மக்கள் திலகம் எம்ஜிஆர் நினைவாக... - ஊர்க்குருவி -
அமரர் எம்ஜிஆரின் நினைவு தினம் டிசம்பர் 24. அவரை நினைத்தால் முதலில் எனக்கு நினைவு வருவது 'நான் ஆணையிட்டால் அது நடந்து விட்டால் இங்கு ஏழைகள் வேதனை பட மாட்டார்' என்னும் பாடல்தான். காரணம்? 'எங்க வீட்டுப்பிள்ளை'தான் நான் ஓரளவு அறியும் பால்ய பருவத்தில் முதன் முதலில் பார்த்து இரசித்த முதலாவது திரைப்படம். வவுனியா 'நியூ இந்திரா டாக்கீஸ்' திரையரங்கில் பார்த்த திரைப்படம். முதற் படத்திலேயே இந்தப் பாடலும், இவரின் வசீகர ஆளுமையும் பிடித்து விட்டன.
இருந்தவரை கலையுலகிலும், அரசியல் உலகிலும் மக்கள் திலகமாக ஒளிர்ந்தார். வாழ்ந்திருந்த காலத்தில் எவ்விதம் மக்கள் மத்தியில் விளங்கினாரோ , இன்றும் , அமரராகி 35 ஆண்டுகளாகிவிட்ட நிலையிலும் விளங்குகின்றார் என்பதை ஊடகங்களில், சமூக ஊடகங்களில், குறிப்பாக யு டியூப் சானல்களில் இவரைப்பற்றி வெளியாகும் காணொளிகள் வெளிப்படுத்துகின்றன. இவரால் பயனடைந்த பலர் அவ்விதம் அடைந்த பயன்களைப்பற்றி நன்றியுடன் நினைவு கூர்கின்றார்கள்.