான் இத்தனை வேகம் வந்ததோ எனத் திகைக்கும் வண்ணம், என் மீது பொங்கிப் பாய்ந்தார் அத்தான்.
அவரது வலதுகரம், என் கழுத்தைப் பற்றியது.
“ஏண்டீ …… சின்னக் கழுதை….. ஆத்தாளும், பொண்ணுமா மாறி,மாறி அடிக்கிற அளவுக்கு என் பொண்டாட்டி ஒங்களுக்கு கிள்ளுக்கீரை ஆகிட்டாளா…. ஒன்னய கொல்லாம விடமாட்டேன்….”
சொல்லியபடி, பக்கத்திலேயிருந்த சமையல் அறைப்பக்கம் இழுத்துச் சென்றார்.
கதவின் உள்ப்புறத்தே சுவரிலே ஆணியடித்து மாட்டப்பட்டிருந்த பிரம்பு அவரது கைக்கு வந்தது. அவர்களது மகன் அவ்வப்போ சேட்டைகள் பண்ணும்போது, அடிப்பதற்காக அக்காள் வாங்கிவைத்தது அது.
அத்தானுக்கு இருந்த கோபத்துக்கு, என்னை அடித்துத் துவைத்து தொங்கப் போட்டுவிடுவார் என்றே நினைத்தேன். அவரோ என் காதருகே வந்து மெதுவாகப் பேசினார்.
“என்னால செய்ய முடியாததை நீ செய்து முடிச்சிட்டே ….. இதை நீ எப்பவோ பண்ணியிருக்கலாம்…. நான் இப்போ இந்தப் பிரம்பால தரையில அடிக்கப் போறேன்…. நீ சத்தமா, உங்க அக்காளுக்கும், அம்மாவுக்கும் கேக்கிறமாதிரிக் கத்தணும்…. அடுத்து முக்கியமான சமாச்சாரம், உங்கக்காளை தூக்கிக்கிட்டுப் போய், ஆஸ்பிட்டல்ல ஒருமாசத்துக்கு இருக்கிறமாதிரி அட்மிட் பண்ணப் போறேன்…. அம்மாகிட்ட சொல்லி, ஒரு மாசத்துக்குள்ள கலியாணத்த நல்லபடியா முடிச்சிடச் சொல்லு….. கலியாணத்துக்கு என்னையெல்லாம் எதிபாக்காத….. வர முடிஞ்சாத்தான் வருவேன்….. எப்பவும் உனக்கு என் ஆசி இருக்கும்…. சரியா……”
வேக வேகமாக சொல்லிவிட்டு, பிரம்பாலே தரையைப் பதம் பார்த்தார். சமையலறை அதிரும்படி அலறினேன் நான்.
விவரம் தெரியாத அம்மாவோ,
“அடிக்காதீங்க மாப்பிளை……..’’ என்று அலறியபடி வந்து, என்னை வெளியே கூட்டி வந்தாங்க.
மறுகணம், மிக வேகமாக வந்த அத்தான், எழுந்து நிற்கமுடியாமல் துடித்துக்கொண்டிருக்கும் அக்காளைத் தூக்கி, எங்கள் காரின் பின் சீட்டிலே கிடத்திவிட்டு, வண்டியை ஸ்ராட் பண்ணப்போனவர்…..
“அடடா …… சாவியை மறந்துபோயி டேபிள்ளையே வெச்சிட்டு வந்திட்டேன்…… ஒரே நிமிசம்….. எடுத்திட்டு வந்திடுறேன்…..”
சொல்லியபடியே வீட்டுக்கு ஓடிவந்தார். வேகமாக வந்த அத்தான், என்னையும், அம்மாவையும், சமையல்காரப் பையனையும் ஒன்றாக வைத்து என்னிடம் சொன்ன சமாச்சாரம் ;
“எந்தக் காரணம் கொண்டும், உங்கக்காவுக்கு நீ அடிச்ச சமாச்சாரம் மாப்பிளை வீட்டுக்காரங்களுக்குத் தெரியக்கூடாது..... உங்கக்காவைப்பத்தி அவங்களுக்கு ஏற்கனவே தெரியும்னாலும், இப்ப நடந்த சம்பவத்த அறிஞ்சா, நியாய - அநியாயத்தப்பத்தி ஆராச்சி பண்ணமாட்டாங்க….. உன்னயபத்தி மனசில ஒரு தப்பான எண்ணத்த வளத்துக்குவாங்க….. அதோட விளைவு எப்பிடியிருக்குமோ சொல்ல முடியாது…..மாடிப்படியில இறங்கும்போது, கால் சிலிப்பாகி விழுந்திட்டாங்கன்னு மட்டுந்தான் சொல்லணும்….. புரியிதா…..”
அதுவரை எங்கோ போயிருந்த அவர்களது மகன், புறப்படும் நேரத்தில் சரியாக வந்து வண்டியில் ஏறிக் கொண்டான்.
அம்மா என்னைத் துரிதப்படுத்தினாக.
“ இந்தப் பீடைகிட்ட பேசாமலே இருந்திருக்கலாம்போல தோணுது எனக்கு….. டைமை பாரு…. எட்டு ஆவுது….. சீக்கிரமா போயி குளிச்சிட்டு, நல்ல சாறியா ஒண்ணைக் கட்டிக்கிட்டு வா.......”
எங்களைவிட , சமையல்காரப் பையன் வெகு துரிதமாகத் துள்ளிக் குதித்துக் குதூகலித்தான்.
அம்மாவின் பார்வை அவன்மீது விழுந்தது.
“நாங்க குளிச்சிட்டு வந்த கையோட சுடச்சுடக் காப்பி ரெடியா இருக்கணும்….. புரிஞ்சிச்சா…….”
அடுத்து, அவன் பேசிய பதிலை யாருமே எதிர்பார்க்கவில்லை.
“இப்போ என்னால ஒண்ணும் பண்ண முடியாதும்மா….. இண்ணைக்கு எங்க குட்டியம்மாவ பொண்ணுபாக்க வர்ராங்க இல்லியா….. அப்போ நான்மட்டும் அழுக்கா நிண்ணா, வர்ரவங்க என்னயபத்தி என்ன நெனைப்பாங்க….. இப்பவே நானும் வாய்க்காலுக்குப் போயி, ஒரு கட்டி சோப்பும் தேயிற அளவுக்கு நல்லா தேச்சுக் குளிச்சிட்டுத்தான் வருவேன் பாருங்க….. காப்பிய நீங்களே போட்டுக்குங்க…..”
எங்கள் பதிலுக்கு எதிர்பாராமல், துடைக்கும் டவல் துண்டை எடுத்துக்கொண்டு கால்வாய் பக்கம் ஓடினான்.
“கிறுக்குப் பயல்….. என்னவோ இவனை மாப்பிளை பாக்க, பொண்ணு வீட்டுக்காரங்க வாறமாதிரி ஓடுறான் பாரு……”
சிரித்தபடி பேசினாங்க அம்மா.
அவன் மனதிலுள்ள மகிழ்ச்சியை நினைத்துப் பார்க்கும்போது, என்னோடு கூடப்பிறந்தவள் துச்சமாகப் பட்டாள்.
“சரீம்மா….. குளிச்சிட்டுக் காப்பி போடுறப்ப அவனுக்கும் சேத்துப் போட்டுடுங்க…..”
மெதுவாக மாடிக்கு நகர்ந்தேன்.
[தொடர்ந்தேன்]